அன்றொரு நாள்: அக்டோபர் 11
பாரத ரத்ன லோக் நாயக் ஜெயப்ரகாஷ் நாராயண் (11 October 1902 – 8 October 1979)
‘எங்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான்...’ என்று தன் சேவகன் கண்ணனை பாடிய வாயால், மஹாகவி பாரதியார் லோகநாயகன் என்று மக்களால் அழைக்கப்பட்ட சேவகனும், ‘ஒன் மேன்’ புரட்சியான ஜே,பி. அவர்களின் கீர்த்தியை எப்படி உரைத்திருப்பாரோ! நான் அவரது வரலாறு எழுதபோவதில்லை. உசாத்துணையில் உளது அது. திரு.வி.க. அவர்களை போல மார்க்ஸிசம் ~காந்தீயம் கலவையான ஜே.பி. நாடு விடுதலை பெற்று 30 வருடங்கள் என்ற நிலையில், கைது செய்யப்பட்டு, உடல் நிலை குலைந்து, மனமுடைந்த நிலையில் பாட்னா திரும்புகிறார், 1975ல். முழுமையான புரட்சியை பற்றி, மக்களுக்கு அவர் எழுதிய கடிதம், மஹாத்மா காந்தி பற்றிய இணைய தளத்தில் இருப்பது உகந்ததே. அதன் சாராம்சம் கீழே.
‘...துவக்கத்திலிருந்து நான் முழுமையான புரட்சியை வலியுறுத்தி வருகிறேன். அதாவது, சமுதாயமும், தனி மனிதனும் முற்றிலும் புரட்சிகரமாக மாறவேண்டும்...ஓரிரு நாட்களில் இது சாத்தியமன்று. ஓரிரு வருடங்களும் போதாது...இதன் உள்ளடக்கம்: ஆக்கப்பூர்வமான, படைப்பாற்றல் மிகுந்த களப்போர் ஒன்று. அவை மூன்றும் கலந்தால் ஒழிய, புரட்சி நடக்காது...தற்காலம், மக்கள் அச்சத்தில். ஆயிரக்கணக்கில் தலைவர்கள், சிறையில்... எனவே, நமக்கு கை ஒடிந்த மாதிரி தான். எனினும், நீங்கள் எல்லாரும் எழுச்சியுடன், நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும், பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் விண்ணப்பம். உதாரணமாக, கல்வித்துறையின் பலவீனங்களை பாருங்கள்...மாணவர்களின் அதிருப்தி எல்லை கடந்து நிற்கிறது, அடக்குமுறையையும் மீறி...அது வெடித்தால், சர்வ நாசம். அதற்கு முன் நடவடிக்கை சிலாக்கியம்...இன்னும் எத்தனை பிரச்னைகள்? ஹரிஜன், பழங்குடி வறுமை சொல்லி மாளாது. இன்றும் தீண்டாமைப்பேய் தலை விரித்தாடுகிறது. எத்தனை வன்முறைகள்? ஹரிஜன்கள் எரிக்கப்பட்ட கொடுமைகளை நடந்திருக்கின்றன. புரட்சியாளர்களாகிய நாம் ஹரிஜன், பழுங்குடிகளுடன் உறவாடி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவேண்டும். இந்த ஆக்கப்பூர்வமான ஈடுபாடு இல்லையானால், புரட்சி மடிந்து விடும்... அது கெலிக்க நான்கு காரியங்கள் ஆகவேண்டும்: களப்போர் +ஆக்கப்பூர்வமான பணிகள் +பிரச்சாரம்/விழிப்புணர்ச்சி + நிர்வாகம்...முதற்கண்ணாக, நாம் மக்களின்/ இளைஞர்களின் மனதை மதமாச்சரியம், தீண்டாமை, சாதி வேற்றுமை, சீர் செனத்தி தீமைகளிலிருந்து விடுவிக்க வேண்டும்...முழுமையான புரட்சிக்கு ஓய்வு கிடையாது. அதற்கு இடைவேளை கிடையாது. அது நமது வாழ்வியலை நலம் நோக்கி பயணிக்க வைத்தபடி இருக்கும்...காலத்திக்கேற்ப,தேவைக்கேற்ப, அதனுடைய உருவம், ஜாபிதா,நடைமுறைகள் மாறி வரும்.
ஜமீன்தாரி ஒழிந்தது; நில சீர்திருத்தங்கள் அமலில். தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது. ஆனால், கிராமங்களில் மேல்தட்டு மக்களின் ஆதிக்கம் கிடிக்கிப்பிடியாக இருக்கிறது. கந்து வட்டி கொடி கட்டி பறக்கிறது... வங்கிகளை நாட்டுடமையாக்கினார்கள். ஆனால், அரசின் முதலாளித்துவம், வீண் செலவு, மந்த கதி, லஞ்சம் அதிகரித்தது. கால்ப்ரைத் சொல்லும் ‘அதிகார வர்க்கத்தின் ஆளுமை’. இதில் சோஷலிஸம் எங்கே வந்தது? நாட்டுடமை தான் சோஷலிஸம் என்பது மாபெரும் தவறு...வெள்ளைக்காரனின் கல்வித்திட்டம் மாறவேயில்லை...மூடநம்பிக்கைகள் வலுத்து வருகின்றன...விடுதலைக்குப் பிறகு, அரசியல், வணிகம், பொது வாழ்வு எல்லாவற்றிலும் அதர்மம் மிகுந்தது...வறுமை அதிகரித்து விட்டது. பீஹாரில் இல்லாத தாது வளமா? பாசனமா? நிலவளமா? ஆனால், ஏழ்மை. இந்த அட்டவணை பெரிது...ஜனநாயக வழியில் விமோசனம் உண்டா? எதிர்க்கட்சி கெலித்தால், வழி பிறக்குமா? அடித்தளம் உளுத்துப்போய் விட்டதே, ஐயா!...மக்கள் எழுச்சி இல்லையெனில், இளைஞர்களும், மாணவர்களும் விழிக்காவிடில், என்ன சாதனை முடியும்?...என்ன தான் ஆவேசமாக பேசினாலும், சமுதாயத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின், மக்களின் ஜனநாயக பாட்டையின் வழித்தடத்தை குலைக்கக்கூடாது. இதில் மாற்றம் ஒன்றுமில்லை. எனவே, சட்டம் பேசும் ஜனநாயகர்கள், ஜனநாயகம் தேர்தலில்/சட்டமன்றத்தில்/திட்டக்கமிஷனில்/அரசு நிர்வாஹத்தில் மட்டும் அடங்கவில்லை என்பதை ஒத்துக்கொள்வார்கள்... மக்களின் நேரடி நடவடிக்கை வேண்டும்...ஒத்துழையாமை, சமாதனமான எதிர்ப்பு, அக்ரமத்துக்கு பணிய மறுப்பது ~ சத்யாக்ரஹம். அதுனுடைய நுட்பம் யாதெனில், மாற்றம் நாடுவோர் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.
~ மூலம்: ‘சமுதாய சீர்திருத்தம்: ஜெயப்ரகாஷ் நாரயண் நூற்றாண்டு படிப்பினைகள்.
1975ல் சொல்லப்பட்டதை 2011ல் எப்படி நீங்கள் பார்ப்பீர்களோ? அல்லது மறந்தும் பார்க்காமல் விடுவீர்களோ? யானறியேன். ஈஷ்வரோ ரக்ஷது.
இன்னம்பூரான்
11 10 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment