Tuesday, May 14, 2013

பற்று வரவு


பற்று வரவு

Innamburan S.Soundararajan Tue, May 14, 2013 at 10:20 PM


பற்று வரவு
Inline image 1

‘சமயம் பொருட்டு சண்டை வருவதில்லை; சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது தான் காரணம்.’
~ அஸ்கர் அலி இஞ்சினீயர்


காலை உவகையுடன் எழுந்த நான் மாலையில் வதங்கித்தான் போனேன். ‘இன்னம்பூர் சிங்கம்’  எனப்பட்ட என் தாத்தாவின் மூத்த நண்பரொவர் சொல்வார், ‘எண்பது வயதாகி விட்டது. மனதில் பட்டதை சொல்வதில் தயக்கம் இல்லை’.  அது இப்போது தான் எனக்குப் புரிகிறது; வயது எண்பது ஆகிவிட்டதல்லவா.

காலையிலிருந்து இங்கிதமான நல்வாழ்த்துக்களும், பரிசுகளும் வந்த வண்ணம். அது வரவு. இன்னும் பதில் போடவில்லை. அதற்குள் என் மனதை கலங்கடித்த செய்தி ஒன்று. இது பற்று (இன்றைய தமிழில்,செலவு). நோய்வாய்ப்பட்டு கிடந்த ஜனாப் அஸ்கர் அலி இஞ்சினீயர் அவர்கள் (74) காலமானார். நான் பல வருடங்களாகவே அவருடைய விசிறி. அவர் துணிவின் பிரிதிநிதி. சீர்திருத்தவாதிகளில் முதல்வர் எனலாம். வாய்மை அவரது மூச்சு. ஒரு இஸ்லாமிய மத போதகரின் மைந்தரான அஸ்கர் அலி இஞ்சினீயர் அந்த சமய போதனைகளை அக்கறையுடன் படித்து தெளிவு கண்ட சான்றோன். இஸ்லாமின் பழமையை போற்றும் சவுதி அரேபியாவே அவரை அழைத்து சிறப்பித்தது. பெண்ணுரிமையை இஸ்லாம் மறுக்கவில்லை என்று கூறிய அஸ்கர் அலி இஞ்சினீயர் இஸ்லாமிய மதத்தின் ஒரு கிளையான போஹ்ரா சமூகத்தின் மதத்தலைவர் வரி விதிப்பதை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரண் என்று எதிர்த்தார். அடிக்கடி அடித்து வதைக்கப்பட்டார். இரு தடவை உயிருக்கே ஆபத்து. மதபகிஷ்காரம் செய்யப்பட்டார். அவருடைய பெற்றோர்கள் மறைந்த போது அவர்களுக்கு நல்லடக்கம் மறுக்கப்பட்டது. மதத்தின் அருமையான கோட்பாடுகள், இந்த வன்மையை ஆதரிக்கவில்லை என்றாலும் சமயவெறி கொண்டவர்கள் (எந்த மதமானாலும், அதே.)  அத்து மீறி நடப்பார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. போஹ்ரா ஒரு சிறிய சமூகம். பெரும்பாலும் செல்வந்தர்கள். அவர்களின் செல்வத்தின் மீது,  மதத்தலைவர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உதாசீனம் செய்து, வரி விதித்து ஆதிக்கம் செலுத்தியது போல், நாம் எல்லா சமயங்களிலும் கண்கூடாக பார்க்கிறோம். இலங்கையில் பெளத்தம் அஹிம்சா மூர்த்தி சாக்யமுனியின் போதனைகளுக்கு முரணாகத்தான் நடந்து கொண்டது. தற்காலத்தில் மதுரை ஆதீனம், நித்யானந்தா போக்குவரத்துக்களுக்கும் ஹிந்து மத போதனைகளுக்கும் லவலேசமும் சம்பந்தம் கிடையாது. சில கிருத்துவ மத அதிபதிகளின் இகழ்ச்சிக்குரிய நடவடிக்கைகள் அம்பலத்துக்கு வந்த வண்ணம்.

அஸ்கர் அலி இஞ்சினீயர் அவர்களுடன் நெருங்கி பழகிய ஜ்யோதி புன்வானி கூறுவது:
‘அஸ்கர் அலி இஞ்சினீயர் தாராளமனப்பன்மையுடன் இயங்கிய இஸ்லாமிய வல்லுனர். புரட்சியாளர், மார்க்கபந்து, சடங்குகளை புறக்கணித்த ஆத்திகர், மதபேதத்தை ஒழிக்க பாடுபட்டவர், பெண்ணுரிமைக்கு கொடி பிடித்தவர் என்கிறார். ஓரிடத்தில் இந்திரா காந்தியும், வாஜ்பாய் அவர்களும், இவரை தாக்கிய மதவெறிக்குத் துணை போனார்கள் என்கிறார். அயலார் வாக்கு சேகரிக்க, சொந்த வாக்கை தவறவிடுவார்கள் போல!
அஸ்கர் அலி இஞ்சினீயர், மார்க்சிஸம், இஸ்லாமிய பண்பாடு, மனித நேயம், பெண்ணியம், வாய்மை ஆகியவற்றின் ரசவாதம்.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் தாமதம் கூடாது என்று, இந்த இழை.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
14 05 2013
Image Credit:http://dawoodi-bohras.com/images/engineer.jpg

பி.கு. அஸ்கர் அலி இஞ்சினீயர் அவர்களுக்கு உடனுக்குடனே அஞ்சலி செலுத்திய விக்கிப்பீடியாவை பாராட்டத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment