Thursday, May 30, 2013

11. ‘குரங்குப்பிடிக்க…’…தணிக்கை




11. ‘குரங்குப்பிடிக்க…’…தணிக்கை

Innamburan S.Soundararajan Wed, May 30, 2013 at 12:14 PM

Inline image 1
அப்டேட் 3:

ஆடிட்காரனுக்கு ஆப்பு வைக்க பழம்பெருச்சாளிகள் வைக்கோல் 

போர் மாதிரி, கண்ட கண்ட கோப்புக்களை குப்பைக்கூளமாக 

தருவார்கள். அதற்கு நாங்கள் மாற்று மருந்து வைத்திருக்கிறோம்.

அது ரகசியம்.  2ஜி கனம் கோர்ட்டாரை கோழிக்குஞ்சு மாதிரி 

1029 மனுக்களை அம்பாரமாக குவித்துப்போட்டு ஆ ராசா, 

கனிமொழி போன்றோர் அமுக்குறாங்களாம். ஒக்கடி, கோர்ட்டு

என்ன நினைக்கிறது என்று விசாரிச்சுக்கலாம்; சுதாரிச்சுக்கலாம்.

கோர்ட்டு முக்கியமான வேலைகளை செய்ய முடியாமல் தவிக்க 

வைக்கலாம். அதுலே மீன் பிடிக்கலாம்ம்….

இது இன்றைய செய்தி.

இன்னம்பூரான்

02 12 2013

அப்டேட்: 2: அடுத்த விவகாரம், பிற்காலம் 2ஜி விஷயத்தில் கூடாநட்பு கொண்டு கம்பேனிகள் 
அரசை படுத்தி விட்டதை பற்றி ஆடிட்டர் ஜெனெரல் சில நாட்களுக்கு முன்னால் எழுதிய மடல் அடிபடுகிறது. அசைக்கமுடியாத ஆதாரங்கள் என்று தோற்றம். இன்று ஐபிஎன் கரன் தாபருக்கு கொடுத்த பேட்டியில், திரு.விநோத் ராய் தன்னிலை விளக்கத்தைத் தெளிவாகக் கொடுத்து இருக்கிறார்.
இன்னம்பூரான்
30 05 2013


அப்டேட்: கடந்த இரண்டு வருடங்களுக்குள் பல ஊழல்கள் வெளிவந்துள்ளன, தணிக்கைத்துறையின் தணியா வேகத்தினால். எனினும், கவலைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு பக்கம், அரசாளும் சால்ஜாப்பு மையங்கள் வலுத்துவருகின்றன. மற்றொரு பக்கம், ஐபிஎல் சூதாட்டம், ஆள்மாறாட்ட புள்ளிகளின் பலகோடிகளும், தோழி, தடியர், சொகுசு கார்கள், பயிரு தின்னும் வேலிகள், தரகர்களின் கரகாட்டம் என்றெல்லாம் செய்திகள் குவிந்து, சமுதாயம், தனியார் எல்லாம் 'நுறைகடலோடி, நிழலாட்டம் ஆடி, கோடானுகோடி புரட்டுவதும்' அதை மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கவலைகள் தான். 
இன்னம்பூரான்
30 05 2013
11. தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -  ‘குரங்குப்பிடிக்க…’
இன்னம்பூரான்
Friday, June 10, 2011, 13:2


இந்த ஆனானப்பட்ட 2ஜி விவகாரம் ஒரே சமயத்தில் பற்பல இடங்களில் – தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், பாராளுமன்றம், அதனுடைய குழுக்கள், பொது மன்றங்கள், உலகமேடை என்றெல்லாம் – பேசப்படுகிறது. அவற்றில் ஒன்று பாராளுமன்றத்தின் பொது கணக்குக்குழு. அதனுடைய வரைவு அறிக்கை மே 2, 2011 அன்று வல்லமை இதழில் அலசப்பட்டது. அக்குழுவின் காங்கிரஸ், தி.மு.க. அங்கத்தினர்கள் பெருங்குரலெழுப்பி, அந்த வரைவு அறிக்கையை கண்டனம் செய்து, வெளி நடப்பு செய்ததும் வரலாறே.

நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஒன்று, அரசு ரதத்தின் ஐந்தாவது சக்கரமாகச் சுழல்வதையும், காண்கிறோம். அதனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு, அதற்கு முன்னால் ஆஜரான இந்திய தணிக்கைத்துறையின் தலைவரும், இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரும் அளித்த சாட்சியங்கள், நம்மை எல்லாம் திணற அடிக்கின்றன. ஒரு புறம் பார்த்தால்,  தமிழகம் அறிந்த ஒரு சொலவடைக்கு ஏற்ப, ‘குரங்கு பொம்மை பிடிக்கப்போய், அது பிள்ளையாராக அமைந்த மாயமா!’ என்று தோன்றலாம். அல்லது, ‘கிணறு வெட்ட கிளம்பியது பூதம்’ எனலாம்.
ஜூன் 8, 2011 அன்றைய எகானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியமும், ஜூன் 9, 2011 அன்றைய ஹிந்து இதழில் ஏற்றப்பட்ட, இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியமும், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் அணுகுமுறைக்கு இசைந்ததாக அமையவில்லை என்ற கணிப்பு ஒரு புறம் இருக்க, கிளறப்பட்ட விஷயங்கள், ஆதாரக்கூறுகள் எல்லாம் நம்மை திகைக்கவைக்கின்றன. தலை குனிய வைக்கின்றன. பற்பல வருடங்களாக, அரசு ஆளுமை மக்களை வஞ்சித்து, சுயநலப் போக்கு உடையவர்களின் சாம்ராஜ்யமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து, ‘குரங்கு பிடித்ததா…’ என்ற அச்சம் எழுகிறது. எனினும். நம்மீது அளவிலா இரக்கம் கொண்டு, இந்த அச்சமில்லா சாட்சியங்களின் உருவகமாக, சித்தி புத்தி விநாயகர் காட்சி அளிக்கலாம்!
இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியம்:
உகந்த முறையில் ஒரு அமைச்சர்களின் குழு, கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகளை, திரு.தயாநிதி மாறன் தனது ஏகாதிபத்யமாக மாற்றி அமைத்துக்கொண்டார்;  2003ம் வருடம், நிதி அமைச்சரகத்திற்கு சம அளவு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.2006ஆம் ஆண்டு, கலந்து ஆலோசிக்க ஒரு அமைசர்களின் குழு அமைக்கப்பட்டது.
இதையெல்லாம்,திரு.தயாநிதி மாறன் தூக்கி எறிந்து விட்டார். நிதி அமைச்சரகம் இதை எதிர்த்தாலும், அதனுடைய சொல் எடுபடவில்லை. சொல்லப்போனால், அமைச்சரகம் முழுதுமே ஒருசேர 2003இல் இட்ட ஆணையை,திரு.தயாநிதி மாறன் புறக்கணிக்க ஏற்பாடு செய்துவிட்டார். (இந்த நடவடிக்கை எல்லாம், பிரதமரை கேட்ட பிறகு தான் என்று திரு.தயாநிதி மாறனுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் சொன்னாராம். அவர் அநாமதேயமாகத்தான் பேசினாராம்!)  திரு.தயாநிதி மாறன் காலத்தில் விளைந்த நஷ்டம் ரூபாய் 38 ஆயிரம் கோடி என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது துறையின் 2005ஆம் வருட வழிமுறைகள் கடாசப்பட்டன. அத்துடன் விட்டதா? 15 மனுக்களில், 14 மனுக்களின் மீது முடிவு எடுக்க தாமதம்: 608 =>969 நாட்கள்; அடுத்த 9 மனுக்கள் தாமதம்: 232 =>421 நாட்கள்; அடுத்த 29 மனுக்கள்: ‘கடப்ஸ்!’ அவற்றில் சிக்கிக்கொண்டதில் ஒன்று திரு. சிவசங்கரனில் ஏர்செல்; இதை இந்திய தணிக்கைத்துறையின் தலைவர் எடுத்துச் சொல்லவில்லை என்றாலும் (அது மரபு), அந்த விஷயம் வெளிச்சத்தில். அது போகட்டும். திரு.தயாநிதி மாறனுக்கு வேலை போனதுக்கு இதெல்லாம் காரணமில்லை: குடும்பப்பூசல் தான் காரணம்.
இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியம்:
திருவாளர்கள். ஆ. ராஜா, சித்தார்த் பெஹூரா, ஆர்.கே. சந்தோலியா அடங்கிய ஒரு  கும்பல், நேர்மையான அதிகாரிகளை மிரட்டி, அதட்டி, தண்டித்து, தன்னிச்சையாக முறைகேடுகள் செய்த வண்ணம். அனில் அம்பானியின் நிறுவனம் மறைந்திருந்து மர்மங்கள் செய்ததாகவும், அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
வாழ்க பாரதமாதா! வாழ்க மஹாத்மா காந்தியின் நாமம்! வாழ்க இந்திய பெருமக்கள்!
(தொடரும்)


Wednesday, May 29, 2013

தேவன் வந்தான்!




தேவன் வந்தான்!

Innamburan Innamburan Sat, Jul 2, 2011 at 5:45 PM


தேவன் வந்தான்!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
சாமகிரியைகள் எல்லாம் புதியவை. மங்கலமானவை. சாஸ்த்ரோக்தம்.
எடுத்து வைத்து விட்டேன், குருநாதா!
யாகசாலைக்குக் கோலம் போட்டுவிட்டேன். 
செம்மண் கரையோரங்கள். வெள்ளைக்கோலங்கள், பிராணநாதா!
புஷ்பமாலைகள் வகைக்கு ஒன்று, தொடுத்துக் கோர்த்து அடுக்கியிருக்கிறேன், அப்பா!
முக்கனிகளும் கொணர்ந்தேன், தந்தையே! கூடை கூடையாக.
ஸ்வாமி! நாங்கள் தான் அண்டை, அயல். அணிகள் பல கொணர்ந்தோம்; ஆபரணக்குவியல் பார்த்தீரோ! நவரத்னங்கள் கொட்டிக்கிடப்பதைக் கண்டீரோ! எல்லாம் சமர்ப்பணம்.
சிஷ்யா! அக்னிதேவன் வந்தாரே. முகமன் கூறினாயோ?
ஸ்வாமி! கடைந்துகொண்டு இருக்கிறோம். 
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
எழுந்தருளவேண்டும், ஐயனே! 
நன்நிமித்தத்தீயே வருக. 
தெய்வத்திருமகனே வருக.
அன்னை ‘ஸ்வாஹா’ வந்திருக்கிறாளோ!
இருவரும் ஆசனத்தில் அமருக. 
அலங்காரங்கள், ஜோடனை, ஷோடசோபசாரங்கள், முகஸ்துதி, சாஷ்டாங்க நமஸ்காரம்.
அக்னிதேவனுக்கு அதீதப் ப்ரீதீ! சிஷ்யா! மறுபடியும் எல்லாரும் தண்டனிடுவோம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒரு பொறி பிறந்தது. 
பிறகு பறந்தது. 
தீ மூண்டது.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
கொழுந்து விட்டு எரிந்தது.
ஸ்வாஹா: ஸ்வாஹா: ஸ்வாஹா: ஆஹூதி! பூர்ணாஹூதி! 
அக்னிதேவன் ஸ்வீகரித்துக்கொண்டார். 
அக்னி தழுவ, தழுவ, முனகும் சப்தங்கள். 
மற்றபடி நிசப்தம்.
எனக்கு பசிக்கிறது.
அம்மா! அப்பாவுக்கு பசிக்கிறதாம்.
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
அடுப்பில் உனக்கு வாசம். வா! சடுதியில் வா! அவருக்கு பசி தாங்காது.
போஜனம்! தாம்பூலம்! அடுப்பில் பூனை! கணகணப்பும் உன் நல்வரவே!
என்ன அங்கே ஹீனக்குரல்! 
அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார், தந்தையே!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஸ்வாமி! ரக்ஷிக்கணும். 
அப்படியெல்லாம் பேசக்கூடாது. யான் சாமான்யன்.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை. 
எஜமானன் வந்தார். என் அன்னை...
தெரியுமே! அதனால் தான் அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார் போலும்!
ஈஷ்வரோ ரக்ஷது!
சாயுங்காலம்! 
சூர்யன் முழுதும் அஸ்தமிக்கவில்லை.
சந்திரோதய வேளை.
இருட்டவில்லை. மங்கிவிட்டது.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை.
சாகரம் சென்று வருகிறீர்களா?
ஆம் ஸ்வாமி! அக்னிதேவன் வந்தார்.
ஆற, அமர தழுவினார், என் அன்னையை.
உன் அன்னை அங்கு செல்லவே இல்லை, அப்பனே!
ஆம்! ஸ்வாமி! இல்லை, ஸ்வாமி!
அக்னி! பிறகு ஜலம்! இனி நான் என் அம்மாவை காண முடியாது. 
அவள் உன்னுள் என்றும் வாழ்வாள். உனக்கும் நித்யவாஸ ப்ராப்தம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!

(இன்னம்பூரான்
 02 07 2011)











Geetha Sambasivam Sun, Jul 3, 2011 at 2:38 AM

என்ன பதில் கொடுப்பதுனு புரியலை. தேவனின் வருகை வாயைக் கட்டி விட்டது. 

coral shreeSun, Jul 3, 2011 at 2:54 AM


அற்புதம் ஐயா.........தொடருங்கள். காத்துக் கொண்டிருக்கிறேன்.

Tirumurti Vasudevan 
7/3/11

தொடர்ந்து கடையும்! அருமையாக இருக்கிறது!
யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
7/3/11

ஆமாம் சார்.  புல்லரிக்கிறது-

அன்புடன்

பென்

Tthamizth Tthenee Sun, Jul 3, 2011 at 3:34 AM



கடையும் மத்தும்  ஹோமகுண்டமும் தேயத்தேய  வேதத் தீ எழத்தான் செய்யும்
ஆஹுதி பெற்று  கொழுந்துவிட்டு எரியத்தான் செய்யும்
ஸ்வீகரிப்பூகள்  தொடரும்
இது அந்தாதி அல்லவோ?
சந்திவேளைச் சூரியன்
அந்தமில்லாச் சூரியன்
அன்புடன்
தமிழ்த்தேனீ

Innamburan Innamburan Sun, Jul 3, 2011 at 6:37 AM



கடையும் மத்தும்  ஹோமகுண்டமும் தேயத்தேய

தேயத்தேய வேதத் தீ எழத்தான் செய்யும்-ஆஹுதி
ஆஹுதி பெற்று  கொழுந்துவிட்டு எரியத்தான் செய்யும்
செய்யும் ஸ்வீகரிப்பூகள்  தொடரும்...
இது அந்தாதியோ?
இன்னம்பூரான்
03 07 2011

தெருக்கூத்து: 5: நவீன சகுனி




தெருக்கூத்து: 5நவீன சகுனி

Innamburan S.Soundararajan Wed, May 29, 2013 at 5:06 PM


தெருக்கூத்து: 5
நவீன சகுனி
Inline image 1

அட தேவுடா!
அன்றொரு நாள், பாலப்பருவத்தில், காசில்லாமல் ஹோட்டலில் நுழைந்த கண்ணாயிரம், நினைவலைகளில் மிதந்த கனவலைகளுடன் மேடை ஏறினான், மறு நாள் அந்தி மயங்கிய பிறகு.  சுற்றுமுற்றும் பார்த்தான், சாளேசுவரமா!, கண்களை இடுக்கியபடி. நாரதரை காணவில்லை. மயில் ராவணன் சுற்றத்தில் ஒரு குடும்ப தாவா. ஐயா தான் ஆர்பிட்ரேஷன்: மத்தியஸ்தம். படா ஜோக். அப்றம் வாரேன்.
கண்ணாயிரம் என்ற கோமாளி தான் இன்று செண்டர்-ஸ்டேஜ்.
“ஓட்டலிலே, பிராமணாள் ஓட்டலிலே, காசில்லாமல் 
இட்லி ஆர்டர் செய்தேன் நானே!
சட்னியும் கேட்டு வாங்கிக்கொண்டேன்.
இட்லியை திருப்பிவிட்டேன், சட்னி இலவசமே!
அதை கேட்டு ரசித்த மகாஜனங்கள் பலமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அவர்கள் சார்பில், ரங்கோன் தெரு முந்திரிக்கொட்டை முத்துச்சாமி அடியெடுத்துக்கொடுத்தான்.
‘வானம் பொழிது! பூமி விளையுது!
பரங்கிக்கு ஏதடா கிஸ்தி?’
இனி உரையாடல். நாடகம், தெருக்கூத்து, சாக்கியார் கூத்து, யாதாயினும், இத்தகைய அருமையான இண்டெரேக்டி அளவளாவுதல் அபாரம். ஒரு ரகசியம்.
ரங்கோன் தெரு முந்திரிக்கொட்டை முத்துச்சாமி ‘ஏனோ தானோ’ என்று வந்தவன் அல்ல. அவன் முதலாளியம்மாவின் உள்கை. அவள் அவனுக்குத் தனியாக படியளப்பாள். அவனும் அவளுக்கு ரகசியமாக ரம் வாங்கி வருவான். இதெல்லாம், அன்று மத்தியானம், அவள் ஆணைப்படி, ஒத்திகையான சீன் தான். ஸ்பாட் ஃபிக்ஸ்ட். ஆனால், இல்லீகலில்லை.

கோமாளி: முந்திரிமுத்து! ரொம்ப தேங்க்ஸ். இன்னிக்கி ராஜா ஹரிச்சந்திரா நாடகம்டா. கட்டபொம்மன் ஒத்து வராது. மெட்டெடுக்கிறான்.

முத்து: அண்ணா! மெட்டெடுக்காதே. கதை கேளு. ஹரிச்சந்திராவும், நக்ஷத்ரயனும் என்று நான் ஒத்துப்பாட்றேன். நீ மெட்டெடுக்கிறே. மன்னார் சாமி பெருமாளே! இது அடுக்குமா?

கோ: மஹாஜனங்களே! முத்தான கதை வருது. (சோடா ஊத்திக்கிறான்).

முத்து: நம்ம லேவாதேவி செட்டியார் ஊரில் இல்லையா. மாங்குடி மைனர் கிட்ட வாங்கின லோனை திருப்பிக்கொடுத்துட்டேன். அவருடைய ராயசம் கிட்டா வந்து வட்டி கேக்குறான். நியாயமா, அண்ணே?

கோ: துட்டுக்கு வட்டி உண்டுடா, லோகிதாசா! அவரு கந்து வட்டி கேக்கலியெ. கொடுத்துடு.

முத்து: அண்ணாச்சி. இது கதையல்ல. நிஜம். செங்கல்பட்டு ரோடு இஞ்சினீயர் கிட்ட, சிறுசேரி-மகாபலிபுரம் ரோடு போட நிலம் ஆர்ஜிதம் செய்யணுமில்லையா, அதற்கு 30 கோடி ரூபாய் கொடுத்தாரு, பெரிய இஞ்சினீயர். தாசில்தாரும் கருவூலத்திலிருந்து, அந்தப் பணத்தை வாங்கி, செங்கல்பட்டு ரோடு இஞ்சினீயர் கைலெ கொடுத்துட்டாரு. செலவுக்கு முன்னால் அதை அரசு கணக்கிலே தனியா வைக்கவேண்டும் என்று ரூல் இருக்குது....

பொறுமை இழந்த மாதிரி நடித்த கோ: ‘ தம்பி! அதுக்கென்ன இப்போ? நாம மயானத்துக்குப் போவோம். சந்திரமதி துடிக்கறதை பாரு.

மு: அண்ணா! நக்ஷத்ரயன் தேவலை. செங்கல்பட்டு ரோடு இஞ்சினீயர் அந்தப்பணத்தை தன் சொந்தக்கணக்கிலே போட்டுக்கினாரு. 
கோ: நல்ல வேளை. வீட்டுக்காரி கணக்கிலெ போடலை, பாரு. அவரு யோக்கியமான மனுஷரு.
மு: ஆமாங்க. எஃப்.டி. போடாம வச்ச யோக்கியதை தான். ஆனால், அது கூட தப்புங்க!!!!!! ஆடிட்டர் ஜெனெரலு சொல்றாரு:
  1. சொந்த கணக்கிலெ வச்சது தப்பு;
  2. அதுவும் மூணு வருஷம் ஏழு மாதம். இது அடுக்குமா? அவருக்கு வந்த வட்டி 3.99 கோடி. என்ன செய்யலாம். ஏது செய்யலாம், எப்படி செய்யலாம் என்று மடலாடி, மடலாடி, அதை வைத்துக்கொண்டிருந்தது தப்பு. படா டிரிக்கு!
  3. 7.3 /7.7% வட்டிக்கு வாங்கின கடனுக்கு 3.5% வட்டி வரவு. அதுவும் அரசு கைக்கு வரவில்லை. ‘தப்பு! தப்பு! தப்பு! நஷ்டம் ரூபாய் 4.07 கோடி.
  4. இது பற்றி நாங்க கேட்டதற்கு ஆறு மாசமா பதில் இல்லை. தப்பு. அதான் ஆடிட் ரிப்போர்ட்லெ போட்டுட்டோம்.
கோ: என்னா சொல்றே, முத்து! இப்படி நடக்குமா என்ன? லைட் மங்குதடா! மின் வெட்டு வந்து விடுமடா. ஆதாரம் சொல்லட்டா, அடிச்சுப்பிடுவேன். ஆமாம்!
மு: அண்ணா! இது 50-51வது பக்கம்; பத்தி 3.3.1. ஆடிட் ரிப்போர்ட் தமிழ்நாடு. அந்தப் பக்கத்தில் விநோத் ராயே கையொப்பமிட்டாரு, மார்ச் 5, 2013.
(Report No. 4 of 2013 Government of Tamilnadu - Report of the Comptroller and Auditor General of India on Economic Sector: ஜி+ மாதிரி பப்ளிக்.)
கோ: அதை சொல்றரையா. நான் படிச்சுட்டேன். எத்தனை பேத்துமாத்துக்கள். காசு பணமட்டுமா? போக்குவரத்து புள்ளிக்கணக்கு எடுக்கறதிலெ பொய்யு. நாலு ரிப்போர்ட்டுகள், தம்பி. எக்கச்சக்க சேதி தம்பி.
கதையும் முடிந்தது; கரெண்டும் போயிடுத்து.
[நக்ஷத்ரயன்: வரவேண்டிய பணத்தைக் கறாராகக் கேட்கும் கதாபாத்திரம். ராயசம்: கணக்குப்பிள்ளை]

Tuesday, May 28, 2013

10.தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?




10.தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?

Innamburan S.Soundararajan Tue, May 28, 2013 at 6:43 PM

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 10

இர
இன்னம்பூரான்


Thursday, June 2, 2011, 10:19

அப்டேட்:கடந்த இரு வருடங்களுக்குள் தணிக்கை ரிப்போர்ட்கள் அரசியல் வட்டாரங்களை ஒரு ஆட்டு ஆட்டுவித்தாலும், மக்கள் விழிப்புணர்ச்சி ஒன்று தான் வழி. இல்லாவிடின், நான் ஏன் விழுந்து, விழுந்து எழுதப்போகிறேன்!
இன்னம்பூரான்
28 05 2013 

தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?

தணிக்கைத் துறை, உலகெங்கும், அலட்டிக்கொள்ளாமல், தணிந்து பேசும் தன்மையுடையது; உள்ளது உள்ளபடி கூறும் தன்மையுடையது; பெருந்தவறுகளைக்கூட, சான்றில்லையெனில், முன்னிறுத்தத் தயங்கும் தன்மையுடையது. இத்துறையின் சர்வதேச அமைப்புகள் செவ்வனே இயங்கின்றன. இன்றைய நம்நாட்டு அரசுகள் இயங்கும் / இயங்காத / முரணாக இயங்கும் செப்பிடு வித்தைகளைக் காணும்போது, தணிக்கைத் துறையின் ஏற்புடைய தன்மைகளையும் மாற்றித்தான் அமைக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
இரு பின்னூட்டங்கள், என்னை இப்படிச் சிந்திக்க வைக்கின்றன.  கண்டும் காணாமல் விடப்படும் தணிக்கை அறிவிப்புகளைப் பற்றி ஒருவர் கூறினார், ‘இந்தக் கசப்பான நிலை மாறவேண்டும்; தணிக்கைத் துறையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.’
மற்றொருவர், ‘வருத்தமளிக்கும் செய்தி. ஜனநாயகத்தில், பணநாயகம் விளையாடுவதன் அறிகுறி’ என்றார்.
இத்தருணம், வலிமை மிகுந்த அமெரிக்காவின் தணிக்கைத் துறையின், 2011 மே 31ஆம் நாள் (31.05.2011) பிரகடனத்தைக் கவனிப்போமாக. அமெரிக்க ஐக்கிய நாட்டில் (யூ.எஸ்.ஏ) மருத்துவச் செயல்பாடுகள் சிக்கலானவை. காப்பீடு இல்லையெனில், மருத்துவம் இல்லையெனலாம். தமிழ்நாட்டுக் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் இல்லாமல், பெருமளவு ஒழுங்காக இயங்கினாலும், நுகர்வோர்களைப் பாடாய்ப் படுத்தும் தன்மை உடையவை.
India Post issued a stamp to celebrate the 150 years of Comptroller and Auditor General of Indiaசட்டமன்றங்களின் அரசியல் சாஸனம் சார்ந்த பணிகளில் உதவுவதும், மத்திய அரசு உருப்படியாக இயங்குவதற்கான பணிகளில் இறங்குவதும், அந்த அரசு மக்களிடம் கணக்குக் காட்டச் செய்வதும், தனது பணி என்று அடக்கமாக சொல்லிக்கொள்ளும் தணிக்கைத் துறைக்கு, இந்த மருத்துவச் செயல்பாடுகள் விஷயத்தில் நேரடிப் பணி ஒன்றும் கிடையாது. ஆனால் பாருங்கள், அங்கு நடப்பதை:
மருத்துவக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தி, கண்காணிக்க ஒரு மேல்மட்டக் குழு. பழையன கழித்து, புதியன புகுத்தி அப்பணியை செவ்வனே செய்ய, அங்கத்தினர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். பணி நன்றாகச் செய்பவர்களுக்கு மறு நியமனம் உண்டு. இந்த மேல்மட்டக் குழுவில் இடம் பெறுவது, சமுதாயத்தில் மதிப்பு தருகிறது. எனவே, மனுதாரர்கள் அதிகம். 1997இல் சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த மேல்மட்டக் குழு தான் மக்களின் ஆரோக்கிய மாதாவாகிய திட்டத்தின் வழிமுறைகளைப் பற்றி, கட்டணங்களைப் பற்றி, சட்டமன்றத்துக்கு ஆலோசனை அளிக்கிறது.
இந்தியாவின் மக்கள் சபை, மேல் சபை இரண்டும் போல, அமெரிக்காவின் சபைகள் இரண்டும், இந்த மேல்மட்டக் குழுவின் அங்கத்தினர்களை நியமிக்கும் பொறுப்பை, ஆடிட்டர் ஜெனெரல் வசம் ஒப்படைத்திருக்கிறது. ஜெனெ.எல்.டொதாரோ என்பவர், தற்கால ஆடிட்டர் ஜெனெரல். அங்கு. அவர் நியமித்தவர்களில் ஒருவரான வில்லிஸ் கிராடிஸன் ட்யூக் பல்கலைக்கழகத்தின் ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனர் (Scholar in Residence in the Health Sector Management Program).
அது சாதாரணமான பதவி அல்ல. அமெரிக்காவின் பெர்க்க்லி பல்கலைக்கழகத்தில், நம் உலகப் புகழ் கதாசிரியர் ஆர்.கே. நாராயணன் அவர்களை ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனராக நியமித்த போது, அவர் தன் வேலை என்னவென்று கேட்டார். நீங்கள் இங்கு தங்கியிருப்பது போதும். அது தான் எங்களுக்குத் தனிச் சிறப்பு என்றார்கள்.
அந்த உன்னத ஸ்தானத்தில் இருப்பவர், வில்லிஸ் கிராடிஸன் அவர்கள். அவர் 18 வருடங்கள், சட்டசபை அங்கத்தினராக இருந்தவர். இன்னொருவர், வில்லியம் ஹால் என்ற முதியோர் மருத்துவர், பேராசிரியர். அவர் வகுத்த திட்டங்கள், மிகவும் புகழ் வாய்த்தவை. இப்போது, அமெரிக்காவில் ஆடிட்டர் ஜெனரலுக்கு உள்ள மதிப்பு புரிகிறதல்லவா?
இந்தியாவிலோ, அந்தோ பரிதாபம்! இதே காலகட்டத்தில், பாராளுமன்றக் குழு ஒன்று (சாக்கோ கமிட்டி), நம் ஆடிட்டர் ஜெனெரலிடம், ‘கோக்குமாக்காக’ (aggressively), பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட 2ஜி விஷயத்தைப் பற்றிக் கேட்டதாக, ஊடகங்கள் கூறுகின்றன. இதில் அவமானம் யாருக்கு என்று வருங்கால வரலாறு கூறும்போது, நமது சந்ததிகள் நம்மைக் கேலி செய்வார்கள். அமெரிக்காவில் மலை; இந்தியாவில் மடு.
(தொடரும்……
===========================================================
படங்களுக்கு நன்றி: http://philatelynews.comhttp://www.currentnewsindia.comShare
Tags: 
Published Vallamai.



  • Karthik wrote on 2 June, 2011, 10:34
    //அமெரிக்காவில் மலை; இந்தியாவில் மடு.//
    உண்மை

தெருக்கூத்து -4 ‘நவீன சகுனி’




இன்னம்பூரான்
28 05 2013

‘... வீணை மீட்டுவது போல் ஒரு இனிய நாதம். அவரவர்கள் ஒதுங்கிய இடத்திலிருந்து, ஒட்டைச்சிவிங்கி போல் கழுத்தை நீட்டி, செவி சாய்த்தனர்...’

திரிலோக சஞ்சாரியும், திமிலோக கலகாதிபதியும், தற்கால அரசியல் சுவாமியின் சாயலுமான (நவீன) நாரத மாமுனிவர் உமையம்மையின் ஊடலை தணிக்க, பிறிதொரு கிருத்திரமாக கைலாயத்தை ‘அரக்கன் பெயர்ப்ப’ வகை செய்துவிட்டு, திருவரங்கனை அரங்கநாயகியிடம் பிடித்துக்கொடுத்து விட்டு, மலர்மாலைகள் தரித்து, வண்ண வண்ணமான வஸ்தராபரணங்களை அணிந்து, தனது நவீனத்தை குறிப்பால் உணர்த்த, கிட்டார் வாசித்துக்கொண்டு, மன்னார்சாமி கோயில் வாசலில் பிரசன்னமானாரே. இனிய ஒலியும், ஓசையும், அசையும், இசையும் மங்கலம் என்றாலும், அவர் எடுத்துவிட்ட ‘உதார்கள்’ சாமான்யப்பட்டவை அல்ல. ‘கப்பல் வாங்கின கதை தெரியுமோ?’ என்றவர் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பாட்டிசைத்தார்.

‘அஞ்சு கோடி கொடுத்தான் மவராசன்;
சுங்கம் கட்டினது மூணு கோடியாம்.
பொங்கப்பானை வச்சாஹ. மீனும் பிடித்தாஹ.
‘மங்காத்தா! மங்காத்தா! மங்காத்தா!’

ஒத்துப்பாடினது ரங்கோன் தெரு முந்திரிக்கொட்டை முத்துச்சாமி.

‘தனிப்பெரும் நாடு இந்திய நாடு.
கண்ணி வச்சுலெ பிடிக்கிராக. மத்ராஸ்
அண்ணாச்சியை பாம்பேயில் வச்சு, டெல்லி பாபுவை
கண்ணாமூச்சி ஆட்டமாடி, பெங்களூரிலே, மல்டிலேயரை
மலையாளத்திலே பிடிக்கிறாங்க.’

மல்டியென்றவுடன் ஜல்தியாகவே பல்டியடிச்ச கொல்டி தேவுடு சொன்னதை கேளும், பிள்ளாய்.

‘நானோ ஒரு அப்பாவி. மல்டிலேயர் அப்பளத்தை அப்பனுக்கே அம்பது மடங்கு விலை கூட்டி வித்த மாபாவி. மன்னார் சாமி கோயிலிலிருந்து தொலைவு அதிகமில்லை. கண்ணாஸ்பத்திரி முன்னாலே அஞ்சு மாடி மாளிகையாம், மல்டிலேயர் ஆஃபீஸாம். சோப்பு, சீப்பு, கண்ணாடி, ஷாம்பூ, மல்டி விடமினு, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாத்தையும் சுகுமாரி பொண்ணு சொல்லிச்சுன்னு அம்பாதியிரம் ரூபாய்க்கு வாங்கிப்போட்டேன். அதை நாலு லக்ஷத்துக்கு வித்துடலாம், அப்டி, இப்டினு பாடம் எடுத்தாங்க. கோகோ கோலாவும், வறுத்த முந்திரியும் கொடுத்து ஏமாத்திப்பிட்டாங்க. வவுத்தை பசிக்குது. லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி சாப்பிடமுடியுமா? கல்யாணமானாலும், கருமாதியானாலும், ஜோல்னா பையில் சோப்பு, சீப்பு, கண்ணாடி, ஷாம்பூ, மல்டி விடமினு, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் அள்ளிப்போட்டுகிணு போயிடுவேன். அக்காவிடம் ஒண்ணு, தம்பியிடம் இன்னொண்ணு, அம்மா, அப்பா எல்லார்கிட்டேயும் தந்திரமா பேசி, வித்துடுவேன், கன்னா பின்னான்னு விலையேத்தி. எங்கிட்டே கமிஷன் அடிச்ச சுகுமாரி, அவளோட எசமான் கரீம் எல்லாரும் டாடாசுமோ பவனி. பெரிய எசமான்களை போலீஸ் பிடிச்சுட்டாங்களாம். எனக்கு தான், உறவுகள் முறிந்தன. சொந்தக்காரங்க அடிக்க வராங்க.’.

தேவுடு அழுது புரண்டான். ராமுடு கேட்டான், ‘ஏண்டாப்பா? ஆம்வேஸ் பிரச்னையா/’

கரை கடந்து போகும் கதையை சமாளிக்க, நாரதர் எடுத்து விட்ட புராணம். கேளுமையா.

‘லேட்டஸ்டு ந்யூஸ் பிசினஸ் ஸ்டேண்டர்ட் நாளிதழில். அதற்கு மேல் சொல்ல மாட்டேன். எந்த புற்றில் எந்த பாம்போ? மூளைச்சலவையுடன் நிற்காமல் துட்டுச்சலவையும் செய்தார்கள் என்று மலையாள போலீஸ் ஒரு மல்டி அடுக்கு கம்பேனியின் வெள்ளைக்கார நம்பர் ஒன்னையும், அம்ஷுமான், சஞ்சயன் இருவரையும் கைது செய்தார்கள் நேற்று. கல்பேட்டா ஜட்ஜ் அவர்களை இருவாரம் கொட்டடி விசாரணை செய்ய அனுமதித்தார். வித்ரீ சப்ஜெயிலில் அடைத்தார்கள். வயநாடு கோர்ட்டு இன்று அவர்களுக்கு ஜாமீன் கொடுத்த பின் கம்பெனி சொல்லுது: ‘சட்டத்தையும் நீதியையும் போற்றுகிறோம். அண்ணன்மாருக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியே. நல்லதே நடக்கும்.’
சினம் தணியாத தேவுடு கேட்டான், ‘எதற்காக கைது செய்தார்கள். சட்பிட்னு சொல்லும்.’
நாரதர் உரைத்தது: 

‘2011ல் வயநாடு கோர்ட்டில் ஒரு சூதுவாது வழக்கு. ஆனால் அண்ணன்மார் வந்தது வேறு ஒரு வழக்கு: விசாலாக்ஷி போட்டது, ‘ஏமாத்திபிட்டாக’ என்று. மேலும் மூணு புகார் காண்டங்கள். கன்னா பின்னா விலை, மல்டி அடுக்குத் தரகு, மல்டி அடுக்கு ஏமாற்றல். அடிச்ச பணம் 48 கோடி என்று போலீஸ் சொல்கிறதாம். நுகர்வோர் புகார்களை சூதுவாது என்று சொன்னது அநீதி என்கிறதாம் கம்பேனி. 106 நாடுகளில் கொடி கட்டி பறக்கும் இந்த கம்பெனி இந்தியாவில் 140 ஜாமான்களை விற்கிறதாம். அதில் அப்பளம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அட தேவுடா?

Image Credti; http://amazingmaterial.com/wp-content/uploads/2012/06/Guitar-HD-Wallpaper-36.jpg

9. தணிக்கையறிக்கை எனப்படுவது…!


தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 9




தணிக்கையறிக்கை எனப்படுவது…!
இன்னம்பூரான்
Friday, May 27, 2011, 20:14
தமிழிலக்கணத்திற்குத் தொல்காப்பியம் அரியதொரு மூலமாக விளங்குவது போல், தணிக்கைக்கு ஆடிட் கோட் ஒரு தொல்காப்பியம் என்க. அது தான் எங்கள் பால பாடம். அந்தச் சிறிய கையேடும் அதன் துணை நூல்களும் பயிற்சி மன்றங்களும், தலைமுறை தலைமுறையாக விளங்கும் குரு-சிஷ்ய பரம்பரை திண்ணைப் பள்ளிகளும், தணிக்கைத் துறையின் தூண்கள் எனலாம். தொடக்கத்துடன் முரணில்லா முடிவும், தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டும் திறனும், விரிய உரைக்கும் வகையிலான பொருத்தமும், நுண்ணிதாகப் பொருளை விளக்கும் தன்மையையும் தணிக்கை அறிக்கைகளில் இலங்கும் தொல்காப்பியப் பண்புகள் என்றும், அந்த உயரிய நிலைக்கு ஆடிட் கோட் தான் வித்து என்றும் கூறினால், மிகையல்ல.
1897 வருடத்து முதல் பதிவிலிருந்து 1991 வரை திருத்தப்பட்டு வெளியான ஆடிட் இலக்கண நூல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். 1997இல் சென்னை வந்திருந்த அக்காலத்து ஆடிட்டர் ஜெனரல் திரு.வி.கே.ஷுங்லுவிடம், அவற்றை ஆடிட் கருவூலத்திற்காக அளித்தேன். அவருக்குப் பரம திருப்தி. டில்லியில் இருக்கும் ஆடிட் கருவூலம், இவற்றை நன்றாகப் பராமரித்து வருகிறது.
தணிக்கை அறிக்கைகளில், பிறகு வருகை தந்த அருமையான வழிகாட்டி நூலாகிய நன்னூல் விதிக்கும் இரு பாயிரங்களும், ஏழு வகை எழுதும் கோட்பாடுகளும், பத்து வகை அழகுப் பொருத்தங்களும், திறம்பட அமைத்த 32 உத்திகளும் காணக் கிடைக்கும். பத்து வகைக் குற்றங்களையும் தவிர்க்கப் படாத பாடு படுவோம். ஒரு மஹாபாரத யுத்தமே நடக்கும்! நன்னூலின் மையச் சூத்திரமான, ‘சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்’ தணிக்கை அறிக்கைகளுக்கும் சூத்திரம்; அரிமா நோக்கம் விரவி நிற்கும்; ‘தவளைப் பாய்த்து பருந்தின் வீழ்வு’ தணிக்கையின் நுண்கலை என்க.
Andhra_audit_report_1978
ஆனால் ‘ஆற்று ஒழுக்கு’, இந்த ‘குற்றப் பத்திரிகைகளில்’ தென்படுவது அரிது. 2ஜி பற்றிய அறிக்கையில் அது ஓரளவு காணக் கிடைத்தது நலமே. சில சமயங்களில், ரிப்போர்ட்டின் தலைகால் புரிவதில்லை. மொழிப் பிரச்சினை! எல்லா அறிக்கைகளும் (ரிப்போர்ட்), ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும்; பொருத்தமாகச் சில, பிராந்திய மொழிகளிலும். ஆனால் துரைத்தனத்தாரின் இங்கிலீஷ் / தமிழ்! புள்ளிவிவர நடனங்கள் வேறே அலுப்புத் தட்டும். போதாக்குறைக்கு, தணிக்கை கட்டுக்கோப்புக்கள் (caveats).
மக்களாட்சியின் ஆணிவேர் தணிக்கை முன்கொணரும் ஆய்வுகள் என்பதில் ஐயமில்லை. எனவே, வாசகர்களே! புடம் போட்டு எடுத்த இந்தத் தணிக்கை அறிக்கைகளை ஊடகங்களும் பாமர மக்களும் சரிவர புரிந்துகொள்ள, ஆவன செய்ய உங்கள் ஆதரவு வேண்டும்; புரிதலின் பயன் கருத்துகள் மூலம் தெரியவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் தான், பிரதிநிதித்துவ ஜனநாயகம் செழிக்கும். சுருங்கச் சொல்லின், மக்களுக்குத் தீங்கு விளைப்பவர்களை, ‘நாக்கைப் பிடுங்கிக்கிறாற்போல் நாலு கேள்வி கேட்க’ இயலும். தடம் புரண்டு, அரசு ரயில் கவிழாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
நன்னூல் முன்னிறுத்தும் ‘…தொகுத்துரை, உதாரணம், வினா விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன் ஓடு, ஆசிரியவசனம்…’ ஆகியவற்றை, தணிக்கை அறிக்கையின் முதல் பாயிரமாகிய அணிந்துரையில் காணலாம். ஏன், எதற்கு, எங்கு, எவ்வாறு தணிக்கை செய்யப்பட்டது?, சான்றுகளின் பின்னணி, வினவியதும், வந்த / வாரா விடைகளும், தமது தகுதியும், அரசியல் சாஸனம் அருளிய அதிகாரமும் இங்கு உள்ளடக்கம்.
Gujarat_audit_report_1985
அடுத்து வரும் பாயிரம், அறிக்கையின் சாராம்சம், பத்துப் பக்கங்களுக்குள். தணிக்கை செய்யப்பட்ட துறையின் தல வரலாறு, முதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேலாக, அவற்றின் ‘இன்னது அல்லது இது என மொழிதல்’ ஆய்வாளர்களால் மெச்சப்படுகிறது. தொடர்ந்து வரும் அத்தியாங்களில், உகந்த தலைப்புகளைப் பின்பற்றி, அந்தந்த மாநில அரசு / துறையின் நிர்வாஹம், வரவு செலவு அலசல், செயல்பாடுகள் ஆகியவற்றைத் தணிக்கை செய்ததன் பலாபலன்கள் கூறப்படும். சான்றுகளுடன் வரைபடங்களும் சித்திரங்களும் தேவைப்படி இடம் பெறலாம்.
இந்த ரிப்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் அதைத் தயாரித்த முதன்மை கணக்காயரின் கையொப்பமும் இந்திய தணிக்கைத் துறை தலைவரின் கையொப்பமும் இருக்கும். அனுபந்தங்கள் பின்னால் இணைக்கப்பட்டிருக்கும்.
முள்ளுப்பொறுக்கியார், எறும்புகள் சேகரித்த தானியங்களைப் போன்ற தணிக்கைக் கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றை வடிகட்டி, வஸ்த்ராயனம் செய்த மூலிகை உருண்டை பிடித்து, அதையும் புடம் போட்டது தான், ஆடிட் ரிப்போர்ட். இந்தத் தொடர்நிலைப் பணி ‘பெண்டு நிமிர்த்து விடும்’ அது பற்றி, பிறகு தான் எழுதவேண்டும். இன்றைய நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஆடிட் ரிப்போர்ட்களின் எண்ணிக்கை, அகில இந்திய அளவில்: 70. எந்த அளவுக்கு பொதுக் கணக்குக் குழுக்கள் அவற்றைப் பரிசீலனை செய்யும் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. வரலாறோ நம்மைச் சோர்வடைய செய்யும். ஏனெனில், பரிசீலனைக்கு வராமல் கருச்சிதைவான ஆடிட் ரிப்போர்ட்டுகளின் பகுதிகள் ஏராளம்.
ஜனநாயகம் வாழ்க!
(தொடரும்……….
============================
படங்கள் உதவி: கீதா சாம்பசிவம்

Published:http://www.vallamai.com/?p=3509


  • பவள சங்கரி. wrote on 28 May, 2011, 7:42
    அன்பின் ஐயா,
    எத்துணை அரிய பணி, தங்களுடையது. தங்களுடைய அறிமுகம் கிடைத்தது எத்தகைய பேறு எங்களுக்கு என்பதையும் எண்ணும் பொழுது உள்ளம் பூரிக்கிறது ஐயா. இது போன்று அரிய தகவல்கள் நிறைய வழங்க ஆண்டவன் தங்களுக்குப் பூரண ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க மனதார பிரார்த்திக்கிறோம். நன்றி.
  • தமிழ்த்தேனீ wrote on 1 June, 2011, 0:19
    மக்களாட்சியின் ஆணிவேர் தணிக்கை முன்கொணரும் ஆய்வுகள் என்பதில் ஐயமில்லை என்பதை உங்கள் ஆய்வு அறிக்கை நிரூபணம் செய்கிறது.
    அன்புடன்,
    தமிழ்த்தேனீ.