Monday, May 13, 2013

பாமர கீர்த்தி 4 மனித நேயம்


பாமர கீர்த்தி 4 
மனித நேயம்


இந்த இழையில் கனிவுடன் கலந்து கொண்டோர்களுக்கு நன்றி. பாமர கீர்த்தி என் பல நாள் கனவு. இந்த இழையே 18 04 2011 அன்றே தொடங்கி, ஐந்து மாதங்கள் ஓடி விட்டன. ஷைலஜாவின்/மற்றவர்களின் அனுபவங்களும் நல்வரவே. பேராசிரியரின் ஆய்வு சிந்தனையை தூண்டுகிறது. இத்தருணம், "அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24" இழையில் ஈற்றடியில் யான் பதிவு செய்ததை இங்கு மீள்பதிவு செய்கிறேன்:

"...இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.  
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' 
என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!..." 

அவ்வாறு யான் உரைத்ததின் பின்னணியே, 'யாதும் ஊரே...'.  
ஷைலஜா சொல்படி, ஒரு பாமர கீர்த்தி, ஏற்கனவே சொல்லியிருந்தாலும்: 

1947: டோனாவூர் ஒரு கிருத்துவ ஆஸ்பத்திரியும், அதை சார்ந்த கிராமமும். அங்கு என் தங்கை கமலாவுக்கு தீவிர வைத்தியம். சனிக்கிழமை தோறும் கணக்குத் தீர்க்கவேண்டும். விதி விலக்கு கிடையாது. தொகை மறந்து விட்டது. சூத்திரம் தான் என்றும் மறக்க முடியாதது. பில் ரூ. 209/- எனலாம், இப்போதைக்கு.  முழித்தேன். இனி உரையாடல்:

அத்தை: ராஜூ! ஏன் முகவாட்டம்? சொல்லு விஷயத்தை.
நான்: ரூ.209/- எல்லாம்! [இழுக்கிறேன்]
அத்தை: பில்லை செட்டில் பண்ணிடணும், ராஜூ. அதைக்கொடு.
[ரூ.209/- அடிக்கப்பட்டு, ரூ.9/- ஆக, என்னை பார்த்து புன்னகிக்கிறது.]
எனக்கோ ரோஷமதிகம். கண்கள் குளமாயின. 
நான்: அத்தை! இதை ஆயுசு பர்யந்தம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். இதோ! உங்களிடம் சொல்கிறேன். ஸுபாஷிணி புதுசா ரொம்ப பேர் வந்திருக்கிறதாக சொல்லியிருக்கிறார். அதான், மறுபடியும்.
விளக்கம்: அத்தை பெயர் நூரானி. அத்தை என்று கூப்பிடுவது டோனாவூர் மரபு. அத்தை நூரானி ஜெர்மானியர். ஹிட்லரின் காலகட்டத்து பெண்மணி.
அவருடைய கீர்த்தி பாடுவதுடன் நிற்காமல், அவருடைய ஈகையை பரப்புவதும் என் கடனே. இழை தொடரட்டும்: தொகுப்போம்.

நன்றி, வணக்கம். அந்த ஆஸ்பத்திரி நகரை நிறுவியவர் அமி கார்மைக்கேல். அவருக்கு வந்தனம்.
சித்திரத்துக்கு நன்றி: http://images.betterworldbooks.com/161/Amy-Carmichael-Wellman-Sam-9781616269081.jpg

No comments:

Post a Comment