Showing posts with label கஜானா காலி. Show all posts
Showing posts with label கஜானா காலி. Show all posts

Sunday, July 26, 2015

கஜானா காலி [3] -ஏமாந்த சோணகிரி!


கஜானா காலி [3] -ஏமாந்த சோணகிரி!

இன்னம்பூரான்
ஜூலை 26, 2015

சாணக்கியர் தன்னுடைய ராஜதந்திரங்களை அடுக்கி அளிக்கும்போது கட்டுப்பாடு, கட்டமைப்பு பற்றி கூறும்போது கட்டு அவிழ்வதின் மர்மங்களையும் எடுத்து உரைத்திருக்கிறார். தானாகவே கட்டு அவிழ்வது சொற்பம். கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டால், வேண்டியபோது கட்டு அவிழ்ந்து, துட்டு விழும். அதை லூப்ஹோல் என்கிறது ஆங்கிலம். சட்டம் பாயின் அடியில் நுழைந்து துழாவினால், சட்டத்தை மீறுபவர்கள் கோலத்தில் அடியில் அமர்ந்து கோலோச்சுவர்களாம்! வரியை கட்டாமல் ஏமாற்றுபவர்களுக்கு கோலம் தான் காவல் தெய்வம்! எல்லாமே மர்மம். அவர்களுக்கு சட்டம் அத்துபடி. தானம் கொடுத்தால் வரி சலுகையா? கொடை என்ற கறுப்புக்குடைக்கடியில் பேத்துமாத்து நடக்கும். 

அரசு பல காவலர்களை நிற்க வைத்தால் நட்டம் அவர்களுக்குத் தான். ஒரு காவலர் விலைக்குப் போய்விட்டாலும், டண்டணக்கா! அதற்கு, அவர்களுக்கும் சம்பளம், பஞ்சப்படி வகையறா! 

பங்குச்சந்தை என்ற கோலத்துக்குள் புகுந்து, அடாவடியாக கறுப்புப்பணத்தின் சாயத்தை வெளுத்து, சத்தியசந்தர்களாக வளைய வரும் 900 கடைகளை இப்போது தான் பங்குச்சந்தை காவலாளர் (ஸெபி) மூடச்சொல்கிறார்களாம். வருமானவரி இலாக்காவுக்கும், இவர்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்களாம். பங்குச்சந்தை காவலாளர் மையத்தின் தலைவர் யூ.கே. சின்ஹா வருமானவரி ஏமாற்றப்பட்டது 5000 -6000 கோடி என்று யூகிக்கிறாராம். இப்பேற்ப்பட்ட ‘சத்தியசந்தர்களை’ சின்னபசங்க ஒவ்வொன்றாக ஈசலை பிடித்து கபளீகரம் செய்வது போல், லபக் லபக் என்று பிடித்து வருகிறார்களாம்! ஆனாலும்  திரு சின்ஹா அவர்கள் இது பாய்க்கும் கோலத்துக்கும் நடக்கும் இடை விடாத, முடிவுகாணாத போர் என்று ஒத்துக்கொள்ளும்போது, கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டதால் தான் இந்த அலங்கோலம் என்றும் ஒத்துக்கொள்கிறார். குற்றம் செய்பவர்களுக்கு குற்றேவல் செய்யவே சில பிறவிகள் உளர் என்ற உண்மையை அவர் உரைத்த போதிலும், அந்த அதிசயபிறவிகள் பங்குச்சந்தையின் அன்றாட வரத்துப்போக்கில், மக்களையும் ஏமாற்றி இந்த குற்றேவலர்கள் இயக்கும் மாயா மச்சீந்திரா மர்மங்களை இனி தான் அவிழ்க்க முயலப்போகிறார்களாம்! 
பார்க்கலாம். அதுவரை நாம் யாவரும் ஒரு இனம்: ஏமாந்த சோணகிரிகள்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.taxguru.net/comix/LoopholeNoose113006.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, July 23, 2015

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

இன்னம்பூரான்
23 07 2015

தணிக்கைத்துறையில் நாங்கள் பார்க்காத வினோதங்கள் கிடையா. மிஷினில் புல் வளர்த்தார்கள்! உடையும் எஃகை வளைத்தார்கள்! அம்பாசிடர் காருக்கு டெண்டர் விட்டாங்க! விதி மீறாமல் காண்டிராக்ட்டை பினாமிக்கு கொடுத்துக்கொண்டார்கள்! வடுமாங்காயை தேங்காய் என்று விற்று துட்டு பார்த்தார்கள்! ஓடாத நதிக்கு பாலம் போட்டார்கள்! சற்றே மிகை.தங்கத்திலே தண்ணிக்குழாய் இழுத்தாங்க! ஆண்டவன் விதித்தக் கட்டளைப்படி, எனக்குக் காண கிடைத்தத் துட்டட்டூழியத்துக்கு மணி விழா எடுத்தாச்சு. அந்தோ பரிதாபம்!!!

லஞ்ச லாவண்ய லீலாவினோதங்கள் நடக்காத மாநிலமே இல்லை போலும். அந்த அனுமார் வால் பட்டியலில் சிக்கிமுக்கி முனகுவது மஹராஷ்ட்டிரா சிக்கி விவகாரம், ஆயிரத்தில் ஒன்று. சிக்கி என்றால் கடலை மிட்டாய். மும்பை-பூனே ரயில் பயணத்தில் லோனாவாலா என்ற இயற்கை அழகு சொட்டும் இடத்தில், வாங்கிப்போவது, ஒரு வழக்கம். அதை வாங்கினாங்க ஒரு அம்மா. அவங்க பெயர் பங்கஜ் முண்டே. எக்கச்சக்கமாக ஓட்டு வாங்கி அமைச்சரனாவர், அவர். நல்ல காரியம் தான். அங்கன்வாடி சிறார்களுக்கு போஷாக்கு அளிக்க. ஆனால் பாருங்க. ‘த்ராட்லெ’ நல்லா மாட்டிக்கிணு, சிக்கியை மெல்லவும் முடியாமல், கடிக்கவும் முடியாமல் அவஸ்தை பட்றாங்க.

அரசு பணத்தில், 200 கோடியோ ரூபாய்க்களை அப்பன் வீட்டு சொத்து மாதிரி இரண்டே நாட்களில், டெண்டர், கிண்டர் இல்லாமலெ, அள்ளி வீசி, சிக்கி வாங்கி சிக்கிக்கொண்டார். முக்கி முனகினாலும், சிக்கினது சிக்கினது தான் போலும்! வேண்டப்பட்டவங்க தான் சப்ளையராம்! ஆனால், அவங்க கொடுத்த சிக்கியில் சகதி இருக்காம். [எப்டி வந்திருக்கும் என்று எனக்கு ஊகம் ஒன்று உண்டு. கேட்டா சொல்றேன்.] அவற்றை சாப்பிடலாகாது என்று அரசுடைய ஆய்வு சொல்கிறது என்று, அம்மணி ஆட்சி செய்யும் அரசே உயர் நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறது. இந்த சகதி மர்மம் எல்லாம் அவர்களாக வெளிப்படுத்தவில்லை. ஏழை மாணவர்கள் தானே. சிக்கி தின்னு சிக் ஆனால் ஆகட்டும் என்று வாளா இருந்திருப்பார்கள்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது சந்தீப் அஹாரே என்ற பொதுநலவாதி, நம்ம ட் ராஃபிக் ராமசாமி மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவர் பொது நல வழக்குப்போட்டு, இந்த சகதி சமாச்சாரத்தை அவிழ்த்து விடவே, சினம் மிகுந்து, கொலாபாவாலா, கானடே என்ற இரு நீதிபதிகள், வழக்கின் தீவிரம் கண்டு, அரசை உண்மை விளங்க வைத்தார்கள். இந்த மாதிரி 20 வஸ்துக்கள் வாங்கப்பட்டனவாம். டெண்டர், கிண்டர் இல்லாமலெ, இந்த முண்டே அம்மை செய்தது பசங்களை கூண்டோடு கைலாசம் அனுப்பிவிட்டால், யார் பொறுப்பு?

ஆமாம். இந்த மேகி விவகாரம் சூடு பிடித்த போது, இந்திய பரிசோதனை நிலையங்கள் தூக்கி எறிந்த மேகியை சிங்கப்பூரும், இங்கிலாந்தும் நல்லா தான் இருக்கு என்று அனுமதித்தார்கள். நம்ம டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டுங்கள் என்றால் காஷ்டமெளனம். அப்படின்னா, இந்த முண்டே புகழ் சிக்கிகளை எங்கே அனுப்பப்போறாங்களாம்????
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/4838/1326/1600/DSCN0598.0.jpg

உதவி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, July 19, 2015

கஜானா காலி !!! தொடர் [1]

அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]
இன்னம்பூரான்
ஜூலை 17, 2015
*

.

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்து கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:



கஜானா காலி !!! தொடர் [1]
இன்னம்பூரான்
19 07 2015

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்?

ஆட்டைத்தூக்கி மாட்டிலெ போட்டுட்டு, மாட்டைத்தூக்கி காட்டுப்பன்றி மேல் போட்டானாம் என்பது நவீன சொலவடை. இந்த பாழாய் போன ஆடிட்டர் ஜெனெரல் வருஷம் தவறாமல் என்ன தான் இடித்துரைத்தாலும், இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் அரசு கரன்ஸியை காய் மறைவா, இலை மறைவா, துஷ்பிரயோகம் செய்து விடுவார்கள். வாய் கிழிய சால்ஜாப்புக்கள் ஊற்றெடுக்கும். தப்புத்தண்டா செய்தவர்கள் எனப்படும்:  முகம்மது அலி, சுரேஷ் கல்லுமாடி, ஆனானப்பட்ட ராசாக்கள், தேனொழுக பேசுபவர்கள், பெயரளவில் கிருஷ்ண பரமாத்மாக்கள், தாத்தா பாட்டிகள்,கதிரோனதிபதிகள் போன்றோரை பாருங்கள். தலை நிமிர்ந்து, புன்னகைப் பூத்துப் போஸ் கொடுப்பார்கள்.  சரி, பிலாக்கணம் போதும். விஷயத்துக்கு வருவோம்.

கோவா மாநிலம் ஒரு சமஸ்தானம் மாதிரி. யதேச்சையதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். தமிழ்நாடு போன்ற மா மாநிலங்கள் என்ன வாழ்ந்து விட்டன என்று கேட்காதீர்கள். உங்களுக்குத் தெரியாததா?  கோவாவில் அதிகம் பேசப்படும் கொய்யா, அடுத்த வருடம் நடக்கப்போகும் தேசீய விளையாட்டு பந்தயங்கள். அதற்கு அதிகப்படியாக 285 கோடி ரூபாய் வேணும்னு மத்திய அரசுக்கு மனு போடப்பறங்களாம், கஜானா காலி என்ற கெஞ்சலோடு.  
ஏற்கனவே பெற்றுக்கொண்ட மான்யம் 110 கோடி + 12 கோடி + 70 கோடி + மான்யம் போன்ற கடன் 28 கோடி. கொடுத்தக் காசுக்குக் கணக்குக் கொடுக்கவில்லை என்பதால், 2012-13க்கு பிறகு நோ மான்யம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் இந்த ஆடிட்டர் ஜெனெரல் " 38 கோடி ரூபாயை அந்த விளையாட்டு வாரியத்துக்குக் கொடுக்காமல், 11% வட்டிக்கு 50 கோடி ரூபாயை கடன் வாங்கச் சொன்னது ‘இன்னா நாயம்?’ என்று எளுதிப்போட்டு வத்தி வச்சுட்டார் என்று அவர் மேலே காட்டம். தேசீய விளையாட்டு வாரியமோ 324 கோடி செலவழிச்சுட்டு, வழிச்சுக்கிணு நிக்கறொம் என்று ஓலமிடுகிறார்கள். 

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்? மர்மம் நீடிக்கிறது.
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com