Saturday, July 25, 2015

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னம்பூரான்
25 07 2015

மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் கற்பனையும், பரவசமும், இலக்கியசுவையும், நாட்டுப்பற்றும், மனிதாபிமானமும், என்னை அவரது சொல்வளத்தின் நன்முத்து ஒன்றை தலைப்பாக வைக்கத்தூண்டியது. என்ன தான் குறை கண்டாலும், நமது பராம்பரியமும், பண்பும், அளவு கடந்த பரிவும், நேசமும் போற்றத்தக்கன. போற்றுவுமாக.

சில சமயங்களில் தெய்வசன்னிதானம் கட்டாந்தரையில் வைபோகமாக அற்புத நடனம் ஆடுகிறது. கண்டு களிப்பீர்களாக. திருவனந்தபுரத்தில் ஶ்ரீ சித்திரை திருநாள் ஆஸ்பத்திரி புகழ் வாய்ந்தது. அங்கு திரு.நீலகண்ட சர்மா ஆவி துறக்காமல், இறந்து விட்டார். இங்கு முரண் யாதுமில்லை. அவரது மூளை முற்றும் செயலற்றுப்போகவே, இனி அவர் உயிர் தரித்திருந்தாலும், அவருக்கு வாழ்க்கைக்குத் திரை போடப்பட்டுவிட்டது. தற்காலம் உறுப்பு தானம் யாவரும் அறிந்ததே. மரணத்தை வென்றுவிட்டோம். யாவரும் சிரஞ்சீவியே. சடலாமாயினும் கண் தானம் செய்யலாம்; சிறுநீரகம் தானம் செய்யலாம். அவை, மருத்துவ உதவியுடன்,கூடு விட்டு கூடு பாய்ந்து மற்றும் பலராக மலர்ந்து புது வாழ்க்கையை தடங்கலின்றி தொடங்கலாம். சர்மாவின் குடும்பம் உடனுக்குடன் உறுப்பு தானத்துக்கு சம்மதிக்கவே, அவருடைய இதயம் இந்திய கடற்படையின் விமானத்தில் கொச்சிக்கு பறந்து போய், அங்குள்ள லிஸ்ஸி ஆஸ்பத்திரியில், இதய நோயினால் அவஸ்தைப்பட்ட மாத்யூ அச்சதன் என்ற ஆட்டோ ஓட்டுனர் நெஞ்சகத்தில் குடி புகுந்தது. ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்ட இதய இரவல் அறுவை சிகிச்சை முடிந்தவுடனே நான்கு மணி நேர கெடுவுக்குள் கொச்சிக்குக்கொணரப்பட்டு, மாத்யூவின் உடலில் சர்மாவின் இதயம் துடிக்கிறது. இந்த ஆத்மதரிசனத்துக்கு, ஆஸ்பத்திரிகள், வாகனம், அரசு விமானம், கேரள முதல்வர் எல்லாரும் எடுத்துக்கொண்ட பணிகள் போற்றப்படவேண்டும். இதே மாதிரி சென்னையில் நடந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. டில்லி அருகே உள்ள குட்காவ்ன் என்ற இடத்திலிருந்து, கசகச போக்குவரத்து சாலைகளில், ஊரையை கட்டிப்போட்டுவிட்டு, ஒரு இதயம் 29 நிமிடங்களில் நூறு மைல் வேகத்தில் பயணித்து, ஓக்லாவில் உள்ள ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரியில் ஒரு 16 வயது இளைஞனின் நெஞ்சக்த்தில் புகுந்தது.

ஏன்? இந்த திங்கட்கிழமை அன்று சென்னை பொதுஜன ஆஸ்பத்திரியிலிருந்து, எக்கச்சக்க போக்குவரத்தை கச்சிதமாக ஒதுக்கி 14 நிமிடங்களில் அடையாரு ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லவே, புதிய உடலில், பழைய இதயம் இன்பத்துளிராகத் துடித்து, ‘தெய்வம் மனுஷ ரூபேண’ (மனிதனாக தெய்வம்) என்று புதிய வாழ்க்கையை தொடங்கியது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. [குறள் 327]

விளக்கம்:
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

இடம், பொருள், ஏவல் கருதி, சற்றே மாற்றி:

தன் உயிரை இழக்க நேரிட்டால், அஞ்சேல்.  அது வேறு உடம்பில் குடி போகட்டும். அப்போது, அது இழப்பு அல்ல. வாழ்வு நிரந்தரம்.

-#-

இன்னம்பூரான்

No comments:

Post a Comment