Sunday, May 12, 2013

தமிழார்வம் ‘திரிகடுகம்: தகைமை


தமிழார்வம்
‘திரிகடுகம்: தகைமை
Inline image 1
அப்டேட்:2014
எழுத்தை சீரமைக்கச் சொன்னர்கள்.
இன்னம்பூரான்

4. தகைமை மூன்று
தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் - நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில். 
4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக.  அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு.  இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம். 

4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது.  உரையாசிரியர்  அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும்  எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார்   அருளிய   பெரிய   திருமொழியிலும்   ‘...சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம   வேதியனே,   நெடுமாலே...’ (7-7-3)   என்று
நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள்  வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘... இராமனை   முதன்முறை   கண்டு   தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட
அநுமன்   கூற்றினைச்   செவிமடுத்த   இராமன்   இவன் இருக்கு, எசுர்,சாமவேதம்    என்ற   வேதங்களில்   பயிற்சியுடையனாதல்   வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு   வணக்கமும்   தொடர்ச்சியும்   இனிமையும் உடையதாய் உள்ளது என்று   இலக்குவனிடம்   குறிப்பிட்டதாக  வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வான்மீகியார்
காலத்திலேயே   வழக்கில்   இருந்தன...’ என்றும் எழுதியுள்ளார்.

5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.

(தொடரும்)

இன்னம்பூரான்
07 11 2012
உசாத்துணை:
திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
தமிழ் இணையக் கல்விக்கழகம்
திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

சித்திரத்திற்கு நன்றி:

பிரசுரம்: வல்லமை

No comments:

Post a Comment