அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 8
உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே - (பன்னிருபடலம்)
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குடை உழிஞை நொச்சி தும்பை என்று
இத்திறம் ஏழும் புறம்என மொழிப. (-பு.வெ.மாலை. ்)
எதிர் ஊன்றல் காஞ்சி ; எயில் காத்தல் நொச்சி ;
அது வளைத்தல் ஆகும் உழிஞை -பழம்பாடல்
வரலாறு என்ற நதியின் வெள்ளப்போக்கில் 70 வருடங்கள் கடந்தன. மாறுதல்கள் பல வந்து போயின. அச்சம் மட்டும் தீரவில்லை. சொல்லப்போனால் அதிகரித்து விட்டது. ஸெப்டம்பர் 8, 1941 அன்று அசட்டுத்துணிச்சலுடன், திட்டமிடாமல் ‘அஸால்ட்டா’ ஹிட்லர் துவக்கிய உழிஞை, சோவியத் ரஷ்ய நொச்சியிடம் சிக்கி நசுங்கியது. விநாசகாலே விபரீத புத்தி! இரண்டரை வருடஙகளில் பத்து லக்ஷம் மக்கள் மாண்டு போயினர். அவனுடைய வக்ரபுத்தி, லெனின்கிராட்டை தாக்கி தோட்டாக்களை வீணடிக்காமல், முற்றுகை செய்து பட்டினி போட்டு மண்டியிட வைப்போம் என்பதே.் கொன்றுவிடும் கடுங்குளிரும், பசிக்கொடுமையும், நீரில்லா உலகும் (குழாய்த்தண்ணீர் கூட உறைந்து விடும்.) ஆயுதங்கள் என, ராணுவ தளவாடமென கணித்தான். சோறு தண்ணி இல்லாதததால், பூனையும் நாயும், புரவியும், எலியும், காகமும் ஜீரணமாயின. (சிலேடை யாதுமில்லை இவ்விடம்!) குழி தோண்டத் திராணியில்லை. பிணங்கள் தெருவில், இன்றைய லிபியா போல. போதாக்குறைக்கு, இடை விடா பீரங்கித் தாக்குதல்; குண்டு வீச்சு. ஆனால், காவற்காடும், அகழியும், எயிலும் அந்த கடுங்குளிரே; காவற்காட்டை கடக்க முடியவில்லை; அகழி (லடோகா ஏரி) உறைந்து கிடக்கிறது. எயில் மேல் ஏற வைத்த ஏணி வழுக்குகிறது. முற்றுகையா இது?
பலரும் மாண்டனரா! ஜனத்தொகை குறைந்ததா? லடோகா ஏரி உறைந்த நெடுஞ்சாலை ஆனதா? தான்ய மூட்டைகள் வரத்து. ரேஷன் அதிகமாச்சு. கீழே உள்ள தபால் தலையில் காட்டியமாதிரி, அக்காலத்து லெனின்க்ரேட் மக்கள் யாவரும் சண்டைக்கோழிகள். உழிஞையை நொச்சி எளிதில் விடவில்லை. ஜெர்மானிய ராணுவம் பட்டினி கிடந்ததற்கு நான் கூட அணில் மாதிரி கொஞ்சூண்டு உதவினேன். அந்த மிகை பின்னால் வரும். புத்தாண்டு 1944 நன்றாகவே விடிந்தது. ஜெர்மானியர்களை புறங்காட்ட செய்ததை லெனின்கிராட் மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினார்கள். அதற்கெல்லாம் 18 மாதங்கள் முன்னாலே, பலவிதமான இன்னல்களுக்கிடையே, ஆகஸ்ட் 9, 1942 அன்று லெனின் கிராட்டின் பட்டினி கலைஞர்கள், ஷோஸ்டகோவிட்சின் ஏழாவது வாத்ய அமைப்பை வாசித்து, மக்களுக்கு பரவசம் அளித்தனர். அந்த உணர்ச்சிமிகு நிகழ்வை பற்றி எழுதினாலே, ஒரு நாள் பிடிக்கும். படிக்கப்போவது யாரு?
அலெக்ஸாண்டர் வொர்த் என்ற பீ.பீ.சி. நிருபர் சேகரித்த சில லெனின்கிராட் மண்ணின் குரல்கள்:
- அஸ்டோரியா ஹோட்டல் மானெஜர் அன்னா ஆன்றீவ்னா: ஹோட்டலை ஆஸ்பத்திரியாக மாற்றி விட்டோம்...மெலிந்து ஒடிந்து போன அறிஞர்கள் கூட தட்டுத்தடுமாறி, வந்தனர், விட்டமின் மாத்திரை கொடுத்தோம். பெரும்பாலும் இறந்து போயினர்...அங்கும், இங்கும், எங்கும் பிணங்களே...பட்டினியால் பித்துப்பிடித்துப்போயினர்,பலர். சடலங்களை ஒளித்து வைத்து, அவர்களின் ரேஷனை வாங்கலாச்சு...
- கட்டிடக்கலை நிபுணர்கள்: மற்ற மக்களைப்போல் நாங்களும் சுக்குநூறாகக் கிழிந்தோம். எங்கள் கொடுப்பினை எங்களுக்கு அலுவல்கள் கொடுக்கப்பட்டன, என்பது. மனம் அதில் சென்றது. அது ஆன்மிகத்துணை... பெண்களின் தாக்குப்பிடித்தல் ஆண்களுக்கு இல்லை...என்ன கொடுமை?.. மாதவிலக்குக்கூட நின்று போனது...யார் செத்தாலும் சோகமில்லை...ஆனால் பாருங்கள். கொஞ்சம் சீரான பிறகு பெண்கள் பவுடர் பூசத்தொடங்கினர். அதான்ப்பா! வாழ்க்கை!..முற்றுகையை தகர்த்த தினத்தில் , கட்டித்தழுவிக் கொண்டாடினோம்... இப்போது கூட குண்டு விழுது. டோண்ட் கேர்!
- மேஜர் லோசக்: மூஞ்சியை பார்த்து சாகப்போறானா? இல்லையா? என்று சொல்லிடலாம். என் ஆஃபீசர் ரேஷனின் பாதி பெற்றோருக்கு கொடுத்து விடுவேன். இல்லையெனில் செத்திருப்பார்கள். ஒத்தருக்கு 350 கிராம். எனக்கு ஆஃபீஸர் என்பதால், 200 கிராம் மட்டும். அது தானே நியாயம். முதல் பாயிண்ட். கவலை படுவது கிடையாது. ஆனால், காணாமல் போன பெரிய இழப்பு: புன்னகை. ஆனால், மக்கள் யாவரும் கடுமையான சுயக்கட்டுப்பாடு. சோத்தை பற்றி பேச்சு எடுக்கமாட்டோம். ஒருவர் ஹெகல், காண்ட்: வேறொன்றும் பேசமாட்டார். ஆனால் கொலைப்பட்டினி. இந்த முற்றுகையும் எமது நொச்சி மறமும் படிப்பினைகள் பலவற்றை தந்தன.
- என்னுடைய சில குறிப்புக்கள்:
[1] நான் வசிக்கும் இடத்தில் ‘ஆபரேஷன் ஓவர்லார்ட்’ என்ற இரண்டாம் போர்முனை சம்பந்தமான சின்னங்கள் உளன. அதற்கும், எனக்கும் சிறு வயதில் ஒரு பிணை. ‘காந்திஜி வேண்டாம். நேதாஜியை பின்பற்றுங்கள்’ என்று கோஷம் செய்ததால், போலீஸிக்கு என் மேல் ஒரு கண். உசிலம்பட்டியோ பிரமலைக்கள்ளர்கள் நாடு. மறவர்களை போருக்கு ஆயத்தம் செய்யும் களம். என்னை இற்செறிப்பதைத் தணிப்பதற்கு நன்றிக்கடனாக, என்னை இந்த ‘இரண்டாம் போர் முனையை பற்றி லெக்சர் அடிக்கச் சொன்னார்கள், போலீஸ் சமாதானக்குழு. யுத்தப்பிரச்சார ஊர்வலங்களில், ‘சர்ச்சில் ஒழிக! ஹிட்லர் வாழ்க!’ என்று கோஷிக்கும் நான் இருதலைக்கொள்ளி போல் தவித்தேன். ஏனெனில் அப்பாவின் வேலைக்கு என்னால் அபாயம். லெக்சர் அடித்தேன். திரு.வி.க. அவர்களின் நூலொன்று பரிசு. ஆயிரக்கணக்கில் வல்லமை மிகுந்த தேவர்பிரான்கள் ராணுவத்தில் சேர்ந்தனர் என்று என் அதீத கற்பனை! (பாருங்கள்! அந்த இரண்டு இதழ்களுக்கும், சிறப்புப்பாயிரம் பாடி இருக்கிறேன், கதலியில் குத்தூசி ஏற்றாமல்!.)
[2] மற்றதொரு இழையில் ஹிட்லரை பற்றி விவாதம் கண்டேன். மின் தமிழர்கள் ரொம்ப மடலாடுகிறார்களா? இழையைக்காணோம், தழையைக்காணோம் என்று ஓடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அது ஒரு ஶ்ரீரங்கோபயம். (்ஶ்ரீரங்க +உபயம்; ஶ்ரீரங்க பயம் அல்ல!) ஏ.ஜே.பி.டேலர் அவர்களின் ‘ரஷ்யப்போர்’, ‘போர்களின் துவக்கம்’, ‘போர்களின் முடிவு’, ‘இரண்டாவது உலக யுத்தத்தின் தோற்றம்’ ஆகிய நூல்களிலும் ஆலன் பொல்லாக் அவர்களின் அவதானிப்பிலும், ஆதாரபூர்வமான விளக்கங்களும், தெளிவும் உள்ளன. ஹ்யூ ட் ரெவர் ரோப்பர் புகழ் பெற்ற சரித்திர பேராசிரியருக்கு மற்றவர்களுக்கு கிடைக்காத ஆவணங்களும், அரசின் ஆதரவில் கிட்டின. அவர் 1947 இல் எழுதிய ஹிட்லரின் இறுதி நாட்களை பற்றிய நூல், ஹிட்லரைப் பற்றிய நல்லதொரு ஆய்வு. ஆனால், பிற்காலம் அவர் நம்பிய டைரிகள் இட்டுக்கட்டு என்று தெரிய வந்தது. நிறைய நூல்கள் வந்துள்ளன. இவை மூலம் நமக்கு வேண்டியது வரலாற்று படிப்பினைகள்.
முதல் படிப்பினை: யதா ராஜா ததா ப்ரஜா ( அரசன் மாதிரி மக்கள்) என்பது தற்காலிகமாகத்தான் சரி. ஹிட்லர் வேறு. ஜெர்மானியர் வேறு. இரண்டாவது: பேயரசு புரிந்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்.
[3] ஹிட்லர் மட்டும் தானா ராக்ஷஸன்? லெனின், ஸ்டாலின், மாட்ஸே துங்க், போல் போட், முஸோலினி, சதாம் ஹுஸேன், கடஃபி, இடி அமீன், பினோச்ஷே, ஏன், ஓரளவுக்கு ஜார்ஜ் டபிள்யூ. புஷ்! லியோனர்ட் பைக்கஃப் ஒரு objectivist analyst. அக்டோபர் 2, 2001 அன்றைய ந்யூ யார்க் டைம்ஸ் இதழில் ஒரு முழுப்பக்க விளம்பரம் எடுத்து சொல்கிறார், “...நம் சவப்பெட்டிகளை நிரப்புவதில் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. ஈரான் பயங்கரவாதிகளின் தலை நகரம்...” இந்த மேற்கோள், ஹிட்லர் மட்டும் அசுரன் அல்ல என்பதை சுட்டுவதற்கு. கொள்ளு வாய் பிசாசா இருந்தால் என்ன? பிரும்மராக்ஷஸாக இருந்தால் என்ன? ரத்தக்காட்டேரியாக இருந்தால் என்ன? நாசகாரி கும்பல்.இதில் ரேங்க் என்ன கேடு? Lord Actons’s Universal Truth: “Power Corrupts; Absolute Power Corrupts Absolutely. Hitler was one of the worst specimens.
[4] குதிராம் போஸ், பகத் சிங்க், வாஞ்சிநாதன், சுபாஷ் சந்தர போஸ் எல்லாரும் உத்வேகம். வன்முறை தவிர்க்க விரும்பவில்லை. ஹரிபுரா, திரிபுரா காங்கிரஸ்களில் (1938 & 1939) சுபாஷ் ஹீரோ. சிறுவயதில் அவருடைய போஸ்டரை வைத்துக்கொண்டு அலைவோம். அதில் ஒரு வாசகம், ‘Your Enemy is My Friend.’ ராஜாஜி அவரை அலங்காரப்படகு ஆயினும் ஓட்டைப்படகு என்று கேலி செய்தார். ஹிட்லரிடம் ஆதரவை சுபாஷ் எதிர்பார்த்தது, திப்பு சுல்தான் நெப்போலியனை நம்பியது போல்! ஒரு அரசியல் ரிஷ்யசிருங்கம். அவருடைய இந்திய ராணுவப்படை/தேசாபிமானம் பற்றி அறிய விழையும் நண்பர்கள், செங்கோட்டை வழக்கில் புலாபாய் தேசாய் அவர்களின் ஆற்றல் மிகுந்த வழக்காடலில் அதைக் காணலாம்.
மின் தமிழர்களே! தமிழ் வாசல் காப்போர்களே! இவர்கள் மூலம் இதை படிக்க நேர்ந்த மற்ற அன்பர்களே! இக்கட்டான சூழ்நிலையில், இன்னல்கள் நடுவே மின்னல்களாக ஒளி வீசிய லெனின்கிராட்டின் கல்லுளிமங்கர்களிடமிருந்து, நமக்கு படிப்பினை ஏதும் உண்டோ, இன்றைய இந்திய சூழலில்?
இன்னம்பூரான்
08 09 2011
No comments:
Post a Comment