,அன்றொருநாள்: மார்ச் 13
புள்ளி துள்ளி வருகுதுடோய்!
நமக்கு புரியாத விஷயங்களை ‘நன்கு புரிந்து கொண்டோம்’ என்று மாயப்பறை சாற்றுவது எப்படி?
ஜோக் அடித்து.
சில உதாரணங்கள்:
- டாக்டர்: ‘முத்துக்குமார் எதனால் இறந்தார்? ~ ‘இரண்டு டாக்டர்கள்!’
- வக்கீல்: ‘வக்கீலும், உண்மை விளம்பியும் இங்கு நல்லடக்கம்.’ ~குறுகலாக இருக்கிறதே. இருவர் எப்படி?
- பொருளியல்: ‘இருப்பது நான்கு பொருளியல் நிபுணர்கள்; அபிப்ராயங்கள் ஐந்து!
- உளவியல் (நிஜம்) ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு பைத்தியம் என்ற பாசாங்குடன் சென்று ஆய்வு செய்த மாணவர்களின் ஆய்வு முடிவு: வெளியில் தான் பைத்தியங்கள் அதிகம். (தாமஸ் சாஜ்)
- புள்ளி விவர இயல்: ‘இது பிகினி நீச்சலாடை மாதிரி. முக்கியத்தை மறைக்கும். மற்றதை காட்டும்.
இந்த ஜோக் எல்லாம் அரதப்பழசு மட்டுமல்ல; படு போர்; எல்லாம் திசை திருப்பிகின்றன, நான்காவது ஆய்வை தவிர. அது பத்தாம்பசலி உளவியலுக்கே உலை வைத்து விட்டது. யாராவது கேட்டால் பார்க்கலாம், அந்த மென்மையான தன்மையுடைய விஷயத்தை. இப்போது புள்ளியின் விவரம்!
ஒரு தனி மனிதன் -புள்ளி விவர வல்லுனர் முனைவர் பாட்றிக் பால் - மனித உரிமைக்கு செய்த சேவை மகத்தானது. நிகரற்றது. பெரும்பாலோர் கவனிக்கத்தவறியது. தமிழ் மரபு கட்டளையின் நிறுவனர் முனைவர் நா.கண்ணன் ( அவர் ‘அன்றொரு நாள்’ இழைகளை கண்டு கொள்ளுகிறாரா இல்லையா? என்று கண்டு கொள்ள, இது ஒரு உத்தி என்க!) அடிக்கடி சொல்வார்: ஆய்வு வலுக்கவேண்டும் என்று. அதற்கு ஆணி வேர், புள்ளி விவர இயல்.
அன்றொரு நாள்: அக்டோபர் 6: ஒரு புரட்சியின் சுயசரிதம் என்ற இழையில், ‘..செர்பிய கொடுங்கோலன் ஸ்லோபடான் மிலோசெவிக் அதிபரான பிறகு, இனவெறி பேயாட்டம் ஆடியது; நாடு குட்டிச்சுவரானது. இனவெறியாளரான இவரது கொடுங்கோலாட்சியில் 20 ஆயிரம் மக்கள் 1991 க்ரோஷியன் போரிலும் மாண்டனர்; 250 ஆயிரம் மக்கள் 1992 -5 பாஸ்னியன் போரிலும் மாண்டனர்...[1990] என்று எழுதினேன். அவனுக்கு எமனாக வந்து சேர்ந்தார், முனைவர் பாட்றிக் பால். மார்ச் 13, 2002 அன்று, ‘தெ ஹேக்’ என்ற நகரில் உள்ள சர்வதேச நியாயமன்றத்தில், அவனை வசமாக மாட்டி விட்டார். அவனோ கைதி: திமிர் பிடித்த கைதி. மனித உரிமை ஆர்வலர்களின் பேட்டிகள், ஆய்வுகள் எல்லாவற்றையும் குடைந்து எடுத்து விட்டான். அவனுக்கு உயிர் பயம் அல்லவா? திரு. பால் இடம் இவன் வால் ஆட்டமுடியவில்லை. அவரிடம் இருந்தது வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. புலன் பெயர்ந்தவர்களின் ஆவணங்கள், பிணவறை கணக்கு வழக்குகள் வகையறா. அவருடைய சாமர்த்தியம், வரலாற்றுத்துணுக்குகளை சேகரித்து, அவற்றை புள்ளி விவர இயல் முறைகளை பயன்படுத்தி, அவனுடைய இனவெறி பேயாட்டத்தை நிரூபித்து விட்டார். ஆனாலும் ஜெயித்தது அவன் தான். வழக்கு முடியும் முன் செத்து விட்டான்.
முனைவர் பாட்றிக் பால் அவர்களும் பெரு நாட்டுக்குச் சென்று அந்த நாட்டின் ‘வாய்மை & சமாதான கமிஷனுக்கு’ உதவுவதில் முனைந்தார். அம்மாதிரி அவர் உலகெங்கும் சென்று பல இடங்களில் போர், இனவெறி, இவற்றையெல்லாம் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார். அதிபர் ரீகன் ஆட்சியின் போது ஐக்கிய அமெரிக்கா, அத்து மீறி, அமெரிக்கக்கண்டத்தின் மத்திய நாடுகளின் ஆளுமையில் குறுக்குச்சால் ஓட்டியதை, புள்ளி விவரத்துடன் குறை கூற ஆரம்பித்த முனைவர் பாட்றிக் பால் எல் சால்வடோர் நாட்டின் மனித உரிமை மீறல்களை தான் முதலில் பட்டியல் எடுத்தார். அவருடைய குருமார்கள்: வில்லியம் செல்ட்ஸர் & ஹெர்ப் ஸ்பைரர். இவருடைய பணிகளை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. காது கொடுத்துக் கேட்கப்போவது யார்?
அடுத்த கேள்வி: இந்தியாவும், புள்ளி விவர இயலும்:
இந்தியாவின் புள்ளிவிவர இயலின் தந்தையை பற்றி அன்றொரு நாள்: ஜூன் 29 இழையில் எழுதியிருந்தேன். அவருடைய பொற்காலம் கழிந்தது. தற்கால இந்திய புள்ளி விவரங்களில் எனக்கு நம்பிக்கை குறைவு. சொல்லப்போனால், இந்திய தணிக்கைத்துறை மட்டுமே அந்த இயலின் நுட்பமான முறைகளை கையாளுகிறது. மற்றபடி ஆதார புள்ளி விவரங்களை நமது அமைப்புகள் சிதைத்து விடுகின்றன. அப்படியிருந்தாலும், மக்கள் தொகை கணக்கு எடுப்பது பரவாயில்லை. நாம் தான் சாத்தமங்கலம் பையன்களை எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்பி விடுகிறோமே -(அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 2:கணக்குப்புலி}! ஒரு நாள் முனைவர் பாட்றிக் பால் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது தான்.
இன்னம்பூரான்
13 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment