அன்றொரு நாள்: நவம்பர் 4
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு...
அன்றொரு நாள் இந்த சித்பாவன் பிராமணர்களை பற்றி எழுதவேண்டும் என்று சொன்னேன், ‘ஜாதி மதங்களைப் பாரோம்...’ என்று சொல்லி ‘எங்கள் மாநிலத் தாயை வணங்கும்’ நான். அத்தருணம் வந்து விட்டது. முரண் யாதுமில்லை. கடந்த இரு நூற்றாண்டுகளில், மராட்டியர்களுக்கும், இந்தியர்களுக்கும், உலகுக்கும் இந்த சிறிய சமூகம் செய்துள்ள பணி மகத்தானது. வாஸுதேவ் பல்வந்த் ஃபாட்கே (04 11 1845 ~17 02 1883) அவர்கள் பங்கிம் பாபுவுக்கும் முன்னோடி, அண்ணல் காந்திக்கும் முன்னோடி; நேதாஜிக்கும் முன்னோடி; பாபாசாஹேப் அம்பேத்காருக்கும் முன்னோடி; பல சித்பாவன் பிராமணர்களுக்கும் முன்னோடி. உமக்கும், எனக்கும் முன்னோடி.இவருக்கு நற்பண்புகளை போதித்த ஜட்ஜ் மஹாதேவ் கோவிந்த் ரானடேயும் ஒரு சித்பாவனர். சமூக மரபுகள் சமத்துவத்துக்கு முரண் அன்று. சித்பாவன் சமூகத்தில் தேசாபிமானம், வீரம், வாய்மை, தனித்துவம், பணி, தர்மம், உயர் கல்வி, பாண்டித்தியம், பெண்ணியம் எல்லாவற்றிற்கும் தனி முன்னுரிமை உண்டு. தொட்டில் பழக்கமாதலால், காடு வரை அவை வரும். தென்னகத்தில் கூட ‘படிப்புத்தான் முக்யம்’ என்று சில சமூகங்களில் பெற்றோர்கள் வழக்கமாகவே தியாகம் செய்வதை பாமரகீர்த்திகளில் கண்டுள்ளோம்.
இன்றைய தலைமாந்தரின் தனிப்பெருமை, பிரிட்டீஷ் அரசாங்கத்தின் மீது தனிமனிதாக இவர் தொடுத்த ராபின் ஹூட் யுத்தம், சந்தனத்தேவன் போர். ‘ஆனந்த மடம்’ என்ற பங்கிம் பாபுவின் விடுதலை வீராவேச புதினத்திற்கு இவர் தான் அடி கோலியதாகவும், கதரும், சுயதேச பொருள்களும் மட்டுமே, சபதமிட்டு, பயன் படுத்தியதாகவும் ஒரு அரசு குறிப்பு சொல்கிறது. அப்படியானால், அண்ணல் காந்தியின் முன்னோடி. இவரது வீர தீரச்செயல்களை தன் புதினத்தில் பங்கிம் பாபு எழுதியதை, ஆங்கிலேய அரசின் வற்புறுத்தலால், ஐந்து முறை திருத்தி எழுத வேண்டி இருந்தது என்று சிசிர் தாஸ் தன்னுடைய நூலில் கூறி இருப்பதாக, உசாத்துணை சொல்கிறது. எனவே, பங்கிம் பாபுவின் முன்னோடி. இவருடைய ஆசானே ஒரு க்ராந்தி வீர் (புரட்சி வீரன்): க்ராந்திவீர் லாஹுஜி சால்வே~‘மாங்க்’ என்ற கீழ்ச்சாதியில் பிறந்தவர். (அக்காலம் ஹரிஜன், தலித் என்ற சொற்கள் கிடையாது,). கற்றுக்கொண்டது மல்யுத்தமும், தீண்டாமை ஒழிப்பும். (ஒரு நுட்பம் நோக்குக. லாஹூஜிக்கு ‘ஜி‘ என்ற விகுதி, சிஷ்யகோடிகள். இதை பார்த்தால், தற்காலம் போல அக்காலம் தீண்டாமை இல்லையோ?) இவரது கூட்டாளிகளோ, ராமோஷி, கோலி, பீல், தங்கர், ரோஹில்லா, எனப்பட்ட பழங்குடி மக்கள். எனவே, இவர் பாபாசாஹேப் அவர்களுக்கு முன்னோடி. தொடங்கியவை கல்வி அளிக்க ஐக்ய வர்த்த்னி சபை. ஏழை பாழைகளை, ஊருக்கு இளைத்த விவசாயிகளை முன்னேற்ற, அரசுடன் புரட்சி யுத்தம் புரிய ‘ராமோஷி’ என்ற புரட்சிப் படை. ஸ்வராக்யமே இலக்கு. இவர் தான் மற்றொரு சித்பாவனராகிய லோகமான்ய திலகருக்கும், நேதாஜிக்கும், தேசாபிமான முன்னோடி என்பதில் ஐயமில்லை.
வாஸுதேவ் பல்வந்த் ஃபாட்கே எதோ கிராமத்தான் படை அமைத்து சர்வ வல்லமை பொருந்திய கலோனிய அரசுடன் மோதி தோற்றவர் என்று சொல்வது சரியல்ல, நடந்தது அது தான் என்றாலும். புனே நகரத்தை இவர் கைப்பற்றி சில நாட்கள் வைத்திருந்து, ஆட்டம் காண்பித்ததை மறக்கலாமோ? அல்லது சின்ன மருது போல கலோனிய அரசை எதிர்த்து கர்ஜித்ததை மறக்கலாமோ? கானூரில் நடந்த சண்டைக்கு பிறகு, அரசு இவருடைய தலைக்கு வெகுமானம் அறிவித்தது. இவரும் கவர்னர் தலைக்கு வெகுமானம் அறிவித்தார்! துரோகமோ, இந்திய தரப்பிலிருந்து. ஜூலை 20, 1879 அன்று கலட்கி என்ற இடத்தில் நடந்த போரின் பிறகு, ஒரு கோயிலில் தஞ்சம் புகுந்த ஃபாட்கே கைது செய்யப்பட்டு, அவருடைய டைரி குறிப்புக்களே அரசு தரப்பு சாக்ஷியாக அமைந்து விட்டது. ஏடன் நாட்டுக்கு (வளை குடா: அக்காலம், இந்திய சாம்ராஜ்யத்தில்!) நாடு கடத்தப்பட்டார். ஃபெப்ரவரி 13, 1883 அன்று சிறைக்கம்பிக்களை தகர்த்துத் தப்பி சென்றார்; பிடிபட்டார். உண்ணா விரதத்தைத் தொடங்கினார். அதன் விளைவாக, ஃபெப்ரவரி 17, 1883 அன்று உயிர் நீத்தார் என்று சொல்கிறது, பிற்காலத்து வரலாறுகள். யார் எந்த சான்றின் அடிப்படையில் எழுதினார்கள் என்று தெரியவில்லை. அவருடைய இறுதி நாட்களை பற்றிய செய்தி, எனக்கென்னமோ, மர்மாக இருக்கிறது. (எனக்குக் கிடைக்காத விக்கிப்பீடியா குறிப்பு: Rigopoulos, Antonio. Dattātreya: The Immortal Guru, Yogin, and Avatāra : a Study of the Tranformative and Inclusive Character of a Multi-faceted Hindo Deity. p. 167). சிறைக்கம்பிகளை வளைக்கும் வலிமை, பல நாட்கள் பட்டினி இருந்த ஒருவருக்கு சாத்தியம் அல்ல. மூன்று-நான்கு நாள் உண்ணாவிரதத்தில் உயிர் இழக்கும் அளவுக்கு, புரவியேற்றம், மல் யுத்தம், துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவது ஆகிய வித்தைகளில் கெட்டிக்காரனாக இருந்த ஃபாட்கே அவர்கள் நோஞ்சான் அல்ல. நடந்தது என்ன? ஏடன் என்கெளண்டரா?
இன்னம்பூரான்
04 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment