அன்றொருநாள்: மார்ச் 27
அபிமான சிந்தாமணி
தேசாபிமானம் போல மற்ற அபிமானங்களும் ஒருவருக்கு இருக்கக்கூடும்; அவை சமுதாயத்தை மேன்படுத்த உதவக்கூடும் என்பதை எனக்கு விளக்கியவர், ஜனாப் ஹஷீம் அலி. 1988ம் வருடம். அலிகர் பல்கலைகழகத்திலிருந்து அழைப்பு வந்தது, ஒரு சிறப்புரையாற்ற. துணைவேந்தர் ஹஷீம் அலி எனக்கு நண்பரானது சுவாரஸ்யமான விஷயம். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மமதை பிடித்தவர்கள் என்று, அவலை நினைத்து உரலை இடிப்பவர்களுக்கு, இந்த அமரிக்கையான, கண்ணியமான அதிகாரியை போன்றோரை அறிய வாய்ப்பில்லை போலும். கல்வித்துறையிலும், கலையுலகிலும் இல்லாத அகந்தையா, நம்மிடையே பிறந்து, வளர்ந்த இந்த அரசு உத்தியோகஸ்தர்களுக்கு வந்து விட்டது! பதரை நினைத்து, பொன்னி அரிசியில் குறை காண்பது காழ்ப்புணர்ச்சியின் தீநிமித்தம் அல்லவா! அது போகட்டும்.
ஹஷீம் அலி அவர்களின் துறை Command Area Development. அதாவது, ஒரு பெரிய அணைக்கட்டு அமைந்த பின் வேளாண்மை சிறப்புற அமைய, முன்கூட்டி திட்டமிட்டு செய்யவேண்டிய ஆயத்தங்கள். அந்த செயல்பாடுகளில் குற்றம் குறை கண்டு நான் அனுப்பியிருந்த தணிக்கைக் குறிப்புக்கு நொண்டிச்சாக்கு பதில் அளிக்காமல், புள்ளி விவரங்களை அளித்து, குறைகளை ஒப்புக்கொண்டு, என்னுடைய குறிப்பை உறுதிப்படுத்தி அனுப்பியிருந்தார். அதை நான், உடனே நன்றி கூறி, ஏற்றுக்கொண்டேன். நண்பர்கள் ஆனோம். பிற்காலம், சாலார் ஜங்க் ம்யூசியம் அறக்கட்டளையில் இருவரும் அறங்காவலர்களாக பணி செய்தபோது, அந்த நட்பு கெட்டித்தது. அவருடைய கனிவின் காரணமாக, அலிகர் பல்கலைகழகத்தில் எனக்கு ராஜோபசாரம். நிறைந்து வழிந்த சபை, கான்வொகேஷன் ரொடண்டா என்ற சதுக்கத்தில். அங்குள்ள மரபு படி, அலிகர் பல்கலைகழக ஸ்தாபகரின் கல்லறைக்கு சென்று, சம்பிரதாயமாக நான் மரியாதை செலுத்த வேண்டியிருந்தது, இஷ்டமில்லாமல். ஏனெனில், அதன் ஸ்தாபகர், ஸர் சையத் அஹ்மத் கான் (1817 -1898) அவர்களின் அபிமானங்கள் பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிகோலியது என்ற உண்மை எனக்கு நெருடலாக இருந்தது. அந்த சூழ்நிலையில் தான் அபிமான விளக்கம் அளித்தார், ஜனாப் ஹஷீம் அலி. அவர் விளக்கியதை நான் இன்றும் மறக்கவில்லை.
ஸர் சையத் அஹ்மத் கான் வசதி மிகுந்த, மொகலாய அரசகுடும்பத்துக்கு நெருங்கிய, செல்வந்தர் பரம்பரையில் பிறந்து, சாங்கோபாங்கமாக, இஸ்லாமிய மரபுக்கிணங்கிய பள்ளிகளில் ஆன்மீக, சமயம் சார்ந்த கல்வியை பெற்றவர். நற்றாயின் கண்டிப்பான மேற்பார்வை அவரை நல்வழியில் நடத்திச் சென்றது. 18 வயதிலேயே, பள்ளிப்படிப்பு நின்று விட்டது. குல மரபுக்கு இணங்க, அவரும் அரசபரம்பரைக்கு ஊழியம் செய்தார். அதாவது பிரிட்டீஷ் மேலாண்மைக்கு ராஜவிசுவாசத்துடன், கிழக்கிந்திய கம்பெனியில் ஊழியம் செய்தார். தன்னுடைய 59வது வயதில் அரசு ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்றபின் தான், அவருடைய அரும்பணிகள் மேலோங்கின. அலிகர் இயக்கம் என்ற கல்வி இயக்கத்தைத் தொடங்கினார்: குல்ஷன் பள்ளி -1859; விக்டோரியா பள்ளி-1863; விஞ்ஞான சமூகம் -1864; முகம்மதிய ஆங்கிலோ-கிழக்கிந்திய தத்துவ பள்ளி-1867; இங்கிலாந்து சென்று கல்வி பற்றிய ஆய்வு-1869-70; முகம்மதிய ஆங்கிலோ-கிழக்கிந்திய தத்துவ பள்ளியின் கல்விக்கோட்பாடுகளை, இங்கிலாந்து மரபில் மாற்றியமைத்தது 1871; அந்த பள்ளியை கல்லூரியாக்கியது -1875; 1920ல் தான், அது பல்கலைக்கழகமானது, அவர் மறைந்து 22 வருடங்கள் ஆன பின்.
ஸர் சையத் அஹ்மத் கான் வெளிப்படையாகவே இஸ்லாமிய சமுதாயம், தனிப்பட்ட முறையில் பாடுபட்டு முன்னேறுவதை விரும்பினார். அதற்காக உழைத்தார். அதை நாடி, ராஜவிசுவாசத்துடன் செயல்பட்டார். விவிலியத்துக்கு உரை எழுதினார். இந்திய தேசீய காங்கிரஸ் இவரை அழைத்தது. அதனுடைய உள்குத்து வேலைகளை புரிந்து கொண்ட ஸர் சையத் அஹ்மத் கான், அதை ஏற்கவில்லை. இஸ்லாமியர்களை காங்கிரசுடன் சேரவேண்டாம் என்றார். அவர் தான் ஹிந்துஸ்தான் -பாகிஸ்தான் பிரிவினைக்கு அடித்தளம் என்ற கருத்து அரசியல் தளங்களில் உலா வருகிறது. இந்த பின்னணியிலும், அவர் 1857ம் வருடத்து முதல் சுதந்திரப்போரை பற்றி எழுதிய நூலில், பிரிட்டீஷ் கலோனிய அரசை குற்றம் சாட்டினார். அவர்களின் போக்கைக் கண்டித்தார். அதை பற்றி எழுந்த சர்ச்சைகளில் ஒன்றில், சில ஆங்கிலேயர்கள், அவர் எழுதியது எல்லாம் ஒரு உண்மை நண்பனின் அறிவுரை, என்று கூறினார்கள்.
இஸ்லாமிய சமுதாய அபிமானம், தான் பெறாத கல்வியை பாமரர்களுக்கு அளிக்கும் அபிமானம், ஓய்வு என்று ஒன்றுமில்லை என்ற அபிமானம், பாகிஸ்தான் என்ற கருத்துக்கு அபிமானம் என்றெல்லாம் வாழ்ந்த ஸர் சையத் அஹ்மத் கான் 1898ம் வருடம் மெளனம் சாதிக்கத்தொடங்கினார். சில மாதங்களுக்குள், உடல் நலம் குலைந்து, மார்ச் 27, 1898 அன்று மறைந்தார். என்ன தான் அபிப்ராயபேதங்கள் இருந்தாலும், அவருடைய மறைவுக்கு வருந்திய இந்தியர்கள் ஏராளம். அன்றொரு நாள் விருப்பமில்லாமல் செலுத்திய அஞ்சலியை, இன்று, தாழ்மையுடன் செலுத்துகிறேன்.
இன்னம்பூரான்
27 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment