ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VII
ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் செய்தார்கள். அது பற்றி ருத்ரா ஒரு கவிதை எழுத, பெரியவா அலுத்து, சலித்துக்கொண்டதை பற்றி எழுதி, அந்த நிகழ்வு மடத்துக்கு சோபை தரவில்லை என்றேன். சித்திரமும் வந்தது. இந்த நிகழ்வை பற்றி பெரியவா பகர்ந்த கருத்தை நான் தேட முயன்றபோது, டாக்டர் கணேசன், தற்செயலாக, அதை பதிவு செய்தார். சித்திரத்த்துக்கு விளக்கமாக அது அமைந்து விட்டதால், 1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததை பிறகு பதிக்காலாம் என்று, டாக்டர் கணேசன் அளித்ததை, நன்றியுடன், இங்கு பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
22 09 2016
வைதிக மதம்
“அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை, தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற மசால்ஜி (சேவகன்) யாகப் பிராம்மணன் இருக்க வேண்டும். இப்போதுள்ள சமஸ்தப் பிரஜைகளுக்கும் எதிர்கால வாரிசுகளுக்கும் (posterity) இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது.
மற்றவர்களை அதட்டிக் கொண்டு, 'தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்'. சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. 'விளக்கை அனைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகிவிடாதீர்கள்' என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
பட்டணங்களில்தான் இப்படி ஆயிரக்கணக்கில் ஜனங்கள் வருகிறீர்கள். அதனால், நான் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, யாரோ ஒரு சிலரிடம் சொல்லி, அவர்கள் மற்றவர்களிடம் சொல்லுவது என்று சுற்றி வளைக்காமல், நேராக நானே நிறைய ஜனங்களுக்குத் தெரிவித்துவிட முடிகிறது. இதை உத்தேசித்தே, மடத்து ஆசாரங்களுக்குத் பட்டணங்களில் எத்தனையோ பங்கம் ஏற்பட்ட போதிலும் பட்டணங்களுக்கு வருகிறேன். நான் நினைத்ததை விடவும் ரொம்ப ஜாஸ்தி கூட்டமாக இருக்கிறது. சிரமப்படுகிறேன்; உங்களையும் சிரமப்படுத்துகிறேன்!
நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறீர்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் எது நல்லது என்று எனக்கு தோன்றுகிறதோ அதைச் சொல்லாமல் போய்விட்டால் பிரயோஜனமே இல்லை என்று படுகிறது. அதனால்தான் 'வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள்' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களை அப்படி செய்யும்படி பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ. 'செய்யுங்கள், செய்யுங்கள்' என்று உங்கள் காதில் போடவாவது என்னால் முடிகிற மட்டும், இப்படிக் காதில் போட்டுக் கொண்டிருக்கலாமே என்றுதான் வந்திருக்கிறேன்.
எனக்குக் கனகாபிஷேகம், பீடாரோஹண உத்ஸவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாகப் பண்ணுகிறார்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறார்கள். இதற்காகக் கமிட்டி போடுகிறார்கள். வசூலிக்கிறார்கள். ராப்பகல் உழைக்கிறார்கள். ஆனால் இந்தக் கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சாரியார்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி? வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காகக் கமிட்டி, திட்டம் எல்லாம் வசூல் செய்யுங்கள் என்கிறேன்.
வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக, ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது. எட்டு வயசிலிருந்து ஆரம்பித்து அப்புறம் பத்து வருஷங்களுக்கு தினம் ஒரு மணி இளம்பிள்ளைகளுக்கு வேத மந்திரங்களிலும் பிரயோகங்களிலும் வகுப்பு நடத்தப் பேட்டைக்கு பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இதுதான் எனக்கு வாஸ்தவமான கனகாபிஷேகம், உத்ஸவம் எல்லாம்.
சிரமம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை. நாமாக ஒரு காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டால் அதற்காக எத்தனை கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டிருக்கிறோம்? ஏதோ ஒரு கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு யூனிவர்ஸிடியில் ஏதோ ஒரு படிப்பு பார்த்தால் பெரிய உத்தியோகம். பணம் கிடைக்கிறது என்கிறபோது உடனே 'ஸிலபஸ்' வரவழைத்து விடுகிறோம் - அங்கே போய் பரிட்சை எழுத ஏற்பாடெல்லாம் செய்கிறோம். நமக்கென்றே ஏற்பட்ட தர்மத்தை கஷ்டம் இருக்கிறது என்று விட்டுவிடலாமா? கஷ்டம் இருந்தும் செய்தால்தான் ஜாஸ்தி பலன், ஜாஸ்தி பெருமை.
இப்படி உங்களை கஷ்டப்படுத்தத்தான் வந்திருக்கிறேன். நான் சொன்ன பிரகாரம் செய்வதாக நீங்கள் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்து வருகிற வரையில், இங்கேயே உட்கார்ந்து கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தால் என்ன என்று கூட நினைக்கிறேன். எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு யாரையாவது உபத்திரவப்படுத்தத்தானே வேண்டும்? இங்கேதான் உட்கார்ந்து உபத்திரவம் பண்ணுவோமே என்று தோன்றுகிறது.
பட்டணங்களில் பஜனை, கோயில் திருப்பணி, புராணப்பிரவசனங்கள் எல்லாம் ரொம்பவும் விருத்தியாகியிருப்பதைப் பார்க்க, சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இவற்றுக்கொல்லாம் வேர்-மூலமான வேதம் - மட்கிப் போகவிட்டால், இவை அப்புறம் எத்தனை நாளைக்கு ஜீவிக்க முடியும்? வேதத்தை அப்பனிடமிருந்து பெற்று பிள்ளைக்குத் தரவேண்டும் என்கிற பெரிய தர்மந்தான் அஸ்திவாரம். அதை மறந்ததாலேயே இப்படி மதம் ஆட்டம் கண்டிருக்கிறது. பிராம்மணன் வேதத்தை விட்டதால் இன்றைக்கு லோகத்தில் உள்ள அத்தனை கோளாறுகளும், கஷ்டங்களும், விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக க்ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப்போனால் இந்தப் பரம்பரையை மறுபடியும் உண்டு பண்ணவே முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.” - காஞ்சி முனிவர்
-#-
சித்திரத்துக்கு நன்றி:
No comments:
Post a Comment