அன்றொருநாள்: மார்ச் 25
உணர்ச்சி வசப்பட்டால்!
அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்த போது,நேருவின் கண்களில் ஜலதாரை. பிரதமரான அவருக்கே தெரியாமல், ஜனாதிபதியின் அன்பு கட்டளைப்படி, அந்த பிரகடனம். அந்த அன்பின் அரவணைப்பில், நேரு திக்குமுக்காடிவிட்டார். இரண்டாம் உலக யுத்தத்தில், பிரிட்டன் வாகை சூடியது. சூத்ரதாரி, சர்ச்சில். அடுத்த தேர்தலில் படுதோல்வி அவருக்கு. அதையெல்லாம் பொருட்படுத்தாத சர்ச்சில், மக்களின் ஜனநாயகன் சர்ச்சில், மூப்படைந்து பார்லிமெண்ட்டிலிருந்து விலகினார். வாழ்த்துக்கள், எல்லா தரப்பிலிருந்தும். வானை எட்டிய கரகோஷம். முகத்தை மறைத்துக்கொள்ளாமல் அழுதார். ஆனந்தக்கண்ணீர். சர்தார் வல்லபாய் படேல் பயணித்த விமானம் சிக்கலில் மாட்டிக்கொண்டது. இந்தியாவே கவலையில் ஆழ்ந்தது. அபாயம் நீங்கி, அவர் நாடாளும் மன்றம் வந்தார். சபையே, ஒரு மனதாக, ஆர்பரித்தது. துண்டை வாயில் புதைத்துக்கொண்டு விம்மினார், அந்த ‘இரும்பு மனிதர்’. இதெல்லாம் அவ்வப்பொழுது படித்தது.*
இங்கிலாந்தில் அநேகமாக எல்லா ஊர்களில் ஒரு வில்பர்ஃபோர்ஸ் வீதியொன்று இருக்கும். அவர் ஆஃப்பிரிக்காவிலிருந்து அடிமை இறக்குமதியை கண்டித்தார். படாத பாடு பட்டார். பலனில்லை எனலாம். ஏனென்றால், 1804, 1806 காலகட்டத்தில் அவர் பார்லிமெண்டில் கொண்டு வந்த அடிமை ஒழிக்கும் சட்டம் எடுபடவில்லை. பொறுக்க முடியாமல், 1806ல் அவர் அடிமைப்படுத்துவதை திட்டவட்டமாக கண்டித்து, ஒரு நூல் எழுதினார். மக்களின் மனசாக்ஷி உறுத்தியது. சமுதாய விழுப்புணர்ச்சியின் பயனாக, புத்தாண்டு 1807 செவ்வனே விடிந்தது. ஸர் சாமுவேல் ரோமிலி, வில்பர்ஃபோர்ஸின் அடிமை இறக்குமதி ஒழிப்பு மசோதாவை சிலாகித்து பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு, வில்பர்ஃபோர்ஸின் அமைதியான தூக்கத்தையும், நெப்போலியனின் தூக்கமின்மையின் அவதியையும் பற்றி குரல் கொடுத்தார். ரோமிலியின் வரலாற்று ஆசிரியர் சொன்னது,
‘ரோமிலி பரவசத்துடன் பேச, பேச, வில்பர்ஃபோர்ஸ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். சிரத்தை, கைகளுக்குள் வைத்துக்கொண்டு, குனிந்த வண்ணம் அமர்ந்திருந்தார். நீருண்ட மேகக்கண்களிலிருந்து தாரை, தாரையாக நீர் பிரவாகம். இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் கரகோஷத்திற்குத் தடை, ஒரு மரபு. ஆனால், மார்ச் 25, 1807 அன்று, எல்லா உறுப்பினர்களும் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்துக்கூறி, கை கொட்டி ஆரவாரம் செய்தனர்.’ அவர்கள் எல்லாரும் வெள்ளையர்கள்.
இருக்காதா பின்ன? 1787ல் தொடங்கிய போராட்டம். எத்தனை கல்லும், முள்ளும். ‘இறைவன் எனக்கு இரு பணிகள் தந்திருக்கிறார்: அடிமை ஒழிப்பு & நன்னடத்தை பிரசாரம்.’
( வில்பர்ஃபோர்ஸின் டைரி: அக்டோபர் 28, 1787) வில்பர்ஃபோர்ஸிடம் கேட்டபோது, ‘நான் உணர்ச்சிவசப்பட்டேன். தன்னிலை மறந்தேன். என்னை சுற்றி நடந்ததை அறியேன்.’ இது நடந்த, அடிமை இறக்குமதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட தினம், மார்ச் 25, 1807. அது ஒரு திருப்புமுனை. அதுவும் வாசற்படியில். அவருடைய இடைவிடாத முயற்சியினால், அடிமை வைத்துக்கொள்வதே சட்டவிரோதமாயிற்று, பிற்காலம்.
அடுத்தாற்போல், இந்த மார்ச் 25, 1965 (158 வருடங்களுக்கு பிறகு) நிகழ்வையும் பார்த்து விடுங்கள். இந்த பகுதி, அன்றொரு நாள்: டிசம்பர் 1:ப்ளாக்கும், ப்ளேக்கும் & அன்றொரு நாள்: ஜனவரி:15:‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டால்...’ ஆகியவற்றின் தொடரே ஆகும், ஒரு விதத்தில். இன்னொரு விதத்தில் வில்பர்ஃபோஸின் மறு அவதார நிகழ்ச்சி என்றும் சொல்லலாம்.
ரெவரெண்ட் மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கறுப்பும், வெள்ளையுமாக, 25 ஆயிரம் மக்களை திரட்டிக்கொண்டு, அலபாமா மாநிலத்தின் இனபேத கொள்கையை எதிர்த்து உரையாற்றும் போது சொன்னார், ‘நாம் புறமுதுகு காட்டமாட்டோம். புறப்பாடு ஆகி விட்டது. இனபேதம் எம்மை தடுக்காது’. கூட்டத்தை சந்திக்கத் தயார் என்று கூறிய கவர்னர் வாலெஸ் புறுமுதுகு காட்டினார். ஜன்னல் வழியே மக்களின் ஆரவாரத்தை, சற்றே அச்சத்துடன் எட்டி பார்த்த வண்ணம் இருந்தார். செல்மா என்ற ஊரிலிருந்து 54 மைல் தூரம் கால்நடையாக வந்த மக்களோ, களைப்பு இல்லாமல், புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர். சிலருக்கு இது நாடகபாணியாக தோன்றியதாம். ஆனால், இது வாகை சூடிய மக்கள் சக்தி. நம்ம தண்டி சத்யாக்ரஹம் மாதிரி, நான்கு நாட்கள் நடை. வெள்ளையர் தாக்கல் எதிர்பார்க்கப்பட்டதே. அலபாமா கவர்னர் தங்களால் அலட்டிக்கொள்ள முடியாது என்று கை விரித்துவிட்டார். மத்திய அரசின் ராணுவம் இவர்களின் பாதுகாப்புக்கு வந்தது. அந்த வகையில் தண்டி யாத்திரையிலிருந்து மாறுபட்டது, இந்த ஊர்வலம்.
இந்த நடை நடந்து அவர்கள் கொடுக்க விரும்பிய விண்ணப்பம்:
“நாங்கள் நடை நடையா நடந்து வந்தது ஐந்து நாளும் 50 மைலும் அல்ல. அது நெடும்தூரம், ஐயா! ~ மூன்று நூற்றாண்டுகள் அனுபவித்த இன்னல்களும், இடர்ப்பாடுகளும். கவர்னர் சீமானே! நாங்கள் உங்களிடம் எங்கள் சுதந்திரத்தை பிரகடனம் செய்கிறோம். எங்களுக்கு வாக்குரிமை வேண்டும். சட்டம் எங்களை சமமாக பாவிக்க வேண்டும். போலீஸ் அடக்குமுறை ஒழியவேண்டும்.”
கவர்னரா? கொக்கா? திரை மறைவிலிருந்து பார்க்கும் அச்சம், அவரை, முற்றிலும் ஆட்கொண்டது. தன்னுடைய காரியதரிசியை அனுப்பினார். மார்ட்டின் லூதர் கிங் கூட இருந்த ரெவரண்ட் லெளரியின் பதில், பிரமாதம்:
“கவர்னர் எங்களை பார்க்கமுடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இந்த நாட்டு பிரஜைகள் என்ற உரிமையில் நாங்கள் அவரிடம் புகார் அளிக்க வேண்டும். உங்களிடம் அல்ல. அவரிடம் சொல்லுங்கள். நாங்கள் மறுபடியும் வருவோம் என்று.”
இந்த உரிமை போராட்டத்தின் கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளின் (1787 ~1965) வரலாற்றின் சுருக்கம், உம்மை, இது பற்றி மேலும் அறிந்து கொள்ள தூண்டவேண்டும் என்ற அவா. ஏனெனில், இந்தியாவில் இன்றளவும் கொத்தடிமைகள் உண்டு: சுண்ணாம்பு காளவாய், செங்கல் சூளை, முறுக்கு சுற்றல், சிவகாசி மத்தாப்பு, ரத்ன கம்பளம், கண்ணாடி வளையல், சாயாக்கடை இத்யாதி. ‘உன் மனதே உனக்கு எஜமானன்’ என்றெல்லாம் ஆத்மவிசாரணை செய்பவர்கள், மக்கள் சமுதாயத்தில், மக்கள் சக்தியை திறம்பட வழி நடத்தத் தயங்குகிறார்கள்.
இன்னம்பூரான்
25 03 2012
- என்னுடைய சுய அனுபவத்தில் இம்மாதிரியான நிகழ்வுகளில் மூன்றை குறிப்பிடலாம், ஏற்புடைய தருணம் கிட்டினால். அவற்றின் பசுமை என் கவசம்.
==
யார்க் தேர்தல் டிக்கெட்
உசாத்துணை:
No comments:
Post a Comment