இலக்கியம், நோபெல், அலிஸ் மன்றோ
சிறுகதை ராணி என்று உலகபுகழ் பெற்ற திருமதி. அலிஸ் மன்றோ(82) அவர்களுக்கு இன்று கிடைத்த நோபெல் பரிசு ஓரளவு எதிர்ப்பார்க்கப்பட்டது தான். போன வருடம் ஹேஷ்யங்களைக்கூட பகிர்ந்து கொண்ட நான் இலக்கியபரிசை பற்றி மட்டுமே எழுதக்காரணம், வாசகர்களுக்கு அலுப்பும் சலிப்பும் தட்டவேண்டாமே என்ற எண்ணம்.
கனடாவுக்கு இந்த பரிசு 1976க்குப் பிறகு, இப்போது தான் கிட்டுகிறது. இப்பரிசை பெறும் 13வது பெண்மணி, இஅவர். 19 வயதிலேயே (1950) கதை எழுத ஆரம்பித்த இவருக்கு புகழாரங்கள், ஆண்டாண்டுதோறும் குவிந்த வண்ணம். சிறுகதை மன்னர் ஆண்டன் செக்காவுடன் ஒப்பிடப்படும் இவருக்கு செம்மையாக, மனதார நேசத்துடன், மன்னித்தருளும் மனோபாவத்துடன் எழுதுபவர் என்ற நற்பெயர் உண்டு. இன்று ஒரு வேடிக்கை. நோபெல் மையம் பரிசு பெறுபவர்களை வாழ்த்திய பிறகு தான், பிரகடனம் செய்வார்கள். இவரை தொடர்பு கொள்ள முடியாததால் அறிவிப்பு மட்டும் வைத்து விட்டு, பிரகடனம் செய்தார்கள்.
தனக்கு மற்ற திறன் யாதும் இல்லாததால், கதாசிரியராக வலம் வரமுடிந்திருக்கலாம் என்று தன்னடக்கத்துடன் தன்னையே கேலி செய்து கொள்ளும் இவருக்கு சர்வதேச விசிறிகள் உண்டு. அவருக்கு இணை யாரும் இல்லை என்று சொல்லும் பி பி சி கலை ஆசிரியர் வில் கோம்பெர்ட்ஸ், இவருடைய மனிதாபிமானத்தை உற்று நோக்கும் பண்பை புகழ்கிறார்.
‘வாழ்வே! இன்ப வாழ்வே (2012) இவரது கடைசி நூல். தனிமை நாடும் இவருக்கு இதய சிகிச்சை (பை பாஸ்) நடந்திருக்கிறது. புற்று நோய் பிரச்னையும் இருந்திருக்கிறது.
பெண்மையை மென்மையாக ஆனால், உள்ளது உள்ளபடி, கையாளுவது தான் இவருக்கு பிடித்தது. வாசகர்களுக்கு ஆர்வம் இருப்பின், நாளை, அது பற்றி பேசலாம்.
உதவிய தளங்கள்:
- B B C
- New Yorker
- Salon
{ all dated 10 10 2013}
இன்னம்பூரான்
10 10 2013
No comments:
Post a Comment