கஜானா காலி [3] -ஏமாந்த சோணகிரி!
இன்னம்பூரான்
ஜூலை 26, 2015
சாணக்கியர் தன்னுடைய ராஜதந்திரங்களை அடுக்கி அளிக்கும்போது கட்டுப்பாடு, கட்டமைப்பு பற்றி கூறும்போது கட்டு அவிழ்வதின் மர்மங்களையும் எடுத்து உரைத்திருக்கிறார். தானாகவே கட்டு அவிழ்வது சொற்பம். கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டால், வேண்டியபோது கட்டு அவிழ்ந்து, துட்டு விழும். அதை லூப்ஹோல் என்கிறது ஆங்கிலம். சட்டம் பாயின் அடியில் நுழைந்து துழாவினால், சட்டத்தை மீறுபவர்கள் கோலத்தில் அடியில் அமர்ந்து கோலோச்சுவர்களாம்! வரியை கட்டாமல் ஏமாற்றுபவர்களுக்கு கோலம் தான் காவல் தெய்வம்! எல்லாமே மர்மம். அவர்களுக்கு சட்டம் அத்துபடி. தானம் கொடுத்தால் வரி சலுகையா? கொடை என்ற கறுப்புக்குடைக்கடியில் பேத்துமாத்து நடக்கும்.
அரசு பல காவலர்களை நிற்க வைத்தால் நட்டம் அவர்களுக்குத் தான். ஒரு காவலர் விலைக்குப் போய்விட்டாலும், டண்டணக்கா! அதற்கு, அவர்களுக்கும் சம்பளம், பஞ்சப்படி வகையறா!
பங்குச்சந்தை என்ற கோலத்துக்குள் புகுந்து, அடாவடியாக கறுப்புப்பணத்தின் சாயத்தை வெளுத்து, சத்தியசந்தர்களாக வளைய வரும் 900 கடைகளை இப்போது தான் பங்குச்சந்தை காவலாளர் (ஸெபி) மூடச்சொல்கிறார்களாம். வருமானவரி இலாக்காவுக்கும், இவர்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்களாம். பங்குச்சந்தை காவலாளர் மையத்தின் தலைவர் யூ.கே. சின்ஹா வருமானவரி ஏமாற்றப்பட்டது 5000 -6000 கோடி என்று யூகிக்கிறாராம். இப்பேற்ப்பட்ட ‘சத்தியசந்தர்களை’ சின்னபசங்க ஒவ்வொன்றாக ஈசலை பிடித்து கபளீகரம் செய்வது போல், லபக் லபக் என்று பிடித்து வருகிறார்களாம்! ஆனாலும் திரு சின்ஹா அவர்கள் இது பாய்க்கும் கோலத்துக்கும் நடக்கும் இடை விடாத, முடிவுகாணாத போர் என்று ஒத்துக்கொள்ளும்போது, கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டதால் தான் இந்த அலங்கோலம் என்றும் ஒத்துக்கொள்கிறார். குற்றம் செய்பவர்களுக்கு குற்றேவல் செய்யவே சில பிறவிகள் உளர் என்ற உண்மையை அவர் உரைத்த போதிலும், அந்த அதிசயபிறவிகள் பங்குச்சந்தையின் அன்றாட வரத்துப்போக்கில், மக்களையும் ஏமாற்றி இந்த குற்றேவலர்கள் இயக்கும் மாயா மச்சீந்திரா மர்மங்களை இனி தான் அவிழ்க்க முயலப்போகிறார்களாம்!
பார்க்கலாம். அதுவரை நாம் யாவரும் ஒரு இனம்: ஏமாந்த சோணகிரிகள்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.taxguru.net/comix/LoopholeNoose113006.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment