Thursday, October 3, 2013

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)அன்றொரு நாள்: அக்டோபர் 30




அன்றொரு நாள்: அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)

Innamburan Innamburan Tue, Nov 1, 2011 at 2:43 AM

அன்றொரு நாள்: அக்டோபர் 30
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)
மங்கலான நினைவில் மங்களமாக வீற்றிருப்பவரை பிற்கால இனவாத இழுபறிகளுடன் இணைத்துப் பேச மனம் தயங்குகிறது. ஸ்வாமி விவேகானந்தர், திலகர், பிபின் சந்திரபால் ஆகியோர் தன் சொல்லால், ஏதோ மந்திர உச்சாடனம் செய்த மாதிரி, கட்டிப்போட்டு, சபையோரை, தன் வயம் இழுத்துவிடுவார்கள். அந்த வரிசையில் தான் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை தெரியும். ‘நாடி நரம்புகளை சூடேற்றும் மேடைப்பேச்சு’ என்று திரு.அ.பிச்சை சொல்வது மிகையல்ல என்று தான் என் நினைவு.. கூட்டம் அபாரமாகக் கூடும். நிசப்தத்துடன் கேட்கும். வீறு கொண்டு எழும். எங்கும் அவருக்கு வணக்கத்துடன் கூடிய மரியாதை நிச்சயம். ஆங்கிலத்தில் enigma  என்ற சொல்லை ‘பூடகம்’ எனலாம். ஆன்மீகம், தேசாபிமானம், பொதுவுடமை, பழைய பண்பு, சீர்திருத்தம், அன்றாட அரசியல் எல்லாம் கலந்த தேவரவர்கள் ஒரு பூடகமான மனிதர் என்று தான் அக்காலத்தில் பேசிக்கொள்வார்கள்.
முதலில், அதிகம் பேசப்படாத திருப்புமுனை ஒன்றை பதிவு செய்யவேண்டும்.1907 ஸூரத் காங்கிரஸில் காலணிகள் பறந்தன.தீவிரவாதம் (‘சுதந்திரம் என் பிறப்புரிமை’ அவ்வளவு தான்.) பிறந்தது.பல்லாண்டுகளுக்கு இந்த புகைமண்டலம் சூழ்ந்த பின், நேதாஜி தலையெடுத்தார். காந்திஜியின் எதிர்ப்பு. அதையும் மீறி, ஏற்கனவே ஹரிபுரா காங்கிரஸ்ஸின் அக்ராசனராக இருந்த நேதாஜி, மறுபடியும், மார்ச் 11, 1937 அன்று திரிபுரா காங்கிரஸ் அக்ராசனராக வாகை சூடுகிறார். ஹரிபுராவில் புரவி மேல் சவாரி. திரிபுராவில் ஸ்ட் ரெச்சர் மேல். என்ன பிரயோஜனம்? காந்திஜியோ விடாக்கொண்டன். டம் டமா டுமீல் நிழல் யுத்தம். நேதாஜி மே 1, 1937ல் ராஜிநாமா நிர்ப்பந்தம். ஜூலை 6, 1937ல், காங்கிரஸுக்குள்ளேயே ஃபார்வேட் ப்ளாக் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஶ்ரீனிவாஸ ஐயங்கார், ப.ஜீவானந்தம்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் தான் சூத்ரதாரிகள். ஸெப்டெம்பர் 10, 1939 அன்றைய காங்கிரஸ் கமிட்டி: (ஜெயப்பிரகாஷ், ஜின்னா ஆகியோர் இருந்தனர்). நான்கு நாட்கள் தொடர் விவாதம். பிரி்ட்டனை இரண்டாவது உலகப்போரில் ஆதரிக்க வேண்டும் என்ற காந்திஜியின் வாதத்தை எதிர்த்து, நேதாஜியும், தேவரும் வெளியேறினர். என்ன தான் காந்தி மஹானின் அஹிம்சை உன்னதமானாலும், நேதாஜி திருப்புமுனை வலுவிழந்தது, ஒரு சோக சரித்திரம். இந்த பின்னணியில்:

முக்குலத்தோர் முன்னிலையில் கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்னால், ஒரு நிகழ்வு. 
நடு நிசி உரை, உசிலம்பட்டியில்: 1943-44 அளவில், தோராயமாக. அங்கு வருகை புரிந்த தேவரவர்கள் வேறு; குருபூஜைக்கு தற்காலம் உட்படுத்தப்படும் தேவர் வேறு என்று தான் என்னுடைய புரிதல். சில விஷயங்கள் புரிய ஒரு ஆயுசு காலம் வேண்டிருக்கிறது. பள்ளிப்பருவத்தில், போலீஸ் என்னிடம் ஏன் இத்தனை காட்டமாக இருந்தார்கள் என்பது புரிய இன்றைய ஆய்வு வேண்டியிருந்திருக்கிறது. ஆம். விடுதலைப்போரின் நேதாஜி திருப்புமுனை பெரியவர்களின் கவனத்தையே ஈர்க்கவில்லை; என் மாதிரி சிறுவர்கள் எந்த மூலை? ‘உன் எதிரி என் நண்பன்’ என்ற நேதாஜியின் வசனம் எங்கள் பாசறை புல்லட்டீன்களில் ஒன்று. காந்திஜியின் ஜன்மதின விழாவில், ‘காந்திஜி பேச்சுக்குத் தான் சரி. வன்முறை மட்டுமே வெள்ளையனுக்குப் புரியும். எடு தடியை. நேதாஜி தான் எங்கள் தலைவர்...’ என்று அரசியல் ஞானமே இல்லாத முந்திரிக்கொட்டை  பேசினால், போலீஸ் ஏன் காட்டமாக இருக்கமாட்டார்கள்? அந்த வால்பையனை தேவர் முன் ஏன் நிறுத்தமாட்டார்கள்? அவரும் ஏன் ஷொட்டு தட்டிக்கொடுக்க மாட்டார்? போலீஸ் ரவணப்பனும் ஏன் முதுகில் அறைந்து வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போகமாட்டார்? எனக்கு அந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைத்தான் தெரியும். அவருடைய உரையிலிருந்து ஒரு சொல் நினைவில் இல்லை. அந்த மறவனின் வீராவேசம் மட்டும் தனித்து, உரத்து ஒலிக்கிறது.

அ. பிச்சை அவர்கள், விருதுகளை தாங்கி வரும் தலைவர்கள், தேவரரவர்களை ‘எங்கள் சேது வேங்கை’(எஸ்.ஶ்ரீனிவாஸ ஐயங்கார்), ‘நான் பார்த்திபன் என்றால், பசும்பொன் தேவர் தான் சாரதி’ ( மூதறிஞர் ராஜாஜி), ‘காங்கிரஸைக்காத்தான்’ (தீரர் எஸ்.சத்தியமூர்த்தி), ‘தென்னாட்டுத்திலகர்’ (வீர சாவர்க்கர்), ‘தென்னாட்டு போஸ் (நேதாஜி),’...தூய எண்ணமும், துணிச்சலும் கொண்ட மரியாதைக்குரிய தேசியத்தலைவர்’ (கர்ம வீரர் காமராஜ்) என்று புகழ்ந்ததை பதிவு செய்திருந்தாலும், அந்த தலைவர்கள் பல அணிகளை சார்ந்திருந்தாலும், தேவர் அவர்களின் புகழ் மங்கவில்லை என்றாலும், ஃபெப்ரவரி 18,2011 அன்று யாரோ அறிமுகம் ஆகாதவர் எனக்கு அனுப்பிருந்த திடுக்கிடவைக்கும் கட்டுரை ஒன்றை படித்தேன். அதன் தலைப்பு:
“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்”
தேவரவர்களின் வாழ்க்கை வரலாறு,
இஸ்லாமிய செவிலித்தாயிடம் வளர்ந்ததும்,
கிருத்துவ பள்ளிகளில் படித்ததும்,
 செல்வந்தரான நிலச்சுவான்தாரராக இருந்தும், விவசாயிகள் சங்கம் அமைத்ததும், 
‘தொண்டுக்கு ஏற்றது துறவறமே’ என்று வாழ்ந்ததும்,
 தொழிற்சங்கங்கள் அமைத்ததும்,
ஹரிஜன ஆலய பிரவேசத்திற்கு மதுரை வைத்யநாத ஐயர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததும்,
1934ல் அபிராமம் கிராமத்தில் கள்ளர் கட்டுப்பாட்டு சட்டத்தை எதிர்த்து, முக்குலத்தோரை கூட்டியதும்,  
1936ம் ஆண்டில் சூறாவளிப்பிரசாரம் செய்து காங்கிரஸுக்கு வெற்றி பெற்றதும், 
அக்காலத்தில் பதவியை துறந்ததும்,
காமராஜருக்கும் உதவியதும்,
ஜஸ்டிஸ் கட்சியின் போக்கை கண்டித்து 1937ல், இவர் இராமநாதபுரம் ராஜாவை எதிர்த்தபோது தந்தை உக்கிரபாண்டியத்தேவர்  மகனுக்கு எதிராக பிரசாரம் செய்தும்,தேவர் வெற்றி பெற்றதும், வேட்பு மனுத்தாக்கலுக்கு சர்தார் படேல் பணம் அனுப்பியதும்,
பிரிட்டீஷ் அரசு இவருக்கு வாய்ப்பூட்டு சட்டம் விதித்ததும்,
அது போதாது என்று காங்கிரஸ் அரசாங்கமே, இவரை ஒரு கிரிமினல் வழக்கில் 18 மாதம் உள்ளே தள்ளியதும், 
விடுதலை ஆனவுடன், பாதுகாப்பு சட்டத்தின் கீழே உள்ளே தள்ளியதும்,
 தேவரவர்களின் வரலாற்றுக்கு நேரடி சம்பந்தமில்லாத ஜப்பான் சரணடைந்து,யுத்தம் முடிந்ததால், மே 5 ,1945 அன்று பல வருட சிறைவாசத்திற்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டதும், 
சட்டசபை/நாடாளுமன்ற தேர்தல்களில் வாகை சூடியதும், 
1962 ல் நாடாளுமன்ற தேர்தலில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள டில்லி செல்ல முடியாததும், தான் ஜனித்த அக்டோபர் 30ம் தேதியே, 1963ல் மறைந்ததும் சாமான்ய விஷயங்கள் அல்ல. 

அவற்றை எல்லாம் விலாவாரியாக எழுதாமல், இந்த ‘ஜாதி வெறியன்’ கட்டுரையை முன் வைப்பதின் காரணம் என்ன? தமிழகத்தில் எந்த பிரமுகருடைய வரலாற்றை ஆவணங்களுடன், ஆதாரங்களுடன், மிகையும், தொகையும், கட்டுக்கதையும் இல்லாமல், பெறுவது குதிரைக்கொம்பாகி விட்டது. தயை செய்து உசாத்துணையில் சுட்டப்பட்ட அந்த கட்டுரையை படியுங்கள். எந்த அளவுக்கு நடுவு நிலை பிறழ்ந்து, காழ்ப்புணர்ச்சி ஊட்டி, கொம்பு சீவப்பட்ட வரலாற்று பதிவுகள் உலா வருகின்றன என்று புரியும். சிலர் நம்பவும் செய்வார்கள். அது தான் போகட்டும். அ.பிச்சை அவர்களின் தொகுப்பு நூல் கட்டுரையில் (தேவர், காமராஜருக்கு) ‘வரி செலுத்தி வாக்காளராக்கவும் வழி வகுத்தாராம்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. அது என்ன ‘ம்’ விகுதி? அதே நிகழ்வை நீட்டி, முழக்கி, பழித்துப் பேசுகிறது ‘ஜாதி வெறியன்’ கட்டுரை! யாரை நம்புவது? அது தான் போகட்டும். 1957ல் இம்மானுவேல் சேகரன் தேவந்திரன் என்ற தலித் தலைவர் கொலையுண்ட சில தினங்களில், தேவரவர்கள் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு சிறை செல்கிறார். ஜனவரி 1959ல், குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறைக்கு அவர் கொணரப்பட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டவை. அ.பிச்சை அவர்களின் கட்டுரையில் இதை பற்றி பேச்சு, மூச்சு இல்லை. 
என்ன சொல்லி என்னை ஆற்றிக்கொள்வது? களைத்துப் போனேன். எனக்கு புரிந்தவரை,
ஈற்றடியாக:
~ தேவரவர்கள் தெய்வபக்தி மிகுந்த ஆன்மீக இயல்பு கொண்டவர்;
~அவர் பேச்சில் கனல் பறக்கும். அதில் ஆதாயம் பார்த்தவர்களும், அவரை, அவர் அறியாமல், பணயம் வைத்தவர்களும் உண்டு;
~ சிறையில் சுயம்பாகம். தனக்கு கட்டுப்படுகள் விதித்துக்கொண்டவர்;
~ பிற்காலம் அவருடைய குருபூஜை நிம்மதியில்லா நிகழ்ச்சி. 1997ல் ஒரு நாளிதழ், 1957லிருந்தே, அதாவது, தேவர் அவர்களது காலத்திலிருந்தே, வன்முறை இருந்ததாகவும், வருடா வருடம் அதிகரிப்பதாகவும் எழுதியது;
~ 2005ல் மற்றொரு இதழ் 25 கட்சிகள், கக்ஷி கட்டிக்கொண்டு, போட்டா போட்டியாக, வன்முறை பின் நிற்க, குருபூஜைக்கு, அணி வகுத்ததாக சொல்கிறது.
~ என் மங்கலான நினைவில் மங்களமாக வீற்றிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இது எல்லாம் மனவலியை தந்திருக்கும்;
~ இனி எந்த வரலாற்று பதிவுகளுடனும், ஒரு மூட்டை உப்பு சேர்த்துப் படிக்கவேண்டுமோ என்ற கவலை உதிக்கிறது. 
இன்னம்பூரான்
31 10 2011
thevar_stamp.jpg

உசாத்துணை:
த. ஸ்டாலின் குணசேகரன்: (2000) தொகுப்பாசிரியர்: விடுதலை வேள்வியில் தமிழகம்:
~அ.பிச்சை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; பக்கம் 541 ~  551;




Seethaalakshmi Subramanian Tue, Nov 1, 2011 at 3:09 AM

அருமையான பதிவு
அர்த்தமுள்ள பதிவு
அரசியல் குட்டையில் குப்பைகள் அதிகம் அண்ணா
நம்போன்ற வயதானவர்கள் சாட்சிகள்
இப்பொழுது மூளைச்சலவை செய்யப்பட்டவர்களால்
நிறைய எழுதப்படுகின்றன. 
இதுவும் போகும்
இதுதான் வாழ்க்கை
நான் மதுரைக்காரி
மனம் வேதனைப்படுகின்றது
அதுதான் முடியும்
சீதாலட்சுமி


Dhivakar Tue, Nov 1, 2011 at 10:26 AM

பசும்பொன் தேவரைப் பற்றி அடியேன் சேகரித்த விவரங்களைப் பொறுத்தவரை

தேவர் தெய்வத் தமிழ்நாட்டில் அவதரித்த ஒரு தெய்வப் பிறவி!!

ஒரு தெய்வப் பிறவியால் என்னன்ன நன்மைகள் ஒரு நாட்டுக்குக் கிடைக்குமோ அத்தனையும் அவரால் கிடைத்தன. முக்கியமானது ஆன்மீகத்தை அதன் உண்மையான நிலையிலிருந்து சாதாரண மக்களுக்குக் காண்பித்து கற்பித்தது.

திவாகர்

Thevan Tue, Nov 1, 2011 at 5:52 AM
அருமையான பதிவு.
௧ நவம்பர், ௨௦௧௧ ௩:௦௯ முற்பகல் அன்று, 


-- 
நல்லாட்சி, நல்ல அரசியல்வாதி,
நல்ல திட்டங்கள் வேண்டும். 
ஆனால் நாங்கள் எதையும் செய்ய மாட்டோம்.  

Regards,
Thevan, 
Mumbai.


Subashini Tremmel Tue, Nov 1, 2011 at 10:24 PM

முத்துராமலிங்க தேவரை பற்றி பல விஷயங்களை இந்தப் பதிவின் வழி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
இவரது பேச்சுக்களின் பதிவுகள் (ஒலிப்பதிவு அல்லது கட்டுரைகள் ) கிடைக்க வாய்ப்புள்ளதா?

சுபா
 
 

Geetha Sambasivam Tue, Nov 1, 2011 at 10:45 PM

 தோராயமாக. அங்கு வருகை புரிந்த தேவரவர்கள் வேறு; குருபூஜைக்கு தற்காலம் உட்படுத்தப்படும் தேவர் வேறு என்று தான் என்னுடைய புரிதல்//
 
அருமையான நினைவஞ்சலி.
 
2011/10/31 Innamburan Innamburan innamburan@gmail.com
~ என் மங்கலான நினைவில் மங்களமாக வீற்றிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இது எல்லாம் மனவலியை தந்திருக்கும்;
~ இனி எந்த வரலாற்று பதிவுகளுடனும், ஒரு மூட்டை உப்பு சேர்த்துப் படிக்கவேண்டுமோ என்ற கவலை உதிக்கிறது. 
இன்னம்பூரான்
31 10 2011
thevar_stamp.jpg

உசாத்துணை:
த. ஸ்டாலின் குணசேகரன்: (2000) தொகுப்பாசிரியர்: விடுதலை வேள்வியில் தமிழகம்:
~அ.பிச்சை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; பக்கம் 541 ~  551;





Innamburan Innamburan Tue, Nov 1, 2011 at 11:03 PM
To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88
நான் இங்கு இணையதளங்களில் புத்தகங்களுக்காகவும் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால், மற்றவர் சரிதைகளிலிருந்து கிடைக்கும் குறிப்புகள் உதவலாம், சுபாஷிணி. நேற்று படித்தது எல்லாம் நிம்மதியை குலைக்கும் வகையில் இருந்தன, பல மணி நேரம் செலவு செய்தும். என் ஆய்வை தொடருவதாக உத்தேசம். எனக்கு அவரை நன்றாக நினைவு இருக்கிறது. மற்றவர்கள் உதவினால், மேலும் நல்லது. ஆய்வு செய்யும் வகை சொல்லியும் தருவேன், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை பொறுத்து.
இன்னம்பூரான்.
01 11 2011


Subashini Tremmel Tue, Nov 1, 2011 at 11:19 PM

இமலாதித்தன் என்று ஒரு நண்பர் எழுதிக் கொண்டிருந்தார். அவரைச் சில மாதங்களாகக் காணோம். அவர் இந்த முயற்சியில் உதவலாம். அவரிடமிருந்து பதில் வந்தால் கேட்டுப் பார்ப்போம்.

அன்புடன்
சுபா


வள்ளலார்: அன்றொரு நாள்: அக்டோபர் 5




அன்றொரு நாள்: அக்டோபர் 5
Innamburan Innamburan Wed, Oct 5, 2011 at 2:36 AM



அன்றொரு நாள்: அக்டோபர் 5
I. அக்டோபர் 5, 1823 வள்ளலார் எனப்படும்  சிதம்பரம் ராமலிங்க அடிகளார், ‘சம்புபக்ஷ சிருஷ்டியாக’ கருவில் அமைந்து, உரிய காலத்தில் அவதரித்த திரு நாள். அருட்பெரும்சோதியின் தனிப்பெருங்கருணையை போற்றி வணங்குவோமாக. இயன்றவரை அந்த நற்பண்பை கடைப்பிடிப்போமாக. எனக்கு நானே சொல்லிக்கொள்வது: மணிமேகலையின் அமுதசுரபியை பற்றி போகுமிடமெல்லாம் பேசு.
மின் தமிழில் மடலாட துணிந்த புதுசு. ‘வானத்தில் மயிலாடக்கண்ட’ வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையை பற்றி எழுதப்போய், செம்மையாக தர்ம அடிகள் வாங்கிக்கட்டிக்கொண்டேன். வசமாக மாட்டிக்கொண்டேன். ஓடப்பார்த்தேன். ஆனால், சிவப்பழமாகத் திகழ்ந்தத் தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்கள்
"... சமரசக் கோயிலை (வடலூர் சபை) அமைத்துச் சென்றார். இங்கேயாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியிலிருக்கிறதா? ஈங்கும் வழிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது?...” (இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (1955) ப.34) 
என்று எழுதியதை நினைத்துக்கொண்டேன். கூடவே பயணிப்பது வள்ளலாரின் ஆன்மிக பொதுவுடமையும் பொது கடமையும்: 
"பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச வொழுக்கம் சமயவொழுக்கம் சாதியொழுக்கம் செய்கையொழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருண்யம்.”
ஆங்கிலத்தில் ‘Ecumenical’ என்ற கிருத்துவம் சார்ந்த சொல் ஓரளவுக்கு மேற்கண்ட சமரச சன்மார்க்கத்தைக் குறிக்கிறது எனலாம், மொழி பெயர்ப்பு நிர்பந்தங்கள் ஏற்பட்டால். மற்றபடி, வள்ளலாரின் சன்மார்க்கத்தை உபநிஷத்துக்களில் தான் காண இயலும். 
அருள்பெறில் துரும்பும்  ஓர் ஐந்தொழில் புரியும் 
தெருள்இது எனவே செப்பியசிவமே (983~4) 
என்று மனமுருக இசைத்து விட்டு,
 "சாதி சமயச் சழக்கைவிட்டேன் அருட்
 ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி”
(ஆறாம் திருமுறை - அக்கச்சி 129) 
என்று ஒரு தொன்மை சார்ந்த புறப்பாடு செய்தால்,‘கர்நாடகங்கள்’ ஏன் சண்டைக்கு வரமாட்டார்கள்? அதுவும் அருட்பா” தொகுக்கப்பட்டு முதல் ஐந்து திருமுறைகள் 1867இல் வெளிவந்தது; ஆறாம் திருமுறை அவரது மறைவிற்குப் பின்பு (1888) வெளிவந்தது என்ற நிலையில்!
என்ன? வள்ளலாரை பற்றி பேசாமல் என்னன்னமோ பேசிண்டு? என்றா கேட்கிறாய்? எல்லாம் ‘கருடா சுகமா?’ என்கிற கதை தான். நம்ம இழையிலே குழைத்து குழைத்து எழுதலாம். யார் கேட்கப்போகிறார்கள்? என்கிற அசட்டு தைரியம் தான்.அதுவும் ஒரு தனிப்பகுதி அமைத்து! சங்கு கிடச்சா பூம்!
நிஜமான தைரியம் என்ன தெரியுமா? வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா? இவ்வுலகை உய்விக்க வந்த வள்ளலாரின் சரிதை படிக்க உசாத்துணை யாதும் கொடுக்கவில்லை. ஆதாரஸ்ருதி மட்டும் உளது.படிக்கவும்.
***
II. வள்ளலாரின் ஆன்மிக பொதுவுடமையும் பொது கடமையும்! இதில் ஆன்மிகம் எங்கு வந்தது? பார்த்தீர்களா? ஆன்மிகம் என்ற ஒரு சொல் போதும், வாதப்பிரதிவாதத்தை உரமிட்டு, எரு போட்டு, வளர்க்க. கோள் (மேற்கோள், ஐயா!) சொல்வது என்று சர்ச்சையை துவக்கி விட்டால், பட்டி மன்றம் துண்டுபட்டு, துகள் மன்றமாக துள்ளிக்குதிக்கும்!
எனக்கு ஆன்மிக வாதப்பிரதிவாதங்கள் செய்யத்தெரியாது.அவற்றை கேட்டு திகைத்துப்போய் நின்றதுண்டு. எந்த ஹிதோபதேசத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். பிச்சு உதறி விடுவார்கள். ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். ‘தர்மம் சர’ என்று சொன்னால் போதும். விசிஷ்டாத்வைத/அத்வைத/த்வைத/முந்தைய.பிந்தைய ஹிந்து மார்க்கங்கள்/பெளத்தம்/ சமணம்/கிருத்துவம்/ இஸ்லாமியம் (சாக்கிரதையாய்)/ குணங்குடி மஸ்தான்/தாயுமானவர்/அருணகிரி நாதர்/வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் வகையறாவின் மூலாதாரங்களை ‘கொழு கொழு கன்றே! கன்றின் தாயே’ என்று பிடித்துக்கொண்டு ‘இறை’ தேடும் வைபவங்கள் நேர்த்திக்கடன்கள் போல் நிறைவேறும். கிட்ட கிடு கிடு வென்று தொடங்கி, போகிற போக்கில், கூரத்தாழ்வார்,குரு நானக், சேஷாத்ரி ஸ்வாமிகள், கலீல் கிப்ரான், கபீர் தாஸ்,ஶ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர்,ஶ்ரீ அரவிந்தர்,அன்னை,ஶ்ரீரமணர், ஜேகே, யூஜிகே இவர்கள் எல்லாரையும் ஒரு பிடி பிடித்து, குலுக்கி விட்டு,ஹாய்யா, சாவகாசமாக வந்து பார்த்து,வள்ளலார் வாழ்ந்து மேன்மை படுத்திய தருமமிகு சென்னையில் அதருமம் மிகுந்து விட்டது என்று சொல்லிக்கொள்கிறார்களாம். அந்தோ! பரிதாபம்!
அத்துடன் விட்டதா?, அருள் வாக்காளர்களும்,ஆஷாடபூதிகளும்,இஷ்டதேவதை சித்தர்களும்,ஈசான்ய நோக்கர்களும், உழக்கு மொள்பவர்களும், ஊருக்குபதேசிகளும்,எடுத்து எறிபவர்களும், ஏமாந்த சோணகிரிகளும், 'ஐயர்களும்', ஒத்தூதிகளும், ஓங்கியுரைப்பர்களும் நிறைந்த நம் நன்னாட்டில் ஆயிரங்கட்டி வராகனுக்கும் சல்லிக்காசுக்கும் தாரதம்யம் கண்டீரோ?
இடம், பொருள், ஏவல் கருதி சில கருத்துக்கள். அதற்கு முன்னால் ஒரு பிரார்த்தனை:‘பிள்ளையாரப்பா! என்னை வம்பில் மாட்டி விடாதே. மாட்டினாலும் கழட்டி விடு’. 
ஆன்மிக தேடல் மனித இயல்பு. தொன்று தொட்டு இயற்கை அன்னையும், இந்த பிரபஞ்சமும், மனித இனத்தின் பலவீனத்தை வஞ்சனையில்லாமல் காட்டிக்கொடுக்கின்றன.சமுதாயம் யாதாயினும், சுமேரியன்/அரபி/சைனா/எகிப்திய/கிரேக்க/ரோமன்/ இந்தியா/ (இந்த பட்டியல் நீண்டது) தொன்மை (mythology) கலக்காத ஆன்மீகமும் இல்லை; நாத்திகமும் இல்லை; கலவையும் இல்லை. தொன்மை ஒரு கற்பனை; படைப்பாற்றல்; மருமம்; கனவு; மோனம். அது நாட்டுநடப்புடன் உலாவி வரும். சிந்தனையுடன் கட்டிப்புரளும்.பிரார்த்தனை செய்தால், குரல் கொடுக்கும். அதனால் தான் நீலமேக சியாமளன்; ஜடாமுடியில் கங்கை; ஹயக்ரீவர்; கொழுக்கட்டை சாப்பிடும் ஆனைமுகத்தோன்.நசிகேதஸ். அஃப்ரோடைட் என்ற கிரேக்க மோஹினி. ஏசு பிரானின் புனர்ஜன்மம். மெக்காவிலிருந்து நபிகள் நாயகம் மதீனாவுக்கு யாத்திரை, ஸ்வாமி விவேகானந்தருக்கு அருளப்பட்ட நிர்விகல்பசமாதி. சனாதனம் மிகுந்த தொன்மையில்லையெனின், ஆத்திகர்கள் தும்பை மலர் போன்ற முடிகளை அகற்றியும், நாத்திகர்கள் கருமுடியை அகற்றியும், மனித சமுதாயத்தின் முடி இறக்கி விடுவார்கள்.
அலெக்ஸீஸ் கேர்ரல் என்ற டாக்டர் நோபல் பரிசு பெற்றவர். அவர் ‘Man, the Unknown’ என்ற நூலில், மனிதனை பற்றி தெரிந்தவையும்,தெரியாதவையும் பற்றி தெளிவு படுத்தி, என்றுமே தெரியாமலே மறைந்திருக்கும் விஷயங்களும் உண்டு என்கிறார்.பாயிண்ட் மேட்?
இன்னம்பூரான்
05 10 2011
VallalarSpaceVallalar.jpg
ஆதாரஸ்ருதி:
திருமதி.கீதா சாம்பசிவம்: ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்:Retrieved on Oct 5, 2011 from



Geetha Sambasivam Wed, Oct 5, 2011 at 12:10 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இடம், பொருள், ஏவல் கருதி சில கருத்துக்கள். அதற்கு முன்னால் ஒரு பிரார்த்தனை:‘பிள்ளையாரப்பா! என்னை வம்பில் மாட்டி விடாதே. மாட்டினாலும் கழட்டி விடு//

இது முதல்லே வந்திருக்கணும்; முக்கியமானது சொல்லியாச்சு; அப்புறமாச் சொல்லி என்ன பிரயோஜனம்? நல்லா ரசிச்சேன்.  நன்றி.

எனக்கு மறுபடியும் கெளரவம் தேடித்தந்திருக்கிறீர்கள். பெருமைப் படுத்துகிறீர்கள்.  திக்குமுக்காடிப்போகிறேன். நன்றி என்பது இங்கே வெறும் வார்த்தையே.

2011/10/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>


இடம், பொருள், ஏவல் கருதி சில கருத்துக்கள். அதற்கு முன்னால் ஒரு பிரார்த்தனை:‘பிள்ளையாரப்பா! என்னை வம்பில் மாட்டி விடாதே. மாட்டினாலும் கழட்டி விடு’. 
இன்னம்பூரான்
05 10 2011
VallalarSpaceVallalar.jpg
ஆதாரஸ்ருதி:
திருமதி.கீதா சாம்பசிவம்: ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்:Retrieved on Oct 5, 2011 from

Wednesday, October 2, 2013

‘லொட்!லொட்!அன்றொரு நாள்: அக்டோபர் 4




அன்றொரு நாள்: அக்டோபர் 4

Innamburan Innamburan Tue, Oct 4, 2011 at 4:20 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 4
‘லொட்!லொட்! ‘லொட்!லொட்!  ‘லொட்!லொட்!
இது என்ன ஊன்றுகோலா? அடிக்கற பெருந்தடியா? அதை விட்றா! அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே! அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா? சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.
(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)

[‘Saunters in Subramania Sivam (Sivam) (1884-1925), the spit-fire patriot clad in a loose shirt, furled dhoti and tilted turban tut-tuting his inseparable staff. The staff and his flowing beard remind one of a domineering Moses. Having shattered the calm in Navasakthi [4] office, he aggravates the situation by loudly hailing for the ‘castor-oil Mudaliyar’, his epithet for ThiruViKa. His other epithets for him are, ‘vendaikkai’ and ‘vazha vazha’, all insinuating that there is no ‘cut and thrust’ to his writings. A contributor to the weekly himself, he had come to tongue lash him for supporting an Indian marrying a foreigner. Rukmini Devi (1904-1986), the classical dancer, was marrying George Sidney Arundale (1878-1945), the Theosophist. Leading lights like the Hindu and Swadesamithran had deplored it.] 

ஒழுங்கா இருக்கு! போங்கோ! திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.


அக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:

''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''

நான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம்! அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ? ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி!) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்! அவர் ஒரு புத்தகம் போட்டார், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' இல் படித்தது

"...சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது...
சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்''.

அணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)
"அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது...’
ஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:
வ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு? அவர் யார்? என்பதை நன்கு தெளிவாக்குகிறது.

தமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:

‘...சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.
இதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை...

...சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை...

...1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்...

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்... சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்...தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்...1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.
சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்...அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.
காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்... தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார். 
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011

SubramaniyaSiva.jpg
உசாத்துணை:

.http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்த%20வாரம்%20%20கலாரசிகன்&artid=379074&SectionID=179&MainSectionID=17

Geetha Sambasivam Tue, Oct 4, 2011 at 4:33 PM


சத்தியம்.  பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் படிக்கச் சுவை.  நன்றி பகிர்வுக்கு.
2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>

எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011

Nagarajan Vadivel Tue, Oct 4, 2011 at 6:24 PM


//சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//
காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண் விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?
ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு விளக்கங்கள்
1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில் விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்
2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில் உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்
காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில் வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம் 
திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும் முதலியார் என்றே கூறிக்கொள்வர்
எனவே சுப்ரமணிய சிவா திட்டும்போது சின்ன முதலியார் விளக்கெண்ணெய் வழவழ வெண்டைக்காய் என்று சரியாகத்தான் திட்டியிருக்கிறார்
கட்டுரையின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நாகராசன்
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்
2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Tue, Oct 4, 2011 at 6:37 PM
To: mintamil@googlegroups.com
நன்றி பல. திரு.வி.க. அவர்கள் சைவ வேளாளர் தாம். நான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினேன். பிரசுரம் செய்வது எப்படி என்று தெரியவில்லை, திடீரன்று இங்கு வந்து விட்டதால்.  திரு.வி.க. அவர்களின் அலைவரிசையும், சிவா அவர்களின் அலை வரிசையும் சிறிது வேறுபட்டவை. அதனால் தான் இந்த அடை மொழிகள். இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியவர் திரு.வெ, சாமிநாத சர்மா. தற்காலம், தமிழ் மரபு கட்டளைக்கு இந்த பாமர கீர்த்திகளை ஆதாரத்துடன் கூறக்கூடியவர், திரு.பெ.சு.மணி. அவரை நேர் காணல் செய்து பயன் பெறலாம். எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்.இன்னம்பூரான்
04 05 2011

N. Ganesan Tue, Oct 4, 2011 at 7:04 PM





On Oct 4, 7:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//
> காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண்
> விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?
> ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு
> விளக்கங்கள்
> 1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில்
> விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்
> 2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில்
> உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்
> காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில்
> வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ
> முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம்
> திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும்
> முதலியார் என்றே கூறிக்கொள்வர்
பாரதிதாசனாரும் இசைவேளாளர். மிக இளமையிலேயே
சங்கீதம், முருகன் மீதும், கீர்த்தனைகள் பாடியவர்.
சீகாழி முத்துதாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை,
... தமிழின் இசைவளம் கூட்டியவர்கள் இசைவேளாளர்களே.
தமிழ் சினிமாவின் முதல் 50 ஆண்டுகளில் நடிகைகள்
பலரும் காவிரிக்கரை கிராமங்களின், மற்ற ஊர்களின்
நட்டுவனார் குடும்பங்கள். குலத்தொழிலாக சங்கீதமும்,
தமிழும் பின்னி இருந்தது சினிமா, டிவி போன்றவற்றால்
வளர சாத்தியம் ஆனது. ஏ. ஆர். ரகுமானின் தந்தையாரும்
சென்னைக்கருகே உள்ள சிற்றூரின் பழங் கோயிலில்
இசை வளர்த்த குடும்பத்தவரே. அவர்களும் முதலியார்
என்பார்கள்.

நா. கணேசன்

> எனவே சுப்ரமணிய சிவா திட்டும்போது சின்ன முதலியார் விளக்கெண்ணெய் வழவழ
> வெண்டைக்காய் என்று சரியாகத்தான் திட்டியிருக்கிறார்
> கட்டுரையின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
> நாகராசன்
>
> காஞ்சிபுரம்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%...>மாவட்டத்துச்
> சைதாப்பேட்டை<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%...>வட்டத்துத்
> *துள்ளம்* என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு
> ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ> நாட்டில்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4_%E0%AE%A8%E0...>
> திருவாரூர்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%...>என்ற
> ஊரைச் சேர்ந்தவர்கள்.
>
> கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர்.
> ஆசிரியத் தொழிலுடன்
> வணிகமும்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%...>புரிந்தவர்.
> இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண்
> குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை
> மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள்
> ஒருவரே கல்யாணசுந்தரனார்
> 2011/10/4 Innamburan Innamburan <innambu...@gmail.com>

[Quoted text hidden]
> ...
>
> read more »

[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 4, 2011 at 8:24 PM
To: mintamil@googlegroups.com
To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.

Nagarajan Vadivel Tue, Oct 4, 2011 at 8:44 PM


முதலியார் என்ற ஜாதி தமிழகத்தின் பல பகுதிகளில் மற்ற ஜாதியினரையும் குறிப்பிடுவதா்க அமைந்து குழப்பத்தை உருவாக்குகிறது
ஆற்காட் முதலியார், கைக்கோளர், செங்குந்தர் இசை வேளாளர், துளுவ வேளாளர் என்று பல பெயர்கள்.  உயர்ஜாதி பிற்பட்டோர் என்று சமூகத்தில் முன்னேறியவர் பின் தங்கியவர் என்ற இரு நிலைகள்
நீதிக்கட்சியின் கடாட்சத்தால் கல்விபெற்று அரசு அலுவலகத்தில் முக்கிய பதவிகளைப் பெற்று ஒரு வலிமைபெற்ற குழுவாக உருவானது
சுய்ரியாதை சுதந்திரப்போராட்டம் காங்கிரஸ் திராவிட அரசுகளில் முதல்வர் பதவிவரை கைவசப்படுத்திய சாதனை என இந்த சாதிப்பிரிவு தமிழகத்தின் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது பெருமைக்குரிய ஒன்றாகும்
நாகராசன்
2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.

[Quoted text hidden]

rajam Tue, Oct 4, 2011 at 8:54 PM

சத்தியம்! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு! நன்றி! 


Die Wende! :அன்றொரு நாள்: அக்டோபர் 3




அன்றொரு நாள்: அக்டோபர் 3

Innamburan Innamburan Mon, Oct 3, 2011 at 12:07 AM


அன்றொரு நாள்: அக்டோபர் 3
 Die Wende! 
Deutsche Einheit!! 
Tag der Deutschen Einheit!!!

ரொம்ப சந்தோஷம். இந்த ‘அன்றொரு நாள்’ இழைகளுக்கு பின்னூட்டம் கேட்டு அலையும் எனக்கு, ஸுபாஷிணியின் ‘முன் வரும் மணியோசை’ நல்வருகை; டானிக்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் வெஸ்ட்ஃபாலியா பகுதியில் வளைய வரும் போது, இரண்டு உலகப்போர்களின் பலத்த அடியையும், பின்வந்த பொருளியல் சங்கடங்களையும் அலாக்கா சமாளித்து வளம் செழித்த நாடாக திகழ்ந்த ஜெர்மனியை போற்றாமல் இருக்க முடியவில்லை. அக்டோபர் 3, வருடா வருடம் அங்கு திருவிழா நாள். ஒரு காலகட்டத்தில், குறுநில அரசுகளின் தொகுப்பாக இருந்த ஜெர்மனி ஒன்றுபட்ட ஆளுமையாக வலிமை பெற்றதும், ஹிட்லர் என்ற முரண் முள்ளாகத் தைத்ததால், அவை யாவும் ஒழிந்ததும், நாடு இரண்டு பட்டதும், அந்த பாகப்பிரிவினையின் அவமான சின்னமாக நின்ற பெர்லின் வால் என்ற சுவர் நவம்பர் 9, 1989 அன்று இடிக்கப்பட்டதும்  வரலாறு. சில நெருடல்களை தவிர்க்க, விழா எடுப்பது அக்டோபர் 3-ம் தேதி, வருடா வருடம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நகரத்தில். விழாக்கோலம் பூண்ட ஜெர்மனியை, திருமதி. ஸுபாஷிணி அனுப்பிய விழியங்களில் கண்டு களிக்கவும். நெருடல்கள் பிறகு பேசப்படும். இந்தியாவின் குடியரசு விழாவை டில்லியில் நடத்தும் கோலாகலத்தை இந்தியாவின் மாநகரங்களில், ஜெர்மனி மாதிரி ஏன் கொண்டாடக்கூடாது?
ஒரு நாட்டின் வரலாற்றை, முன்னிருந்து பின்னும் (பிஸ்மார்க் என்ற ஜெர்மன் சாணக்யரிலிருந்து ஏஞ்சலா மெர்க்கல் என்ற தற்கால அதிபர் வரை), பின்னிருந்து முன்னும் (ஐரோப்பாவில் இன்றைய ஜெர்மனியின் உச்சாணிக்கிளையிலிருந்து ஹிட்லர் காலத்து அதல பாதாளம் வரை), ஒரு நிகழ்வை மையப்படுத்தியும் (மதில் விலக, மதி துலங்க...) படித்து வருவோமானால் சுவை மிகும்;பயன் கூடும். 
ஏஞ்சலா மெர்க்கல் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வந்த சராசரி பெண்மணி; விஞ்ஞானி. ஓஹோ வசீகரம், ஆஹா படித்த மேதை, ஆட்டிப்படைப்பவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், ஜெர்மனியிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, உலக ஆளுமையிலும் சரி, இவுக தான் உசத்தி. மக்கள் ஆதரவு, இவருக்கு ஹனுமான் பலம். ஜெர்மனியின் அதிபர்களில் கோன்ராட் அடெனாயர், வில்லி ப்ரேண்ட், ஹெல்மத் கோஹ்ல் ஆகியோரை எளிதில் மறக்கமுடியாது. அந்த வரிசையில் இவரும் சிறப்புற விளங்குகிறார்.ஜெர்மனியின் ஒரு நற்பண்பு, பெரும்பான்மையோர் ஒத்துப்போகும் தன்மை (Consensus) ~பணி செய்யுமிடம், சமுதாயம் & அரசியல். பலன்: ஏற்றுமதி அதிகம்; கட்டுக்கோப்பான ஊழியமும், கூலியும்; பலிக்கும் பட்ஜட்.
ஜெர்மனி ஒன்று பட்டது என்றால், அது ஹெல்மத் கோஹ்ல் என்ற அதிபரின் கைங்கர்யம் என்று சிறுபிள்ளையும் சொல்லும். பெர்லின் சுவர் விழுந்ததும் அவர் ஆற்றிய உரையை இந்தியர்களும் கேட்க வேண்டும். மேற்கு ஜெர்மனியின் தேசீய கீதத்திலிருந்து, முதல் அடி எடுத்து,
’...இது ஒற்றுமை பேசுகிறது; நியாயம் பேசுகிறது; விடுதலை பேசுகிறது; நம் தந்தையர் தந்த சுதந்திர ஜெர்மனி வாழிய! வாழியவே! ஒன்றுபட்ட ஐரோப்பாவும், அதன் சுதந்திரமும் வாழிய! வாழியவே!..’( ஒன்றுபட்ட ஐயோப்பாவின் தந்தை ராபர்ட் ஷூமன் என்ற ஃபிரன்ச்சுக்காரரை பற்றி பிறகு பேசலாம்.)
‘ஊரு ரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொம்மாளம்!’ இது வரை சொகுசாக இருந்த ஃபிரான்ஸும், இங்கிலாந்தும் முணுமுணுத்தன. ஹூ கேர்ஸ்? அதிபர் கோஹ்ல், சாமர்த்தியமாக, தற்பெருமையை சற்றே மூட்டை கட்டி வைத்து விட்டு, அடிக்கடி மாஸ்கோ சென்று, கோர்பச்சோவ்வை தன்னக்கட்டி, அக்டோபர் 3, 1990 அன்று திருவிழாவை துவக்கி வைத்தார். அவருடைய பலம், மக்கள் ஆதரவை கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டது, சுய நம்பிக்கை, வரலாற்றின் நாடி பிடித்துப்பார்க்கும் திறன். பிற்காலம், கிழக்கு ஜெர்மனியை சேர்த்துக்கொண்டதால் விளைந்த அதீத செலவு, ஊழல் புகார் எல்லாம் விவரிக்க இது இடம் இல்லை; தேவையும் இல்லை. ஹெல்மெட் மாறிய கதை:
ஜெர்மனியின் அடிப்படை சட்டம் அதிபரின் மீது பார்லிமெண்ட் ஏறி மிதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. ஹெல்மெட் ஷ்மிட் என்ற அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் 256: 235 என்ற அளவில் வெற்றி பெற்றததின் பயனாக 1982ல் ஹெல்மெட் கோஹ்ல் பதவி ஏற்றார். அங்கு தான் அவருக்கு இரண்டு நாள் முன் குறிப்பிட்ட கூடு விட்டு கூடு பாயும் தேர்தல் விதி அபூர்வமாக உதவியது. பின்னணியில் இருந்தது, பதவி இழந்த ஹெல்மெட்டின் கட்சியும், கூட்டுக்கட்சிகளும் சில வாரங்களாக நடத்திய உள்குத்து, பாசாங்கு, முட்டுக்கட்டைகள் எனலாம். ஹெல்மெட் ஷ்மிட்டின் வெளியுறவு அமைச்சர் கென்ஷர் தான் ஒரு குட்டிக்கட்சி அமைத்து ஹெல்மெட் கோஹ்ல் பக்கம் ஓடி வந்து விட்டார். (ப.சி. அவர்கள் பா. ஜ. க.வில் ஐக்யம் ஆனால் மாதிரியா? என்றெல்லாம் கேட்கக்கூடாது! ஜெர்மனி ஜெர்மனி; இந்தியா இந்தியா!). என்னது இது? கோஹ்ல் நிம்மதியாக ஆட்சி புரியமுடியுமா? என்று கூட கேள்வி எழுந்தது. அவருடைய அரசியல் சாமர்த்தியம் கை கொடுக்க, அவர் 16 வருடங்கள் பதவியில் இருந்தார், திரும்பதிரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டு.
உகந்த தருணம் வரும்போது விலி ப்ரேண்ட், கொன்ராட் அடுனாய்ர் ஆகிய அதிபர்களை பற்றி பேசலாம். திருவிழாவின் ஊடே வந்த நெருடல்களை கழட்டி விடுவோம். பெர்லின் மதில் விழுந்த தினமாகிய நவம்பர் 9, உகந்த திருவிழா நாள் என்றாலும் அதே நாளில் 1918ல் ஜெர்மானிய குடியரசு பிரகடனம் செய்ய்ப்பட்டது என்றாலும், அதே நாளில் 1923 வருடம் ஹிட்லரின் முதல் சதி முறியடிக்கப்பட்டது என்றாலும், ஐயகோ! அதே நாளில் 1938ல் ஹிட்லரின் யூதவதம் தொடங்கியது. எனவே, அந்த நாளை தவிர்க்க எண்ணி, இன்றைய தினம் திருவிழா நாளாகியது.
சுபம்!
இன்னம்பூரான்berlin+wall+germany.jpg
03 10 2011
பி.கு. அன்றொரு நாள், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏன் ‘ஏடன்’ கூட பாரத கண்டத்தில் இருந்தன. ஹூம்!

உசாத்துணை:

ஸுபாஷிணி உபயம்:





Tuesday, October 1, 2013

'சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ...’! 1869 லிருந்து 1948 வரை & 1948 லிருந்து 2013 வரை





'சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ...’!
1869 லிருந்து 1948 வரை & 1948 லிருந்து 2013 வரை
Inline image 1

மஹாத்மா காந்தி ஜனித்த தினமாகிய அக்டோபர் 2 அன்று அவரை புகழ்ந்து பல கட்டுரைகள் பிரசுரம் ஆகும், பல மொழிகளில், உலகெங்கும். இந்தியா அவரை தனது பிதுரார்ஜித சொத்தாக உரிமை கொண்டாடும். காங்கிரஸ் கட்சி தன்னை அவரது தலைமகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும். பிரமுகர்கள் துப்பாக்கி பாதுகாப்புடன் ராஜ்காட் தகனபூமிக்கு சென்று, முகபாவத்தை சோகவடிவில் பாவித்துக்கொண்டு, மலர் தூவி, பஜனை செய்து, அந்த அனாதைப்பக்கிரிக்கு ராஜமரியாதை செய்வார்கள். மற்ற நகரங்களிலும், குக்கிராமங்களிலும், பட்டி தொட்டிகளிலும், அவரவர் அரசியல் திட்டத்திக்கேற்ப, காந்தி கீதங்கள் இசைக்கப்படும். அபஸ்வரம். நையாண்டி மேளம் எல்லாம் மேடைகளை அலங்கரிக்கும் இவையெல்லாம் மறுநாள் மறந்து விடும் ஸ்மசான (சுடுகாட்டு) வைராக்கியங்கள் அல்ல. வருடாவருடம் தத்க்ஷணமே உதறப்பட்ட சத்திய பிரமாணங்கள் அவை.

‘...நான் உம்மை நண்பரே என்று விளிப்பதின் காரணம், எனக்கு எதிரிகள் இல்லை என்பதே. கடந்த 33 வருடங்களாக, மனித குலத்தை, இனம், நிறம், மதம் போன்ற வித்தியாசங்களை புறக்கணித்து, பேணுவதிலும், மனித நேயம் நாடுவதிலும் கழித்து வந்திருக்கிறேன்...’. என்று ‘பேயரசு’ புரிந்த ஹிட்லருக்கு கிருஸ்தமஸ் விழாவை ஒட்டி 1940ல் லிகிதம் வரைந்த காந்தி மஹான் ஒரு விந்தை மனிதர். அதிசய தேவதை. ஆண்டவனின் பிரதிமை. யாவரையும் போல ஒரு பாமர மனிதனாக ஜனித்த மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி, புழுவாய் பிறந்தது வண்ணத்துப்பூச்சியாக உருவெடுத்த ஜந்துவைப் போல, காந்தி மஹானாக மாறி, எரிநக்ஷத்திரமாக வீழ்ந்த கதை, காதை, காப்பியம் எல்லாம் ஒரு ‘பெரிய புராணம்’. ‘இத்தகைய அருந்தகை இப்புவியின்கண் நடமாடினரோ என்று வருங்கால தலைமுறைகள் வியந்து வரும்’ என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய ஆரூடம் பொய்த்து விட்டதோ என்ற கவலை எம்மை வாட்டுகிறது. யாம் அறிந்த காந்தி மஹான் 1948க்கு முந்தியவர். தென்னாப்பிரிக்காவில் ஞானஸ்னானம். அங்கு, பாமரமக்களுக்கு சத்தியத்தின் பராக்கிரமத்தை உணர்த்தி, அரசு அஞ்சிய புரட்சியை தோற்றுவித்தவர். அதன் மூலம் நிறவேற்றுமையில் திளைத்த வெள்ளையர் அரசை திகைக்கவைத்து, அடி பணிய வைத்தவர். தன்னை சிறைப்படுத்திய ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு தான் தைத்த செருப்பை பரிசாக அளித்தவர். சத்யமேவ ஜயதே. பாபு ஏவ ஜயதே.

இந்திய சுதந்திர தினம் ஆகஸ்டு 15, 1948. கோலாகலம் இயல்பானதே. மகிழ்ச்சிகரமான தினம். உலகமே நம்மை போற்றிய தினம். பருப்பில்லாமல் கல்யாணம் நடந்தது. (என்ன கல்யாணமோ! இன்று சீரழிகிறது.) ஆம். ‘பாபு’ (அவரை விளிக்கும் சொல், அதே.) டில்லியில் இல்லை. வங்காளத்தில் சமயச்சண்டையில் சிக்கிக்கிடந்த நொவகாளி குக்கிராமங்களில் சாந்தி நிலவவேண்டும் என்ற குறிக்கோளை பரப்ப சென்றிருந்தார். இந்த மாதிரியான யாத்திரை அவருக்கு புதிது அல்ல. தென்னாப்பிரிக்காவில் கெட்டிக்கப்பட்ட துவம்சுக்கட்டையல்லவோ அவரது சலனமற்ற திட மனது. அங்கு புடம் போடப்பட்ட இந்த பத்தரைமாத்துத் தங்கம் ஒரு புருஷோத்தமன். மனிதருள் ஒரு மாணிக்கம். அவருடைய சாதனைகளின் தனிச்சிறப்பு அவற்றின் புனிதமான பின்னணி. எனினும்,1948க்கு பிறகு அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட, கொலையுண்டு உயிர் நீத்த அவரது ஆத்மாவின் நிழலை கூட சிறிதளவே அறிவார்கள். அதனால் தான் அவரது ‘பெரிய புராணத்தை’ (1) 1869 லிருந்து 1948 வரை என்றும், (2) 1948 லிருந்து 2013 வரை இரு பகுதிகளாக அமைத்துள்ளேன். பகுதி (2) முதலில் வரும்;அதுவும் 2013லிருந்து பின்னோக்கி. அவருடைய புனிதமான சாதனைகளை சிறிதேனும் புரிந்து கொள்ளவேண்டி, பகுதி(1)க்கு அறிமுகம் பகுதி (2). இது வரலாற்றின் கோலம், அலங்கோலம், ஓலம், வ்யாகூலம்.

‘Quo Vadis’ (எங்கே செல்கிறாய்?) என்ற திரைப்படம் அந்தக்காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. ஏசு பிரானின் இறை தூதர் தடுமாறி தடம் மாறும்போது, அவரை தடுத்தாட்கொண்ட வினா, அது. இவ்வருடம் (2013) பாரதமாதா, இந்தியாவின் போக்கைக்கண்டு, தீராத விசனத்தில் ஆழ்ந்திருக்கிறாள். தனது நாட்டில் ஜனநாயகத்தின் பினாமியின் ஆளுமையும், அதனுடைய பிரதிநிதித்துவம் பிரதிகூலமாக செயல்படுவதையும் கண்டு, மனம் நொந்து அருமந்த புத்திரன் ‘பாபு’ தகிக்கப்பட்ட பூமியை நோக்கி கண்ணீர் சொரிகிறாள். அன்று கலோனிய அரசு கொள்ளை அடித்தது என்று வாசாலகம் பேசுவோர் வெளிநாடுகளில் நம் மக்களின் செல்வத்தை ஒளித்து வைக்கும் தேசத்துரோகத்தை கண்டுகொள்வதில்லை. ஏழை பாழை வயிற்றில் மண் அடித்து, அரசியல் ஆதாயத்துக்கு வித்தும், நாத்தும் நடுகிறார்கள், வம்சாவளியின் செல்வத்தைப் பெருக்கி. இன்று வரை கனம் கோர்ட்டார் அளித்த தீர்வுகளோ, தணிக்கைத்துறையின் விமர்சனங்களோ, சான்றுகளுடன் தான் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை குலைப்பதில் வீராவேசம் காட்டுபவர்கள், வாய்மைக்குக் களங்கம் விளைப்பதால், மஹாத்மா காந்தியின், ‘Truth is God’ என்ற சத்யாக்ரஹ கோட்ப்பாட்டை காலால் எட்டி உதைப்பவர்கள். இந்த நிலக்கரி அடாவடி அலாட்மெண்டை பாருங்கள். அது காந்திஜியை அவமதிக்கும் ‘ஆளைக்காட்டு; ரூலை சொல்கிறேன்.’ என்ற நிர்வாகக்கேடு. 2ஜி அவமானம் இந்தியாவை கேலிக்கு உள்ளாக்கிய போது, பாபு என்ன சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். ‘ஏன் பிறந்தேன்?’ என்று பெருங்குரல் எடுத்து அழுதிருப்பார். பிரதிநிதிகளில் சிலர் சட்ட விரோதமான குற்றங்களுக்கு தண்டிக்கப்பெற்றவர்கள். அவர்களின் ‘பிரதிநிதித்துவத்தை’ பறிப்பதைப்பற்றி உச்ச நீதி மன்றம் அளித்த காந்தீய தீர்ப்பை முறியடிக்க சட்டம் கொணர்ந்தது, பாபு மீது ஒரு தாக்குதல். அது நிறைவேறாதது கண்டு அழிச்சாட்டியமாக அவசரச்சட்டம் கொணர்ந்தது, பாபு மீது சவுக்கடி. ஜனாதிபதியின் விவேகமும், பிரதமரையும், அமைச்சரவையையும் இளவல் உலுக்கியதும், ப்ளேட்மாரிகளின் கூச்சல்களும், பாபுவுக்கு சமாதானம் செய்யும் வகையில் அமையவில்லை. அவர்களின் இலக்கு: தேர்தலில் வெற்றிக்கனி என்று அவர்களே கூறுகிறார்கள். பிலாக்கணம் பாடினால் மட்டும் மாண்டோர் இந்த மாநிலத்தில் புனர்ஜன்மம் எடுக்கப்போவதில்லை. 

ஆனால், அன்று காந்தி மஹான் அடி பணிந்த மக்கள், அவருடைய ஆத்மாவின் அந்தரங்கம் அறிவார்கள் என்றும் வாய்மையின் மறு அவதாரம் கை கூடும் என்றும் நினைக்க ஆசையாக இருக்கிறது. ‘கண்ணீர் விட்டு வளர்த்தப் பயிரல்லவோ, நம் சுதந்திரம்!’. சற்றே மனோபலத்துடன் (மோஹனம் வேண்டாம்.) மஹாத்மா காந்தியின் ஆத்ம பயணத்தை நோக்குவோம். அவர் தன்னையே இடைவிடாமல் ஆத்மபரிசோதனைக்கு உட்படுத்தியவர். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது ஒரு வழக்கறிஞராக. வாழ்ந்து காட்டியதோ ஒரு தர்மவான் ஆக. அவருடைய அந்தராத்மா தான் அவருடைய கலங்கரை விளக்கு. அவரது சட்ட மீறல் தர்மங்களை நேரில் கண்டு பங்கேற்றவர்கள் தான் ஓரளவு புரிந்து கொண்டனர். பிற்கால சந்ததிகள் அதை சுயநலத்துக்கு பயன் படுத்தியது கண்கூடு. மேலும் சொல்லப்போனால், அவருக்கு அந்த தர்மம் தான் தலைமையை வாங்கிக்கொடுத்தது. கோடானு கோடி மக்களை தன் வசம் இழுத்துக்கொண்டது. இப்படித்தான் விடுதலை வேள்வி கொழுந்து விட்டு எரிய துவங்கியது. அவருடைய ஆன்மீகம் அநேகருக்குப் புரியவில்லை; அது அரசியலுக்குப் புதிய வேதம். இலக்கு அடைவதை விட, வழிநடை நெறி தான் அவருக்கு பிரதானம். அதனால் தான் ‘செளரி செளரா’ ரத்து. விடுதலையை விட அதன் உன்னதம் தான் முக்கியம். அங்கு தான் 1947லிருந்து 2013 வரை, நாம் மோசம் போய் கொண்டிருக்கிறோம். நான் எந்த கட்சியை பற்றியும் விமர்சிக்கவில்லை. மக்கள் ஏமாந்து போனதை கண்டு புலம்புகிறேன். ஒரு பிடி உப்பு அள்ளி கலோனிய அரசை ஆட்டிப்படைத்த பாபு, இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை, ‘ஒரு படி ஏறினால் போதும், இப்போது.’ அவருக்கு பின் வந்தவர்கள் ஏணியின் படிகளை உடைத்தனர், மற்றவர் ஏறக்கூடாது என்று. ஆண்டவா! ஏன் இந்த தண்டனை எம் அன்னைக்கு?

பாபுவுக்கு இறைவனோடும் அன்யோன்யம். மக்களோடும் அன்யோன்யம். அவர் எது செய்தாலும் மக்கள் மன்றத்தின் முன் போய் நிற்பார். மனித நேயத்தின் மறு உரு பாபு. அவருடன் பழகியவர்கள் யாவரையும் வசீகரம் செய்து விடுவார், பொக்கை வாய் சிரிப்புடன். அவருடன் ஒத்துப்போகாதவர்கள் பலர். வாதித்து வாகை சூடுவதை விட, கொள்கையின் தரம் பொருட்டு, பிரதிவாதியை தன் வசம் செய்து கொள்வது தான், அவருடைய அணுகுமுறை.
மஹாத்மா காந்தியை பற்றிய உசாத்துணைகள், பல பக்கங்களை நிரப்பும். தினந்தோறும் நாம் யாவரும் பாபுவை பற்றி ஒரு பக்கம் படித்தால் கூட, நாட்டை உய்விக்க வழி பிறக்கலாம். 

காந்தி ஸ்மரணம் தேச உத்தாரணம்.


இன்னம்பூரான்



coral shree Tue, Oct 1, 2013 at 3:22 PM

அருமையான நினைவுகூரல் ஐயா. பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவளா


Geetha Sambasivam Tue, Oct 1, 2013 at 3:24 PM

அன்பார்ந்த ஐயா,


அருமையான இடுகை.  பலமுறை படித்தேன்.  நெஞ்சம் கலங்கியது.  ஒரு சின்ன விஷயம்.


மூணாவது பத்தியின் ஆரம்ப வரிகளைக் கொஞ்சம் சரி பாருங்கள்.


//இந்திய சுதந்திர தினம் ஆகஸ்டு 15, 1948. //

என்று கொடுத்திருக்கிறீர்கள்.  இந்திய சுதந்திர நாள் ஆகஸ்ட் 15, 1947 க்குப் பின்னர் வந்த ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டிலேயே காந்தி சுடப்பட்டுவிட்டார் அல்லவா?  ஆகவே ஆகஸ்ட் பதினைந்து அவர் இறந்த பின்னர் வரும் முதல் சுதந்திர தினம் என்ற பொருளில் சொல்லி இருக்கிறீர்களா?   ஏனெனில் அடுத்து வரும் வாக்கியங்களில் நொவகாளி சென்றதையும் குறித்துள்ளீர்கள். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.  தயவு செய்து மன்னிக்கவும்.


Innamburan S.Soundararajan Tue, Oct 1, 2013 at 3:39 PM

இந்திய சுதந்திர வருடம் 1947 தான். என் உள்மனது இந்த வினாவை எதிர்நோக்கியதோ! அதனால் தான் காரிய தவறோ! சுதந்திர வருடம் 1948 என்று தான் திட்டம். ஆனால், காந்திஜியை/ராஜாஜியை தவிர மற்றவர்கள் அவசரப்பட்டார்கள். வயசாறது இல்லையா? ஜின்னா வேறு வன்முறை துவக்கினார். நொவகாளி பிரச்னை 1948 என்றால் எழுந்திருக்காது என்ற ஹேஷ்யம் பலமாக இருந்தது. நான் அன்றொரு நாள் தொடரில் எழுதிய கோணாமாணா ரேட்க்ளிஃப் அவார்ட் வந்திருக்காது. பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் தான், நேருஜியின் இடைக்கால அரசில் நிதி அமைச்சர். விஷய்ம் தெரிந்த அவர், 1948 என்ற பக்ஷத்தில் பலகோடி கேட்டு உபத் ரவம் செய்திருக்க்காமல் இருந்திருக்கலாம். காந்திஜி அதை கொடுக்கச்சொல்லி வற்புறுத்தும் நிலை வந்திருக்காது. கோட்ஸேக்கும் கொலை நோக்கம் வராமல் இருந்திருக்கலாம். இதெல்லாம் ஹேஷ்யம். பின்னணி அறிந்த ஹேஷ்யம்.
நன்றி, கீதா.



சொ. வினைதீர்த்தான் Tue, Oct 1, 2013 at 3:43 PM

இ.சாரின் நடையழகில் அருமையான இடுகை. காந்தி மகானுக்கான சிறந்ததொரு அஞசலி.

இன்று காலை நாட்டு நலப் பணி திட்ட மாணவர், மாணவியர் இடையில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் காந்தியடிகள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு முதல்வர் முனைவர் சந்திரமோகன் அழைப்பில் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தனி இழையில் எழுதுகிறேன்.
இ.சாருக்கு நன்றி.

அன்புடன்சொ.வினைதீர்த்தான்

Geetha Sambasivam Tue, Oct 1, 2013 at 3:48 PM

அருமையானதொரு விளக்கத்துக்கு நன்றி ஐயா.  உங்கள் ஞாபகசக்திக்குத் தலை வணங்குகிறேன்.