Thursday, August 6, 2015

நண்பர்களே,

யான் தேசாந்திரியாக அலைகிறேன். எழுதுவதில் தாமதம். மன்னிப்பீர்களாக.
இன்னம்பூரான்

Saturday, August 1, 2015

நாளொரு பக்கம் 98

நாளொரு பக்கம் 98
Thursdayday, the 3rd July, 2015

‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’
-வள்ளலார்

மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக இராமலிங்க அடிகளார், அருளினாரோ மேலே!

‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது. உன்மத்தம் தலைக்கேற, ஏறவே, அதன் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை:

ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 
-(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)
-#-

Wednesday, July 29, 2015

Puducherry Flash.

Puducherry Flash.

I hope to visit this site in the fast track.

PUDUCHERRY: An underground chamber close to a twelfth-century Siva temple at nearby Villianoor was on Wednesday found by workers engaged in renovation work. 

The workers came across a granite slab close to the Lord Somaskandar shrine and when they removed it, they found a 15 foot deep chamber with some stepping stones leading to it, officials said. 

The contractor engaged in renovation work said he got into the chamber and went ahead for a few feet and found it to be a strong structure. He could not proceed further because of the airtight nature of the basement, he said. 

Officials of the Revenue, Hindu Religious Institutions and Police departments who rushed to the spot opined that the chamber could have been used as a safety vault to store valuable icons and other valuables. 

The temple was constructed during the Chola period and it was estimated that it was constructed in 12th century. 

As soon as news spread of the chamber being found, a large number of people made a beeline to see it. 

Police were deployed to prevent people from getting close to the site as it has a narrow entrance.

With No Comments.


Puttaparthi Confidential

With No Comments.
*
The mystery over the treasure trove inside the late Sathya Sai Baba’s personal chamber ‘Yajur Mandir’ was on Friday unravelled with the disclosure that it contained 98 kg of gold, 307 kg of silver apart from Rs 11.56 crore in cash.
The Central Sathya Sai Trust, which conducted an inventory of the things stored inside the Yajur Mandir since it was broken open yesterday, came out with the announcement this evening listing details of the treasure trove.
The assessment was done in the presence of retired judge of Supreme Court A P Mishra and retired judge of Karnataka High Court Vaidyanatha.
An assessor approved by the Income Tax Department was also present to assist in evaluating the gold, jewellery and silver, Trust member and Sai Baba’s nephew R J Ratnakar told the media. Apart from five trustees, two members of the Council of Management including former Chief Justice of India PN Bhagavati, were also present as independent witnesses, he said.
Source: Business Standard today

Tuesday, July 28, 2015

எந்தரோ மஹானுபாவலு! [1]

எந்தரோ மஹானுபாவலு! [1]


சித்திரமெதுக்கடி, குதும்பாய்!
சாத்திரம் படைப்பதற்கு? நீயும்
பத்திரமாகவே இருக்க வேணும்,அவனும்
காத்திரமாகவும் இருக்க வேண்டுமடி, குதும்பாய்!

இன்னம்பூரான்
செவ்வாய்கிழமை, ஜூலை 28, 2015

நான் சொல்றதை தப்பா நினைக்காதீர்கள். மாணவ பந்துவாகிய ‘ஜன அதிபதி’ ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் கொடுத்து வைத்தவர். இன்றைய நாளிதழ்களை அலங்கரிக்கும் தமிழ்நாட்டு ‘மாணவ செல்வங்களை’ பற்றி படிக்காமல், அநாயசமாக மகராசன் போய் சேர்ந்தார்.

நடந்தது என்ன,ஓய்?!:

திருச்சி திமிலோகப்பட்டது. நேற்று சட்டக்கல்லூரி மாணவர்களின் கும்பல் ஒன்று ‘விடியலை’ நோக்கி குடியலுலகம் ஆகிய டாஸ்மேக் மீது படையெடுத்தார்கள், மது விலக்குப் பிரச்ச்சாற்றம் செய்ய. குடி குடியை கெடுக்கும் (எந்தக்குடி எந்தக்குடியை கெடுக்கும் என்று என்னை கேட்காதீர்கள். லவ்பெல் அவர்களை கேளுங்கள்.) ‘களவும் கற்று மற’ என்ற தமிழ்பண்பை மீறலாகாது என்ற தலைவிதிக்கிணங்க, ஆளாளுக்கு மிடாக்குடியனாக மாறி தடுமாறவே, போலீஸுடன் லொள்ளு. சட்டம் படிக்கிறதாக சொல்லிக்கொள்ளும் அந்த ‘வித்யாதரர்கள்’ உடனுக்குடன் உரிமை போராட்டம் நடத்தவே, திருச்சியே சூடு பிடித்து அனல் பறந்ததாம். சட்டாம்பிள்ளை பசங்களல்லவா! மதியிழந்தாலும் சதி செய்யவேண்டாம் என்ற பகுத்தறிவு தலை தூக்க, ப்ளேட்டை மாத்திப்போட்டு, ‘நாங்கள் விழா எடுக்கப்போகிறோம். அதற்கு முன்னுரையாக, ஆளுக்கு ஒரு போத்தலில் குடியிருந்து விட்டுப் போய்விடுவோம்’ என்று சத்திய பிரமாணம் செய்தார்கள். ஆனால், இந்த போலீஸ் ‘அதெல்லாம் முடியாது. நோ அட்மிஷன் வித்தவுட் பெர்மிஷன்.’ என்று சவால் விட்டவுடன், சட்டம் பேசும் மட்டம் கேட்டதாம்,’ நாங்களும் இன்னாட்டு பிரஜைகள் அல்லவா? மற்றவர்களுக்கு உள்ள டாஸ்மெக்குடியுரிமை எங்களுக்கும் உண்டு’ என்றவுடன், போலீஸ் டைலமாவில்.! 

 தெரியாமத்தான் கேட்கிறேன்.கேள்விக்கு என்ன பதில், இந்நாட்டு மன்னர்களே?
-#-





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, July 27, 2015

டாக்டர் அப்துல் கலாம்

சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”


இணையத்தில் கிடைத்த மேற்கோள்.  சற்று நேரம் முன்பு அமரராகி விட்ட ஜனாப் டாக்டர் அப்துல் கலாம் இவ்வாறு தான் இயங்கினார்.

இன்னம்பூரான்http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


Update:
சுவாமி சிவானந்தா அவருக்கு அளித்த அறிவுரையை நான் நகலெடுத்துக்கொடுத்தது, ஒரு காரணத்தால். சுவாமிஜி தான் ஜனாப் அவர்களுக்கு ஆசானாக அமைந்திருந்தார்.


இன்னம்பூரான்

Sunday, July 26, 2015

கஜானா காலி [3] -ஏமாந்த சோணகிரி!


கஜானா காலி [3] -ஏமாந்த சோணகிரி!

இன்னம்பூரான்
ஜூலை 26, 2015

சாணக்கியர் தன்னுடைய ராஜதந்திரங்களை அடுக்கி அளிக்கும்போது கட்டுப்பாடு, கட்டமைப்பு பற்றி கூறும்போது கட்டு அவிழ்வதின் மர்மங்களையும் எடுத்து உரைத்திருக்கிறார். தானாகவே கட்டு அவிழ்வது சொற்பம். கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டால், வேண்டியபோது கட்டு அவிழ்ந்து, துட்டு விழும். அதை லூப்ஹோல் என்கிறது ஆங்கிலம். சட்டம் பாயின் அடியில் நுழைந்து துழாவினால், சட்டத்தை மீறுபவர்கள் கோலத்தில் அடியில் அமர்ந்து கோலோச்சுவர்களாம்! வரியை கட்டாமல் ஏமாற்றுபவர்களுக்கு கோலம் தான் காவல் தெய்வம்! எல்லாமே மர்மம். அவர்களுக்கு சட்டம் அத்துபடி. தானம் கொடுத்தால் வரி சலுகையா? கொடை என்ற கறுப்புக்குடைக்கடியில் பேத்துமாத்து நடக்கும். 

அரசு பல காவலர்களை நிற்க வைத்தால் நட்டம் அவர்களுக்குத் தான். ஒரு காவலர் விலைக்குப் போய்விட்டாலும், டண்டணக்கா! அதற்கு, அவர்களுக்கும் சம்பளம், பஞ்சப்படி வகையறா! 

பங்குச்சந்தை என்ற கோலத்துக்குள் புகுந்து, அடாவடியாக கறுப்புப்பணத்தின் சாயத்தை வெளுத்து, சத்தியசந்தர்களாக வளைய வரும் 900 கடைகளை இப்போது தான் பங்குச்சந்தை காவலாளர் (ஸெபி) மூடச்சொல்கிறார்களாம். வருமானவரி இலாக்காவுக்கும், இவர்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்களாம். பங்குச்சந்தை காவலாளர் மையத்தின் தலைவர் யூ.கே. சின்ஹா வருமானவரி ஏமாற்றப்பட்டது 5000 -6000 கோடி என்று யூகிக்கிறாராம். இப்பேற்ப்பட்ட ‘சத்தியசந்தர்களை’ சின்னபசங்க ஒவ்வொன்றாக ஈசலை பிடித்து கபளீகரம் செய்வது போல், லபக் லபக் என்று பிடித்து வருகிறார்களாம்! ஆனாலும்  திரு சின்ஹா அவர்கள் இது பாய்க்கும் கோலத்துக்கும் நடக்கும் இடை விடாத, முடிவுகாணாத போர் என்று ஒத்துக்கொள்ளும்போது, கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டதால் தான் இந்த அலங்கோலம் என்றும் ஒத்துக்கொள்கிறார். குற்றம் செய்பவர்களுக்கு குற்றேவல் செய்யவே சில பிறவிகள் உளர் என்ற உண்மையை அவர் உரைத்த போதிலும், அந்த அதிசயபிறவிகள் பங்குச்சந்தையின் அன்றாட வரத்துப்போக்கில், மக்களையும் ஏமாற்றி இந்த குற்றேவலர்கள் இயக்கும் மாயா மச்சீந்திரா மர்மங்களை இனி தான் அவிழ்க்க முயலப்போகிறார்களாம்! 
பார்க்கலாம். அதுவரை நாம் யாவரும் ஒரு இனம்: ஏமாந்த சோணகிரிகள்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.taxguru.net/comix/LoopholeNoose113006.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, July 25, 2015

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னம்பூரான்
25 07 2015

மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் கற்பனையும், பரவசமும், இலக்கியசுவையும், நாட்டுப்பற்றும், மனிதாபிமானமும், என்னை அவரது சொல்வளத்தின் நன்முத்து ஒன்றை தலைப்பாக வைக்கத்தூண்டியது. என்ன தான் குறை கண்டாலும், நமது பராம்பரியமும், பண்பும், அளவு கடந்த பரிவும், நேசமும் போற்றத்தக்கன. போற்றுவுமாக.

சில சமயங்களில் தெய்வசன்னிதானம் கட்டாந்தரையில் வைபோகமாக அற்புத நடனம் ஆடுகிறது. கண்டு களிப்பீர்களாக. திருவனந்தபுரத்தில் ஶ்ரீ சித்திரை திருநாள் ஆஸ்பத்திரி புகழ் வாய்ந்தது. அங்கு திரு.நீலகண்ட சர்மா ஆவி துறக்காமல், இறந்து விட்டார். இங்கு முரண் யாதுமில்லை. அவரது மூளை முற்றும் செயலற்றுப்போகவே, இனி அவர் உயிர் தரித்திருந்தாலும், அவருக்கு வாழ்க்கைக்குத் திரை போடப்பட்டுவிட்டது. தற்காலம் உறுப்பு தானம் யாவரும் அறிந்ததே. மரணத்தை வென்றுவிட்டோம். யாவரும் சிரஞ்சீவியே. சடலாமாயினும் கண் தானம் செய்யலாம்; சிறுநீரகம் தானம் செய்யலாம். அவை, மருத்துவ உதவியுடன்,கூடு விட்டு கூடு பாய்ந்து மற்றும் பலராக மலர்ந்து புது வாழ்க்கையை தடங்கலின்றி தொடங்கலாம். சர்மாவின் குடும்பம் உடனுக்குடன் உறுப்பு தானத்துக்கு சம்மதிக்கவே, அவருடைய இதயம் இந்திய கடற்படையின் விமானத்தில் கொச்சிக்கு பறந்து போய், அங்குள்ள லிஸ்ஸி ஆஸ்பத்திரியில், இதய நோயினால் அவஸ்தைப்பட்ட மாத்யூ அச்சதன் என்ற ஆட்டோ ஓட்டுனர் நெஞ்சகத்தில் குடி புகுந்தது. ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்ட இதய இரவல் அறுவை சிகிச்சை முடிந்தவுடனே நான்கு மணி நேர கெடுவுக்குள் கொச்சிக்குக்கொணரப்பட்டு, மாத்யூவின் உடலில் சர்மாவின் இதயம் துடிக்கிறது. இந்த ஆத்மதரிசனத்துக்கு, ஆஸ்பத்திரிகள், வாகனம், அரசு விமானம், கேரள முதல்வர் எல்லாரும் எடுத்துக்கொண்ட பணிகள் போற்றப்படவேண்டும். இதே மாதிரி சென்னையில் நடந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. டில்லி அருகே உள்ள குட்காவ்ன் என்ற இடத்திலிருந்து, கசகச போக்குவரத்து சாலைகளில், ஊரையை கட்டிப்போட்டுவிட்டு, ஒரு இதயம் 29 நிமிடங்களில் நூறு மைல் வேகத்தில் பயணித்து, ஓக்லாவில் உள்ள ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரியில் ஒரு 16 வயது இளைஞனின் நெஞ்சக்த்தில் புகுந்தது.

ஏன்? இந்த திங்கட்கிழமை அன்று சென்னை பொதுஜன ஆஸ்பத்திரியிலிருந்து, எக்கச்சக்க போக்குவரத்தை கச்சிதமாக ஒதுக்கி 14 நிமிடங்களில் அடையாரு ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லவே, புதிய உடலில், பழைய இதயம் இன்பத்துளிராகத் துடித்து, ‘தெய்வம் மனுஷ ரூபேண’ (மனிதனாக தெய்வம்) என்று புதிய வாழ்க்கையை தொடங்கியது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. [குறள் 327]

விளக்கம்:
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

இடம், பொருள், ஏவல் கருதி, சற்றே மாற்றி:

தன் உயிரை இழக்க நேரிட்டால், அஞ்சேல்.  அது வேறு உடம்பில் குடி போகட்டும். அப்போது, அது இழப்பு அல்ல. வாழ்வு நிரந்தரம்.

-#-

இன்னம்பூரான்

Friday, July 24, 2015

“பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!


“பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!

– இன்னம்பூரான்.
பிரசுரம்: வல்லமை: ஜூலை 24, 2015
http://www.vallamai.com/?p=59957

காமராசர் பாமரனின் பிம்பம். பிரதிபிம்பம் அன்று. மக்கள் என்ற கடலோடு கலந்து உறவாடிய தலைமாந்தன். மண் வாசனை பூமியில் ஊன்றிய கால்களை அவர் அகற்றியதும் இல்லை; ஆகாயகோட்டை கட்டியதும் இல்லை. அதனால், பாமரமக்களின் வாழ்வாதாரம் அவரது இதயகமலத்தில். அவர் முதல்வராக இருந்த போது, கலோனிய அரசின் இரும்புக்கோட்டை எனப்படும் ஐ.சி.எஸ் அதிகாரிகள் உயர்பதவிகளில் இருந்தார்கள். படிக்காத மேதை என்று தவறாக சுட்டிக்காட்டப்பட்ட முதல்வரிடம் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் பழகினார்கள். அதன் பின்னணியை ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி கூறியதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கிராமங்களுக்கு மின் வசதி கொடுக்கும் திட்டத்தின் படி அந்தந்த ஜில்லா (மாவட்டம்) கலைக்டர்களிடமிருந்து நான்கு கிராமங்களை பற்றி பரிந்துரை வரவேண்டும். இது சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை கூடியபோது ஒரே ஒரு கலைக்டரிடமிருந்து பரிந்துரை வரவில்லை. முதல்வருக்கு திடீரென்று அசாத்தியமான சினம் வருவது உண்டு, நற்காரியங்களுக்கு யாராவது முட்டுக்கட்டை போட்டால். அதனால் அமைச்சரவையில் ஒரு பதட்டம். நிதானமாக ‘அய்யா’ அவர்கள் (அவரது இந்த அடையாளம் தான் புழக்கத்தில் இருந்தது) அந்த ஜில்லாவின் நான்கு கிராமங்களின் பெயரை பட்டியலில் சேர்க்க சொல்லிவிட்டு, அடுத்த திட்டத்துக்கு போய்விட்டார். நிர்வாகப்புலி என்ற புகழ் வாய்ந்த அந்த அதிகாரி, “மக்கள் தொகை/வறுமை/வேளாண்மை தேவை/கல்வி/மின் இணைப்பு சாத்தியம்/ காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று எப்படி பார்த்தாலும் இத்தகைய தேர்வை எந்த கலைக்டரும் செய்திருக்கமுடியாது” என்றபோது, குழுமியிருந்த அதிகாரவர்க்கம் மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்ந்தது. அய்யா அவர்களின் காலடி படாத கிராமமே கிடையாது எனலாம். தமிழ் நாட்டின் புவியியல் பாடம் எடுக்க அவருக்கு இணை யாரும் இல்லை; இது அய்யாவே சொன்னது. பாரத மிகுமின் நிறுவனத்துக்குத் திருவெறும்பூரை பரிந்துரைத்தவர், அய்யாவே. மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்த்து கற்றாரை காமுற்றவர் அல்லவா! ஒளவை பாட்டி அகமகிழ்வாள்.
அதே நிர்வாகத்திறனின் மறுபக்கம்: 1954ல் முதல்வரான அய்யா அப்போது சட்டமன்றத்தில் அங்கத்தினர் அல்ல. பிற்காலத்து மாஜி பிரதமரை போல, மேல் மன்றத்தில் இடம் பெற்று இயங்க மறுத்ததே, மக்களாட்சிக்கு அவர் கொடுத்த மரியாதை. குடியாத்தத்தில் இடை தேர்தல்; கம்யூனிஸ்ட் போட்டி. இருபக்கமும் தீவிர பிரச்சாரம். ஆனால், வாக்காளர் நியாயமாக கேட்ட மேம்பாலம் பற்றி வாக்குறுதி அளிக்க அய்யா மறுத்து விட்டார். அவருடைய விதுரநீதி: “நியாயமே ஆயினும், என் வாக்குறுதிக்கு இணையாக எதிர்கட்சி தோழர் கோதண்டம் வாக்குறுதி கொடுக்க முடியாது. நான் அந்த அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கில்லை.” எட்டே அமைச்சர்கள் இருந்த அவரது அமைச்சரவையில் நால்வர், இவருடைய அலைவரிசையில் இல்லை என்றாலும், தகுதிக்கு மதிப்பு கொடுத்தார். இதை எல்லாம் எந்த பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறார்கள்?
ராஜாஜிக்கும் காமராசருக்கும் கருத்து வேற்றுமை நிலவியது என்றாலும், நகராட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் கண்ணியம் தான் அடித்தளம். இருவரும் சிபாரிசு செய்யமாட்டார்கள். ஒரு நல்வழிப்பாதையிலிருந்து மற்றொரு நல்வழிப்பாதைக்கு குறுக்கு வழியில் செல்லமாட்டார்கள். இருவரும் சுற்றத்தை அண்ட விடமாட்டார்கள். சராசரி மனிதர்களோடு அவர்கள் இருவரும் பழகும் விதம் அலாதி. ராஜாஜி சென்னை வரும்போது, விமான நிலையத்தில் வரிசையாக பலர் நிற்பார்கள். ஒருவரிடன் மகளின் திருமணத்தை பற்றியும், மற்றொருவரிடம் மகனுக்குக் கிடைத்த வேலை பற்றியும், மற்றொருவரிடம் நாற்று நட்டச்சா என்றும் கேட்பார். எல்லாருக்கும் தன்னை பற்றி மட்டுமே மூதறிஞர் நினைக்கிறார் என்று தோன்றும். அதே மாதிரி பெருந்தலைவர் காமராசர் எல்லாரையும் நினைவில் வைத்துக்கொண்டு, அவரவருக்கு இதமாக பேசுவார். ஆயுள் முழுதும் முருக தனுஷ்கோடி போன்ற அன்யோன்ய நட்புகள் சில.
அவருடைய தமிழ், கறார் கலந்த கொஞ்சும் தமிழ்; ஒரு ‘ரசாயனக்கலவை’ எனலாம். அதனால், அதிகார மையங்களில், அய்யா சொல்வதை எல்லாரும் கவனமாகக் கேட்பார்கள். ‘பார்க்கலாம்’ என்ற சொல் காமராசருடன் ஐக்யமாகி விட்டது. அது அவருடைய நிதானத்தையும், சிந்தித்து செயல் படுவதை சுட்டுகிறதே தவிர, அங்கு எள்ளலுக்கு இடம் கிடையாது. அய்யா அவர்களின் மேலாண்மையையும், அரசியல் அணுகுமுறையையும், நிர்வாகத் திறனையும், நாட்டுப்பற்றையும், கொள்கை என்ற அசையா நிலையையும், மக்கள் தொண்டையும், தொலை நோக்கையும், விருதுப்பட்டியும் (பின்னர் தான் விருதுநகர் என்ற விலாசம்!) அறியும்; தமிழகமும் அறியும்; இந்தியா முழுதும் அறியும். ‘மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன்’ ஒரு ரசவாத வித்தகர் தான். கர்மவீரர் காமராசரை போல் ஒருவரை ’…நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா…’ என்று கவிஞர் வாலி விசனத்துடன் வினவிய போது, ‘இல்லை! இல்லை!’ என்று எட்டுத் திக்குக்களிலிருந்தும் எதிரொலி கேட்டதாம்!
அத்தகைய சான்றோனின் வரலாறு, வருங்கால சந்ததிக்கு வாழ்வியல் பாடமாக அமையும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. ‘காமாட்சி’ குலதெய்வம். அந்த பெயரை அவருக்கு சூட்டினார்கள். அன்னை சிவகாமிக்கு, அவர் ‘ராசா’. திரிபு: காமராசு. ஆறு வயதில் தந்தை மரணம்; பள்ளிப்படிப்புக்கு முழுக்கு. மாமனின் துணிக்கடையில் எடுபிடி வேலை. சிறுவயதிலேயே நாட்டுப்பற்று பற்றிக்கொண்டது. 16 வயதிலேயே அரசியல் பணி; ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்ரகம்; முதல் முறை கைது. நாடு விடுதலை பெறுவதை கண்டு களிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட தீரர் சத்தியமூர்த்தி தான் இவரது அரசியல் ஆசான். அவரது ஆசை நிறைவேறவில்லை எனினும், ஆகஸ்ட் 15, 1947 அன்று அவரது இல்லத்தில் அய்யா அவர்கள் தேசீயக்கொடியை ஏற்றியபோது, அவரது ஆத்மா பங்கேற்றுக்கொண்டிருக்கும்.
மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக பணி புரிந்த காமராசர், 1954ல் முதல் முறை பதவி ஏற்றுக்கொள்ளும் முன்னால், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து ஆசி பெற்ற பின் தான் அரசியல் பணியை துவக்கினார். அது அமோகமாக அமைந்தது என்பது குறிப்படத்தக்கது. மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராக மக்களால் அரியணையில் அமர்த்தப்பட்ட காமராசர், கட்சிப்பணியும், நாட்டுக்குத் தொண்டும் முக்கியம் என்று ஒரு நிலைப்பாடு எடுத்தது, பிரதமர் நேருவைத்தவிர மற்றவர்களுக்கு வியப்பு அளித்தது. முதல்வர் பதவியை உதறினார். அக்டோபர் 9, 1963 அன்று அகில இந்திய காங்கிரசின் தலைவர் ஆனார். அய்யா அவர்களின் தியாகமும், அரசியல் உத்தியும் பெரிதும் போற்றப்பட்டன.
நேரு மறைந்தவுடன், பிரச்னைகள் அணுகாத வகையில், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராவதற்கும், அவருடைய அகால மரணத்திற்கு பிறகு இந்திரா காந்தி பிரதமராவதற்கும் வழி வகுத்தது, காமராசர் தான். என்றும் தன் கடமையிலிருந்து வழுவாத காமராசரின் கரும வீரத்துக்கு, இந்திரா காந்தியின் தன்னிச்சைப்போக்கு ஒரு அறை கூவலாக எழுந்தது. கட்சி உடைந்தது. இந்திரா காந்தியின் “அவசர நிலை” என்ற மின்வேலி அவருக்கு தாங்கொண்ணா கவலை கொடுத்தது. தேசபக்தர்களான ஜெயப்பிரகாஷ் நாரயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தினர். காந்தியடிகள் பிறந்த நாளன்று (அக்டோபர் 2, 1975) அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி அவரை மிகவும் வாட்டியது. அன்றே உயிர் துறந்தார். அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
தியாகராய நகரின் திருமலைப்பிள்ளை வீதியில் அவர் வாடகைக்கு இருந்த தெருவிலே நானும் குடி இருந்ததால், அடிக்கடி காலையில் அவருடைய வீட்டை தாண்டித்தான் போகவேண்டும். மூன்று வயது சிறுவனான என் மகன், அவர் வீட்டு வாசலில் நின்று விடுவான்; வாசலில் நிற்கும் காவலரின் துப்பாக்கியை தொடவேண்டும்! அந்த நாளில் தடாலடி காவல் பட்டாளம் எல்லாம் கிடையாது. ஒருவர் மட்டும் தான். சில நாட்கள் அரிதாக, அய்யா அவர்கள் அந்தப்பக்கம் நின்று கொண்டிருப்பார். சிறுவனுடன் இரண்டு வார்த்தை பேசுவார். எனக்கு புளகாங்கிதம். பொது கட்டுரையில் சுய அனுபவங்களை மட்டுறுத்த நினைத்தேன். இல்லை. சொல்லத்தான் வேண்டும். அய்யா அவர்களை பற்றி எது சொல்ல நேரிட்டாலும், இன்றைய இளைய சமுதாயம் அவரது வாழ்க்கைக்குறிப்புகளின் ஒவ்வொரு வரியிலும் நல்வழி கற்கக்கூடும்.
சான்றாக, மேலும் இரு செய்திகளை கூறலாம். விருதுநகரில் வசித்த அன்னைக்கு மாதம்தோறும் பணம் அனுப்புவார். அன்னை சிக்கனமாக வாழ்ந்தால் தான், அது போதுமானது. காமராசருக்கு உள்ளூரில் பக்தி கலந்த மரியாதை இருந்தது. அக்காலம் வீடுகளுக்கு குழாய்நீர் கொடுப்பது சொற்பம். தெருக்குழாய் தான் நீருக்கு ஆதாரம்; அஞ்சல் அதிகாரி வீட்டு வாசலில் தபால் பெட்டி வைப்பது போல, தெருக்குழாயை காமராசர் அன்னைக்கு வசதியாக, அருகில் வைத்துக்கொள்ள அவருடைய சகோதரிக்கு ஆசை; அதை அய்யா நிராகரித்து விட்டார். அதை விட முக்கிய அறிவுரை, ஒரு நிகழ்வு ரத்து செய்ததில். அரசியல் வாதிகளின் திருவிளையாடல்களுக்கு எல்லை கிடையாது. யாரோ ஒருவரின் தூண்டுதலால், பிரதமர் நேரு தமிழகத்தில் பயணம் செய்த போது, விருதுநகரில் காமராசரின் அன்னை அவருக்கு விருந்தோம்ப ஏற்பாடு நடந்தது, அவருக்கு தெரியாமல். நேருவும் சம்மதித்து விட்டார். இந்த சேதி அய்யாவுக்கு தாமதமாகத்தான் கிட்டியது. அன்னையிடம் கோபித்துக்கொண்டார். நிகழ்வை ரத்து செய்து, நேருவிடம் தெரிவித்து விட்டார். அதனால் ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவர் பொருட்படுத்தவேயில்லை. நேர்மை நீர்த்து விடக்கூடாது என்பதில் அவர் வாழ்நாள் முழுதும் திண்ணமாகவே இருந்தார்.
பாருங்களேன். நான் அவரை கடைசியாக பார்த்தது, ராஜாஜியின் மரணத்தின் போது. ராஜாஜி ஹாலில் அவருடைய பூதவுடல் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டகூட்டத்தில் நடுவில் அய்யா அவர்கள் ‘தனிமையில்’ நின்று கொண்டிருந்தார். லேசான தூறல். அக்காலத்தில் காவல் துறையின் மாணிக்கமாக கருதப்பட்ட கமிஷனர், கே.ஆர்.ஷெனாய் (ஆம். அவரை கேலி செய்துதான் கண்ணதாசன் அய்யாவிடம் செமையாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.) அவரை அணுகி, ‘அய்யா களைத்து போய்விடுவீர்கள். ஒரு நாற்காலியும் குடையும் கொண்டு வருகிறேன்’ என்றார். ‘பெரியவரே போய்விட்டார்.’என்றவர், மவுனத்தில் ஆழ்ந்தார். வேறிடம் செல்லவேண்டிய அவசரம், கமிஷனருக்கு. ‘ அய்யா மனதளவில் வேறு எங்கோ இருக்கிறார். அவரை விட்டு நகராதே. நான் விரைவில் வருகிறேன்.’ என்று சற்றே பரிச்சியமாகியிருந்த என்னிடம் கட்டளையிட்டு விட்டு, விரைந்தார்.
நான் நகரவில்லையே -இன்றும் தான். வாழ்நாள் முழுதும் நகரமாட்டேன்.

சித்திரத்துக்கு நன்றி: http://static-numista.com/catalogue/photos/inde/g1117.jpg

தஞ்சை வெ.கோபாலன்:  24 July, 2015, 9:18 பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிப் படித்து அறிந்ததைக் காட்டிலும், அவரை நேரில் பார்த்து, அவர் செயல்பாடுகளைக் கண்டு அதிசயித்த மனிதர்கள் நிகழ்ச்சிகளைச் சொல்லும்போது புல்லரிப்புதான் ஏற்படுகிறது. இத்தனை பெரிய மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்தார்கள் எனும் எண்ணம் நம்மை புளகாங்கிதம் அடையச் செய்கிறது. இனி அப்படியொரு காலம் வராதா? அப்படியொரு தலைவர் நம்மிடையே தோன்ற மாட்டாரா? எனும் ஏக்கமும் ஏற்படுகிறது. மிக அருமையான அற்புதமான செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்; அதற்கான சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது; நீங்கள் பாக்கியம் செய்தவர்.

இன்னம்பூரான்:
24 July, 2015, 14:14 நன்றி, தஞ்சை வெ.கோபாலன். உங்கள் மதிப்புரை எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது. உங்களில் மகாகவி பற்றிய பணியை போற்றும் எனக்கு, உங்கள் கருத்து முத்து முத்தாக அமைந்துள்ளது.
-#-

Thursday, July 23, 2015

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

இன்னம்பூரான்
23 07 2015

தணிக்கைத்துறையில் நாங்கள் பார்க்காத வினோதங்கள் கிடையா. மிஷினில் புல் வளர்த்தார்கள்! உடையும் எஃகை வளைத்தார்கள்! அம்பாசிடர் காருக்கு டெண்டர் விட்டாங்க! விதி மீறாமல் காண்டிராக்ட்டை பினாமிக்கு கொடுத்துக்கொண்டார்கள்! வடுமாங்காயை தேங்காய் என்று விற்று துட்டு பார்த்தார்கள்! ஓடாத நதிக்கு பாலம் போட்டார்கள்! சற்றே மிகை.தங்கத்திலே தண்ணிக்குழாய் இழுத்தாங்க! ஆண்டவன் விதித்தக் கட்டளைப்படி, எனக்குக் காண கிடைத்தத் துட்டட்டூழியத்துக்கு மணி விழா எடுத்தாச்சு. அந்தோ பரிதாபம்!!!

லஞ்ச லாவண்ய லீலாவினோதங்கள் நடக்காத மாநிலமே இல்லை போலும். அந்த அனுமார் வால் பட்டியலில் சிக்கிமுக்கி முனகுவது மஹராஷ்ட்டிரா சிக்கி விவகாரம், ஆயிரத்தில் ஒன்று. சிக்கி என்றால் கடலை மிட்டாய். மும்பை-பூனே ரயில் பயணத்தில் லோனாவாலா என்ற இயற்கை அழகு சொட்டும் இடத்தில், வாங்கிப்போவது, ஒரு வழக்கம். அதை வாங்கினாங்க ஒரு அம்மா. அவங்க பெயர் பங்கஜ் முண்டே. எக்கச்சக்கமாக ஓட்டு வாங்கி அமைச்சரனாவர், அவர். நல்ல காரியம் தான். அங்கன்வாடி சிறார்களுக்கு போஷாக்கு அளிக்க. ஆனால் பாருங்க. ‘த்ராட்லெ’ நல்லா மாட்டிக்கிணு, சிக்கியை மெல்லவும் முடியாமல், கடிக்கவும் முடியாமல் அவஸ்தை பட்றாங்க.

அரசு பணத்தில், 200 கோடியோ ரூபாய்க்களை அப்பன் வீட்டு சொத்து மாதிரி இரண்டே நாட்களில், டெண்டர், கிண்டர் இல்லாமலெ, அள்ளி வீசி, சிக்கி வாங்கி சிக்கிக்கொண்டார். முக்கி முனகினாலும், சிக்கினது சிக்கினது தான் போலும்! வேண்டப்பட்டவங்க தான் சப்ளையராம்! ஆனால், அவங்க கொடுத்த சிக்கியில் சகதி இருக்காம். [எப்டி வந்திருக்கும் என்று எனக்கு ஊகம் ஒன்று உண்டு. கேட்டா சொல்றேன்.] அவற்றை சாப்பிடலாகாது என்று அரசுடைய ஆய்வு சொல்கிறது என்று, அம்மணி ஆட்சி செய்யும் அரசே உயர் நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறது. இந்த சகதி மர்மம் எல்லாம் அவர்களாக வெளிப்படுத்தவில்லை. ஏழை மாணவர்கள் தானே. சிக்கி தின்னு சிக் ஆனால் ஆகட்டும் என்று வாளா இருந்திருப்பார்கள்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது சந்தீப் அஹாரே என்ற பொதுநலவாதி, நம்ம ட் ராஃபிக் ராமசாமி மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவர் பொது நல வழக்குப்போட்டு, இந்த சகதி சமாச்சாரத்தை அவிழ்த்து விடவே, சினம் மிகுந்து, கொலாபாவாலா, கானடே என்ற இரு நீதிபதிகள், வழக்கின் தீவிரம் கண்டு, அரசை உண்மை விளங்க வைத்தார்கள். இந்த மாதிரி 20 வஸ்துக்கள் வாங்கப்பட்டனவாம். டெண்டர், கிண்டர் இல்லாமலெ, இந்த முண்டே அம்மை செய்தது பசங்களை கூண்டோடு கைலாசம் அனுப்பிவிட்டால், யார் பொறுப்பு?

ஆமாம். இந்த மேகி விவகாரம் சூடு பிடித்த போது, இந்திய பரிசோதனை நிலையங்கள் தூக்கி எறிந்த மேகியை சிங்கப்பூரும், இங்கிலாந்தும் நல்லா தான் இருக்கு என்று அனுமதித்தார்கள். நம்ம டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டுங்கள் என்றால் காஷ்டமெளனம். அப்படின்னா, இந்த முண்டே புகழ் சிக்கிகளை எங்கே அனுப்பப்போறாங்களாம்????
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/4838/1326/1600/DSCN0598.0.jpg

உதவி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com