Wednesday, April 10, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: 5


இதுவும் ஒரு பிருகிருதி: 5


     நிலம், நீச்சு, நாட்டாமை, கோயில் தர்மகர்த்தா எல்லாம் இருக்கறதாலே, ‘நித்திய பிரமஹத்தி’ கு.ரங்காச்சாரியார் (சில பேர் குரங்காச்சாரின்னு சேத்து படிச்சா, அதுக்கு நானா பிணை!) சட்டை போடாமலே காலரை தூக்கும் ரகம். எப்போ பாத்தாலும் ஒரு வீராப்பு. எல்லாரையும் வம்புக்கிழுக்கிறது. வாராத சண்டையெல்லாம், சல்லடை போட்டு தேடுவது முதல், ஆம்படையாளுக்கு கொஞ்ச நேரம் கண்ணை சுழட்டி வந்தாக்கூடா, அந்த வேலைக்காரப்பெண் வள்ளிக்குட்டிக்கிட்ட போய் .‘ஹிஹி’ந்னு இளிக்கிறது( இப்போ அதை ‘ஜொள்ளூ என்கிறார்கள். ), கீரைக்காரி சுப்பாம்மா கிட்ட ‘ஜோக்’ அடிக்கிறது. ( அவ ஒத்தி தான், ‘ஐயரே, விலகு’ என்று அதட்டுவாள்.) இந்த சாகஸக்காரருக்கு உள்ளூர, ரத்னசாமி என்ற தலையாரியிடம் கொஞ்சம் பயம். 

     கு.ரங்காச்சாரியாருக்கு நிலபுலன்கள் ஜாஸ்தி தான். எள்ளுத்தாத்தா காலத்தில் இருந்த ஏழு கிராமங்களில், ஆறு கிராமங்கள், சூது, வாது, டம்பம், தாசி என்ற வகைகளில் க்ரயம் ஆகி யிருந்தாலும், உள்ளதை காப்பாற்றினால். ஏழு ஜென்மம் தாங்குமே என்று வைத்தி சொல்லிட்டானாம். கு.ர.வுக்கு ஏகப்பட்ட குஷி. இத்தனைக்கும், போன வருஷம் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ண, லேண்ட் மார்ட்கேஜ் வங்கியில், கற்பனையாக ஒரு காரணம் சொல்லி, கெஞ்சி, கூத்தாடி, லோன் எடுத்தாச்சு. இவர் நாட்டாமை கட்டப்பஞ்சாயத்துமில்லை; அரசு நிர்வாக முறையும் அல்ல. எல்லாம் ரண்டும்கெட்டான் தீர்ப்புகள். அதனால், அவனவன், அவனவன் இஷ்டப்படி செய்வான். கேட்பாரில்லை. Back to Square one. 

     கோயில்னு வந்துட்டா, தர்மகர்த்தா ஐயா உஷார். உஷத்காலத்திலே என்ன பிரசாதம் என்பதிலிருந்து பிரம்மோத்ஸவ மரியாதைகள் வரை எல்லாவற்றிலும் தலையிடுவார். இல்லாத பிரச்னைகளை எழுப்புவார். அசடு மாதிரி, நாதஸ்வரக்காரனோடு, சண்டை போடுவார். அப்றம், கோஷ்டிலே வரவாளுக்கு தக்ஷிணையை குறைப்பதில் மாமாவுக்கு அல்பசந்தோஷம். அடுத்தப்படியா, அன்றைய உபயதாரரிடம் போய் ஏதாவது வத்தி வைப்பார். ‘இன்னைக்கி ஏன் பெருமாளுக்கு அட்டிகை சாத்தலே’ என்று கேளுங்கோ என்கிற மாதிரி. ஆனா, எல்லாருக்கும் இது புஸ்வாணம்னு தெரியும். உபயதாரர், அழைச்சிண்டு போய், இவருக்கு மாலை மரியாதை, முதல் தாம்பூலம் செஞ்சுட்டா போறும். உச்சி குளிர்ந்துவிடும். வைகுண்டம் போன மாதிரி ஃபீலிங்க். எல்லாவற்றையும் விட்டு விடுவார். 

     இரண்டு சமாச்சாரம்: ரத்னசாமி எங்கேயோ ஏடாகூடமாக, இவரை பார்த்திருக்கிறான். அவனுக்கு முன் நம்ம ‘நித்திய பிரமஹத்தி’ பொட்டிப்பாம்பு. நல்ல ஊமைக்காயம். மாமி வேறெ ரண்டு நாள் சோறு போடல்லைன்னு வதந்தி.

     இவருக்கு இந்த ‘நித்திய பிரமஹத்தி’ விருது வந்த விதம் என்ன? சுற்றுவட்டாரத்தில், ஏதாவது ‘இழவு’ விழுந்துவிட்டால் ( யாரவது இறந்து விட்டால்) ஐயா ஆஜராகிவிடுவார். அங்கே, தகனம், கல்லு எங்கே ஊன்றது, பிண்டப் பிரதானம், மாசியம், சோதகும்பம், தர்ப்பணம், வருஷாப்திகம், ஹிரண்ய திவசம், அது, இது என்று ஒரு பட்டிமன்றம் நடத்திவிடுவார், எல்லாரும் முகம் சுளிக்க. 

     அவரோட ஆம்படையா கோமளா மாமி கூட, ‘ஏன் இந்த பாவிப்பிராமணன் ‘சவுண்டிக்கொத்தன்’ மாதிரி அங்கே போய் தொத்திக்கிறது என்பாள். ஆனால், இந்த நித்திய பிரமஹத்தி சபிண்டீக்கரணம் அன்று ஒருஸ்தானத்தில் அமர்ந்து, வயிராற உண்டு, கொண்டு வரும் ஒல்லிப்பிச்சான் வெள்ளி டம்ளரையும், நூல் போன்ற தங்க மோதிரத்தையும் பத்திரப்படுத்துவாள். அவ தான் இவருக்கு ‘நித்திய பிரமஹத்தி’ விருது அளித்தவள்.

முதல்ல இதை சொல்லியிருக்கணும். இரண்டு பேரும் ஸென்ஸெஸ் பட்டியலில் ‘சுகஜீவி’ என்று பதிவு செய்து கொண்டனர்.
இன்னம்பூரான்
12 03 2011

2011/1/4 coral shree <coraled@gmail.com>:

> நல்ல காமெடியான காரக்டர்தான்...........நன்றாயிருக்கிறது ஐயா.

சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmE6HKTVmAKP5hcY3586futOxxiJ7VtnSslBjNhB85BOUF0rBgmjYAD4EySojOetMjSkA85ZG99OCqSWwn_0UBZHhZRlE0MtiXx7KMYPp5nNN0VyHyS10nbM3_GC_3A_LSY1x4awIKa-E/s1600/monkey+shadow+shocking.jpg
இன்னம்பூரான்
10 04 2013

No comments:

Post a Comment