அன்றொருநாள்: மார்ச் 28
சிறு துளி பெரு வெள்ளம்
‘உயிருடன் என்னை அடக்கி ஆளவா பார்க்கிறீர்கள்? நான் தான் கெலித்தேன், செத்துப்போய்விட்டேனே! என் செய்வாய் நீ?’ ~ ராணுவத்துக்கு மாணவ சமுதாயத்தின் சவால்.
இன்றைய தகவலும் பிரவாகமாக பெருக்கெடுத்த சிறு துளி - மாணவ அனுமான். எடுத்துக்கொண்ட நிகழ்வு பற்றி ஆங்கிலத்தில் விவரங்கள் கிடைக்காததினால். அதிகம் தேடப்போக, துளித்துளியாக வந்து விழுந்த மாணவ சக்தியின் பரிமாணங்கள், காட்டாறு போல் வெள்ளமெடுத்து நுங்கும் நுறையுமாக ஓடுவதை பார்த்தால், இந்த இழையை தொடர்ந்து எழுத வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.
முதலில், மார்ச் 28, 1968 அன்று நடந்தது பற்றி. தென் அமெரிக்கக் கண்டத்தில் பிரேசில் நாட்டில் ராணுவ சர்வாதிகாரம் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. மனித உரிமை முற்றிலும் பறி போய் விட்டது. ஏழை மக்களுக்குத் திண்டாட்டம். எட்ஸன் லூயி டி லீமா செளடு ஒரு சாதாரண ஏழை மாணவன். போர்க்குணமில்லாத பாமரன். குக்கிராமத்திலிருந்து, தலை நகரான ரியோ டி ஜனீரோவுக்கு, மேற்கல்வி நாடி வந்த 18 வயது இளைஞன். வெள்ளந்தி. ஹோட்டல் சாப்பாடு விலையேற்றம் அவனை தத்தளிக்க செய்தது. அவனும், மற்றும் சில மாணவர்களும், நினைத்த மாத்திரத்திலேயே, ஒரு கண்டன ஊர்வலம் எடுத்தனர். ராணுவ போலீஸ் வந்தது. தடியடி. சாப்பாட்டுக்கடையில் ஒளிந்து கொண்ட மாணவர்கள், ஆத்திரத்துடன், கல் எறிந்தனர். போலீஸ் சுட்டனர். மாணவர்கள் கலைந்து ஓடினர். தலை விதி கொடியது. ரப்பாஸோ என்ற போலீஸ் அதிகாரி, எந்த பிரமேயமும் இல்லாமல், எட்ஸன் லூயியை நெஞ்சில் சுட்டு, அங்கேயே கொன்றான். செத்துப்போய் கெலித்தது எட்ஸன் லூயி.
கொதித்தெழுந்தது மாணவர் சமுதாயம். அவனுடைய சடலத்தை மாணவர்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றனர். இறுதி சடங்குகள் செய்யும் போது, மக்களின் சினம் வலுத்தது. நாடு முழுதும் கொந்தளிப்பு. ரியோ டி ஜனீரோ நகரமே ஸ்தம்பித்தது. சினிமா தியேட்டர்கள், கொந்தளிப்புக்கு ஏற்புடைய படங்களை திரையிட்டு, வேள்வித்தீயை வளர்த்தனர். எங்கு பார்த்தாலும் சுவரொட்டிகள்: ‘தோட்டா பசிப்பிணியை தணிக்குமா?’,‘கிழங்களின் ஆளுமை’; ‘இளைஞர்கள் சவப்பெட்டியில்’; ‘கொன்றது மாணவனை. அவன் உன் மகனாக இருந்தால்?’. பிரேசிலின் தேசீய கீதம் பாடப்பட்டது, எட்சன் லூயியின் நல்லடக்கத்தின் போது. ஏப்ரல் 4, 1968 அன்று அவனுடைய நினைவார்த்தமாக நடந்த தொழுகையின் முடிவில் வெளி வந்த மக்களை, ராணுவம் தாக்கிக் காயப்படுத்தியது. மறுபடியும் தொழுகை. அதற்கு தடை. ஆனால், கத்தோலிக்கர்கள் நிறைந்த அந்த நாட்டு கத்தோலிக்க மத தலைவர் கேஸ்ட் ரோ பின்டோ அவர்கள் முன்னின்று தொழுகையை நடத்தினார். மக்களுக்கும், வெளியில் பைசாச ஆவேசத்திலிருந்த ராணுவத்திற்கும் மத்தியில், அசாத்திய துணிச்சலுடன் நின்று, மத போதகர்கள், மக்களுக்குக் கவசமாக இயங்கினர்.
பேராசிரியை ஏஞ்செலிகா முல்லர் சொன்ன மாதிரி, எட்ஸன் லூயி புரட்சியின் சின்னமாகி விட்டான். அனுமானுக்கு மற்றவர் சொன்னால் தான் , தன்னுடைய அபரிமிதமான சக்தியை பற்றி தெரியுமாம். அம்மாதிரி, எட்ஸன் லூயி ஒரு நாட்டுப்புற தெய்வமாகி விட்டான். மார்ச் 28, 2008 அன்று ரியோ டி ஜனீரோ நகரின் அன்னா அமீலயா சதுக்கத்தில் அவனுடைய சிலை நிறுவப்பட்டது.
தற்பொழுது, மாணவாஞ்சனேயர்களின் நீண்ட பட்டியல், பெரு வெள்ளமாக வந்து நிற்கிறது என்னிடம். தருணம் கிட்டினால்...
இன்னம்பூரான்
28 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment