அன்றொருநாள்: மார்ச் 26
சுப்கே! சிப்கோ! அப்பிக்கோ!
ஹிந்தியில் ‘சுப்கே’ என்றால் சத்தம் கித்தமின்றி. ‘சிப்கோ’ என்றால் தழுவுதல். ‘அப்பிக்கோ’ கன்னடத்தில் ‘சிப்கோ’. ஒரு சமுதாய புரட்சியை, மெளனமாக தழுவி, சாதனைகள் பல நிகழ்த்த, பெண்ணியத்தால் இயலும் என்பதை திருமதி கெளரா தேவி என்ற பாமர பெண்ணொருத்தி, மார்ச் 26, 1974 அன்று நிரூபித்துக்காட்டினார். ஹிமாலய மலைச்சாரலில் இருக்கும் டேஹ்ரி - கர்ஹ்வால் மலைவாசி பழங்குடிகள் சூதுவாது அறியாத அப்பாவிகள். வெள்ளந்தி. சமவெளியிலிருந்து மலையேறி, அவர்களை நூறாண்டுகளுக்கு மேல் ஏமாற்றி வருகிறார்கள், நாணயம் இழந்து, நாணயங்களை புரட்டும் நைச்சிய வணிகர் குலங்கள். என்றும் பசுமை நிறைந்த கானகம் என்றால் டேஹ்ரி - கர்ஹ்வாலுக்குப் போக வேண்டும். வானுயர்ந்த மரங்கள். நிஜமாக பணங்காய்ச்சி மரங்கள்; வெட்டினால், வெட்டி கடத்தினால்! 27 கிராமத்து பெண்களை அழைத்துக் கொண்டு போய், லாதா கிராமத்தைச் சார்ந்த திருமதி கெளரா தேவி செய்த கைங்கர்யத்தைக் காணுங்கள். மரங்களை இறுகத் தழுவிக்கொண்டு, அவற்றை வெட்டப்படுவதைத் தடுத்தாட்கொண்டனர், இந்த தெய்வீக திருமகட்கள். கெட்ட வார்த்தைகளை கேட்டும் ஓடவில்லை. துப்பாக்கியை முறைத்தனர். கொற்றவை போல் பாய்ந்து இரண்டு மைல் தூரத்திற்கு, குடித்து விட்டு மரம் வெட்ட வந்த ஆண்வர்க்கத்தை, துரத்தி, துரத்தி அடித்தனர். அன்று பிறந்தது, பிற்காலம் பத்ம விபூஷண் சுந்தர்லால் பஹுகுணாஅவர்களால் ஊக்குவிக்கப்பட்ட ‘சுப்கே சுப்கே! சிப்கோ சிப்கோ!’ இயக்கத்தின் பெண்ணியம். திருமதி கெளரா தேவியின் பாமர கீர்த்தியை பிரபல பெண்ணிய எழுத்தாளர் அம்பை பாடியிருக்கிறார். அதை இங்கே தொடரவேண்டுமா அல்லது பாமர கீர்த்தியில் செப்ப வேண்டுமா என்றோ சபையினர் தான் ஆணையிடவேண்டும்.
ஷோபிதா ஜெய்ன் என்ற சமூகவியல் பேராசிரியை உரைத்த மாதிரி, இந்த சிப்கோ இயக்கம் உலகின் கவனத்தை ஈர்த்தது. இணைத்திருக்கும் சித்திரம் FAO வின் உபயம். இந்த அஃறிணை மேல் அன்பு செலுத்தும் ‘சுப்கே! சிப்கோ!’ கண்கொள்ளாக் காட்சி. அது ஒரு கருணாமூர்த்தி. கண் முன்னே நிற்கும் காதலின் உருவகம். சொல்லப்போனால், இது சமுதாய புரட்சி வாகை சூடிய நிகழ்வு. இதனுடைய அருமை யாது என்று கேட்பீர்களானால், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதும், இயற்கை அன்னையின் கைப்பாவையான கானக ரக்ஷனை. பெண்ணின் உரிமை எல்லாம் கலந்த ரசவாதமிது என்பதே. சிக்கல்கள் இல்லாமல் இருக்குமா? முரண்பாடுகள் இல்லாத சமுதாயம் கிடையாது. ஆனால், முரண் அவிழ்க்க மக்கள் சக்தி ஒருமைப்பாடுடன் இயங்கவேண்டும். உன்னிப்பாக நோக்கினால், பரம்பரை சம்பிரதாயமும், நவீன சீர்திருத்தங்களும் முரணே இல்லாமல் இயங்கலாம். அதற்கு பொருத்தமான உதாரணம் இந்த சிப்கோ இயக்கம். ஏனெனில், பழங்குடிகள் இயற்கையுடன் ஒத்து வாழ்ந்தார்கள். அதுவே அவர்களின் பண்பு, மரபு. வேளாண்மை, கால் நடை பராமரிப்பு, மழலைகள் வளர்ப்பு ஆகியவற்றிற்கு கர்ஹ்வாலில், பெண்ணினம் தான் பொறுப்பு. அவர்கள் சிப்கோ இயக்கத்தின் முன்னணியில் நின்றதில் வியப்பு ஒன்றுமில்லை. அதனுடைய நேரடி பயன், பெண்ணியம், உரிமை நாடியது.
அடுத்து நடந்தது, துரித கதியில் அந்த இயக்கம் விஸ்தாரமாக, இந்தியா முழுவதிலும் பரவிய காட்சி: டேஹ்ரி - கர்ஹ்வால் ~ உத்தராஞ்சல் முழுதும் ~ அருணாசல பிரதேசம் உத்திர பிரதேசம் ~ஹிமாசல் பிரதேசம் ~கர்நாடகா ~ ராஜஸ்தான்~பீகார் ~விந்தியாசலம் ~~~. அதை எல்லாம் விட முக்யமாக பேசப்படவேண்டியது, அரசின் மீது ‘சிப்கோ’ வின் மேலாண்மை. இயக்கத்தின் வலிமையான பின்னணியை மதித்து, பஹுகுணா அவர்களின் பேச்சைக் கேட்டு, பிரதமர் இந்திரா காந்தி கன்னாபின்னாவென்று மரம் வெட்டுவதை தடை செய்ததை, இயக்கத்தின் வெற்றி என்று தான் சொல்லவேண்டும். இதற்கெல்லாம் முன்னோடி, மக்கள் இயக்கம் சைமன் கம்பெனி காண்ட்ரிக்ட்டை ரத்து செய்ய வைத்தது. தொன்று தொட்டு, 1821 வரை மலையுடன், காட்டுடன் இணைந்து வாழ்ந்த பழங்குடிகளுக்கு மரம் வைத்துக்கொள்ள அனுமதி மறுத்தது, காட்டிலாக்கா. 1960களிலிருந்து திரு.சி.பி.பட் அவர்களின் தலைமையில் துவங்கிய சங்கம் , சைமன் கம்பெனிக்கு, டென்னிஸ் மட்டைகள் செய்ய, மரங்களை வெட்ட அரசு கொடுத்த ஒப்பந்தத்தை கண்டித்து, 1973ல் அதை தடை செய்வதில் வெற்றி கண்டார்கள்.
சமுதாய இயக்கங்களுக்கு என்றுமே எதிர்நீச்சல் தான். ஆனால், விடாமுயற்சி வெற்றி பெரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். என்றென்றும் விழிப்புணர்ச்சியில்லையெனின், தோல்வியும் கியாரண்டி என்பதற்கும் இதுவே உதாரணம்.
இன்னம்பூரான்
26 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment