விஞ்ஞான உலகிலே சில அவிழ்க்கப்படாத புதிர்கள்: தொலை பேசியை கண்டு பிடித்தது தாமஸ் ஆல்வா எடிஸனா? அல்லது அலெக்ஸாண்டர் பெல்? கம்பியில்லாத்தந்தியின் தந்தை மார்க்கோனியா? அல்லது ஸர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களா? உயிரனங்களின் தோற்றம் (பரிணாம உயிரியல்) பற்றிய புகழ் வாய்ந்த ஆய்வு செய்தது சார்லஸ் டார்வினா? ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலெஸ்ஸா? ஒரே காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தனித்தனியான ஆய்வுகள் மூலம் ஒரே கூற்றை நிரூபித்ததை நாம் வியந்தாலும், இருவரும் சேர்ந்து அத்துறை மன்றமாகிய லீனியன் சொஸைட்டியின் (ஸ்தாபனம்:1788) முன் வைத்த பண்பு, (ஜூலை 1,1858) மேலும் வியப்பு அளிக்கிறது. அந்த மன்றம் டார்வின் - வாலெஸ் மெடல் ஒன்றை 50 வருடத்திற்கு ஒரு முறை (2010லிருந்து வருடம் ஒரு முறை) அளித்தது. 1908 வது வருட தங்கமெடல் வாலெஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்டது, தனிச்சிறப்பு. வெள்ளி மெடல் பெற்றவர்களில் இருவரை பற்றி - எர்னெஸ்ட் ஹெக்கெல், ஜே.பீ.எஸ். ஹால்டேன் - ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எல்லாருமே தலை சிறந்த விஞ்ஞானிகள். இது நிற்க.
--
இந்தியாவில் ஜூலை முதல் தேதியை ‘டாக்டர் தினமாக’ கொண்டாடுகிறோம். அது ஒரு நன்றிக்கடன், பாரத ரத்னா டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களுக்கு: ஜென்மதினம் ஜூலை 1,1882; மறைந்த தினம்: அதே தினம்: 1962. கல்கொத்தா இந்தியாவிலேயே பெரிய நகரம். அங்கு டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த மலர் வளையங்களை உருவாக்க, புஷ்பங்கள் கிடைப்பது அரிது ஆகிவிட்டது என்று நாளிதழ்களில் செய்தி. ஏன் தெரியுமா? அன்று அதிகாலையே அன்னாருக்கு பூமாலைகள் சூட்ட எல்லா புஷ்பங்களும் வாங்கப்பட்டனவாம்! அன்று படித்த அந்த செய்தி இன்றும் நினைவுக்கு வரும்போது நெஞ்சு நிமிர்ந்து, இந்தியா ‘awesome’ மட்டுமல்ல; அது ‘பாருக்குள்ளே நல்ல நாடு; பட்டொளி வீசு பறக்குது பாரீர்’ என்று பண்ணிசைக்கத் தோன்றுகிறது, அம்மா! காளிகாட் வாழும் காளி மாதாவே! பகவன் ராமகிருஷ்ணரின் இஷ்டதேவதையே! உன் தவப்புதல்வன் பிதான் சந்திராவின் மேன்மையை பார். அவனுடைய மருத்துவ, சமுதாய, அரசியல் பணிகளை பார். எண்பது வருடங்கள் அவனை வாழவைத்து, எங்களையும் எக்காலமும் வாழவைக்கிறாயே! ஆம். அவருடைய பெயரில் வருடம்தோறும் வழங்கப்படும் டாக்டர்.பி.சி.ராய் பரிசில், மருத்துவ உலகில் மிகவும் பிரசித்தம். வங்காளத்தின் முதல்வராக (1948லிருந்து 1962 வரை) அரசியலில் வைர, வைடூர்யமாக, மருத்துவர்களில் மாணிக்கமாக, மானிடர்களில் ரத்னமாக திகழ்ந்த அவரது அமரகாவியத்தை என்றென்றும் பாடுவோம். 1961ல் அவருடன் அருகில் இருந்து அளவளாவும் பாக்கியத்தை எனக்கு அருளினாயே, என் அன்னையே! உன் பாதாரவிந்தங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன், அம்மா!
அவர் மாணவனாக இருந்த போது மருத்துவர் என்றாலே, பாமரமக்களுக்கு ஒரு கிலி. அதை போக்க, மருத்துவம் படித்தார். வரலாறு காணாத வகையில் மருத்துவ லெஜெண்ட் ஆக திகழ்ந்தார். உலகபுகழ் விருதுகள் அவரை தேடி வந்தன. பாமரமக்கள் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்யமாக இருந்தால் தான், சுயராஜ்யம் பயன் தரும் என்று இயங்கினார். தன் வீட்டை மருத்துவத்துறைக்கு நன்கொடையாக அளித்தார். 1928ல் இந்திய மருத்துவ நிறுவனத்தை அமைத்து நிர்வஹித்தார். அதனுடைய மேல்தளமாகிய மருத்துவ ஆலோசனை மன்றத்தை 1939ல் அமைத்து 1945 வரை அதை வழி நடத்தினார். எத்தனை ஆஸ்பத்திரிகளுக்கு அவர் மருத்துவச்சி!: இந்திய உளவியல் மன்றம், தொற்றுநோய் ஆஸ்பத்திரி, முதுநிலை மருத்துவக்கல்லூரி, மருத்துவ பேராசிரியர். 1931ல் கல்கொத்தா மேயர். அரசியல் பதவியை மக்கள் சேவைக்கு உரிய கருவி என்று இயங்கிய மாமனிதன், அவர். புகழ் பெற்ற டாக்டர் பிதான் தா. நாடு பரவிய கீர்த்தி. காங்கிரஸ் பிரமுகர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், இவர் உடனே ஆஜர். காந்திஜி உண்ணாவிரதம் என்றால், ஐயா தான் டாக்டர். காந்திஜியை விரட்டுவார். தன் இறுதி நாள் வரை, முதல்வர் மட்டுமல்ல, மருத்துவரும் தான். பிஸி ப்ரக்ட்டீஸ்; ஏழைகளுக்கு, இத்தனைக்குக்கும் 1948லியே முதல்வர் ஆகிவிட்டார். கல்யாணி, சால்ட் லேக் சிடி என்ற நகரங்களை படைத்தார். 1947ல் அவர் வங்காள முதல்வர் ஆகவேண்டும் என்ற காந்திஜியின் கருத்தை அவர் ஏற்கவில்லை. ஒரு வருடம் பிடித்தது அவரை ஒத்துக்கொள்ள வைக்க. பிதான் தா விடம் எல்லாரும் கரிசனமாக இருந்தார்கள், காந்திஜி உள்பட. நேருவை, ‘ஹே! ஜவஹர்!’ என்று தான் விளிப்பார். அவர் மீது அப்படி ஒரு பாசம். அவர் எதிர்பாராத விதமாக இறந்த போது, ஜனாதிபதியும், கவர்னரும் ஓடோடி வந்தனர்.
ஆம். நம்ம கதை: அவர் மிஹிஜாம் (சித்தரஞ்சன்) ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் மின் ரயில்வே எஞ்சின் உற்பத்தியை தொடக்க, நேருஜியுடன் வந்திருந்தார். அறிமுகம் ஃபார்மல். எனக்குத் தோள் மூட்டு பிசகியிருந்ததால், ஒதுங்கியிருந்தேன். ஜெனெரல் மானேஜர் ‘இவன் தான் ஆடிட்டர்’ என்றவுடன், பிதான் தா (வங்காளத்தில் இப்படி விளிப்பது பண்பு),‘அதற்காக அவன் கையை உடைப்பானேன்!’ என்றார். எங்கள் ஜெனெரல் மானேஜர் ‘ஜமால்பூர் பாய்’ கிருஷ்ணசாமி அவர்கள், ‘அவன் காலை உடைத்தான்; நான் கையை உடைத்தேன்’ என்று கேலி செய்தார். சொல்ல நிறைய இருக்கிறது. ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ மூடிக்கிடைக்கிறதே! அது போகட்டும். தேனீர் விருந்தின் போது நேரு என் பையருடன் விளையாடி, இளைப்பாறினார். இரவு டின்னரின் போது, பாபு ஜகஜீவன்ஜியை நேரு கேலி செய்த வண்ணம். சின்ன வயதில் பெரியவர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். தற்காலம் போல கெடுபிடிகள் கிடையாது. பிரமுகர்கள் சரளமாக பழகுவார்கள். நேரு வஸந்தாவிடம் இயல்பாகப் பேசினார், நீண்ட நேரம். அவள் அகமகிழ்ந்து போனாள். அவர் எனக்கு மாமன் தான் என்றாள். பிதான் தா ஆஜானுபாகு. உருவத்திலும், கீர்த்தியிலும் பெரியவர். ஆணழகன் 80 வயதில். நாமாகவே அடங்கியிருப்போம். அப்படியொரு பெர்ஸனாலிட்டி. என் தோள் மூட்டுப்பற்றி, அன்புடன் பேசினார். இதற்கு அசடு மாதிரி ஆபரேஷன் செய்து திண்டாடாதே என்றார். கவனமாக இரு. ஆடிட் குறிப்பெல்லாம் குப்பையில் போடுவார்கள் என்றார். ஏதோ அதிர்ஷ்டவசமாக, எனக்கு கிட்டத்தட்ட எம்ப்ளது வயது வரை யாரும் என்னை குப்பையில் போடவில்லை. பிதான் தா இருந்திருந்தால், யான் இணைய தளத்தில் குப்பை கூளம் ஆனது பற்றி எப்படியெல்லாம் கேலி செய்திருப்பார் என்று நினைத்து, சிரித்து மாளவில்லை. His hearty laughter was infectious.
நேரு கேட்டுக்கொண்டும், அன்றே கல்கொத்தா திரும்பிவிட்டார். ‘துர்கா பூஜை வருகிறது. நான் தலைநகரில் இருக்கவேண்டும்.’ என்றார். நாளிதழ் செய்தி: பிதான் தா சித்தரஞ்சனிலிருந்து வந்த பின் தான் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும் என்றன. தம்மாத்தூண்டு விஷயமோ, மாபெரும் சிக்கலோ, எல்லாம் பிதான் தா சொல்படி தான் நடக்கும். நான் எத்தனயோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களை பற்றி தெரிந்ததெல்லாம் சொல்வதில்லை. எதற்கு சர்ச்சை! பிதான் தா அவர்களை போன்ற ஆளுமையையும், சக்தியையும், யதேச்சாதிகாரம் செய்யக்கூடிய சூழ்நிலையையும் தார்மீகமாக, நியாயமாக, மக்களுக்காகக் கையாண்ட தலைவரை நான் பார்த்ததில்லை.
எழுதும்போது மனசு அடிச்சுக்கிறது. எப்படி தொலைத்தோம், சான்றோர் வம்சாவளியை என்று?
இன்னம்பூரான்
30 06 2011
உசாத்துணைகள்:
- http://www.bangalinet.com/greatmen_bidhanchandra.htm
- http://news.in.msn.com/gallery.aspx?cp-documentid=3433120&page=4
- http://hubpages.com/hub/DrBCRoy-The-Great-Medical-Doctor-of-Early-India
- indianpostagestamps.com
No comments:
Post a Comment