அன்றொரு நாள்: அக்டோபர் 12:I
I. பாமர வரலாற்றில் ஒரு சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை பாரபக்ஷமற்றி, ஒரு நடுவு நிலையிலிருந்து உன்னித்து கவனித்தோமானால், ஆழப்புதைந்திருக்கும்/ புதைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் புதிய படிப்பினைகளை தரலாம். அதற்கு ஆய்வுகள் முக்கியம். நினைவலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவையே. ஒரு சோதனை முயற்சி, இங்கே. பிரமலை கள்ளர் சமுதாயம் தமிழ் நாட்டில் தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில், பல உட்பிரிவுகளில், நெடுங்காலமாக, தனித்தும், பெரிய சமுதாயத்துடன் இணைந்தும் வாழ்ந்து வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில், செக்கானூரணியில் 4-5 வயதுகளிலும், உசிலம்பட்டியில் 9-13 வயதுகளிலும் வசித்ததும், கள்ளர்களுக்கு என்று நடத்தப்பட்ட பள்ளியில் ஓரிரு பிராமண மாணவர்களில் ஒருவனாக இருந்து படித்ததும், என் தந்தை அந்த சமுதாயப்பணியில், ஒரு அரசு உத்யோகஸ்தனாக, இருந்ததும், நினைவில் இருப்பதாலும், பிற்காலம் இன்று வரை அவர்களை பற்றி விருப்பத்துடன் படிப்பதாலும், இன்று பிரமலை கள்ளர்களை பற்றி ~ இரு பகுதிகளில்.
இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகத் திருடுபவர்கள் என்று பிரிட்டீஷாரால் சூடு போடப்பட்ட சமுதாயங்களில், இது ஒன்று. அதனால், தலை குனிவு; நாள் தோறும், ஆண்மக்கள் கிராமத்தில் இரவு தங்கவேண்டும். ஆஜர் என்று நேரடி சாட்சியம் தரவேண்டும் என்ற கெடுபிடிகள்: இதன் பின்னணியாகிய கிரிமினல் பழங்குடிகள் கட்டுப்பாடு சட்டம் (Criminal Tribes Act 1871) அமலுக்கு வந்த தினம்: அக்டோபர் 12, 1871. விடுதலை வந்த பின் மாஜி கிரிமினல் பழங்குடிகள் (denotified tribes) என்ற நாமகரணத்தால், அவர்கள் பெரிய சமுதாயத்துடன் கலந்து விடமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டனர் அதனால் தான் ‘Habitual Offenders Act 1952 ‘ (மட்டமான தலைப்பு.) அமலுக்கு வந்தது என்று நான் நினைக்கிறேன். அவற்றில் 192 பழங்குடி சமுதாயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பிறகு என் கருத்தை சொல்கிறேன்.
கள்ளர் பிரான்கள்: அவர்களின் சொத்து மானம் பார்த்த பூமி. அளவு கடந்த ரோஷம். அதற்கு ஒரு படி மேல், சினம். அதற்கும் ஒரு படி மேல், நகைச்சுவை. யாராவது ஒரு பிரமுகரை பழி வாங்கவேண்டுமானால், கட்டிலோடு அவரை லாகவமாகக் கடத்தி, 20-30 மைல் தொலைவு கடத்தி, ‘தொப்’ என்று கிடத்திவிடுவார்கள். தூங்கினவன் எழுந்திருக்க மாட்டான். அத்தனை லாகவம். ஆட்டுமந்தைகள், இவர்கள் கூப்பிட்டால் வந்து விடும். அத்தனை வசீகரம்!. போலீஸ் போனால் பிரயோஜனமில்லை. ராவோடு ராவாக, கிராமமே விருந்துண்டு, தோல்களை வேறு கிராமத்தில் புதைத்து விடுவார்கள். ஒரு கதை: திருமலை நாயக்கன் ராஜாவுடன் ஒரு கள்ளர் தலைவர் பந்தயம். ராணியை முடியை பின்னிக்கொள்ளாமல் இன்று படுத்துக்கொள்ளச்சொல்லுங்கள். பிறகு பாருங்கள். ராவோடு ராவாக, ஒரு உடும்பின் வாலை பிடித்து மலையேறி ராணியின் முடியை இவர் பின்னிவிட்டதாகச் சொல்வார்கள்.
பள்ளி நினைவுகள்: செக்கானூரணி: த்ரீ ரிங்க் சர்க்கஸ் மாதிரி ஒரே அறையில்/ஹாலில்/திண்னையில்/ மரத்தடியில் (எல்லா வர்ணனையும் தகும்!) ஐந்து வகுப்புகள், ஒரே ஆசிரியை, கூச்சல், பாடம், ஆட்டம், பாட்டம், விளையாட்டு, வானரம், நாய், பூனை, வரத்துப்போக்கு. நான் ஏதோ உயர்பிறவியாக நடமாடியதும், நினைவில் உள்ளது. லீலா டீச்சர் 25 வருடங்களுக்கு பிறகு வந்த போது, நான் விஷமக்காரன் என்று கேலி செய்தார். சமத்துவம் இருந்ததை உணர்த்தினார்.
பள்ளி நினைவுகள்: உசிலம்பட்டி: கள்ளர் இன மாணவர்களுக்கான ஜில்லா போர்ட் பள்ளியில் இனபேதம் துளிக்கூட இல்லை. அவர்களுக்கு, உணவு, ஆடை, தங்குமிடம், கல்வி இலவசம். தாமதமாக பள்ளியில் சேருவதால், எனக்கும் மற்றவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம். பள்ளியில் சுதந்திரதாகம் வலுத்து இருந்தது. ‘...ஜூனியர் வகுப்பில் இருந்தாலும், என்னை அந்த பிரமலை கள்ளர் மாணவர்கள் தலைவனாக, ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்று, இன்னும் புரியவில்லை. ஹெட்மாஸ்டர் யாகூப்கான், அண்டைவீடு; அவருக்கு நான் செல்லப்பிள்ளை. கண்டும் காணாது போய் விடுவார். அன்றாடம், காலைப்பிரார்த்தனைப்பாடல், முதல் நாள் தான், தேர்ந்தெடுப்போம். ஒரு நாள், என் முடிவின் படி, ‘வந்தே மாதரம்’ பாடினான், ஒச்சத்தேவன். ஹெட் மாஸ்டர் ஆட்சேபிக்கவில்லை; அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார், தற்காலிகமாக. அவரிடத்திற்கு வந்த அப்பாவின் நண்பர் சிவசுப்ரமணிய ஐயரை, அவர் வீட்டுக்கு வந்து கெஞ்சிய பிறகும், நாங்கள் எதிர்த்தோம்; பள்ளியில் முதல் முறையாக, ஸ்ட்ரைக் செய்தோம், யாகூப் கான் அவர்களை பதவியில் அமர்த்தும் வரை. எனக்கு டி.ஸி. கொடுக்கவேண்டும் என்ற ஆணையைப் புறக்கணித்தார். இது எல்லாம் தினத்தூது என்ற இதழில் வந்ததாகச் சொல்வார்கள்...’மாணவர்களாகிய நாங்கள் கெடுபிடிகளால் கட்டிப்போடப்படவில்லை.
என் பாடு வேறு:அம்மா எழுதியது:’...இத்தனை வருஷத்துக்குள் இரண்டாவது யுத்தம் நடக்கும்போது என் பெரிய பிள்ளை காங்கிரஸ் கஷ்ஷி(ட்சி)யில் சேர்ந்து ஸ்கூலில் மீட்டிங் நடத்தினான். பிறகு ஊர்வலம் வந்தார்கள். அப்போது மீட்டிங் பேசினதால், இவன் ஊர்வலம் வர ஏற்பாடு இவன் தான் செய்தான் என்று என் பிள்ளையை அரஸ்டு செய்வதாகச் சொன்னார்கள், அதற்குள் டீ எஸ் பீ கியாம்பு உசிலம்பட்டி வந்திருந்தார். அவர் உடனே என் புருஷனை வரும்படி எங்கள் வீட்டிற்கு என் புருஷனுக்குத் துணையாக வேளப்பன் என்று ஒரு போலீஸ்கார கான்ஸ்டபிள் இருந்தான். சென்னை பீ சூப்ரண்டு அவனை அனுப்பினார், வீட்டுக்கு. அப்போ உடனே என் புருஷன் டீ எஸ் பீ அவர்களைப் போய் பார்த்தார், அவர் உன் பிள்ளை தான் மீட்டிங்கில் பேசினான். இனி அது நடக்கக் கூடாது என்று உன் பிள்ளையிடம் சொல்லி வை என்று சொல்லி விட்டு உன் பிள்ளை என்று தெரிந்தேன், அரஸ்டு செய்யாமல் விட்டு விட்டேன். உனக்கு தான் வேலை போகும். அதனால் உன் பிள்ளையைக் கண்டித்து வை என்று சொ(ன்)னார்...’
(தொடரும்)
இன்னம்பூரான்
12 10 2011
No comments:
Post a Comment