அன்றொருநாள்: மார்ச் 14
அவளும், அவனும்: ஒரிஜினல் வெர்ஷன்
இந்தக்காலத்து அரசியல்வாதிகள் போல, ராசாவுக்கு இரண்டே இரண்டு தர்மபத்தினிகள். இல்லை, இல்லை. மூத்தவள் அதர்மபத்தினி. அவளுடைய பெயர் தில்பஹார். இளைய மாமியின் பெயர் நெளபஹார். தில்பஹாருக்கு குழந்தை பிறக்கவில்லை. அவளுடைய கண்கள் அலை பாயும். சேனாதிபதி, அடில் என்பவர். அவருக்கு அவள் வலை வீச, அவரும் வழுக்காமல் நழுவ, அவளுக்கு சினம் பொங்கியது. அவரை சிறையில் தள்ளி, அவருடைய மகள் ஆலம் ஆராவை நாடு கடத்தினாள், அந்த பொல்லாத ராணி. குறுக்கே கேள்வி கேட்காதே என்று எத்தனை தடவை சொல்வது! அடில் ஒத்துக்கொள்ளாவிடின், ஆலமை தண்டிப்பானேன் என்று கேட்கிறாய். நியாயம் தான். ஆனால், ராவணன் சீதையை லவட்டாவிடின் ராமாயணம் எப்படிப்பா வரும்? அந்த மாதிரி தான். ஆலம் ஆராவை, நம்ம குறவர்கள் இல்லை, அந்த காட்டுமக்கள் எடுத்து வளர்க்கிறார்கள். ஒரு சுபதினத்தில்,அவர்கள் அரண்மனைக்கு வர, இளைய ராஜா பாடியது: ஐ மீன் கற்பனையூர் இளைய ராஜா (மாஸ்டர் விட்டல்):
‘சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை தானறிந் தனளோ இலளோ பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என் உள்ளம் பின்னும் தன் உழை அதுவே .’ [குறுந்தொகை: 142: கபிலர்: குறிஞ்சித்திணை]
[பாங்கனே! பறி கொடுத்தேனே! தேர்ப்பாகனே! பறி கொடுத்தேனே! அந்த பொண்ணு கயல் விழியாள். காட்டு ரோசா மாலை போட்டுக்கிணு, சோளக்கொல்லை பொம்மை மாதிரி, மச்சு மேலே ஒய்யாரமா நின்னுக்கிட்டு பக்ஷி விரட்றாளே, அந்த காமாக்ஷி; அவளிடம், என் இதயத்தை பறி கொடுத்தேன்!...]
*
கெவாக் கலர் சினிமா வந்த போது கெவனித்துப்பார்த்தோம். டெக்னிக்கலர் வந்த போது டெக்னிகலா பார்த்தோம். 60 எம்.எம். அகலத்திரை வந்த போது அரக்க பரக்கப் பார்த்தோம். 3டி வந்த போது, திடுக்கிட்டுப் பார்த்தோம். முதல் முதலா சவுண்டு விட்டபோது, ஒரே கலாட்டா!
சற்றே காது கொடுத்துக் கேளும். இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக சவுண்ட் விட்ட பாட்டு: ‘தே! தே! குதா கே நாம் பே...’ என்ற தேவகானம்; பொருள்: ஆண்டவன் பெயரை சொல்லி, கொடு...’ ஆம். மார்ச் 14, 1931 அன்று பம்பாய் மெஜெஸ்டிக் சினிமாவில் மெஜஸ்டிக்கா திரையிடப்பட்ட முதல் பேசும் படம் ‘ஆலம்-ஆரா! போஸ்டரெல்லாம் பிரமாதம். ‘ஆடல், பாடல், உரை வசனம்: கேளுங்கோ, பாருங்கோ’ என்று. அப்படி ஒரு கூட்டம். போலீஸ் பாரா. டைரக்டர் அர்தெஷீர் மார்வான் ஈரானி படே ஆளு. அடிச்சுப்பிடிச்சு முதல் சவுண்ட் சினிமா திரையிட்டார். ஜுபைய்டா தான் ஹீரோயின். அதாவது ஜூனியர் ஹீரோயின். அவள் நிஜமாகவே ஒரு இளவரசியாக்கும்! நிஜ ஹீரோ என்னவோ ‘வழுக்காமல் நழுவிய’ அடில். அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. ஹீரோ பேசாத சினிமாவும் இது தான் என்று ரிக்கார்டு.
இந்த சினிமா எடுத்த போது டைரக்டர் ஈரானியிடம் எடுபிடியாக இருந்த ராய் பகர்ந்த பாமரகீர்த்தி: ‘... ஃபிலிம் ரோல்களை தியேட்டருக்குள் எடுத்து செல்லமுடியவில்லை. அத்தனை கூட்டம். நெரிசல். பின்னால் ஒருந்த செண்ட்ரல் சினிமாவிலும், இங்கு வந்த கூட்டம் நிரம்பி வழிந்தது. ஜனங்களின் ஒரே கேள்வி: ‘ இந்த சினிமா எப்படி பேசுகிறது?’ கூகிளாண்டவர் இந்த பேசும்படத்திற்கு படைத்த விருதை கண்டு களியுங்கள்.
துரதிர்ஷ்டவசமாக, ஒரு தீ விபத்தில் இந்த படத்தின் ஒரே ஃபிலிம் சுருள் சாம்பலானது.
முதல் தமிழ் பேசும் படம்: காளிதாஸ்(1931)
இன்னம்பூரான்
14 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment