'சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ...’!
1869 லிருந்து 1948 வரை & 1948 லிருந்து 2013 வரை
மஹாத்மா காந்தி ஜனித்த தினமாகிய அக்டோபர் 2 அன்று அவரை புகழ்ந்து பல கட்டுரைகள் பிரசுரம் ஆகும், பல மொழிகளில், உலகெங்கும். இந்தியா அவரை தனது பிதுரார்ஜித சொத்தாக உரிமை கொண்டாடும். காங்கிரஸ் கட்சி தன்னை அவரது தலைமகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும். பிரமுகர்கள் துப்பாக்கி பாதுகாப்புடன் ராஜ்காட் தகனபூமிக்கு சென்று, முகபாவத்தை சோகவடிவில் பாவித்துக்கொண்டு, மலர் தூவி, பஜனை செய்து, அந்த அனாதைப்பக்கிரிக்கு ராஜமரியாதை செய்வார்கள். மற்ற நகரங்களிலும், குக்கிராமங்களிலும், பட்டி தொட்டிகளிலும், அவரவர் அரசியல் திட்டத்திக்கேற்ப, காந்தி கீதங்கள் இசைக்கப்படும். அபஸ்வரம். நையாண்டி மேளம் எல்லாம் மேடைகளை அலங்கரிக்கும் இவையெல்லாம் மறுநாள் மறந்து விடும் ஸ்மசான (சுடுகாட்டு) வைராக்கியங்கள் அல்ல. வருடாவருடம் தத்க்ஷணமே உதறப்பட்ட சத்திய பிரமாணங்கள் அவை.
‘...நான் உம்மை நண்பரே என்று விளிப்பதின் காரணம், எனக்கு எதிரிகள் இல்லை என்பதே. கடந்த 33 வருடங்களாக, மனித குலத்தை, இனம், நிறம், மதம் போன்ற வித்தியாசங்களை புறக்கணித்து, பேணுவதிலும், மனித நேயம் நாடுவதிலும் கழித்து வந்திருக்கிறேன்...’. என்று ‘பேயரசு’ புரிந்த ஹிட்லருக்கு கிருஸ்தமஸ் விழாவை ஒட்டி 1940ல் லிகிதம் வரைந்த காந்தி மஹான் ஒரு விந்தை மனிதர். அதிசய தேவதை. ஆண்டவனின் பிரதிமை. யாவரையும் போல ஒரு பாமர மனிதனாக ஜனித்த மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி, புழுவாய் பிறந்தது வண்ணத்துப்பூச்சியாக உருவெடுத்த ஜந்துவைப் போல, காந்தி மஹானாக மாறி, எரிநக்ஷத்திரமாக வீழ்ந்த கதை, காதை, காப்பியம் எல்லாம் ஒரு ‘பெரிய புராணம்’. ‘இத்தகைய அருந்தகை இப்புவியின்கண் நடமாடினரோ என்று வருங்கால தலைமுறைகள் வியந்து வரும்’ என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய ஆரூடம் பொய்த்து விட்டதோ என்ற கவலை எம்மை வாட்டுகிறது. யாம் அறிந்த காந்தி மஹான் 1948க்கு முந்தியவர். தென்னாப்பிரிக்காவில் ஞானஸ்னானம். அங்கு, பாமரமக்களுக்கு சத்தியத்தின் பராக்கிரமத்தை உணர்த்தி, அரசு அஞ்சிய புரட்சியை தோற்றுவித்தவர். அதன் மூலம் நிறவேற்றுமையில் திளைத்த வெள்ளையர் அரசை திகைக்கவைத்து, அடி பணிய வைத்தவர். தன்னை சிறைப்படுத்திய ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு தான் தைத்த செருப்பை பரிசாக அளித்தவர். சத்யமேவ ஜயதே. பாபு ஏவ ஜயதே.
இந்திய சுதந்திர தினம் ஆகஸ்டு 15, 1948. கோலாகலம் இயல்பானதே. மகிழ்ச்சிகரமான தினம். உலகமே நம்மை போற்றிய தினம். பருப்பில்லாமல் கல்யாணம் நடந்தது. (என்ன கல்யாணமோ! இன்று சீரழிகிறது.) ஆம். ‘பாபு’ (அவரை விளிக்கும் சொல், அதே.) டில்லியில் இல்லை. வங்காளத்தில் சமயச்சண்டையில் சிக்கிக்கிடந்த நொவகாளி குக்கிராமங்களில் சாந்தி நிலவவேண்டும் என்ற குறிக்கோளை பரப்ப சென்றிருந்தார். இந்த மாதிரியான யாத்திரை அவருக்கு புதிது அல்ல. தென்னாப்பிரிக்காவில் கெட்டிக்கப்பட்ட துவம்சுக்கட்டையல்லவோ அவரது சலனமற்ற திட மனது. அங்கு புடம் போடப்பட்ட இந்த பத்தரைமாத்துத் தங்கம் ஒரு புருஷோத்தமன். மனிதருள் ஒரு மாணிக்கம். அவருடைய சாதனைகளின் தனிச்சிறப்பு அவற்றின் புனிதமான பின்னணி. எனினும்,1948க்கு பிறகு அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட, கொலையுண்டு உயிர் நீத்த அவரது ஆத்மாவின் நிழலை கூட சிறிதளவே அறிவார்கள். அதனால் தான் அவரது ‘பெரிய புராணத்தை’ (1) 1869 லிருந்து 1948 வரை என்றும், (2) 1948 லிருந்து 2013 வரை இரு பகுதிகளாக அமைத்துள்ளேன். பகுதி (2) முதலில் வரும்;அதுவும் 2013லிருந்து பின்னோக்கி. அவருடைய புனிதமான சாதனைகளை சிறிதேனும் புரிந்து கொள்ளவேண்டி, பகுதி(1)க்கு அறிமுகம் பகுதி (2). இது வரலாற்றின் கோலம், அலங்கோலம், ஓலம், வ்யாகூலம்.
‘Quo Vadis’ (எங்கே செல்கிறாய்?) என்ற திரைப்படம் அந்தக்காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. ஏசு பிரானின் இறை தூதர் தடுமாறி தடம் மாறும்போது, அவரை தடுத்தாட்கொண்ட வினா, அது. இவ்வருடம் (2013) பாரதமாதா, இந்தியாவின் போக்கைக்கண்டு, தீராத விசனத்தில் ஆழ்ந்திருக்கிறாள். தனது நாட்டில் ஜனநாயகத்தின் பினாமியின் ஆளுமையும், அதனுடைய பிரதிநிதித்துவம் பிரதிகூலமாக செயல்படுவதையும் கண்டு, மனம் நொந்து அருமந்த புத்திரன் ‘பாபு’ தகிக்கப்பட்ட பூமியை நோக்கி கண்ணீர் சொரிகிறாள். அன்று கலோனிய அரசு கொள்ளை அடித்தது என்று வாசாலகம் பேசுவோர் வெளிநாடுகளில் நம் மக்களின் செல்வத்தை ஒளித்து வைக்கும் தேசத்துரோகத்தை கண்டுகொள்வதில்லை. ஏழை பாழை வயிற்றில் மண் அடித்து, அரசியல் ஆதாயத்துக்கு வித்தும், நாத்தும் நடுகிறார்கள், வம்சாவளியின் செல்வத்தைப் பெருக்கி. இன்று வரை கனம் கோர்ட்டார் அளித்த தீர்வுகளோ, தணிக்கைத்துறையின் விமர்சனங்களோ, சான்றுகளுடன் தான் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை குலைப்பதில் வீராவேசம் காட்டுபவர்கள், வாய்மைக்குக் களங்கம் விளைப்பதால், மஹாத்மா காந்தியின், ‘Truth is God’ என்ற சத்யாக்ரஹ கோட்ப்பாட்டை காலால் எட்டி உதைப்பவர்கள். இந்த நிலக்கரி அடாவடி அலாட்மெண்டை பாருங்கள். அது காந்திஜியை அவமதிக்கும் ‘ஆளைக்காட்டு; ரூலை சொல்கிறேன்.’ என்ற நிர்வாகக்கேடு. 2ஜி அவமானம் இந்தியாவை கேலிக்கு உள்ளாக்கிய போது, பாபு என்ன சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். ‘ஏன் பிறந்தேன்?’ என்று பெருங்குரல் எடுத்து அழுதிருப்பார். பிரதிநிதிகளில் சிலர் சட்ட விரோதமான குற்றங்களுக்கு தண்டிக்கப்பெற்றவர்கள். அவர்களின் ‘பிரதிநிதித்துவத்தை’ பறிப்பதைப்பற்றி உச்ச நீதி மன்றம் அளித்த காந்தீய தீர்ப்பை முறியடிக்க சட்டம் கொணர்ந்தது, பாபு மீது ஒரு தாக்குதல். அது நிறைவேறாதது கண்டு அழிச்சாட்டியமாக அவசரச்சட்டம் கொணர்ந்தது, பாபு மீது சவுக்கடி. ஜனாதிபதியின் விவேகமும், பிரதமரையும், அமைச்சரவையையும் இளவல் உலுக்கியதும், ப்ளேட்மாரிகளின் கூச்சல்களும், பாபுவுக்கு சமாதானம் செய்யும் வகையில் அமையவில்லை. அவர்களின் இலக்கு: தேர்தலில் வெற்றிக்கனி என்று அவர்களே கூறுகிறார்கள். பிலாக்கணம் பாடினால் மட்டும் மாண்டோர் இந்த மாநிலத்தில் புனர்ஜன்மம் எடுக்கப்போவதில்லை.
ஆனால், அன்று காந்தி மஹான் அடி பணிந்த மக்கள், அவருடைய ஆத்மாவின் அந்தரங்கம் அறிவார்கள் என்றும் வாய்மையின் மறு அவதாரம் கை கூடும் என்றும் நினைக்க ஆசையாக இருக்கிறது. ‘கண்ணீர் விட்டு வளர்த்தப் பயிரல்லவோ, நம் சுதந்திரம்!’. சற்றே மனோபலத்துடன் (மோஹனம் வேண்டாம்.) மஹாத்மா காந்தியின் ஆத்ம பயணத்தை நோக்குவோம். அவர் தன்னையே இடைவிடாமல் ஆத்மபரிசோதனைக்கு உட்படுத்தியவர். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது ஒரு வழக்கறிஞராக. வாழ்ந்து காட்டியதோ ஒரு தர்மவான் ஆக. அவருடைய அந்தராத்மா தான் அவருடைய கலங்கரை விளக்கு. அவரது சட்ட மீறல் தர்மங்களை நேரில் கண்டு பங்கேற்றவர்கள் தான் ஓரளவு புரிந்து கொண்டனர். பிற்கால சந்ததிகள் அதை சுயநலத்துக்கு பயன் படுத்தியது கண்கூடு. மேலும் சொல்லப்போனால், அவருக்கு அந்த தர்மம் தான் தலைமையை வாங்கிக்கொடுத்தது. கோடானு கோடி மக்களை தன் வசம் இழுத்துக்கொண்டது. இப்படித்தான் விடுதலை வேள்வி கொழுந்து விட்டு எரிய துவங்கியது. அவருடைய ஆன்மீகம் அநேகருக்குப் புரியவில்லை; அது அரசியலுக்குப் புதிய வேதம். இலக்கு அடைவதை விட, வழிநடை நெறி தான் அவருக்கு பிரதானம். அதனால் தான் ‘செளரி செளரா’ ரத்து. விடுதலையை விட அதன் உன்னதம் தான் முக்கியம். அங்கு தான் 1947லிருந்து 2013 வரை, நாம் மோசம் போய் கொண்டிருக்கிறோம். நான் எந்த கட்சியை பற்றியும் விமர்சிக்கவில்லை. மக்கள் ஏமாந்து போனதை கண்டு புலம்புகிறேன். ஒரு பிடி உப்பு அள்ளி கலோனிய அரசை ஆட்டிப்படைத்த பாபு, இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை, ‘ஒரு படி ஏறினால் போதும், இப்போது.’ அவருக்கு பின் வந்தவர்கள் ஏணியின் படிகளை உடைத்தனர், மற்றவர் ஏறக்கூடாது என்று. ஆண்டவா! ஏன் இந்த தண்டனை எம் அன்னைக்கு?
பாபுவுக்கு இறைவனோடும் அன்யோன்யம். மக்களோடும் அன்யோன்யம். அவர் எது செய்தாலும் மக்கள் மன்றத்தின் முன் போய் நிற்பார். மனித நேயத்தின் மறு உரு பாபு. அவருடன் பழகியவர்கள் யாவரையும் வசீகரம் செய்து விடுவார், பொக்கை வாய் சிரிப்புடன். அவருடன் ஒத்துப்போகாதவர்கள் பலர். வாதித்து வாகை சூடுவதை விட, கொள்கையின் தரம் பொருட்டு, பிரதிவாதியை தன் வசம் செய்து கொள்வது தான், அவருடைய அணுகுமுறை.
மஹாத்மா காந்தியை பற்றிய உசாத்துணைகள், பல பக்கங்களை நிரப்பும். தினந்தோறும் நாம் யாவரும் பாபுவை பற்றி ஒரு பக்கம் படித்தால் கூட, நாட்டை உய்விக்க வழி பிறக்கலாம்.
காந்தி ஸ்மரணம் தேச உத்தாரணம்.
இன்னம்பூரான்
No comments:
Post a Comment