=அன்றொருநாள்: மார்ச் 10 & 18
வாழ்க! நீ எம்மான்!
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते॥२९॥
என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः॥३०॥
காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
ஶ்ரீமத் பகவத் கீதையில் காண்டீபத்தைக் களைந்து விட்டு, ‘என் உடல் நடுங்குகிறது, கண்ணா!’ என்பான், அர்ஜுனன். அந்த மாதிரி, சுட்டெரிக்கும் கோடையிலும், பதைபதைத்த ஆன்மாவும், நடுங்குகிற உடலுமாக, நாங்கள் நின்ற இடம், ஒரு நீண்ட தாழ்வாரம்; விசாலமான மாளிகை; அமைதியான நந்தவனம்: செல்வந்தர் வாழுமிடம். அங்கு தங்க எனக்கு சலுகையான வசதிகள். அது அரசு விருந்தினர் இல்லம். ஆனால், அதில் மனம் செல்லவில்லை. வருடம் 1966. என்னுடைய சஞ்சலத்தை புரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள வஸந்தா இருந்தாள். சின்ன வயதா! ஆத்மானுபவங்களை கண்ணசைவில் உணர்ந்து கொள்ளும் வயது. உக்காய் கானகக்குடிலில் தான் வாசம். அங்கிருந்து, கிட்டத்தட்ட 200 மைல்கள் காரோட்டி வந்த அலுப்பு. வந்து இறங்கியவுடன், வாசல் வராண்டாவில் ஒரு சலவைக்கல் பதிவு. யாரும் எச்சரிக்கவில்லையா! திகைத்துப்போய்விட்டோம். இந்த இடத்தில் தான் 1922ல் அண்ணல் காந்தி ராஜத்துரோகக்குற்றம் சாட்டப்பட்டார் என்றது, அந்த கல்வெட்டு. எந்த அறை என்று நாங்கள் தேடியதை, விந்தையாக பார்த்தார்கள், அங்கிருந்தவர்கள். ‘கோயில் நெருங்க, நெருங்க, சாமி நகர்ந்து, நகர்ந்து...!’.
வழக்கு நடந்த தினம் மார்ச் 18. ஏனிந்த அவசரம் என்றா கேட்கிறீர்கள்? காந்திஜியையும், பாங்கரையும் கைது செய்த தினம் மார்ச் 10, 1922. அன்றே நாடு கொதித்தெழுந்தது. சரி. அந்த ஷாஹிபாக் அரண்மனையில், மார்ச் 18, 1922 அன்று அஹமதாபாத் நகரில் நடந்ததெல்லாம், அரசின் கழுகுப்பார்வையிலிருந்து தப்பித்து, மான்செஸ்டர் கார்டியன் என்ற பிரிட்டீஷ் இதழில் பதிவானது. அதன் மேல் ஒரு பார்வை.
“...அம்பாலால் சாராபாய் ஊரிலேயே பிரமுகர். கலைக்டர் சாட்ஃபீல்டுக்கு வேண்டப்பட்டவர். அனுமதிச்சீட்டு வாங்கி வைத்திருந்தார். எனக்கு கம்பெனி, அவருடைய குடும்பப்பள்ளியின் முதலாசிரியர், மிஸ்டர் ஸ்டாண்டிங் என்ற ஆங்கிலேயர்... ‘டாண்’ என்று 11 45 காலை, போலீஸ் சூபரிண்டெண்ட் மிஸ்டர் ஹில், ஒரு தனி ரயில் முதல் வகுப்புப் பெட்டியை நீராவி இஞ்சின் இழுத்து வர, காந்திஜியையும், சங்கர்லால் பேங்கரையும், ரயில்வே க்ராஸ்ஸிங்க் வரை, அதில், கொண்டு வந்து, பிறகு காரில் ஏற்றிக்கொண்டு வந்தார். கோர்ட்டில் இருந்த எல்லாரும் ‘சட்’டென்று எழுந்து நின்றனர். காந்திஜி கோவணாண்டி தான்; ஆனால், முகத்தில் என்ன தேஜசு! மணி 12. ஜட்ஜ்் ப்ரூம்ஃபீல்ட் ஐ.சீ.எஸ். நுழைந்தார். மக்கள் நிம்மதியின்மை, ராஜத்துரோகம் ஆகியவற்றை சட்டரீதியில் விளக்கி விட்டு, குற்றச்சாட்டை வாசித்தார்.
உரையாடல்:
ஜட்ஜ்: குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது வழக்கை விலாவாரியாக விசாரிக்க வேண்டுமா?
காந்திஜி: நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.
பாங்கர்: நானும் அப்படியே.
அட்வகேட் ஜெனெரல் ஆர்ம்ஸ்ட்ராங்க்: குற்றத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்றாலும், தண்டனை எவ்வளவு என்று தீர்மானிக்க, விசாரணை வேண்டும்.
(ஜட்ஜ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை).
ஜட்ஜ்: நான் தண்டனையை பிரகடனம் செய்யவேண்டியது தான் பாக்கி. அது பற்றியாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தை கேட்க நான் தயார்.
காந்திஜி தன்னுடைய உரையை வாசிக்க விரும்பினார். ஊசி போட்டால், விழும் சத்தம் கேட்கும். அப்படி ஒரு அமானுஷ்ய நிசப்தம். (நான் இந்த நிகழ்வை பற்றி ஒரு தடவை எழுதியதாகவும், அதில், அண்ணலுடைய முழு உரையையும் பதிவு செய்ததாகவும் ஞாபகம். அது அகப்படவில்லை. பேராசிரியர் தேடிக்கொடுப்பார்.) ஒரு சில வாக்கியங்கள், இங்கே. முழு உரையை, உசாத்துணையில் படித்துக்கொள்ளலாம்.
காந்திஜி: “...என்னை விடுதலை செய்தாலும், நான் திரும்பவும் அதையே செய்வேன்... சட்டரீதியாக மாபெரும் குற்றமும், என் மனசாக்ஷிப்படி ஒரு பிரஜையின் உயரிய கடமையையும் செய்திருக்கிறேன். எனவே, அதிக அளவு தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்...எனக்கு எந்த ஊழியனுடனோ, அதிகாரியினுடனோ பகையில்லை. ஆகவே, தண்டனையை நான் எதிர்ப்பது பொருளற்றது. ஆனால், இந்தியாவின் மற்ற ஆளுமையினருடன் ஒப்பிட்டால், இந்த பிரிட்டீஷ் ராஜ் இந்தியாவுக்கு செய்த தீமை பெரிது. அதை பகைத்துக்கொள்வது எனக்கு வரப்பிரசாதம் ஆயிற்றே...’.
சாக்ரட்டீஸ் விஷம் பருகியதையும், ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததையும் நினைவூட்டியது, இந்த காட்சி. காந்திஜியின் உரை முடிந்தபின், லோகமான்யதிலகர் மீது நடந்த வழக்கை முன்னுதாரணமாகக் கூறி, காந்திஜிக்கு ஆறு வருட தண்டனை அறிவித்த ஜட்ஜ் அடுத்தபடி சொல்கிறார், ‘உங்களை அரசு சிறையிலிருந்து விடுவித்தால், என்னை விட மகிழ்ச்சி கொள்ள ஆளில்லை.’
காந்திஜி தண்டனையை ஏற்றுக்கொண்டார். அதிகாரிகள் எல்லாரும் கிளம்பி விட்டார்கள். ஆசிரமவாசிகள் அண்ணலை வணங்கி விட்டு வீடு திரும்பினர். அந்த ஒத்தைப்பெட்டி ரயிலே, அண்ணலை தாங்கிக்கொண்டு எரவாடா சிறைக்குச் சென்றது.
கோர்ட்டில் ஃபோட்டோ எடுக்க அனுமதியில்லை. ரவிசங்கர் ராவல் என்ற காந்திபக்தன், அவசரம், அவசரமாக, உடனடி சித்திரங்கள் வரைந்து கொள்ள, மிஸ்டர் ஸ்டேண்டிங்க், அதையும் தன் குறிப்புகளயும், மான்செஸ்டர் கார்டியனுக்கு அனுப்பினார். ஒரு மனிததெய்வத்தின் கீர்த்தி பாடப்பட்டது.
இன்னம்பூரான்
10 03 2012
உசாதுணை:
No comments:
Post a Comment