Saturday, March 30, 2013

எல்லாம் அவன் செயல்.




எல்லாம் அவன் செயல்.
4 messages

Innamburan Innamburan Thu, Sep 13, 2012 at 10:27 PM
To: mintamil , thamizhvaasal , vallamai@googlegroups.com, தமிழ் சிறகுகள்

எல்லாம் அவன் செயல். 

இதற்கு ஆச்சரியக்குறி என்ன வேண்டிக்கிடக்கிறது? இன்று காலை நேரம் நெருக்கியது. அங்குமிங்கும் செல்ல வேண்டும். படிப்பதே இல்லை. கொஞ்சநாள் தமிழ்ப்பக்கம் போகவேண்டாம் என்ற பிரதிஞ்ஞை. முதலில் போகும் இடத்தில் காத்திருக்கும் வேளையில் படிக்கலாமே என்று ஒரு கையடக்கப் புத்தகத்தை எடுத்துச்சென்றிருந்தேன். அது என் பேத்தி குழந்தையாக இருக்கும்போது கதை சொல்ல உதவும் என்று 1998ல் எடுத்துச்சென்ற சுந்தரகாண்டம்: மிகவும் எளிய உரை. எடுத்தவுடனேயே சுபசூசகம். நன்நிமித்தம். இனிய சொற்கள். எனக்கு இது வரை தெரியாத சமாச்சாரங்கள். பிறகு தேடிய நூல்கள் கிடைத்தன. ஆனால் பிரிக்கவில்லை.

ஏனென்றால் சக்திதாசன் சுப்ரமண்யனின் ‘மகாகவி பாரதியார்: புதுமைக்கண்ணோட்டம்’ கிடைத்துவிட்டதே. (பேராசிரியர் உபயம்) 271 பக்கங்களையும் ஒரே மூச்சில் (பல பெருமூச்சுகளின் இடையில்) படித்து முடிக்க இராப்பொழுது முழுதும் கழிந்தது. படித்தால் மட்டுமானால், இத்தனை ஆயாசம் ஏற்பட்டிருக்காது. முன்னும் பின்னுமாக அலைந்தது மனம். நனவு பாதி; கனவு பாதி; நினைவு பாதி; கற்பனை பாதி. மோனமே முழுதும். எல்லாம் அவன் செயல். தோன்றுவதை எல்லாம் எழுத நாட்கள் பிடிக்கும். இப்போதைக்கு போட் மெயில் மாதிரி, பட்டதைச் சொல்லிவிட்டு, உங்களை விட்டு விடுகிறேன். பாரதியார் பார்க்க எப்படி இருப்பார் என்ற கேள்வி எழுந்ததாம். என் மனக்கண்ணில் வசிக்கும் பாரதியார்:
‘வந்தாரே அமானுஷ்யன்; 
சட்டையில் காலரில்லை; 
ஆனா டை கட்டி தொங்குதடா, 
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு, 
தோளின் மேல் சவாரி, 
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே. 
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல. 
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு. 
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே! 
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு? 
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா? 
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு? 
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா; 
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி! 
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி. 
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!’


இந்த சொந்த சாஹித்யம் ஏற்கனவே சொல்லப்பட்டது தான். சொல்லணும் போல இருந்தது, அவரை பற்றி படித்தவுடன். சொல்லி விட்டேன். திரு. சக்திதாசன் சுப்ரமண்யனுடன் அவர் கோகலேயை பற்றியும், ஃபெரோஸ்ஷா மேத்தாவையும், ஸுரேந்திரநாத் பானர்ஜீயையும் பற்றி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், விபின் சந்திர பால் அவர்களை பற்றி அவர் சொன்னது மிகக்குறைவு. அந்த மாமனிதன் சென்னை மக்களை மகுடிக்கு மயங்கிய அரவமாக மாற்றியதை பற்றி என்றோ நான் எழுதியதும் நினைவில் வந்தது. மஹாகவி, வ.உ.சி (பாரதியாரின் மருமான்), திரு.வி.க., வி.எஸ்.ஶ்ரீனிவாச சாஸ்திரிகள், பேராசிரியர் டி.எம்.கிருஷ்ணமாச்சாரியர் ஆகியோரை ஆட்டிப்படைத்துவிட்டார், இந்த வங்காளத்து வாமனரூப பள்ளியாசிரியர். அவருடைய “பாரதாமிருதம் ஜீவனம்” இன்றும் நம்மை கலங்கடிக்கிறது. இப்போது தான் “பாரதாமிருதம் ஜீரணம்” செய்கிறார்களே, பூமியையும், ககனத்தையும் குடைபவர்கள். இதையெல்லாம் எழுதணும் என்று கை நமநமக்கிறது. வலிக்கிறது. யார் யார் படிப்பார்களோ? பாரதியாரின் சேக்காளிகளுக்கு ஸ்வாமி விவேகாநந்தரின் நேரடி ஆசி உண்டே. அதை சொல்லவில்லையே என்று நினைத்தேன். அன்னை நிவேதிதாவிடம் பாரதியார் தீக்ஷை பெற்றது பற்றி எழுதியதை பார்த்து மகிழ்ந்தேன். பாரதிக்கு பதிலாக ‘இந்தியா’ இதழின் தீவிரத்திற்குத் தண்டனை பெற்ற பாமரன் எம்.ஶ்ரீனிவாசனின் கீர்த்தி தேடினேன். ஹூம்!

மயிலாப்பூர் வக்கீல்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார், பாரதியார், பாருங்கள். பிரமாதம். அல்லது கப்பலோட்டிய தமிழனின் கப்பல் கம்பெனி வரலாறு கச்சிதமாக வேணும் என்றால், பாரதியாரிடம் தான் போகவேண்டும். தணிக்கைத்துறை தோற்றது, போங்கள்! 27 05 1907 அன்றைய தேதியிட்ட இந்தியா இதழில் ‘வந்தே மாதரம்’ கொடியுடன் சுதேசி கப்பலின் சித்திரம். சூரத் அமளியை பற்றி பாரதியார் எழுதியதை நான் முதலில் படித்து எழுபது வருடங்கள் ஆயின. பசுமரத்தாணி. அந்த ‘சூரத்துச்சூறாவளி’ என்ற துண்டுப்பிரசுரத்தை இன்று, இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழிபெயர்த்து, பாரதியார் ஸ்டைலில் ஒரு கோடி பிரதிகளை முகநூல் வழியாக பிரசுரித்தால், நம் லஞ்சலாவண்ய மகாபிரபுகள், தேசாபிமானத்துக்கு முன் தலை குனிந்து, துண்டைக்காணும், துணியைக்காணும் என்றோடி கடலில் வீழ்ந்து பிராணதியாகம் செய்து கொள்ளுவார்கள்.

இந்த் நூலில் பாரதியாரின் படைப்புகள் அதிக இடத்தை அடைத்துக்கொண்டது நல்லதாக போயிற்று. நமக்கு அருமையான உண்மை வரலாறு கிடைத்திருக்கிறதே. பாரதியாரின் நகைச்சுவைக்கு ஒரு உதாரணம் கொடுத்து விட்டு, முடித்து விடுகிறேன். எத்தனையோ சொல்ல வேண்டியிருக்கிறது, மறதியால் அவதிப்படும் பெரியவர்களுக்கும், நமக்குள்ளும், வருங்கால சந்ததிக்கும். கேட்டால் பார்க்கலாம். சுதேசி ஶ்ரீ குருசாமி அய்யர் பெரிய வக்கீல் அவர் ‘இந்த க்ஷத்திரிய நடையையும், க்ஷத்திரியப் பார்வையையும் எப்படி பெற்றார் என்று எனக்கு புரியவில்லை’ என்று அவரை கேலி செய்கிறார்....
இன்னம்பூரான்
13 09 2012

Innamburan Innamburan Thu, Sep 13, 2012 at 10:27 PM
To: mintamil , thamizhvaasal , vallamai@googlegroups.com, தமிழ் சிறகுகள்
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , anantha narayanan nagarajan , renuka rajasekaran , Gayatri Ramakrishnan
[Quoted text hidden]

கி.காளைராசன் Fri, Sep 14, 2012 at 2:37 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , vallamai@googlegroups.com, தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/9/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
மயிலாப்பூர் வக்கீல்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார், பாரதியார், பாருங்கள். பிரமாதம். அல்லது கப்பலோட்டிய தமிழனின் கப்பல் கம்பெனி வரலாறு கச்சிதமாக வேணும் என்றால், பாரதியாரிடம் தான் போகவேண்டும். தணிக்கைத்துறை தோற்றது, போங்கள்!
அறிஞர் அண்ணா பெயரில் அறக்கட்டளை துவங்கப்பெற்று மாணவர்களுக்கு தகுதியடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுவதைப் போன்று,
பாரதி பெயரிலும் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மாணவர் பயனுற வேண்டும், இந்த வையகம் பயனுறவே.

அன்பன்
கி.காளைராசன்


--
அன்பன்
கி.காளைராசன்


coral shree Fri, Sep 14, 2012 at 3:13 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
//
பாரதி பெயரிலும் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மாணவர் பயனுற வேண்டும், இந்த வையகம் பயனுறவே.//

அருமையான யோசனை சகோதரரே...

அன்புடன்
பவளா

2 comments: