இதுவும் ஒரு பிருகிருதி: 2
ஒரு கெத்துக்கு சொன்னேன், நாச்சியார் கோயில் என்று. பேரை சொன்னாலும் ஊரை சொல்லக்கூடாது. அதான் கோயில் திருமப்பள்ளி (சமையல் அறை) நச்சு இருக்கானே, அவன் ஒரு கேரக்டர். சன்னதிதெரு கோபாலாச்சாரியாத்து மாமி, மெனக்கெட, மூச்சு வாங்கிண்டு ஒரு நடை நடந்து, ‘நச்சு! நாளன்னிக்கு ரகு வராண்டா, ஷ்யாமுக்கு முடி இறக்க. திருக்கல்யாணத்துக்கு சொல்லியாச்சு, பட்டாச்சாரியர் மாமாட்டே. அக்காரவடிசல் தளிகை. ஜோரா பண்ணிட்றா’ ன்னு சொல்லிட்டு, ஜாமான்லாம் வாங்கிக்கொடுத்துட்டு, அச்சாரமும் அழுதுட்டு, பிரத்யேகமா அவனோடோ ஸ்னஃப் வாங்கறத்துக்கு, துட்டும் கொடுத்துட்டுப்போறா. சில்லரைக்காசு தான். ஆனா, மதிச்சுக்கொடுத்தாளேன்னு கவனமா பண்ணுவான் என்று சொல்லித்து, அந்த வேதாமாமியோட உளவியல்.
பாடா படித்துடுத்து பேரப்பய ஷ்யாம். கூடத்திலெ இருக்கிற நெல்லை வாரி இறைச்சான். பரியாரியோட கத்தியை பிடுங்கினான். எல்லாம் ஒரு பாடா ஆச்சு. மொட்டைத்தலைக்கு டெட்டாலும் தடவியாச்சு. சந்தனக்காப்பும் ஆச்சு. தாயாரையும், பெருமாளையும் நன்னா அலங்காரம் பண்ணி, விமரிசையா திருக்கல்யாணமும் ஆச்சு. குழந்தையும் தூங்கிப்போயிட்டான். ஊரே கூடியிருக்கு. ஆளுக்கு ஒரு தையல் இலையை வச்சிண்டு காத்துண்டிருக்கா; வினியோகம் ஆகப்போறது.
நம்ம நச்சு வர்ரான், அண்டாவை தூக்கிண்டு. தெரியாமாத்தான் கேக்கறேன்? வேஷ்டியில் எப்டி அத்தனை அழுக்கு ஏத்தீண்டான்? கசகசன்னு வேர்த்து விருத்து அவன் சாதிக்கச்ச ஏண்டா வந்தோம்னு ஆயிடும். அதெல்லாம் விடுங்கோ. அவன் பரிமாறினது தத்யோதனம்- தயிர் சாதம்! என்னத்தை சொல்றது, ஸ்வாமி? ஒரே நமுட்டு சிரிப்பு! கோபாலாச்சாரியாரா, ஆகாசத்துக்கும், பூமிக்கும் குதியா குதிக்கிறார். ரகுவுக்கும் கோபம் வரும். ஏதோ அருள் வந்தா ஆடுவாளே, அந்த மாதிரி, ஸைட்வாக்கிலே ஆட்றான். மாட்டுப்பெண் வைதேகி நைஸ்ஸா வத்தி வைப்பாள். எங்க அப்பா வந்துருந்தா, அவருக்கு எத்தனை அவமானம்னு கண்ணை கசக்கறா. வேதா மாமி, பாவம், அழுதே விட்டாள்.
இத்தனைக்கும், இந்த கலாட்டா எதுக்கு என்று நச்சுக்கு புரியல்லையே. அவன் பக்கத்து நியாயமும் கேக்கணுமே.
ஒரு உரையாடல்:
மாமி: ஏண்டா! இப்டி பண்ணித்தொலைச்சே. உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்? [அழுகை பொங்கறது.]
நச்சு: என்ன ஆயிடுத்துன்னு அழறேள் மாமி? [கண்ணை தொடச்சுக்றான்.] திவ்யமா இருந்ததே திருக்கல்யாணோத்ஸவம். ஒரு சின்ன தப்பு ஆயிடுத்து. நேத்திக்கு ராமாஞ்சு தாத்தாவுக்கு திதி. அவர் பிள்ளை கோபால் பணம் கொடுத்துட்டுப்போனான், கொஞ்சமா; தயிர் சாதம் வினியோகம் பண்ணிடு, நான் வரத்துக்கில்லை என்று சொன்னான். ஏதோ மறதி. அக்காரவடிசல் பண்ணி சாதிச்சுட்டேன். எல்லாம் சப்பைக்கொட்டிண்டு சாப்ட்டதுகள். சாயரக்ஷைலே வந்து கூச்சல் போட்டான், அவா அப்பா இன்னும் பட்டினின்னு. சரின்னு இன்னிக்கு தயிர்சாதம் வச்சுண்டேன். ஏன் எல்லாரும் அலறரேள்?
நச்சு புராணம் ரொம்பப்பெரிசு.
அப்டித்தான்! சிலபேரை திருத்தவே முடியாதுங்காணும்.
இன்னம்பூரான்
18 12 2010
No comments:
Post a Comment