பளிஞ்சாடிரடி குடு குடு...
இன்னம்பூரான்
10 10 2013
பிரசுரம்: வல்லமை: 10 10 2013
என்றோ ஒரு நாள், ஜம்பூத்வீபத்தின் தென் பிராந்தியத்தில் சடுகுடு சாம்ராஜ்யத்தை ‘ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர தைர்ய மதன காம மஹராஜா’ எனப்படும் மைனர் பையன் கிச்சு கிடுக்கிப்பிடி நிர்வாஹம் செய்து கொண்டிருந்தான். அந்தப்புரத்து அந்தரங்கத்தில் அடாவடி செய்யுமவன், அமைச்சர் அறிவுரையை அறவே அழிப்பதில் குறியாக இருப்பான். கேளிக்கை என்று இறங்கி விட்டால், இஞ்சி தின்றவுடன் தேறல் குடித்த குரங்கு மாதிரி தொம் தொம் என்று குதிப்பான். அவனுடைய துள்ளலோசை உலகெங்கும் எதிரொலிக்கும். எதிராளி போர்க்கொடிதூக்கினால், ஓடி ஒளிவான், அந்த பயந்தாங்கொள்ளி. அவனது நிர்வாகத்திறனின்மை பகிங்கிர ரஹஸ்யம் என்றாலும், அதை பற்றிய விமர்சனம் மட்டுறுத்தல் செய்ய்ப்பட்டிருந்தது. இத்தனைக்கும் மேதாவிலாச ராஜ்யபாரம் வகித்த அவனுடைய அப்பன் நிஜமாகவே ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர ‘வாகை சூடி’ மஹராஜா தமிழரசர். எதுவும் மிதம் அவருக்கு. ஜனோபகாரம் தான் அவருக்கு இலக்கு. அதனால் தான் தாராளமாகவே ராஜ்ய பரிபாலனம் பற்றிய செய்திகளை, ஆணைகளை, அவற்றின் பின்னணி, பிரதிபலன்களை கோட்டை வாசல் ராஜபேரிகை மூலம் ஒலிக்கவேண்டும்; ஒளிவு, மறைவு கூடாது; தர்பார் ஹாலில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டிருந்தார். வரலாற்றை போற்றி பணிந்து பின்பற்றும் பாரதவர்ஷத்தில், அதனால் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது என்று மார் தட்டிக்கொள்கிறார்கள், தற்கால சாணக்கியர்கள். கறுப்புப்பணாதிபதிகள், லஞ்ச வாவண்ய பிரபுகள், ஹாய் ஹவாலா ஹைஸ்ட்ரீட் கொள்ளையர், பினாமி சுனாமிகள் ஆகியோரின் பட்டியல் கேட்டாலே, கோபாவேசத்தில் ரோமம் சிலிர்த்து, முகம் சிவந்து, கண் துடிக்க, செவி மடங்க, உதடுகள் ஆட, தகவல் மறுக்கும் Official Secreteers ஆகிவிடுகிறார்கள் மேலாண்மை பிரமுகர்கள்.
இப்போது அந்த black listல் சேர்ந்து விட்டது தமிழ்நாட்டு மின்சார வாரியம். தமிழரசரை உதறிவிட்டு கிச்சு பரமஹம்சாதிபதியின் சிஷ்யகோடி ஆயினர் தமிழ்நாட்டு மின்சார வாரியம்.
Point at issue: மின்சாரம் திருடுபவர்களின் பட்டியல். வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி, வருடாவருடம் மின் திருடுகள் அதிகரித்து வருகின்றன. 2007-8ல் 3746 திருட்டுகள்; 2012-13ல் 8166. ஏப்ரல் 2013: 699. பேஷ். கெடுவுக்குள் மின்கட்டணம் கட்டத்தவறிய மின்வெட்டு பலியாடுகள் ஆகிய சராசரி சிறு நுகர்வோர்களுக்கு கணிசமான கறார் அபராதம். திருடனுக்கு மறைமுக ஆதரவா? அதனால் அந்த அபராதிகளின் பட்டியல் தர மறுக்கிறார்களோ?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) என்ற குடையின் கீழ் குளிர் காயும் மின்வாரியம் அந்த பட்டியல் அளிக்க மறுப்பது ஜனநாயக்கு முரண். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) பட்டியல்தாரர்களுக்கு அபாயமோ அல்லது விசாரணைக்குத் தடங்கல் ஆக இருந்தால் தான் உகந்த வழிமுறை. அதன்படி விவரம் அளிக்க மறுப்பது பிணம் தின்னும் சாத்திரம் போல்.உண்மை யாதெனில், பரம்பரை மின் திருடர்கள் அரசியல் கட்சிகள். கோடிக்கணக்கில் கந்து வசூல் செய்து, அலங்கார பந்தல் போடும் அரசியல் கட்சிகள் ஒளி திருட தயங்குவதில்லை. அவர்களை காட்டிக்கொடுக்க அஞ்சுகிறது மின் வாரியம். அப்படியானால், கோடிக்கணக்கான அந்த செலவை ஏற்றுக்கொளவது, வோட்டுப்போடும் மக்கள்.
மின் வாரியம் மக்களுடன் தம் பிடித்து பளிஞ்சாடிரடி குடு குடு… விளையாடுகிறது, கிச்சுவின் கேளிக்கைப் போல. உருப்பட்டமாதிரி தான்!
Image Credit: Google
இன்னம்பூரான்
|
|
No comments:
Post a Comment