Sunday, September 18, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்




 ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்



I.
காஞ்சி மடத்தை பற்றிய சுபாஷிணியின் தனிமடலின் பின்னூட்டங்கள் அசுவமேதை யாகத்தின் புரவியைப்போல திக்கெட்டும் கட்டுக்கடங்காமல் ஓடின. எனவே, அதிலிருந்து மூன்று பதிவுகளை மட்டும் தற்காலிகமாக மீள்பதிவு செய்து ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை பற்றி மட்டும்  அவருடைய 1932/33 வருட உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்து கல்கியில் 1976ம் வருடம் வழங்கப்பட்ட பதிவுகளை ஆதாரமாக வைத்து, எழுதுகிறேன். அவரை பற்றி, பெரியாரை பற்றி வந்தது போல ஏகப்பட்ட விஷய தானம் ஒலி/எழுத்து என வெளி வந்துள்ளது. அவற்றில் பரணீதரனும், வானதி பதிப்பகம் மூலமாக ரா.கணபதியும் எழுதிய ஆன்மீகக்கட்டுரைகள் ஆத்திகர்களால் போற்றப்பட்டாலும், நாட்தோறும் எல்லா இதழ்களும், தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உளன.கலவை இருக்கலாம். அவற்றை நாடாமல், இந்த தொடருக்கு, நம்பகமான அவருடைய 1932/33 வருட உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்து கல்கியில் 1976ம் வருடம் வழங்கப்பட்ட பதிவுகளை மட்டும் முன்வைத்து, பணிவுடன், அந்த மாமுனிவரின் வாக்குக்களின் சாராம்சத்தை பதிவு செய்கிறேன். 13 வயதில் பீடத்தில் அமரவைக்கப்பட்டு, 87 வருடங்கள், அதை அவர் அலங்கரித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை கணக்கிடுவது எளிது அல்ல. நான் இங்கு பதிவு செய்யப்போவது, இரு வருட தொகுப்பின் சாராம்சம். அவர்  ஒரே உரையில் பல விஷயங்களை பற்றி பேசுவார். பல உரைகளில் பக்தி, புராணம், வேதம், இதிஹாசம் ஆகியவை மற்றவையுடன் இடம் பெறும். அவற்றை எல்லாம் இங்கு அலசவில்லை. அவரை பற்றி அறிய உதவும் வகையில் இந்த பதிவு அமைகிறது. அவர் அந்தக்காலத்து மனிதர். 83 வயது ஆகும் நான் பிறந்த வருடம் 1933. அவருக்கு அப்போது அவருக்கு வயது கிட்டத்தட்ட நாற்பது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம் எனலாம். 

அவரொரு அத்வைதி. காஞ்சி மடத்தில் அத்வைதிகள் பெரும்பாலாராக இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், அவர் பால் பிரண்டனையும், கிரேக்க ராணியையும், கிருபானந்த வாரியாரையும், வில்லுப்பாட்டு ஆறுமுகனாரையும், நானி பால்கிவாலாவையும், க்ரிஸ் ஆன்ஸ்ட்டூஸையும், மற்றும் எண்ணற்ற அத்வைதிகள் இல்லாதவர்களையும் ஆகர்ஷித்தவர்.

(தொடரும்)






No comments:

Post a Comment