இதுவும் ஒரு பிருகிருதி
கீதா சாம்பசிவத்துக்கு நினைவில் இருக்கலாம். அந்தக்காலத்தில் நாடோடி என்பவர் 'இதுவும் ஒரு பிருகிருதி' என்ற அருமையான நூல் ஒன்று எழுதினார்; விகடனில் தொடராகவும் வந்திருக்கலாம். இந்த பூலோகத்தில் சிருஷ்டி செய்யப்பட்ட கொனஷ்டைகளின் குணாதிசயங்களை, ஈஷ்வர கிருபையால், அழகாக விவரித்து இருந்தார். தேடினாலும் கிடைக்கவில்லை, அந்த புத்தகம். கதாநாயகர்/கி களின் ஆசைமுகமும் மறந்து போச்சு. எனவே இது புதிய வார்ப்பு:2010.
எத்தனையோ பேர் வந்து போகிறார்கள், இந்த உலக நாடக மேடையில். சிலர் சூடு போடுவார்கள்; சிலர் சுட்டுக்கொள்வார்கள். சிலர் அடிப்பார்கள்; சிலருக்கு தர்ம அடி வாங்கிக்கொள்வது வாடிக்கை. சிலர் சொற்சிலம்பம் ஆடுவார்கள்; சிலர் பேசவே தயங்குவார்கள். பட்டியலே பல பக்கங்கள் என்பதால், இத்துடன் இதை நிறுத்தி எனக்கு தெரிந்த பிருகிருதிகளை அறிமுகம் செய்து வைக்கிறேன்.
1. 'முடுக்குத்தெரு கிட்டு மாமா': அவரை முதல் முறையாக சந்தித்தபோது, அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். எனக்கு 17. தருமமிகு சென்னையில் நான் கால் எடுத்து வைத்த முதல் நாள் மாலை. கபாலி கோயில் வாசல்லே, புகையிலையை குதப்பிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். தானாகவே முன் வந்து முகமன் கூறி அறிமுகம் செய்து கொண்டார் - என் அத்தையின் மைத்துனனின் மைத்துனன் என்று. உபயகுசலோபரி முடிந்த பிறகு, ' ரவாதோசை ன்னா கணேஷ் பவன்' என்று சப்புக்கொட்டிக்கொண்டார். நான் வழக்கம் போல அமைதி காத்தேன். 'சட்' என்று கோபித்துக்கொண்டார். 'நான் கூப்ட்றேன்; சும்மா இருக்கிறாயே' என்று செல்லமாக கண்டித்து, அழைத்துச்சென்றார். கீரை வடை, கிள்ளு பக்கோடா எல்லாம் சாப்ட்டப்பறம் தான் ரவாதோசை, டிகிரி காஃபி. சொல்லக்கூடாது. மனுஷனுக்கு என்ன வாசாலகம்!. 'அடடா! பர்ஸ் விட்டுப்போச்சே. பரவாயில்லை. நீ கொடுத்திரு. நானே கொண்டு வந்து தர்ரேன்' என்றார். இன்னி வரைக்கும் வரல்லை. படிப்பினை 1. இருந்தாலும், நான் தலையெடுத்த பிறகு, என் செலவில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் தவிர்க்க நினைப்பேன். நடக்காது. அப்படிப்பட்ட டிஃபன் வசீகரன் அவர்.
சுருங்கச்சொல்லின் அவருடைய பயோ டேட்டா:
ஸ்கூலுக்கு போயிருக்கிறார். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி எழுதியதாக சொல்லிக்கொண்டதில்லை. அந்தக்காலத்து பீ.ஏ. தான் பீ.ஏ. என்பார், தான் ஆங்கிலம் பேசும்போதெல்லாம். வேலை ஒன்றும் தேடியதில்லை என்று பீற்றிக்கொள்வார். வேலை ஒன்றும் அவரை தேடி வரவில்லை என்பதை ஒத்துக்கொள்ளமாட்டார். மாமி வசை பாடும் போது தான் அந்த ரகசியம் வெளிவரும். ஆனா, கிட்டு மாமா எப்பவும் பிஸி. தரகு கை வந்த கலை. கமிஷனுக்காக, உன்னோட கப்பலையை வித்துருவார். மைக்கேல் மதனகாமராஜன் என்ற சினிமாவில் ஒரு பாட்டி ஒத்தரோட பல் செட்டை அபேஸ் பண்ணிடுறா. அந்த மாதிரி தன் இவரும். எல்லா கல்யாணத்துக்கும் போவார், கூப்டாட்டாக்கூட. எல்லாரும் உஷார் தான். வந்த கிஃப்ட்லெ, நாலு கடியாரம் காணாமப்போயிருக்கும். 'எதுக்கடா! அவாளுக்கு இத்தனை கடியாரம்?' என்பார். வித்துருவார். அவருடைய சாதனைகள் சொல்லி மாளாது. எல்லா சங்கீதக்கச்சேரிக்கும் போவார். அந்தக்காலத்திலே இலவசம் தான். ஒரு நாள் மிருதங்கத்தை தூக்கிண்டு வந்துட்டார்! அவருக்கே பெருமை தாங்கல்லே. அப்றம், என்னமோ மாயாஜாலம் செய்து என் அத்திம்பேர் அதை உரியவரிடம் சேர்த்து விட்டார்.
ஆனா, அடுத்த கேஸ்லெ அத்திம்பேருக்கு படு தோல்வி. எதித்தாத்து கிழம் ஒரு நா மண்டையை போட்டுடுத்து. அவா ரொம்ப பணக்காரா. இருக்கவரைக்கும் அவருக்கு தயிர் சாதம் மறுத்த அவரது திருமகன் சாங்கோபாங்கமாக அவருக்கு அபர காரியங்கள் செய்தான். தினோம் விருந்து! கூத்து! சிரிப்பு! 'சுபம்' பண்றச்ச கருமம் பண்றவன் தலெலே முண்டாசு கட்டி, மயில் தோகை பிடிக்கிறேன் பேர்வழி ன்னு அவன் கைலே கரும்பு கொடுப்பா. அன்னிக்கு ஸ்கூல்லேந்து வந்தா, எங்களுக்கு எல்லாம் குஷி: கரும்பு துண்டுகள்! கிட்டு மாமா உபயம். அத்திம்பேர் சுவத்திலே சாஞ்சு உக்காந்துட்டார், அவமானத்தாலே.
இன்னும் அவருடைய தரகு ரகசியங்கள் சொல்ல முடியவில்லை. பல பக்கங்கள் பிடிக்கும். எனக்கென்னமோ அவர் மேல் இரக்கம் தான். இன்னிக்கு இருந்தா, அவருக்கு எத்தனை சான்ஸ்! ஊரை வித்திருக்கலாம்; ஏரியை வாங்கி இருக்கலாம். அதை வித்து ரண்டு ஊர் வாங்கியிருக்கலாம். இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். கொடுத்து வைக்கலை பாவம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.
இன்னம்பூரான்
16 12 2010
எனது பெரியக்கா வீட்டுக்காரர், சோனை மாமா அவர்களை நினைவு படுத்துகிறார் இந்தக் கிட்டுமாமா.
ReplyDeleteஒருமுறை வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பயங்கரச் சண்டை நடந்துகொண்டிருந்தது. நானும் அண்ணனும் தம்பியும் பள்ளியிலிருந்து வீடுதிரும்பினோம். எங்களைக் கண்டதும் இருவரும் சத்தத்தைக் குறைத்து சண்டையை நிறுத்தி விட்டனர்.
“சோனை வந்தான் என்றால் சொல்லி வை, அவனை வெட்டிப்போட்டுவிட்டுச் ஜெயிலுக்குச் செல்லவும் தயங்கமாட்டேன்னு“ என்று அப்பா சப்தமாகச் சொல்லிச் சென்றுவிட்டார். நாங்கள் எல்லாம் கப்சிப்.
இரவு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். “சோனைமாமாவை நீங்க எதற்கு வெட்டனும்“ என்று எனது அண்ணன் கேட்டார். வீட்டிலிருந்து பெரிய அருவாளையும் சூரிக்கத்தியையும் வந்து வாங்கிச்சொன்றுள்ளான் என்றார் அப்பா. “அக்கா, மாமா கச்சேரியில் (காவல்நிலையம்) நிற்கிறார், பெரிய அருவாளையும் சூரிக்கத்தியையும் வாங்கிவரச் சொன்னார்“ என்று சொன்னான் அதனால் கொடுத்தேன் என்றார் எங்களது அம்மா.
எங்களுக்கு விளங்கிவிட்டது. அப்பா வாங்கிவரச்சொன்னதாக அம்மாவிடம் பொய்சொல்லி சோனைமாமா பெரியஅருவாளையும், சூரிக்கத்தியையும் வாங்கிச் சென்றுவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டோம்.
அன்பன்
கி.காளைராசன்
அன்பின் காளை ராஜன். 'நாடகமே உலகம்' தப்பு. 'உலகமே நாடகமேடை' ரைட்டு.
ReplyDeleteஇன்னம்பூரான்