அன்றொரு நாள்: அக்டோபர் 24
மருது பாண்டியர்களுக்கு நினைவாஞ்சலி
அரசியல் பிரகடனங்களில் ‘இழிபிறப்பான பரங்கிகளுக்கு பரம எதிரியான மருது பாண்டியனின்’ ஜூன் 1801 விடுதலை அறிக்கை,’...யார் இந்த அறிவிப்பைப் படித்தாலும், அக்கறையுடன் படியுங்கள்...அனைத்து சமூகத்தினருக்கும் - பிராமணர்களாக இருந்தாலும் சரி - அல்லது செட்டியார், வைசியர், சூத்திரர், முஸ்லீம்களாக இருந்தாலும் சரி...மனிதன் ஆயிரமாண்டுகளுக்கு வாழ்ந்தாலும் அவன் ஒரு நாள் மரணம் அடைவது திண்ணம். அதைப்போன்றே அவனது புகழும், சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நிலைத்து நிற்பது நிச்சியம்...’ என்று முழங்கியது. அவரது சொல்லுக்கிணங்க, இந்திய மக்கள் யாவரும் நமது முன்னோர்கள் அருந்தவம் செய்து பெற்ற சுதந்திரத்தை, கண்ணியம் பிறழாமல், இராப்பகல் விழித்திருந்து, (‘Vigilance is the price of Liberty-J.S.Mill) நாணயம் என்ற வேலியமைத்து, போற்றி பாதுகாக்கவேண்டும். இழிபிறப்பான இந்திய அதர்மகர்த்தாக்களுக்கு பரம எதிரியாக இயங்கவேண்டும். இந்த படி ‘முழங்கால் முறிச்சான்’. ஏறினால், தேவதரிசனம். இல்லையெனில், நாம் அடி சறுக்கிய இந்திய யானை.
இந்தியாவை பறித்து ஆண்ட ஆங்கிலேய கலோனிய அரசு, அக்டோபர் 24, 1801 அன்று மருது சகோதரர்களையும், நூற்றுக்கணக்கான உற்றார், உறவினர்களையும் தூக்கிலிட்டது. இது ஒரு கரி நாள். வெள்ளையனை விடுங்கள். ஏகப்பட்ட தமிழர்களின் வஞ்சமும், வஞ்சகமும் ஆடிய கூளியாட்டத்தை சொல்லி மாளாது. மருது பாண்டியர்களில் பெரியவர் அரசியல் சம்பந்தமில்லாத வேட்டைக்காரர். சிறியவர் ஆளுமை செலுத்தியவர். இருவரும் கலோனிய அரசுடன் நட்பு பாராட்டியவர்கள் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் தான் அவர்களின் அணுகுமுறையை மாற்றியவர் என்று உசாத்துணை நூலில் படித்தேன். ஆனால், அந்த கட்டுரையை பலமுறை படித்தாலும், தொடர்புகளும், தேதிகளும், உசாத்துணைகளும் இல்லாததாலும், விளக்கப்படாமல் விடுபட்ட செய்திகள் புதிராக அமைந்து விட்டதாலும், மேலும் தேடவேண்டி இருந்தது. வழக்கம் போல ‘அரைத்த மாவு’, இணைய தளத்தில். இந்த கட்டுரையில் ஆங்கில தளபதி வெல்ஷுவின் நாட்குறிப்பு கூறப்பட்டதால், வேறு வகையில் தேடி கண்டுபிடித்த கட்டுரையை கீழே, என் சங்கேதங்களுடன் (சிவப்பு மசி) இட்டதின் காரணம், நாம் மறுபக்கத்தையும் சீர்தூக்கி பார்ப்பதை வரவேற்கவேண்டும், என்பதே. எல்லாரையும் அதை படிக்கச்சொல்லி வேண்டுகிறேன். நான் கேட்டுக்கொண்டால், எழுதத்தொடங்கும் நீங்கள் படிக்கமாட்டீர்களா? என்ன?
கட்டுரை நீண்டுவிட்டது, வரலாற்றின் தராதரத்தை நிலை நாட்ட. அது சம்பந்தமான ஆங்கில நூல்களையும் உசாத்துணையில் குறித்திருக்கிறேன். முழு நூல்களையும் படிக்க இயலும், இணைய தளத்தில். இங்கு, ஆங்கிலேய கலோனிய ஆட்சி/ அதன் நிறை குறைகள் பற்றி நிறைய ஆய்வு நூல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலாக, அவற்றில் இருக்கும் வரலாற்று உண்மை போற்றும் பண்பை, நான் தமிழகத்தில் கண்டது மிகக்குறைவு. அதிகபக்ஷம், உண்மைகளுக்கு நாட்டுப்பாடல்கள் உதவுகின்றன.
என் தரப்பிலிருந்து ஒரு விளக்கம். இந்த தொடருக்கு ஆதரவு இருக்கிறது, தனி மடல்கள் வழியாகவும். எனக்கும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ஆய்வு வரவுகள், என்னுடைய படிக்கும் ஆர்வத்தை கூட்டியவண்ணம். என் இயலாமையை (முக்யமாக, கை வலி) புரிந்து கொண்டு ஆதரவும் கிட்டியதும் பெரிது. கூடியசீக்கிரம் எழுதுவதற்கு பதிலாக, ஆடியோ/வீடியோ பாதையில் செல்லவேண்டும் போல இருக்கிறது. நான் மக்கிண்டோஷ் ஆசாமி. ஐ-சேட், ஸ்கைப், ஜி டாக், வசதிகள் உள்ளன. எப்படி என்று தான் தெரியவில்லை. சொல்லிக்கொடுங்களேன்.
இன்னம்பூரான்
24 10 2011
உசாத்துணை:
~ மருது சகோதரர்கள்: இரா,குப்புசாமி: விடுதலை வேள்வியில் தமிழகம்; (2000) தொகுப்பாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன்.
=
*
மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்
பி.ஏ. கிருஷ்ணன்
“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.
புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.
புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி. உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.
2
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.
Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.
“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”
தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”
தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும்ொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”
உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.
மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
3
ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;
“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமதானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”
மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:
Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.
ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.
4
கோர்லே கூறுகிறார்:
“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”
மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.
1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.
“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.
மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’
மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”
எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.
கோர்லே கூறுகிறார்:
நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”
5
இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.
இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.
இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.
இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
6
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்
அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.
1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டுSouthern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.
இந்த விதவைகள் யார்?
முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.
இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.
தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.
மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,
கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:
1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London
- Military Reminiscences - James Welsh 1830 London
3. The Examiner 1813 Collection – Leigh Hunt
4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London
No comments:
Post a Comment