அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22
பாராசாரி குதிரை என்றால், ராஜா தேசிங்கு வருவார், நினைவில். எம்டன் கப்பல் என்றால், கேப்டன் வான் முல்லர் வருவார். இது எல்லாம் இணை பிரியா உறவுகள். இனி எம்டன் மிதவை புராணம். என்னே சாகசம்! கடல் புராணங்களில் எம்டன் உபகதை மறக்கமுடியாதது. இரண்டே மாதங்களில் (செப்டம்பர் 10 ~ நவம்பர் 9, 1914) உலக கடல் வாணிகத்தை பாடாய் படுத்தி, 24 கப்பல்களை முழுகடித்து, பத்து மிலியன் டாலர் சொத்தைப் பறித்து, சும்மாவாணும் ஸெப்டம்பர் 21, 1914 அன்று மதராஸ் பட்டினத்தின் மேல் குண்டு வீசி, பெரிய மனுஷாள் எல்லாரும், அரக்க பரக்க, ஊரை விட்டு ஓடி, நிலம், நீச்சு க்ரையமெல்லாம் அடி மட்டத்துக்கு போயி... ஏன் கேட்கிறீர்கள் போங்க.
*
ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் நம்ம் ஃப்ரெண்ட் தியோடார் பாஸ்கரன் ‘எம்டனை’ பற்றி பேசுவார் என்று அழைப்பிதழ் வரதும், திவாகர் சென்னை விஜயம் பிரகடனம் ஆனதும் ஒரே சமயமா? அங்கு போய் தியோடரிடம், திவாகர் எங்கே என்றதும், அவர் முழித்தார். பிறகு எம்டன் நிஜகீர்த்தி பாடினார். வரலாற்றை பிட்டு, பிட்டு வைத்தார். எம்டனில் திரு. செண்பகராமன் பிள்ளை பயணித்தாக சான்றுகள் இல்லை என்றார். மறு நாள் திவாகரை பார்த்த போது தான் தெரிந்தது: ‘Divakar "SMS எம்டன் 22-09-1914" Published by Palaniappa Brothers, Madras 600014, India. A Tamil novel written in the background of SMS Emden's bombing of Madras Harbour in 1914 என்று. பி.கு. திவாகர் அளிப்பாராக.
*
எம்டன் குண்டு போட்ட இடம், ஹை கோர்ட்டில். கல்வெட்டு பார்க்கவும் என்று சுருக்கமாக எழுத நினைத்தால், அதனுடைய வீர தீர பராக்ரமங்களில் ஆழ்ந்து போய் விட்டேன். எதிரியோ? உதவியோ? யாராக இருந்தால் என்ன? நாம அடக்கி வாசிச்சா, மட்டுறுத்தினால், எம்டன் புகழ் மங்கி விடுமா? என்ன? சொல்லுங்கோ, திவாகர். இது திவாகர் ஸ்பெஷல்.
*
ஆகஸ்ட் 2, 1914: சைனாவருகில் எம்டன் மிதக்கையில் முதல் உலகப்போர் பிரகடனம். எம்டன் ரெடி ஃபார் ஆக்ஷன். எம்டனின் தனிச்சிறப்பு: கெளரதை, தலைவரின் மகிமை, மாலுமிகள்/வீரர்கள் எவெரெடி.’ பீரங்கிகள் ரெடி’ ‘நீர்மூழ்கி குண்டுகள் ரெடி’ எஞ்சின் ரெடி, சங்கேதங்கள் ரெடி’ எல்லாம் ரெடி’. புறமுதுகு காட்டி ஓடுது ஒரு கப்பல். இவுக துரத்தறாக. அது ரேஜஸான் என்ற ரஷ்யகப்பல். புலி மாதிரி பாஞ்சு கடிச்சு குதறி, அடிமை கப்பலாக்கி, ஜெர்மன் கொடி ஏத்தியாச்சு. சிங்க்டோ துறைமுகத்துக்கு ‘கூம்’ கூம்’ னு சங்கு ஊதிண்டு போயாச்சு. அங்குள்ள ஜெர்மன் கப்பல் படையுடன் சேர்ந்தாச்சு. இனி திக் விஜயம் தான். ஒரு பூனைக்கு ஒன்பது தடவை உயிர் காப்பாற்றப்படுமாம். அந்த மாதிரி வந்த ஆபத்துக்கள், பனி போல் விலகின, எம்டனுக்கு. மறு நாள், ஒரு பயணிகள் கப்பல் அகப்பட்டுக்கொண்டது. இப்போது, இங்கிலாந்தும் எதிரி என்ற பிரகடனம். உடனுக்குடனே, ஜப்பானும். கேப்டன் முல்லர் ஜெர்மன் அட்மிரலின் கப்பலுக்குப்போய், எம்டனின் தனி ஆவர்த்தனத்துக்கு அனுமதி வாங்கி வந்தார். மத்ராஸ் நோக்கி விட்டோம் சவாரி! உள்ளூர எல்லாருக்கும் தெரியும். இது தான் இறுதி யாத்திரை என்று. பிரச்னை! எங்களுக்கு மூன்று சிம்ணி. பிரிட்டீஷ் கப்பல்களுக்கு இரண்டு/ நாலு. நாங்கள் மிதப்பதோ எதிரியின் பிராந்தியம். பார்த்தார் கேப்டன். நாலாவது சிம்ணி (டம்மி) அமைத்துக்கொண்டோம். பாத்தா அச்சு பிரிட்டீஷ் யார்மெளத் கப்பல்!
வங்காள விரிகுடாவில் வந்து அடைஞ்சாச்சு. ஒரு பிரிட்டீஷ் போர்கப்பல் நிழல் மாதிரி வரது. கிட்ட வரல்லையே. அஞ்சாறு நாட்களுக்கு பிறகு சிக்கிய கப்பலை மடக்கினோம். போயும் போயும் அது இந்தியாவிலிருந்து மட்டரக நிலக்கரி சுமந்த கிரேக்கக்கப்பல். அடுத்த பலி ஒரு ஏமாந்த சோணகிரி. எம்மை பிரிட்டீஷ் கப்பல் என்று நினைத்த போக்குவரத்துக்கப்பல். பல கப்பல்கள். நிறுத்துவோம். பத்து பேர் ஏறுவோம். அடிமை அல்லது ஆழம். நாங்கள் கைது செய்த பிரிட்டீஷ்காரர்கள் மதி இழக்கவில்லை. அவர்கள் விஸ்கியை பாதுகாத்ததை சிலாகித்தோம்! விரோதம் யாதும் இல்லை.
ஒரு கேப்டன் ஜாலி. நாலு கடல்-மைல் வேகத்தில் ஒரு மணல் வாரி கப்பலை இங்கிலாந்திலிருந்து ஆஸ்ட் ரேலியாவுக்கு! படு போரடிச்சதாம். மகிழ்ச்சியுடன் சரணடைந்தார். கூலி முழுதும் அச்சாரமாக வாங்கிவிட்டார், வேறே. ஸெப்டம்பர் 18, 1914 சென்னை துறைமுகம் வந்தோம். எம்டன் காலி என்ற வதந்தியை நம்பி க்ளப்பில் கொண்டாட்டம். ‘தொப்’! சூப்லெ குண்டு! பிரிட்டீஷ்காரனுக்கு டின்னர்னா உசிறு. தெரிஞ்சிருந்தா, அன்று தாக்கி இருக்கமாட்டோம்! இந்திய அரசுக்கு நன்றி பல. ஊர் பூரா வெளிச்சம். எண்ணை கிடங்குகளை கொளுத்திப்பிட்டோம், கொளுத்தி. அடடா! நிலக்கரி தீந்து போச்சே! இந்திய நிலக்கரி ரொம்ப புகை விடுமே. அதிருஷ்டம். ஒரு பிரிட்டீஷ் கப்பல், தரமான நிலக்கரியோட சிக்கியது. அந்த கேப்டனும் ஜாலி. ‘பிரிட்டானியா வாழ்க’ என்று பாடிக்கொண்டே எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்.
இருக்கிறதில் சின்ன கப்பல் எம்டன். அதை மூழ்கடிக்க 16 கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. அல்பாயுசு, அகால மரணம் எல்லாம் கேப்டன் சொல்லிவிட்டார். நாங்கள் கவலை படவேயில்லை. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. போடா! எங்க கேப்டன் தெய்வமடா! ஒரு ஜோக் நோட் புக் வச்சுண்டு கேலி, எள்ளல் எல்லாம். நாங்கள் எல்லாரும் ஒரு அன்பு வலையில் சிக்கினோம். ஒரு பூனை வந்தாள். குட்டி போட்டாள்: ஐந்து. லெஃப்டினண்ட் ஷால் படுக்கையில் பிரசவம். அவரும் கனிவோடு பார்த்துக்கொண்டார். ஒரு மிருக காட்சி சாலையே வைத்திருந்தோம். பிடிபட்ட கப்பல்களிலிருந்து, இரண்டு பன்றி, ஆட்டுக்குட்டி, புறாக்கள், கோழி, வாத்து எல்லாம். ஒரு மான் கூட. எப்படி வந்தது தெரியவில்லை.
தினம் பேண்ட் வாசிக்கும். ஆடுவோம். அப்றம், கொள்ளை அடிச்சதை பங்கு போட்டுக்கொள்ளும் கண் கொள்ளாக்காட்சிகள். எத்தனை சிகரெட்! இருட்டிலே மின்மினி பூச்சி போல. ‘தண்ணி’ தண்ணி பட்ட பாடு!
இனி நவம்பர் 9, 2011 அன்று தொடரலாமா?
இன்னம்பூரான்
22 09 2011
oil-tanks shelled at Madras
உசாத்துணை:
No comments:
Post a Comment