அன்றொருநாள்: மார்ச் 29
திருப்புமுனையா? ஒடித்த முனையா?
மார்ச் 29, 1857 அன்று பொழுது நன்றாக விடியவில்லை. வங்காளத்து இந்தியர் படையாகிய 34வது ரெஜிமெண்டில் சிப்பாயாக இருந்த மங்கள் பாண்டே கம்பெனி நிர்வாகத்தை எதிர்த்து, புரட்சி செய்ய வீறு கொண்டு எழுந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அன்று நடந்த நிகழ்வுகளை பற்றியே ஒருமித்த ஆவணங்கள் இல்லை. அதை சிப்பாய் கலகம் என்றார், சிலர். முதல் இந்திய சுதந்திரப்போர் என்றனர், சிலர். ஆளுக்கொரு வரலாறு படைத்தனர். உண்மை வரலாறு கிடைப்பதற்கு அரிதாயிற்று. லக்னெளவில் லைட்& செளண்ட் காட்சிகள் சிறப்புற அமைக்கப்பட்டிருந்தாலும், அதே ஸ்தலங்களில் பேசாமடந்தையாக நிற்கும் வரலாற்று சின்னங்கள் கூறும் செய்தி வேறு. இது வரை, தக்க சான்றுகளுடன் அளிக்கப்பட்ட வரலாறுகள் நான்கு உலா வருகின்றன. அவை ஒத்துப்போகவில்லை. என்னுடைய ஆய்வு இன்னும் முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க, 1857 வருட புரட்சிக்கு, மார்ச் 29, 1857 அன்றைய நிகழ்வை மட்டுமே திருப்புமுனையாகவே திருப்பிய முனையாகவோ கருத இயலாது என்று தோன்றுகிறது. எனவே, அது பற்றி தக்கதொரு தருணத்தில் எழுதலாம். எனவே, உங்களை திசை திருப்பி, வடக்கு நோக்கி, பஞ்சாப் பிரதேசத்திற்கு அழைத்து செல்கிறேன்.
பாஞ்சாலம் புராதன தேசம். சிந்து நதியும், ஜீலம், சீனாப்,சட்லெஜ், ரவி, பியாஸ் ஆகிய திருவையாறுகளும் மனித நாகரீகத்தின் தொட்டில். பொன் விளைந்த களத்தூர்கள் நிறைந்த நாடு. மதியிழந்த யுதிஷ்டிரன், ‘இரு பகடை’ என்று அடகு வைத்த திருமகள் திரெளபதியின் பிறந்த வீடு, பாஞ்சாலம். பீஷ்மரை வீழ்த்த உதவியாக, முன்னின்று அர்ஜுனனுக்கு பெண்மையின் கவசம் அளித்த சிகண்டி என்ற பெரும்தேர் புரவலனுக்கு பாஞ்சால மண் வாசனை. அது இதிஹாசம் என்று ஒதுக்கினாலும், ஜூலை 12,1799ம் வருடத்தை பற்றி ‘அன்றொரு நாள்: ஜூலை 12’ இழையில் யான் எழுதியதை மறுபடியும் படித்து விட்டு வாருங்கள், இங்கே.
“இன்று ஒரு தேசியத்தின் ( நேஷனாலிடி) சுபஜெனனம். வருடம்:1799: இடம்: பாஞ்சாலம். நிகழ்வு: ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் லாஹூரை ஜூலை 7,1799 அன்று கைப்பற்றி, அன்றே புகழ் வாய்ந்த பாத்ஷாஹி மசூதிக்கு வருகை தந்து, ஜூலை 12, 1799 அன்று முடி சூடினார். அவரது தனிப்பெருமைகள் பல. தன்னுடைய சாம்ராஜ்யத்தில் மரண தண்டனையை தவிர்த்தார்். அவரை கொலை செய்ய வந்தவனும் தலை தப்பினான். 40 வருடங்கள் செங்கோலோச்சிய இந்த மாமன்னர், தனது பாஞ்சால ராஜ்ய விஜய தினமன்றே (நாள்,கிழமை பஞ்சாங்கப்படி) (ஜூன் 27, 1839) இயற்கை எய்தினார்...ஒவ்வொரு பாஞ்சாலக்குடும்பமும் தந்தையை இழந்ததாக வருந்தியது. பாஞ்சாலம் விதவையாகி விட்டது என்றனர்...”
பொன் விழாவுக்கு பதில் தேசமும் போச்சு; அபிமான பங்கமும் ஆச்சு. எல்லாம் போச்சு. ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் இயற்கை எய்தி பத்து வருடங்கள் கூட கழியும் முன், மார்ச் 29, 1849 அன்று ஆங்கிலேயர்கள் பஞ்சாப் களவாடலை பூர்த்தி செய்தனர். விதவையான பஞ்சாபில் அரசின் நிலை குலைந்தது. தன்னலமிகுந்த லஞ்ச லாவண்ய பைசாசங்கள் தலை தூக்கின. நாட்டுப்பற்றுள்ள ராணுவமோ கட்டவிழ்ந்தக் காளையாகி, குலைந்து போனது. 1809ம் வருட உடன்படிக்கையை உதறிவிட்டு, இந்த பேராசை கிழக்கிந்திய கம்பெனி 1845-46, துரோகிகளின் உதவியுடன், லாஹூரை கைப்பற்றினர். 1846 வது வருட லாஹூர் உடன்படிக்கைகள், பஞ்சாப் அரசை படுக்கப்போட்டது. இரண்டாவது யுத்தம் 1848&-49. முல்தானின் கவர்னர் மூல்ராஜ் செய்த புரட்சியை அடக்கிறேன் பேர்வழியென்று டல்ஹெளசி மார்ச் 29, 1849 அன்று பஞ்சாபை கலோனிய ஆட்சியுடன் இணைத்து, ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களின் மைந்தன் துலீப் சிங்குக்கும் (11 வயது), விதவை ஜிந்த் கெளர் அவர்களுக்கும் பென்ஷன் கொடுத்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து விட்டார்கள்், கொஞ்சம் அங்குமிங்கும் அலைய வைத்து. ராஜகுமாரனை கிருத்துவனாக்கி, விக்டோரியா ராணியின் செல்லப்பிள்ளையாக்கி, தேசாபிமானத்தை ஒழிக்க வேண்டி, மண்ணாங்கட்டியிலும் தெருப்புழுதியிலும் ஆசை காட்டி ( விளயாட்டு, ஆட்டம் பாட்டம்), எங்கிருந்தோ வந்தவளை மணம் முடித்து, செல்லாக்காசாக, ஆக்கிவிட்டனர். அவரை பஞ்சாப் பக்கமே போக விடவில்லை, 1893ல், நாதியில்லாமல், பெருத்த கடனாளியாக பாரிஸ் நகரில் சாகும் வரை. துலீப் சிங் சோகம் வேறு கதை. சொல்ல உற்ற தருணம் கிடைக்குமோ, இல்லையோ?
அடடா! சொல்ல மறந்துட்டேனே! ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி, இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
இன்னம்பூரான்
29 03 2012
The Last Sunset — The Rise & Fall of the Lahore Durbar By Amarinder Singh
உசாத்துணை:
|
No comments:
Post a Comment