இலக்கியமும் விமர்சனமும்
‘மனமர்மமு’ மணி
சில வருடங்களாகத்தான் எனக்கு தமிழார்வம். தற்செயலாக, அது நிகழ்ந்தது என் பாக்கியம். கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் முன்னால் பரிசாக கிடைத்தது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் கட்டுரை நூல் ஒன்று. அப்பொழுது ஒரு சொல் கூட புரியவில்லை. இப்போது அகஸ்மாத்தாக மறுபடியும் கிடைத்தது; புரிந்தது. அதே மாதிரி இதுவும் கிடைத்தது. வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். ஒரு டால்ஸ்டாய் கதை. ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுகிறான். பத்து வயதில் அதை படித்து விட்டு அழுததின் நற்பயனாக, அப்பா நல்ல நூல்களை மதுரையிலிருந்து கொண்டு வந்து கொடுத்து ஊக்கமளித்தார். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள். ஒரு அணா ஒன்று. ராமுலு பிரசுரகர்த்தா என்று நினைவு. ஆங்கிலத்திலும், தமிழிலும் தொகுப்புக்கள். அன்று பிடித்த புத்தகபைத்தியம் என் மக்களுக்கும் இருப்பது எனக்கு திருப்தி.
அது ஒரு புறமிருக்க, ஒரு கவலை என்னை ஆட்கொண்டது. புதுமைப்பித்தனின் அகல்யை சாபவிமோசனத்தை பற்றி சொன்னபோது, யார் அந்த பித்தன் என்று மெத்தப்படித்த பெண்மணியொருவர் வினவினார். தமிழுலகில் நடமாடும் நண்பரொருவரிடம் நான் தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ பற்றி அளவளாவியபோது அவர் தி.ஜ.ர. பற்றி பேசுகிறேன் என்று நினைத்தபோது, நான் திகைத்துத்தான் போனேன். எனக்கு பாடம் எடுத்த முனைவரொருவர் ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இருக்கிறதா?’ என்று உத்வேகத்துடன் வினவினார். அதன் பிறகு பல தமிழன்பர்களிடம் பேசும்போது, பெரும்பாலோர் இலக்கிய ரசனை, விமர்சனம், ஆய்வு, ஒப்பியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரிந்தது. இந்த இலக்குகளை நாடும் நூல்கள் குறைவு என்றாலும், இருப்பதையாவது படிக்க வேண்டாமா? அப்படி படித்ததைப் பகிர்ந்து கொள்வதால் எனக்கும் மனதில் படியும். அவரவர் சுயவிருப்பப்படி, உருப்படியாக பங்கேற்கலாம். அதான்.
இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி என்பார்கள். 24 கதைகளும் இரண்டு கட்டுரைகளும் மட்டும் எழுதிய மணி (27.7.1907 ~ 6.7. 1985) உள்மனதைக் குடைந்து, சல்லடை போட்டு அரிந்து, அதை எக்ஸ்ரே படம் போல், சாட்சிக்கூண்டில் நிறுத்துவார். மாயவரத்து ஆசாமி. கும்பகோணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தவர். குடும்பச்சொத்தை பராமரிக்க, சிதம்பரம் வந்து சேர்ந்தார். அவரை தேடிச்சென்ற ‘இலங்கையன்’ பேராசிரியர் எம்.ஏ.நுமான் வீடு தெரியாமல் திண்டாடுகிறார். அவர் வசிக்கும் தெருவிலேயே அவரை யாருக்கும் தெரியவில்லை. அவருடைய புனைப்பெயர் ‘மெளனி’ பொருத்தம் தான்! ஒரு மாவு மில் நடத்தி வந்ததால்,’ மில் மணி ஐயர் என்று சொன்னால் தெரிந்திருக்கலாமோ என்னமோ! தற்கால தமிழிலக்கியத்தின் தூண்களில் ஒன்றான மணிக்கொடியில் எழுத ஆரம்பித்து பிற்காலம் ‘கசடதபற’ விலும் எழுதி வந்த ‘சிறுகதை சிற்பி’ மெளனியை, பிரபல இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யன் அவர்கள் மிகவும் சிலாகித்துள்ளார். க.நா.சு. உலகசிந்தனை படைத்தவர். உலக இலக்கியங்களை ஆராய்ந்தவர். அவரே ஒரு படைப்பாளர். அவரது விமர்சனங்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அவற்றின் அலசல்களை புறக்கணிக்க முடியாது.
1984ல் பேராசிரியர் எம்.ஏ.நுமான் மெளனியுடன் நடந்த நேர்காணலை விவரிக்கும்போது, தன்னுடைய, தருமு சிவராமு, நமது வெங்கட் சாமிநாதன், சச்சிதானத்தனின் ஆகியோரின் கருத்துக்களயும் தந்துள்ளார். அவற்றின் சுருக்கம்: நுமான்: முதுமையின் தாக்கம் அதிகம். அவருக்கு ஈழத்து தமிழ் பணி பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். தமிழ் முறையாகப் படித்ததில்லை. படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு விமர்சகனுக்கு வேண்டும் என்றார். அவருக்கு தத்துவம், பண்பாடு, நாகரீகம் என்றெல்லாம் ஆர்வமிருந்தது. ‘...தன்னைப் பற்றி தனது படைப்புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது...’. கதை எழுதிய அவர் தலைப்புகளை பத்திரிகைக்காரர்களிடம் விட்டு விட்டாராம்.’தனது கதைகளைத் தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாகச் சொன்னார்...உங்கள் மொழி நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார்... தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார்...’. ‘... சில சொற்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் மௌனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது... ஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன...
தருமு சிவராமு
‘மௌனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்) என்ற வரியில் ‘எவற்றின்’ என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மௌனியிடம் சொன்னாராம். மௌனி “அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுமான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது” என்று கருதினாராம். ‘இங்கு மௌனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது.’ என்று கூறும் நுமான் அவர்கள், மெளனி தன்னிடம் சொன்னது, இதற்கு முரண் என்று சுட்டுகிறார்.
வெங்கட் சாமிநாதன்: ‘மௌன உலகின் வெளிப்பாடு’:
‘மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார்... பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.’
கி.அ. சச்சிதானந்தன்
“(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”. ஒரு இலக்கியவாதியை பற்றி நால்வரின் கருத்துக்களை சுருக்கி அளித்திருப்பதால், பேராசிரிய உசாத்துணையில் இருக்கும் நுமானின் முழுக்கட்டுரையையும் நீங்கள் படித்தால் நல்லது. நன்றி, வணக்கம். இன்னம்பூரான்
உசாத்துணை:
http://azhiyasudargal.blogspot.co.uk/2010/10/blog-post_22.html
|
|
No comments:
Post a Comment