03 05 2010
"அரெஸ்ட் வாரண்ட்!" : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -4
உங்களுக்கு ஜே.பி.மாணிக்கம் அவர்களை தெரியுமோ? நம்ம காஃபி கிளப் நண்பர். அந்தக்காலத்து போலீஸா, கம்பீரமா முறுக்குமீசை, அதிலே கொஞ்சம் லேசா நரை. குங்குமப்பொட்டு. நல்ல களை. சிவாஜி கணேசன் மாதிரின்னு வச்சுக்கங்களேன். அவர் தான் உளவு துறை தலைவர். ஒரு நாள் வந்தார். அதற்கு முன் செக்ரடரி பி.வி.ஆர். ராவ் தொலை பேசியில் ரஃப்பா பேசினார, 'Manikkam is coming to you. Render all cooperation.' டொக்! பாத்தா கண்ணின் மணி. அதன் முன்னே மாணிக்கனார்! வந்த ஜோர்லே, நம்ம டெலிஃபோனை கட் பண்ணிட்டு, இந்தக்காலத்து சாமியார்கள் மாதிரி,
'நீ தப்பு பண்ணவில்லையென்றால், கவலைப்படாதே; தப்பு செய்திருந்தால் காராகிருஹம் நியாயம் தானே'
என்று ஆசுவாசப்படுத்தி விட்டு, ஒரு நாளிதழை பிரித்து, 'இது உன் கையெழுத்தா?' என்றாரே பார்க்கலாம்! அது பாகிஸ்தானின் 'டாவ்ன்' நாளிதழ். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினேனா, 'டபக்'னு போலீஸ் உத்தியை கையாண்டார், மற்றொரு நாளிதழை விரித்து. அது ஈஜிப்ட்டின் 'அல் அஹ்ராம்'. இரண்டிலும் தலையங்கம் சுரீர். ' Nehru proposes; Soundararajan disposes!' என்ற வகையில். இன்றும் முழு விவரம் சொல்ல இயலாது. அரைகுறையா சொன்னால், அடியேன் கையொப்பமிட்ட அரசாணை ஒன்று [நகல் இணைக்கபட்டிருந்தது. என்னுடைய நீளமான கையொப்பம். சும்மா சொல்லாக்கூடாது; நன்னாத்தான் 'பளிச்' னு இருந்தது, ப்ரிண்டில்!]
பகர்ந்த 'திடுக்' செய்தி, நம் அரசு பிரகடனம் செய்த கொள்கைகளுக்கு முரணாக இருந்தது. போர்காலங்களில் அவ்வாறு நிகழலாம். போரில்லாக்காலங்களிலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன! [பிரதமரின் ஒப்புதல் இருந்ததது; ஆனால். எல்லாம் பரம ரகஸ்யம்.] பாகிஸ்தானுக்கு கொண்டாட்டம். எனக்கு திண்டாட்டம். இதன் பின்னணியைக்கேட்டால், கீதா, திருவேங்கிட மணி, தேனியார், மறைமுகம் திவாஜி (டைம் இல்லையாம்!) ஜ்யோதிஷர், ஒளிந்தும் ஒளியாத சுரேஷ் , மத்தவா எல்லாம் (எழுதாதவ எல்லாம் படிக்காதவாளா?) மனம் இரங்கி என் மேல் இரக்கமழை பொழிவார்கள்,
"துப்பார்க்குத் துப்பாய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை"
போல.
ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை, என்றும் இல்லாத திருநாளாக, வஸந்தாவும் நானும் சினிமாவுக்கு கிளம்பினோம். வழியில் சவுத் ப்ளாக்கில் (ஆஃபீஸ்). செளந்தரராஜன் 1ன் கார் தென்பட்டது. ஒரு நிமிஷம். எட்டிப்பார்த்துவிட்டு வருகிறேன் என்று போனேனா. அவர் 'வா,வா, இந்த ஆணை (தேவ்ஜீ சொல்றமாதிரி: இப்பெல்லாம், 'ஜீ' விளி போட்றமாதிரி தானே தூள் கிளப்பறார்!) 'தத்க்ஷணமே' கிளம்பவேண்டும்.' என்றார். வஸந்தாவை மிலிட்டரி வண்டியில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வேலையில் ஆழ்ந்தோம். கை மேல் வெண்ணைய், ஒரு வாரத்திற்குள்!! 'இன்று, எவ்வளவு நேரமானாலும், என்னிடமிருந்து விடுதலை கிடைக்காமல், வீட்டுக்குப் போகாதே' என்று, நேற்று நம்முடன், இன்முகத்துடன் காஃபி அருந்திய மாணிக்கனார் மிரட்டறார்னா, கல்மனமும் கரையுமே. மின் தமிழர் வெல்லம் மாதிரி உருகும் மனத்தினர் அல்லவோ, அப்பப்போ உருட்டி மிரட்டினாலும்!
போறாக்குறைக்கு,சினிமா துறந்த அன்றிலிருந்து ஊடல். ஹி.ஹி. 'காரை பாத்தாலே, இப்டி ஓட்றவா, ஆளை பாத்தா எப்டியோ! என்று தனிமொழி. அங்கும், இங்குமா, எங்கும். உபத்ரவம்னு சொல்ல முடியாது. இல்லைன்னும் சொல்லிக்கமுடியாது. அது தான் இல்லறம் என்று
"…நெருநல் ஆடினை புனலே, இன்று வந்து
ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன் தாய்என
மாயப் பொய்மொழி…"
பரணரே சொல்லிவிட்டாரே.
எல்லாவற்றிலும் நல்லதே காண்க என்று சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? யார் என்று கேட்கக்கூடாது. தெரிந்தா சொல்லமாட்டேனா? அதை விடுங்கோ. மாணிக்கனார் தற்காலிக சிறையில் வைத்த துன்பத்தை வீட்லே சொன்னேனா, சற்றே மிகைப்படுத்தி. ஊடல் ஓடியே போய்விட்டது. அடடா! மாணிக்கத்திடம் இந்தக்கணக்காயன் சொன்ன கணக்கை எழுத மறந்துட்டேனே. மிதுன ராசிலே மிருகசீர்ஷம் காண்றவா, சுக்ர தெசைலே ஒன்பதாவது மடத்திலெ குரு என்று சொல்றா. அதான் மறந்துடுத்து. டூ லேட்! அப்றம் அரெஸ்ட் வாரண்டின் கரெண்ட் பிடுங்கிய வரலாறு
தொடற (லாமா)?
இன்னம்பூரான்
2 ஏப்ரல், 2010 1:26 pm அன்று, Thiruvengada Mani T.K <tktmani@gmail.com> எழுதியது:
விறுவிறுப்பாக இருக்கிறது! அரெஸட் வாரண்ட் வந்ததா? தப்பித்தீர்களா?
மணி
|
No comments:
Post a Comment