Wednesday, June 5, 2013

2011/2013 ல் ராஜாஜி -2 :பொருளியல்


2011/2013 ல் ராஜாஜி -2


Innamburan Innamburan Sun, Apr 17, 2011 at 6:13 AM



 ராஜாஜி ஒரு அற்புதமான மனிதர். அறிவு, ஆற்றல், இனிமை, உவகை, ஊக்கம், எளிமை, ஏற்றம், ஒட்டணி ஆகிய அணிகளுடன், ஓஹோ என்பதையெல்லாம் தவிர்த்தத தீர்க்கதரிசியும் அடுத்தாத்து மாமாவும் அவரே. சில சமயம் அவர் இன்று 2013ல் எழுதிய மாதிரி தோற்றம். சரியான பெரிஸ்கோப் அவர்.
எனவே, கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து, அவரது கட்டுரைகளை தவணை முறையில் வெளியிடுகிறேன். . முதல் கட்டுரையை பதித்து பல நாட்கள் ஆயின. இன்று, நமது பொருளியல் நிலைமை அடி மட்டத்தில்வந்த கருத்துக்களை அடுத்த கட்டுரையில் தொகுத்து அளிக்கிறேன்
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVuOXVt3ThngxmVp_jeJQZJJCBKGsejwFWpkUuNmAczz0RuPj8Rtu1Vpr5JojKoTTBgpvHyy1t2LnEGlNai9tlVupEPF8D3en9mZ-nAxQXkAcmkmPeuB3BoFs17sfh0at3ntxRc5UMWnQ/s640/achchaariyar.jpg
இன்னம்பூரான்
05 06 2013

முன்குறிப்பு:
நண்பர்களே,

நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். இது இரண்டாவது கட்டுரை.
நமது பொருளியல் நிலைமை

‘அரசியலின் உள்ளுறைவது, தேர்தலில் எப்படியாவது வெற்றியடைவது என்று தான் அவர்கள் நம்பினார்கள். வரலாற்றில் மறைபொருள் உண்டு. அவர்கள் தேர்தலில் தோற்றல்லவோ போனார்கள்.’

இந்த மேற்கோள் யாரோ வேறு ஒரு நாட்டை/மக்களைப்பற்றி கூறியது. ஆனால் இது நமது அறிவுஜீவிகளுக்கு பொருத்தமான எச்சரிக்கை. காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பொருந்தும். நமது அரசியல்/சமூக வாழ்வியலில் தார்மீகத்துக்கு (எதிக்ஸ்) நாம் இடம் கொடுக்காவிடின், மக்கள் நம்மை விரும்பமாட்டார்கள். அவர்கள் பாமர மக்கள் தாம்; ஆனால், நன்மக்களின் ஆழ்ந்த கவனம், அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் தரம் பார்க்க உதவுகிறது. ஜோடித்ததெல்லாம் அவர்கள் நம்பமாட்டார்கள். அமைச்சர்களின் ஊதியத்தையும், படி வரும்படிகளையும் 5/10/15 விழுக்காடு குறைத்தால் கூட, அவர்களை வசப்படுத்த முடியாது. அந்த வித்தையெல்லாம் வரிப்பளுவை குறைக்கப்போவதில்லை; விலைவாசி ஏற்றத்தைத் தடுக்கப்போவதில்லை. அதன் தாக்கத்தை குறைக்கப்போவதில்லை.  சுமப்பவர்க்கு உரிய சுமைக்கூலியை குறைப்பதில் பயன் என்ன? ஆளுமையில் இருப்பவர்களின் சம்பளத்தை அதிரடியாக குறைப்பது மதியீனம். அப்படி செய்தால், ஒரு ராபெர்ட் க்ளைவ் வந்து லஞ்சத்தையும், அடக்குமுறையும் விலக்கவேண்டி வரும். ஆளுமை அருளும் வேட்கைகளை தவிர்க்குமளவுக்கு சம்பளங்கள் இருக்கவேண்டும். இந்த இடத்தில் சிக்கனம், நம் பொருளுக்கு ஆதாரமும் இல்லை; யாரையும் ஏமாற்றமுடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களை முரட்டுத்தனமாக ஏழ்மைப்படுத்துவதில் மக்களுக்கு ஈடுபாடு கிடையாது. அது எல்லாம் அந்த அந்த வகையினர்களில், அடிபட்டவர்களின் ஆசையாக இருக்கலாம்.  அரசியல் எதிரிகளுக்கு இது எல்லாம் ஆயுதமாக இருக்கலாம். ஆனால், அது மக்கள் விழைவு அன்று. மக்கள் கேட்பதெல்லாம், சுளுவான வரியும், சுமையாக இல்லாத விலைவாசியும்.

உலகெங்கும் பணவீக்கம் இருக்கிறது; ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவிலோ, ஏழைகளுக்கு கூட சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய நிலைமை. விலைவாசி ஏற்றம் தாங்கவே முடியவில்லை. (அவர் சொன்னது 1956/57ல்) பணவீக்கத்தினால், அத்யாவசிய பொருள்களின் விலை அதிகப்படி; எல்லா தரத்திலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; மத்திய வகுப்பு மக்கள் மூப்புகாலத்துக்கு சேமித்த பணத்தின் மதிப்புக்குறைவு. இது கொள்ளையில்லாமல், வேறு என்ன? முதலுக்கே மோசம். கொடுத்த கடன்/ டிபாசிட்/ சேமிப்பு/ காப்பீடு, எதுவானாலும், முதலும், வட்டியும் சேர்ந்து , அசலில் பாதி கூட தேறாது என்ற நிலை, இப்போது. மக்கள் நலம் எதில் இருக்கிறது? பொதுஜனத்தின் அன்றாட வாழ்க்கை செவ்வனே அமைவதில் தான் இருக்கிறது. இந்த முன்னேற்றம் ஏற்படும் வரை, நாட்டில் சமாதானமும், மகிழ்வும் நிகழாது. ஐயா! அது இரண்டும் தானே, மக்கள் நலத்தின் சின்னங்கள்.

வரி உயர, உயர, நாம் ஒடுக்கப்படுகிறோம். இருக்கிற துணியை வைத்து அல்லவோ சொக்காய் தைக்கவேண்டியிருக்கிறது. நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியது என்னவெனில், இந்த துணி ஜடம் இல்லை; மயங்கியது இல்லை; அதற்கு ஆத்மா உண்டு. இத்தருணம், இத்துடன் தொடர்புடைய ஒரு கருத்து: ஓஹோ என்று செலவழித்து, போர்க்களம் செல்லும் ஆயத்தங்களால், ஆவது ஒன்றுமில்லை. ஒன்று: நமது செல்வமும், உற்பத்தித்திறனும் அழியும். இரண்டு: எதிர்காலத்தை வல்லரசுகளுக்கு அடகு வைத்து விடுகிறோம். ராணுவத்துறையின் கிடு கிடு முன்னேற்றம், இந்த வருட உழைப்பை, அடுத்த வருடம் உருப்படியில்லாமல் செய்து விடுகிறது. நமக்கு, சாந்தியின்/தார்மீகத்தின் துணிவால், ராணுவச்செலவை குறைத்து, அன்றாட வாழ்க்கைக்கு மக்களுக்கு  நலன் செய்வதால் கிடைக்கும் பாதுகாப்பின் நலன் அண்டட்டும். நான் சொல்வது இவ்வளவு தான். ஒரு பத்து/பன்னிரெண்டு வருடங்கள் இப்படி ஆட்சி செய்து, அப்போது இருக்கும் நிலையை ஆராய்ந்து, தக்கதொரு கோட்பாட்டை அமைத்துக் கொள்ளலாமே.

பொதுமக்களின் பணத்தை செலவு செய்பவர்கள், எல்லா படிநிலைகளிலும், யோக்கியர்களாக இருக்கவேண்டும். தற்காலமோ, அந்த கண்ணியம் லவலேசம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க நிலைமை. கிட்டத்தட்ட, அட்டூழியங்கள் நடக்கும் அளவுக்கு கெட்டுவிட்டது, அந்த இழிநிலை. தேசாபிமானத்திற்கு, அது சாவுமணி என்க. அரசு பணி புரிவோர்க்கு போதுமான அளவு சம்பளம் கொடுக்கவேண்டும். அவர்களும் பொறுப்பில்லாமல் இருப்பதையும், அயோக்கியர்களாக இருப்பதையும், வெட்கம் கொண்டு தவிர்க்கவேண்டும். அயோக்கியன் என்ற க்யாதி வெட்கம் அளிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். 

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, நிஜமான பணிகள் தொடங்கவேண்டுமே தவிர, வீண்செயலாக, பணியாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவது கூடாது. இப்போது சோம்பல், நிர்வாஹத்துறைகளில் ஒண்டுகுடித்தனம் செய்கிறது. ஒருவர் வேலை செய்தால், இருவர் ஓய்வில்! இது வேலையில்லா திண்டாட்டத்தை விட மோசம். சுவர்கடியாரத்தை பார்த்துக்கொண்டு சோம்பல் முறிக்கும் நபர்களுக்கு செலவு செய்வதை விட, சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட ஊதியம் வழங்குவது சாலத்தகும். 

பெரிய திட்டங்கள்/ பொதுப்பணி போன்றவையை செயல் படுத்துவதில் வீண்செலவை கண்கூடாகப் பார்க்கிறோம். இந்திய ஊழியர்களின் சிக்கனமும், கவனமும் இன்று திமிர் பிடித்த வீண்செலவினமாகவும், குற்றம் காணும் அளவுக்கு பொறுப்பின்மையாகவும் மாறி விட்டது மட்டுமல்ல; அது வாடிக்கையாகப் போய்விட்டது. நாம் கேட்பதெல்லாம், சிக்கனம், நாணயம், மனசாட்சிக்குகந்த பணி. அவ்வளவு தான். மத்திய அரசு நிர்வாஹம், மாநில அரசு நிர்வாஹத்திற்கு முன்னோடி. அரசின் இலாக்காக்கள், தனியார் தொழில் நிர்வாஹத்திற்கு முன்னோடி. வருங்காலத்தில், நாட்டின் செல்வபெருக்கு, அதற்கான திட்டங்கள் எல்லாவற்றிற்கும் மூலதனம், சிக்கனத்திலும், நிர்வாகத்திறனை கூட்டுவதிலும் இருக்கிறது. இல்லையெனில், நமது சாதனைகளின் விலை, சாதனைகளை விட அதிகமாகி விடும். அதன் விளைவு: வரிப்பளுவும், பணவீக்கமும்.

முக்யமான வழிமுறைகளை சொல்லிவிட்டேன். அமெரிக்காவின் உதவியுடன் ராணுவ தளவாடங்கள் வாங்கும் பாகிஸ்தானோடு போட்டாப்போட்டி போடும் கொள்கையை புறக்கணித்து, துணிவுடன் மக்கள் சக்தியை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவ செலவுகள் அளிக்கும் பாதுகாப்பை விட, மக்கள் தொண்டு, அவர்களின் நல்வாழ்வு, நிறைவுடன் வாழும் மக்கள் சக்தி ஆகியவை வலிமை வாய்ந்தது.
-X-
பி.கு: 
அடுத்த கட்டுரை: ‘நல்லாட்சிக்கு ஒரு பக்குவம்’. ராஜாஜி அவர்கள் வீணடிப்பதை கண்டித்திருக்கிறார், இந்த கட்டுரையில். வீணடிப்பது ஒரு ஊழல். அரசு சொத்துக்களை விரயம் செய்வதில், முறைகேடான ஆதாயம் தேட முடியும். அது பற்றி அறிய ஆர்வமுடையவர்கள், இத்துடன் இணைத்திருக்கும், ‘வீணடிப்பதை கட்டுப்படுத்துவது’ என்ற ஆங்கில கட்டுரையை (ஹிந்து இதழில் 2004ல் வெளி வந்தது.) காணலாம்.
இன்னம்பூரான்
17 04 2011



Containing Waste.rtf
8K

Geetha Sambasivam Sun, Apr 17, 2011 at 11:05 AM

மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். //

இந்த நிலையை இன்று காண்பதே அரிதாக உள்ளதே ஐயா,  ஊழல் செய்துவிட்டுச் சிறைக்குச் செல்கிறவர்களும், கொலை செய்துவிட்டுச் சிறை செல்கிறவர்களும், ஏதோ பெரிய தியாகங்கள் புரிந்துவிட்டுச் செல்வதைப் போல் அல்லவா மக்கள் முன்னால் கைகாட்டி அமைதிப் படுத்திவிட்டுச் செல்கின்றனர்!  வெட்கமா?? அப்படின்னா என்ன???? இதுஅவர்கள் கேட்கும் கேள்வி.


Tuesday, June 4, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! ~(8)




கனம் கோர்ட்டார் அவர்களே! ~(8)

Innamburan Innamburan Tue, Apr 3, 2012 at 8:45 PM

கனம் கோர்ட்டார் அவர்களே! ~(8)
இன்னம்பூரான்
03 04 2012
Inline image 1

‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று அமைச்சரை வினவிய அரசனை அரியணையிலிருந்து இறக்கி விடவேண்டும். நிரந்தரமாக, அந்தப்புரத்துப் பள்ளியறை வாசியாக இருக்கும் மன்னனுக்குத் தான் இந்த அளவு நாட்டு நடப்பு பற்றிய அறியாமை இருக்க முடியும். அவனால் மக்களுக்கு பயன் யாதும் இல்லை. கெட் அவுட். 
டில்லி முனிசிபாலிட்டி அத்தகைய கண்மூடி ராஜாங்கம் போல. இல்லாவிடின், கிட்டத்தட்ட 5 லக்ஷம் சைக்கிள்-ரிக்க்ஷாக்கள் ஓடும் டில்லி நகரில், ஏதோ ஒரு குருட்டாம்போக்குக் கணக்கில் 99 ஆயிரம் வண்டிகளுக்குத் தான் உரிமம் கொடுப்போம். அதற்கு மேல் உரிமம் பெறாதவைகளுக்கு ரூபாய் 5 ~50 ரேஞ்சில் அபராதம் என்ற அபத்தமான விதியை  இயற்றியிருக்க மாட்டார்கள். அது அபத்தம் மட்டும் இல்லை; அநியாயத்துக்கு அடித்தளம். ஊழல் பெருகவும், லஞ்சம் குவியவும் வழி. வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் (அதாவது, துட்டு கொடுத்தவனுக்கு மட்டும் ) உரிமம்; 5~50 ரேஞ்சு கன்னாப்பின்னா என்று அபராதம் விதிப்பேன் என்று குறைத்து, பின்னர் அதை குறைத்து, லஞ்ச அட்டவணை; உரிமம் இல்லாதவர்களை என்றென்றும் அடிமைப்படுத்தலாம். கடந்த நான்கு வருடங்களில் எத்தனை அநியாயம் நடந்ததோ? சைக்கிள் ரிக்க்ஷா ஒழிப்பதில் தவறு இல்லை. ஆனால், அதை விவேகமற்ற முறையில் செய்வது தவறு. ஒரேயடியாக, ஏழை பாழை வயிற்றில் அடித்தால், அது என்ன நியாயம் என்று டில்லி உயர் நீதி மன்றம் கேட்டது. விவேகமற்றுப்போன டில்லி முனிசிபாலிட்டிக்கு விவஸ்தையும் இல்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஒரு சால்ஜாப்பு விண்ணப்பம் செய்தார்கள், இந்த மேதாவிகள்! 
நேற்று,அதை தள்ளுபடி செய்த நீதிபதிகள் ஜி.எச்.சிங்க்வியும் எஸ்.ஜே.முகோபாத்யாயாவும், நாக்கை பிடுங்கிக்கொள்கிறமாதிரி,கேட்டது:
“உங்கள் புத்தி ஏன் இப்படி குதர்க்கமாக வேலை செய்கிறது? குடித்து விட்டு காரோட்டி மனித வதம் செய்யும் பணக்காரவீட்டுப்பிள்ளைகளையும், பிரேக் இல்லாமல் ஓடும் கார்களையும் விட்டு விட்டு, இந்த ‘ஊருக்கு இளைச்ச பிள்ளையார் கோயிலாண்டி’ ரிக்க்ஷா ஓட்டும் அரைப்பட்டினிகள் தான் உங்களுக்குக் கிடைத்தார்களா? இன்றைய சூழ்நிலையில் ஏழையால், ஏழைக்கு உழைக்கும் இந்த சைக்கிள் ரிக்க்ஷாவை பேருக்கு ஒழிப்பதாக மனப்பால் குடிக்கும் உம்மை என்ன செய்வது?
சார்! நீதித்துறை வேண்டும். நன்கு இலங்கவேண்டும். கனம் கோர்ட்டார் வாழ்க.

*
சித்திரத்துக்கு நன்றி: 

பிரசுரம்: http://www.vallamai.com/paragraphs/18519/ 




[Quoted text hidden]

16 அ: லட்டு,வடை, அப்பளம்: தணிக்கை


16 அ: லட்டு,வடை, அப்பளம்: தணிக்கை

தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை:
இன்னம்பூரான்
04 06 2013

அரியக்குடியில் பிரமாதமான விருந்தோம்பல்/சமாராதனை/ ததியோராதனை நடக்கும். தாத்தாவின் உபயம் என்றாலும், உக்ராண அறையிலும், சமையல் கட்டிலும்,ஃபுல் லைசன்ஸுடன் வளையவரும் எனக்கு, இலையில் போடப்படும் லட்டையும், வடையையும் அப்பளத்தையும் கையில் வாங்கிக்கொண்டு, பின்னர் சுவைப்பதில் தனி ருசி. அத்தான் அப்பாத்துரை இலையிலும் போட்டு, கையிலும் கொடுக்கமாட்டார்.  திருமதி கீதாவின் வினா, 
ஐயா, இது போன்ற தகவல்களின் மூலம் மீடியாவை நொந்து கொள்வதா அல்லது அதிகாரிகளா?  அல்லது அரசா என்பதே !  எல்லாம் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஒட்டு மொத்தமாய் மக்களை ஏமாற்றுகின்றனர். ! இதை எல்லாம் படிக்கையில் மனம் கொதிக்கிறது. :((( ‘ 

இந்த வினா லட்டு,வடை, அப்பளம்’ ஆகியவையை உவமையாக முன்வைக்க கோருகிறது. என்னை பார்க்க வந்த தூதர் தனது நாட்டில் தணிக்கை கசிவுகள் அதிகம்; அவற்றை காசு,பணமாக மாற்றி விடுபவர்களால் பிரச்னை. உங்கள் நடைமுறை என்ன என்று கேட்டு வந்த போது இந்த உவமானம் தெளிவு அளித்தது.

தணிக்கைத்துறை விளம்பரம் நாடாதது மட்டுமல்ல. அமுக்காரக்கிழங்கு. சாமான்யமாக ஊடகங்களுடன் ஈஷிக்கொள்ளாது. (தற்காலம்: விட்ட குறை, தொட்ட குறை.) பொதுமக்களுக்குப் புரியும் வகையில் தணிக்கை ரிப்போர்ட் எழுதுவது கடினம். ஆதியோடந்தமாக எல்லாம் சொல்ல வேண்டும்; அதை ரத்னசுருக்கமாக அளிக்கவேண்டும். வந்த பதில்களை அலசி, உண்மையை உரைக்கவேண்டும், நடுவு நிலையில் அமர்ந்து. ஆதாரங்களை சுட்டவேண்டும். அதற்கான ஆவணங்களை பத்திரப்படுத்தி, பொது தணிக்கை மன்றத்தில், கேட்டவுடன் காட்ட வேண்டும். இதற்கு சான்றாக இந்த் 2ஜி ஆடிட் ரிப்போர்ட் போதும். அதை படித்தாலே 2ஜியின் வரலாறு, விஞ்ஞானம், பொருளியல், மேலாண்மை, துஷ்பிரயோகம் எல்லாம் அத்துப்படி. முக்கியமாக சொல்ல வேண்டியது, அதை எல்லாரும் புரிந்து கொள்கிறமாதிரி எழுதியிருக்கிறார்கள். அது முன்னேற்றம்.

ஆடிட் கடிதப்போக்குவரத்து கசிந்தததால் யாருக்கு ஆதாயம்? ஆடிட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு: அமைச்சரகம், ஆட்சி பீடம், அரசு கம்பெனி, ஒப்பந்தக்காரர் ஆகியோருக்கு. இன்றைய (04 06 2013) நிலைமை படி, ஆடிட் செய்யவிடாமல், சாக்கு போக்கு, சால்ஜாப்பு, அது, இது என்று காலம் கடத்த வசதியாக இருந்திருக்கிறது, இந்த எண்ணெய் விவகாரத்திலேயே. ஆடிட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டால், அதில் வியப்பு ஒன்றுமில்லை. 
~அப்பளம் நொறுக்கியாச்சு.  

இந்த ஆடிட் மடலாடல் கசிந்தததால் யாருக்கு நஷ்டம்? தணிக்கைத்துறைக்குத்தான். ஆடிட் தடைபெற்று போகிறது. காலதாமதம் ஆகிறது. ஆவண வீரியம் நீர்த்துப்போகிறது. வசை கூடுகிறது.  ஆதலால், தணிக்கைத்துறையில் உள்குத்து வேலைகள் நடந்ததாக தோன்றவில்லை. நடந்திருக்கலாம் என்ற ஹேஷ்யத்தையும் விலக்க முடிவதில்லை. எங்கும் மனிதர்கள் தானே. இந்த ஊடகங்கள் சாம, தான,பேத, தண்ட உபாயங்களின் உறைவிடம்.
~வடையை காக்காய் தூக்கிக்கொண்டு போயிடுத்து.

‘கோபால்! இந்தா இன்று பிரசுரமான ஆடிட் ரிப்போர்ட். முதல் எடிஷன் அச்சில் இருக்கு. நாலு பாயிண்டு நாம் எழுதாவிட்டால், போட்டியில் இருக்கும் ‘அன்றாட சொட்டு மருந்து’ இதழில் போட்டு விடுவான். உனக்கு இருபது நிமிட கெடு. ஒரு பத்தி எழுதிக்கொடு. இல்லாட்டா, நமக்குத் தலை குனிவு.’ என்று எடிட்டர் சொல்லிவிட்டால், கோபால் கண்ணை மூடிக்கொண்டு திறப்பான். கண்ணில் பட்ட மின்சாரக்களவை பற்றி நாலு வரி எழுதிவிட்டு, கண்ணை மூடிக்கொள்வான், கோழித்தூக்கத்தில். அதை விட சுவையான சமாச்சாரம்: கட்சிக்காரனுக்கு விதி மீறி கொடுத்த ஒப்பந்தம்: அதிகப்படி செலவு: ரூ.11, 23, 476.74/-. இதை இரண்டு இதழும் கோட்டை விட்டிருப்பார்கள்.

லட்டும் மறந்தேனே, நானே!
சேட்டு அர்ஜெண்ட் னு சொன்னாரே.
சொட்டு மருந்து போட்டி என்றாரே.
சட்டுப்பிட்டுனு எளுதிப்பிட்டேனே!
Image Credit;http://lh6.ggpht.com/_UIidE7NI4j0/TMvLadvBsAI/AAAAAAAAANc/kCRPSLf5cwM/s400/Boondhi%20laddu%20(kunjaalaadu).JPG


Monday, June 3, 2013

16.சமஷ்டி ஆராதனை:தணிக்கை


தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை:16 

சமஷ்டி ஆராதனை

இன்னம்பூரான்
 Saturday, July 16, 2011, 11:55

2011  ஜூலை மாதம் 13ம் தேதி அன்று, வரலாறு காணாத வகையில் ஒரு சமஷ்டி ஆராதனை நடந்தது. கச்சா எண்ணெய் கசியுதோ இல்லையோ, அது சம்பந்தமான வரைவு தணிக்கை அறிக்கை கசிந்து விட்டது என்று சொல்லி ஊடகங்கள் புகுந்து விளையாடின. கச்சா எண்ணெய் அமைச்சரகம் கச்சை கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்க முடியவில்லை. இக்கட்டான நிலை. ஒரு கோர்ட் கதை ஞாபகம் வரது. புருசன் அடிக்கிறான் என்று விவாகரத்து கேஸ். இவனோட வக்கீல் பெரிய கை. பலமா சாட்சி வைத்திருக்கிறார். அவளோட வக்கீல் ப்ராக்டிகல்.  இவனை சாட்சிக் கூண்டில் நிற்க வைத்து, சத்திய பிரமாணம் வாங்கி, கேட்கிறார், ‘நீங்கள் மனைவியை அடிப்பதை எப்போது நிறுத்தினீர்கள்?’ இருதலை கொள்ளி நிலை. என்ன பதில் சொன்னாலும் மாட்டிப்பான். அதுதான் இந்த அமைச்சரகம் நிலைமை. ஆடிட் பண்ணுங்கோ என்று வினயமாக கேட்டதும் இவர்கள். ஆகஸ்ட் 2010லேருந்து பதில் சரியாக கொடுக்காமல் இழுத்து அடிப்பதும் இவர்கள். ஆடிட்டர் ஜெனெரல் திட்ட வட்டமாக சொல்லி விட்டார், கசிவுக்கு அவருடைய துறை காரணமில்லை என்று, பொருத்தமாக. போதாக்குறைக்கு, ஸீ.பீ.ஐ. விரட்டுகிறது. பிரதமரிடம் போய் பதிலளிக்க அவகாசம் கேட்கிறார்கள். அதைக் கொடுத்தால், ஆடிட் ரிப்போர்ட் நாடாளுமன்றத்துக்கு வரத் தாமதம் ஆகும். திரு.முரளி மனோகர் ஜோஷியின் பொதுக் கணக்குக் குழுவின் தலைமை காலாவதி ஆகி விட்டால், தண்டன கட்டலாம் என்று பார்க்கிறார்களா என்று விசாரிக்கிறார்கள். இதற்கு நடுவில் ரிலையன்ஸ் என்னென்னமோ சொல்லிப் பார்த்தது; ஆனால் எடுபடவில்லை.
இந்த சூழ்நிலையில், 2011, ஜூலை மாதம் 13ம் தேதி அன்று, ஒரு சமஷ்டி ஆராதனை. ரிலையன்ஸ், கைர்ன் இந்தியா, பிரிட்டிஷ் காஸ் என்ற தனியார் கூட்டாளிகளும், அரசின் இத்துறைத் தலைவரும் ஆடிட்டர் ஜெனரலைக் கண்டு பேசினர். பக்கம், பக்கமாக, பதில்கள் பல அளித்தனர்.
பாயிண்ட்ஸ்:
ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு செலவுகளை $2.4 பில்லியன் டாலர்களிலிருந்து, $8.8 பில்லியன் டாலர்களாக ஏற்றியதின் பின்னணி; உலகளவில் ஒப்பிட்டால், நாங்கள் அதிகப்படியாக கேட்கவில்லை எனலாம் என்ற பொத்தாம் படை பதில், ரிலையன்ஸிடமிருந்து, என்று ஊடகச் செய்தி. ரிலையன்ஸ் தகவல் கொடுக்கவில்லை, ஊடகத்துக்கு. அந்த கம்பெனி அதிகாரி பீ.எம்.எஸ். பிரசாத் ஒரு 250 பக்க விளக்கம் அளித்தாராம்.
பிரிட்டிஷ் காஸ், இங்கிலாந்து கம்பெனி. அவங்களுக்கு தணிக்கை விதிகள் தெரியும். எனவே, ‘ஆடிட்டின் பரிசுத்தம் அறிவோம்.’ என்று சாக்கிரதையாக பேசியுள்ளார், அந்த கம்பெனியின் அதிகாரி வால்டர் சிம்ஸன்.
கைர்ன் கம்பெனியின் அதிகாரி இந்தர்ஜித் பானர்ஜி  அரை மணி நேரம் விளக்கம் அளித்தாராம்.
தலைமை தணிக்கை அதிகாரியை தனித்து பார்த்து, அரசு அதிகாரி திரு.எஸ்.கே. ஸ்ரீவத்ஸவா, 200 பக்கமுள்ள விடைத் தாள் கொடுத்தாராம்.
அவர் ஆடிட் ஊகங்கள் தவறு என்றும், செலவுகள் நடந்த பிறகு, உள்ளது உள்ளபடி செய்யப்போவதால், அரசுக்கு நஷ்டமாகாது என்றாராம். (எனக்கு, இது புரியவில்லை.)
ரிலையன்ஸ் கம்பெனிக்காரங்க, நாங்கள் ஏமாற்றமாட்டோம் என்றார்களாம்.
ஒரு செயல் நடக்கும் முன் தோராயமாக நாங்கள் சொன்னதை, செயல் நடந்தபின் கிடைத்தத் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்யலமா என்றார்களாம். இது என்னுடைய சொல்லாக்கம். அவர்கள் இதையே எப்படி சொன்னர்களோ?
மடியிலெ கை போடறமாதிரி, ஆடிட் டிப்பார்ட்மண்ட், செயல்களை திறானாய்வு செய்வது (performance auditing), எல்லை மீறிய செயல் என்றார்களாம். அடேங்கப்பா!
ஒரு நுட்பம் நோக்கவேண்டும். ரிலையன்ஸ் ஆறு மாதங்கள் எட்டு அதிகாரிகள் எங்களை ஆடிட் செய்தனர் என்றனராம். இந்த பதில்களை அப்போது கொடுத்தார்களா, தெரியவில்லை.
ஆக மொத்தம், தாமதமாக வந்த இந்த 500 பக்க பதில்களை ஆராய்ந்து ஆடிட் ரிப்போர்ட் பார்லிமெண்ட்டுக்கு வர இரண்டு மாதங்கள் ஆகலாம். வரப் போகும் சபையில் அது தாக்கலாவது துர்லபமே.
சமஷ்டி ஆராதனை என்று பெயரிட்டதற்குக் காரணம், ‘ ஆடிட்டை தூர விலக்கி வைப்பவர்கள், சமஷ்டியாக ஆராதனைக்கு வந்தது. அதுவும் முதல் தடவையாக.
என்ன நடக்கிறது பார்க்கலாம்.நால்வர் அளித்த பதில்களும் கசியத் தொடங்கி விட்டன, பூஜை வேளையில் கரடி புகுந்தாற் போல். ‘கசிவு’ மன்னர்கள் யாவர்?”

சித்திரத்துக்கு நன்றி:http://rlv.zcache.ca/when_did_you_stop_beating_your_wife_loaded_qu_tshirt-r5f5abee5d3ee4d28a9f6d80fb5d544e7_8nax2_216.jpg

பிரசுரம்: http://www.vallamai.com/?p=5343

Sunday, June 2, 2013

15. விநோத்ஸ்பீக்: தணிக்கை


தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை: 15

விநோத்ஸ்பீக்
அப்டேட்: ரிலையன்ஸ் பிரச்னை இரு வருடங்கள் ஆகியும் இழுபறியில்!
இன்னம்பூரான்
03 06 2013

இன்னம்பூரான்
Saturday, July 9, 2011, 6:37

விநோத்ஸ்பீக்
சாணக்யரின் ‘அர்த்த சாத்திரத்தில்’ உள்ள தணிக்கை அறிவுரைகளை ‘ஆசியன் ஜர்னல் ஆஃப் கவர்ன்ட்மெண்ட் ஆடிட்’ என்ற இதழில், நான் அவ்விதழின் ஆசிரியனாக இருந்த காலத்தில் பதிவு செய்திருந்தேன். நல்ல வரவேற்பு. 40 கட்டுரைகளுக்கான வித்து அவை எனலாம். அவற்றை எடுத்துக்காட்டாக அமைத்து, தற்கால தணிக்கை முறைகளை ஒப்புமை செய்ய நினைத்தேன். ஆனால், மற்றொரு தகவல் முன்னுரிமை எடுத்துக் கொண்டது.  எனவே, அந்த அறிவுரைகளில் ஒன்றை மட்டும் குறிப்பால் உணர்த்தி விட்டு, வந்த காரியத்தை சொல்கிறேன்.
“இன்றைய வரவை நாளை கணக்கில் இடுவது குற்றமே.”

வந்த காரியம்: ஒரு பிரபலம் உரைத்ததை தொகுக்கும் போது, அதை அன்னாரின் பேச்சு என்று பொருள் பட ‘…ஸ்பீக்’ என்பது வழக்கம். இந்தக் கட்டுரை, தற்கால ஆடிட்டர் ஜெனரல் மதிப்பிற்குரிய திரு.விநோத் ராய் அவர்கள் பிரசித்தி பெற்ற ‘அவுட்லுக்’ என்ற ஆங்கில இதழுக்கு அளித்த நேர் காணலின் சுருக்கம். எனவே ‘விநோத் ஸ்பீக்’ என்ற தலைப்பு.
வினா: அ (அவுட்லுக்)/ விடை: வி: விநோத் ராய்.
அ: சரமாரியாக உம்மீது தொடுக்கப்படும் கணைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
வி. இது புது கேள்வி! எல்லோரும் ‘ஏன் இன்னார் இன்னார் மீது குறை காண்கிறீர். அடுத்த பலி யாரு?’ என்று தான் கேட்கிறார்கள். கணையேதும் இல்லையே!
அ. அரசியலாரும், தனியார் நிறுவனத்தாரும், உமது காமன் வெல்த் விளையாட்டு, 2ஜி, கச்சா எண்ணெய் குற்றச்சாட்டுகளுக்குப் பின், உமது திறனுக்கு அப்பாற்பட்டு நீங்கள் இயங்குவதாக, பழிக்கிறார்களே?
வி: தணிக்கையில் மூன்று விதம் -நிதியைக் கையாண்டது எப்படி?, ஆணைகளுக்கு உகந்த செயல்களா?, அரசு துறைகள் உருப்படியாக இயங்கியனவா? மூன்றாவது வகையை எமது பணியில் அடக்கம் என்று ஜூன் 2006லியே நிதி அமைச்சரகம் கூறியுள்ளது. நீங்கள் சொன்ன மூன்று தணிக்கைகளும் அதில் அடக்கம். பொது சொத்து, தனியார்-அரசு கூட்டுத் துறைகளில் பயன் படுத்தப்பட்டால், நாங்கள் வரத்தானே வேண்டும்.
வி: ரிலையன்ஸ் கம்பெனியின் கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை என்கிறீர்கள். அமைச்சரகம் கேட்டுக் கொண்டவாறு தணிக்கை செய்தோம். ரிலையன்ஸ் ஆட்சேபித்தனர். வாஸ்தவம் தான். ஒப்பந்ததில் இது போடப் படவில்லை. மூன்று வருடங்கள் கேஸ் நடந்தது. சாதகமான தீர்ப்பு வந்த பின் தான், தணிக்கையே தொடங்கப்பட்டது. அமைச்சரகம் தான் அவர்களுடன் உரியதை பகிர்ந்து, விளக்கம் பெற்றுத் தரவேண்டும்.
அ: கபில் சிபல் உமது ரிப்போர்ட்டை உதறி விட்டாரே! உங்கள் மீது உள்ள நம்பகத்துவம் பாதிக்கப்பட்டதா?
வி: இல்லையே. அவர் அதை ‘சரியே’ என்றல்லவா சொல்லியிருக்கிறார். இரு விஷயங்களில் சம்மதம். ஒன்றில் சம்மதமில்லை. முறை கேடுகளைத் தான் சம்மதிப்பதால்தான், விசாரிக்க கமிஷன் அமைத்தார். நஷ்டத்தைப் பற்றித் தான் அவருடைய கஷ்டம். ஆடிட் ரிப்போர்ட்டே, இது விவாதத்துக்குரியது என்று சொல்கிறதே.
அ: உமது அதிகாரிகள் மீது அரசியல்/ அதிகாரத்துவத்தின் தாக்கம் இருந்ததா?
வி: லவலேசமும் இல்லை. நாங்கள் எங்கள் வழி செல்வதில் தடை ஏதும் இல்லை.
அ: 2ஜி/ கச்சா எண்ணைய் ஆடிட் வரைவு ரிப்போர்ட்டுகள் கசிவு பற்றி, உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே!
வி: அதில் எமக்கு ஆதாயம் என்ன? எங்கள் ஆக்கத்தை அல்லவா அது தாக்குகிறது? நாடாளுமன்றத்தில் வைத்த பின் டிபுடி ஸீ.ஏ.ஜி. ஊடகங்களுடன் பேசுவார். அந்த மின்னலடிப்பதை விட்டு விட்டு, பிட் நோட்டீஸ் விடுவோமா, என்ன?
அ: அரசுத் துறைகள் பல பட்டறை. இப்போது தனியாருடன் உடன்பாடுகள் வேறு. இதை எல்லாம் தணிக்கை செய்யும் திறன்/ வலிமை/ ஆற்றல்  உம்மிடம் உள்ளதா?
வி: ஆம். திறன் வேண்டும். ராணுவம்/ அணுசக்தி/ சுகாதாரம்/ கல்வி என அனைத்துத் துறைகளிலும். அதற்காகத் தான் அறிமுகக் கூட்டங்கள் -  நுட்பங்கள் அறியும் பொருட்டு.  எங்கள் வலிமையே, ஆற்றலும், திறனும், ஆக்கமும் மிகுந்தத் தணிக்கைப் படை எங்களிடம் இருப்பது தான். உலகளவில், முதல் மூன்று/ நான்கு இடங்களில் நாங்கள் இருக்கிறோம்.
அ: இந்தக் கச்சா எண்ணைய் விவகாரத்தில், உமது திறனும், புரிதலும் சர்ச்சைக்கு உள்ளாயினவே?
வி: எமது துறையின் 14 அதிகாரிகள் மேற்கு ஆசியாவில் இதே ஆய்வுப் பணியில் உள்ளனர். இந்தத் தணிக்கை செய்தவரும் கூட வளைகுடா பிராந்தியத்தில் இதேப் பணியை நான்கு வருடங்களுக்கும் மேல் திறம்படச் செய்தவர். எங்கள் அதிகாரிகளை நேரில் சந்திப்பவர்களுக்கு, எங்களின் ஆழ்ந்த புரிதலின் பேரில் செய்யும் பணியின் ஆற்றல் புரியும்.
அ: ஆடிட் ரிப்போர்ட்களின் மீதான நடவடிக்கைகள் பற்றி?
வி: ஒரு கால கட்டத்தில் அவற்றை யாரும் மதித்தது இல்லை. எங்கள் ரிப்போர்ட்டுகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு விளக்கம் வருவது இல்லை என்று, பிரதமர் முன்னிலையில் சொல்லி இருக்கிறேன். இப்போது பரவாயில்லை. ராணுவ அமைச்சரகமும், சுற்றுச் சூழல் அமைச்சரகமும் வழி முறைகளை மாற்றிக் கொண்டது, எனக்கு மகிழ்ச்சியே.
அ: சட்ட அமைச்சர் மொய்லி அவர்கள், நீங்கள் ‘வருமுன் காப்போனாக’ இயங்குவது இல்லை என்கிறார். ஆடிட் விதிகளை மாற்றினால் உதவுமோ?
வி: நாங்கள் கேட்ட வரங்கள் மூன்று: ஆடிட் தாமதம் ஏன்? நாங்கள் விளக்கம் கேட்டால், ஒரு நாளில்/ ஒரு மாதத்தில்/ ஆறு மாதங்களில் அதைத் தரலாம். தராமலும் இருக்கலாம்!  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ளது போல், 30 நாட்களில் பதில் போதும். அது வரம் ஒன்று.
ஆடிட் ரிப்போர்ட்டை ஜனாதிபதி/ கவர்னரிடம் சமர்ப்பிக்கிறோம், அரசியல் சாசனத்தின் 151 வது சரத்துப் படி. அது மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். இப்போது அமைச்சரகத்திடமே கொடுக்கின்றோம். அவர்கள் இஷ்டப்படி ஒரு மாதம்/ ஆறு மாதம்/ ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார்கள். இதை மாற்றி, குறிப்பிட்ட கெடு வைக்க வேண்டும் என்று கேட்கிறோம். அது வரம் இரண்டு.
மூன்றாவதாக, 1971க்குப் பிறகு பஞ்சாயத்து, அரசு-தனியார் கூட்டணி, தன்னார்வக் குழுக்களின் பங்கு எல்லாம் வந்து விட்டன. அவற்றை ஆடிட் செய்வது பற்றி ஒரு தெளிவு வேண்டுமல்லவா! அதை தான் கேட்கிறோம். அது வரம் மூன்று.
அ: எத்தனை ஆடிட் ரிப்போர்ட்டுகள்  நாடாளுமன்றத்தின் முன் வைக்கப் படவில்லை?
வி: எல்லாமே வைத்தாகி விட்டது. ஆனால், என்னே தாமதம்! – ஒரு வருடம் கூட! அன்றைய அரசுக்கு இஷ்டமில்லை என்றால். இந்தத் தாமதத் தந்திரம் மத்திய அரசில் இருப்பதை விட மாநிலங்களில் அதிகம். மஹாராஷ்டிராவில் ஒன்று, மெட்ரோ பற்றி ஒன்று – ஒரு வருடத்திற்கும் மேல் தாமதம்.
அ: உமது ஆடிட் ரிப்போர்ட்கள் எந்த அளவுக்கு இறுதி நிலை வரை…?
வி: பத்து/ஆறு வருடங்களுக்கு முன்னால் படு மோசம். முதற்கண்ணாக, தாமதம்: மக்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. கணக்கு வழங்கும் முறையும் சரியாக இல்லை. இப்போது படாபட். கணக்கு வழக்கு நிலைப்பாடு  வந்து தானே ஆகவேண்டும்.
அ: உமக்கு தோட்டக் கலையில் ஆர்வம் என்று கேள்வி. உமக்கா அல்லது உமது மனைவிக்கா?
வி: நான் தான் மாலி: தோட்டக்காரன்.வீட்டில் அவள் ராணி; வெளி உலகில் என் ராஜ்யம். ஏதோ இயற்கைக்கு உகந்த காய்கறி கொடுத்தால் என் கடமை ஒவர்!
இது அவுட்லுக் இதழில் வந்த நேர் காணலின் தமிழ் சுருக்கம். தமிழாக்கமும், சுருக்கமும் நான் செய்தது. பொறுப்பு எனது. ஆங்கிலத்தில் வந்துள்ள மூலக் கட்டுரையின் காப்புரிமை அவுட்லுக் இதழுக்கே. நமது நன்றி அவர்களுக்கு உரித்ததாகுக. தமிழாக்கத்திற்கு அனுமதி கொடுத்ததிற்கும் அவர்களுக்கு நன்றி  செலுத்துகிறேன்.
ஒரு நற்செய்தி. இனி ஆடிட் ரிப்போர்ட் பற்றி மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பிரசுரங்கள் வரப் போவதாக செய்திகள் வருகின்றன.
ஒரு சுவாரசியமானச் செய்தி: திரு. தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்து விட்டார்!
(தொடரும்)
உசாத்துணை
பிரசுரம்: http://www.vallamai.com/archives/5091/
Geetha Sambasivam
7/9/11



மொழிபெயர்ப்பு பிரமாதம். திரு விநோத்ராய் சொல்லி இருப்பது போல் தாமதம் தவிர்க்க வேண்டும். தணிக்கைத் துறை என ஒன்று இல்லை எனில் அரசாங்கம் செய்யும் தில்லுமுல்லுகள் வெளிவரவே வராது.  ஆனால் மேல் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றனவா என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.  

தெருக்கூத்து -5 ‘நவீன சகுனி’


தெருக்கூத்து -5 ‘நவீன சகுனி’

Innamburan S.Soundararajan Sun, Jun 2, 2013 at 6:40 PM


தெருக்கூத்து -5
‘நவீன சகுனி’
Inline image 1


இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் எக்கச்சக்ககூட்டம். தொலைவிலிருந்து -கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்தும், கொலைகாரன் பேட்டையிலிருந்தும், அம்பட்டன் வாராவதியிலிருந்தும், யானைகவுனியிலிருந்தும் - தரை மஹாஜனங்கள், விஜில் சகிதமாக வந்த வண்ணம். அதில் சிலர் பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தனர். இதெல்லாம் சகஜம் என்றாலும், மனோன்மணி அம்மாளுக்கு எல்லாம் அத்துபடி. அவளும் நெட்டை தாமு, சொட்டை சுப்ரமணியன், மோட்டுவளை முதலி போன்ற தடியன்களை முஸ்தீப்பாக வைத்திருந்தாள். அவளுக்கு வலது கையான இன்ஸ்பெக்டர் கதிர் கிட்ட ஒரு வார்த்தை போட்டு வைத்தாள். அஞ்சா நெஞ்சியாளாகிய அவள் தெனாவெட்டுடன், ‘இன்று ‘மனம் கவர்’ கச்ச தேவயானி’ என்று தண்டோரா போட்டு விட்டதால், விடலைகள் கூட்டம் அபரிமிதம். அவங்களையும் ஜாடையாக  உஷார் படுத்தினாள். 

நடு ஜாமம். மணி அடிச்சது. ஜல் ஜல் என்று சலங்கைகள் ஒலிக்க, கைவளை குலுங்க, ஒய்யாரமாக மேடை ஏறினாளே,ஸ்த்ரீப்பார்ட் சக்ரபாணி. குரல் என்னமோ ‘கர, கர’ தான். ஹூ கேர்ஸ்? பலத்த கர கோஷம். இந்தக்காலத்து பசங்களுக்கு சொல்லிப்போடுவோம் என்று ‘விவரமான’ மனோன்மணியம்மாள் வினியோகித்த பிட் நோட்டீஸு உசாத்துணையில். கிளிக்கவும்; கிளுகிளுக்கவும். இத்தனை ஜபர்தஸ்தாகவே, கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ்  டிராமா கம்பெனியின் தெருக்கூத்துக் களை கட்டவே, பிச்சு ஐயர் பெடல் போட்டு ஆர்மோனியம் ஒலிக்கவே, நம்ம சக்ரபாணி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ!’ என்று நீட்டி முழக்கி பாட்றான். 

பூஜை வேளையில் புகுந்த கரடி மாதிரி, நம் கண்ணாயிரமும் ( அதான் கோமாளி) தடாலடியாக மேடை ஏறி,

‘ நிறுத்து! நிறுத்து! சுக்ரபுத்திரி பெண்ணே!
 மறுத்துப் பேசாதே, கசன் வந்ததறிவேன் யான்.’

என்று கூவிக்கொண்டே, சக்ரபாணியை அவன் புறம் தள்ளினாலும், ஒத்திகையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற,’

அம்பயரெல்லாம் என் பாக்கெட்க்குள்ளே.
ஜம்பமெல்லாம் என் கிட்ட சாயாது.
பிம்பமெல்லாம் பாரு! என் கைக்குள்ளே.
கொம்பனாருக்கெல்லாம் கொம்பே! நரிக்கொம்பே!” 

என்று தேவயானி அடி எடுத்துக்கொடுக்க, கோமாளி பாடிய அந்தாதியை கேளீர்?

‘நரிக்கொம்பு வாங்கலையோ, அண்ணாச்சி?
மருக்கொழுந்து வாசம் அடிக்குதப்பா!
கிரிக்கெட்டு உனக்கு ஒரு கேடா?
சரிக்கட்ட தோது நானே...’

கரகோஷம் வானை பிளந்தது. கொலைகாரன் பேட்டை பிஸ்தாவும் முறைத்தான். நெட்டை தாமுவும் கட்டை உருட்டினான். கதிர் ஐயா கனைத்தாரு. விட்டுக்கொடுக்காத விடலைகள் அக்கம்பக்கம் கவனித்துக்கொண்டனர்.

இனி கோமாளியின் சொல்மாரி:

“சாமியோவ்! அம்மாமார்களே! ஐயாமார்களே! சின்னப்பசங்களே! கிழங்கட்டைகளே!,கொடியேறியவுடனே யான் உரைத்தது யாதெனில்... (சைலண்ட். மறந்து போச்சு. கீச்சுக்குரலில் சக்ரபாணி அடி எடுத்துக்கொடுக்க), 

‘சத்சங்கம் ரகசியமாகக்கூடுதுங்க. இப்பெல்லாம், சண்டை, சச்சரவுக்குனு ஆட்கள் காத்திருக்காங்க இல்லெ. அதான். சத்லீக் ஆனா சொல்றேங்க. என்று அன்றே சொன்னேன்.கொல்கத்தா, மும்பை சென்னை எல்லாவிடத்திலும் மீட்டிங்க் போட்டாங்க. நம்ம சத்சங்கம் சாமான்யம் இல்லைங்க. ஐ.பி.எல் மாதிரி சொத்துக்காரங்க. எல்லாமே பெரிய பண்ணை. மாங்குடி மைனர் ராமுடு ஐயர், ஹிட்லர் மீசை நாச்சியப்பன், கட்டாரி கனகவேல், ஆஸ்தான நர்த்தகி ஜம்புகேஸ்வரி, தளிகை நச்சு அல்லாரும் வந்தாச்சு. மீட்டிங்கும், டின்னரும் நம்ம பேட்டையில் தான். வைட்டர் தம்பு நமக்கு உள்கைங்க. ஆனால், லீக் ஆனதிலே பேப்பர்காரன் போட்டதத்தான் சொல்லிப்போடுவேங்க. நாளைக்குக் கேஸு கீசு போட்டான்னா, மனோன்மணியம்மா என் தலையை சீவிடுவாங்க. கீசுடுவாங்க, கீசி. என்றான். சிரிப்பு தாளாமல், அவளுக்கு புரைக்கேறியது. பின்னெ. ஒரு பிடி புகையிலையை முளுங்க முடியுமா சாமி?

‘மண் ஒட்டா மீசைக்காரன் நானு.
கண் போடாதே, தேவ யானி.
மன் மதலீ லை கண்டார் யாரு?
தன் நிலை மறந்தேன் நானே!

என்று பாடி விட்டு சொன்ன கதை:

தலைமை தர்மகர்த்தா வேணுகோபால் நாயுடுகாரு ராஜிநாமா செய்யலையாம். ஆனா எல்லாரும் ராஜியாய்ட்டங்களாம். ராஜிநாமா செய்யாட்டாலும், ட்யூட்டியை விடமாட்டேன் னு கறாரா சொல்லிட்டாராம். அதாவது, விட்டுப்பிடிப்பேன் என்று இறைச்சி.  சாவியை சரண்டர் பண்ணிட்டாராம். ‘மறு சாவி?’ என்று கேட்ட நச்சுவை நசுக்கிப்பிட்டார், நசுக்கி. மாங்குடி மைனர் ராமுடு ஐயர் தான் மேஜர் சமாச்சாரம் எல்லாம் பாத்துப்பாருன்னு நாயுடுகாரு சொல்லிட்டாராம். கொஞ்சம் குரலை உயர்த்தி அவரு சொன்னாராம், ‘என்னை யாரும் போகச்சொல்லலை. நான் தள்ளி நிக்கறேண்டா, மாபாவி. ஓடிப்போன ஆஸ்தான நர்த்தகி ஜம்புகேஸ்வரி, தளிகை நச்சு இரண்டு பேரும் என்னுடைய அருமை நண்பர்கள் ( தனி மொழி: கழிச்சாடை). நாளைக்கு வந்துடுவாய்ங்க. சண்டை சச்சரவு ஒன்றுமில்லை. எல்லாம் ஸ்மூத் ( சிங்கிள் மால்ட் விஸ்கி மாதிரி! ஹி! ஹி!)’

சூரியன் வந்துட்டான். காலை மணி ஐந்து. நாளைக்கு ஆஃபீஸ் போகணுமில்லையா. எல்லாரும் வீட்டுக்குப் போங்க’.

தன்னிலை விளக்கம்: இது மன்னார் கோயில் சமாச்சாரங்க. சென்னையில் ஆனா, ஆவான்ன, ஐயன்னா எந்த பி.எல்.லுக்கும் நம் புனித தலவரலாற்றுக்கும் சம்பந்தமில்லை என்பது வெள்ளிடை மலை. உசாத்துணை கண்டு தெளிவடைக.

வார்ரேன்...
சித்திரத்துக்கு நன்றி:http://www.mazhalaigal.com/images/issues/mgl0802/im0802_narada.gif

இன்னம்பூரான்
02 06 2013
உசாத்துணை: சித்திரம்: 2: காப்புரிமை ஹிந்து. க்ளிக்கிப்பார்த்துக்கொள்ளலாம், ஆர்வமிருந்தால்.
உசாத்துணை:
http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=திருப்புமுனைத்+திரைப்படங்கள்+-+13&artid=109498&SectionID=128&MainSectionID=128&SectionName=News&SEO=
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

கனம் கோர்ட்டார் அவர்களே-6




கனம் கோர்ட்டார் அவர்களே-6

Innamburan Innamburan Sun, Feb 5, 2012 at 10:08 PM

அப்டேட்:
சமுதாயத்துக்கு பெரிய பாடமொன்று இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது. வற்புறுத்தி, வற்புறுத்திக் கேட்டாலொழிய, சட்டத்தின் மேலாண்மை தென்படுவதில்லை. '...இந்த வஞ்சகம் அருண் ஷெளரி, மஹாஜன், தயாநிதி மாறன், ஆ.ராஜா எல்லாரும் நாட்டுக்குச் செய்த பாதகம்...' என்று கோர்ட்டு குறிப்பால் உணர்த்தியிருந்தால் கூட, பல வருடங்களாக, மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இன்று கூட அந்த 'பாதகத்தை' நியாயப்படுத்துபவர்கள் உளனர். ஆடிட்டர் ஜெனெரல் சொன்ன கோடிகள் (1.76 லட்சம் கோடி) மிகக்குறைவு;ஜூஜூபி. பல கோடிகள் நஷ்டம், மறைமுக நஷ்டம் பொருளியல் சிதைவு, மேலும் தொலைந்தது மானம்.
இன்னம்பூரான்
02 06 2013


கனம் கோர்ட்டார் அவர்களே-6
Monday, February 6, 2012, 2:15

இன்னம்பூரான்
sabbath%2Brule%2Bof%2Blaw.jpg
நாற்பது வருடங்களுக்கு முன்னால் உச்சநீதி மன்றத்தின் கேசவானந்த பாரதி வழக்குத் தீர்வு (AIR 1973 SC 1461) எனப்படுவது பெரிதும் பேசப்பட்டது. அரசியல் சாஸனத்தை நிலை நிறுத்தி வைத்து, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சொத்து சுதந்திரம் பறி போகாத வகையில், நாடாளுமன்றத்தின் எல்லையை நிர்ணயித்த வகையில் அமைந்தது அந்தத் தீர்ப்பு. சட்டத்தின் மேலாண்மையை (தி ரூல் ஆஃப் லா) உறுதிப் படுத்த நீதித்துறை, இவ்வாறு நீதியின் வாய்மையை (ஜுடீஷியல் ஆக்டிவிசம்) ராஜபேரிகையென ஒலிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 
2ஜி உரிமங்களை ரத்துச் செய்து, வரலாறு படைக்கும் உச்சநீதி மன்ற தீர்வு ஒன்று இரண்டு நாட்களாக, மக்களிடையே திமிலோகப் படுகிறது. மத்திய அரசை ரவுண்டு கட்டி விளாசும் இந்தத் தீர்வை முழுமையாகப் படித்தால், அதனுடைய தாக்கத்தின் தீவிரம் அறிய இயலும். 
  1. சொற்களைச் சுழற்றிப் பொய்யை மெய்யாக்கியிருக்கிறார்கள், டெலிகாம் இலாக்கா; அதாவது இந்தியாவின் மத்திய அரசு. இது வஞ்சகம்.
  2. அது யாது என்றால், “முதலில் வந்தவருக்கு முன்னுரிமை.” இயற்கையின் கொடையாகிய இந்த மின்னலைகளை அரசு, மக்களின் அறங்காவலராகப் போற்ற வேண்டும். கலப்படமற்றத் திறந்த வெளி ஏலம் தான் சிறந்தது. இடம், பொருள், ஏவல் கருதினால், “முதலில் வந்தவருக்கு முன்னுரிமை.” சுத்த ஹம்பக், டுபாக்கூர்.
  3. இந்த வஞ்சகம் அருண் ஷெளரி, மஹாஜன், தயாநிதி மாறன், ஆ.ராஜா எல்லாரும் நாட்டுக்குச் செய்த பாதகம். 
  4. எனவே, பற்பல உரிமங்களை ரத்துச் செய்ய நேரிடலாம்.
  5. இப்படித் தெனாலிராமன் குதிரை மாதிரி முன்னும், பின்னும் கால் வைத்தால், சர்வதேச வர்த்தகம் அடிபடும். அதற்கு அஞ்சிச் சுத்த ஹம்பக், டுபாக்கூர் ஆகிய தடித்தனத்துடன், குடித்தனம் செய்யலாமா?
  6. இத்தனைக்கும் சுக்ராம் காலத்திலேயே அவர் நமக்கு துக்ராம் ஆக இருந்ததும் வெட்ட வெளிச்சம்.
  7. ஆடிட்டர் ஜெனரலுக்கு ஜே!
இந்தக் கட்டுரை ‘தி ரூல் ஆஃப் லா’ வுக்கும், ஜுடீஷியல் ஆக்டிவிசத்திற்கும் ஒரு சிறிய அறிமுகத்தின் முதல் பகுதி. எனவே, 2ஜி அவலத்தைப் பற்றி ஓரளவு தான் எழுதப்படுகிறது. 2ஜியும், ஒரு கமிட்டி சொன்ன மாதிரி எஸ்.ஜியும் நம்பிக்கைத் துரோகங்கள் என்பதுடன், இங்கு நிறுத்தி விடப்படுகிறது. போதாக்குறைக்குச் சனிக்கிழமை (04 02 2012) சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஆடிட் ரிப்போர்ட் வேறே ஒரேடியாக நெருடுகிறது. யாராவது கேட்டால் பார்க்கலாம். பாசாங்காக உறங்குபவர்களை எழுப்ப முடியாது, அல்லவா!
அரசாங்கத்தின் தராசுப் படிநிலையான நீதித்துறை, எல்லா விருப்பு, வெறுப்புகளையும் பாரபட்சமின்றி விலக்கி வைத்து, வாய்மைக்கு முதலிடம் அளிக்க வேண்டும். இந்தத் தீர்வு அவ்வாறு அமைந்தது என்க. ஒரு தனி மனிதரின் விண்ணப்பத்தை ஆராய்ந்து, தன்னிச்சையாக, முறை தவறி, லஞ்சமும், ஊழலும் கரை புரண்டோடிய டெலிகாம் துறையினால் அளிக்கப்பட்ட 122 2ஜி உரிமங்களை ரத்துச் செய்து விட்டது. மூன்று கம்பெனிகளுக்குத் தலா ஐந்து கோடி ரூபாய் அபராதம். 2ஜி உரிமங்களை மறுபடியும் கண்ணியமான முறையில் வழங்க வேண்டும். அதற்கானச் சட்ட பூர்வமான அமைப்பின் பரிந்துரைகளை மனதில் கொண்டு நான்கு மாதங்களுக்குள் அரசு உரிய முறையில் ஏலம் நடத்தி, அவற்றை வழங்க வேண்டும். அக்காலத்து அமைச்சர் ஆ.ராஜா முற்றும் தகாத முறைகேடான வகையில் வழங்கிய இந்த 122 2ஜி உரிமங்களால் வந்த வருமானம் வெறும் 9000 கோடி. அதை விடக் குறைவான 3ஜி உரிமங்கள் தந்த வருமானம் 69000 கோடி. இதிலேயிருந்து கொள்ளையின் பரிமாணம் புரியும். இது இப்படி இருக்க, சில ஊடகங்கள் கேட்கிற மாதிரி, ஆடிட்டர் ஜெனரலில் நஷ்டக்கணக்கு (1.76 லட்சம் கோடி) எந்த விதத்தில் தவறு என்று தான் தோன்றுகிறது. எஸ்.ஜி. பேண்ட் விவகாரங்கள் எந்தப் பூதத்தைக் கிளப்புமோ? 
இந்தத் தொடரில் ஏற்கனவே அரசுத் துறைகளின் (சட்டம் இயற்றுவது, நிர்வாகம், நீதி வழங்கல்) செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சட்டம் இயற்றும் பொறுப்பைச் செவ்வனே செய்யாத பிரதிநிதிகள், அவர்களைத் தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று தான் தோற்றம். நிர்வாகக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, அளவுக்கு மீறிய அதிகாரம், அடுத்தவன் வீட்டில் புகுந்து புறங்கை நக்கும் அரசியலாரின் பேராசை, மக்கள் விழிப்புணர்ச்சியை இழந்தது ஆகியவை காரணம். 
தணிக்கைத் துறையின் கண்காணிப்பு, தேர்தல் ஆணையத்தின் கார்வார், நீதித்துறையின் ஜுடீஷியல் ஆக்டிவிசம் இல்லையெனின் நாடு கவிழ்ந்து விடும், மக்கள் சூறையாடப்படுவர், ஜனநாயகம் வீழ்ந்து விடும். பல நாடுகளில் இந்த ஜுடீஷியல் ஆக்டிவிசம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதைப் பற்றியும், உலகிலேயே நடுநிலைத் தீர்ப்புக்கள் வழங்கி, என்றென்றும் போற்றப்படும் நீதிபதிகள் (டென்னிங்க்ஸ் பிரபு- இங்கிலாந்து, ஜஸ்டிஸ் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ்-  அமெரிக்கா, ஜஸ்டிஸ் வீ.ஆர். கிருஷ்ணையர்-இந்தியா) சட்டத்தின் மேலாண்மையை எடுத்துரைத்ததை நாம் மறக்கலாகாது. கொள்ளையடித்தவனைக் கேளுங்கள், “சட்டம் தன் வேலையைச் செய்யும்” என்பான். அரசியலரும் அவ்வாறே பகருவர். இரு தரப்பும் தனிமொழியில் “சட்டம் ஒரு கழுதை” என்பார்கள். சட்டம் ஒரு கழுதை தான். மற்றவர்களின் அழுக்குப் பொதியையும் சுமக்கிறது அல்லவா!
(தொடரும்) 
Published

இன்னம்பூரான் பக்கம் ~ 18

அப்டேட்: 09 06 2013


இன்னம்பூரான் பக்கம் ~ 18

“…தன்னை இழந்த பின் உலகை வென்று சாதிப்பது யாதும் இல்லை என்றார், ஏசு பிரான்; ‘யாதாயினும் தனக்குள்ளுறையும் வாய்மையை போற்றவும்’ என்றார் ஷேக்ஸ்பியர்.”
-Magee,Bryan (1998) The Story of Philosophy
questions
சாக்ரட்டீஸின் மனம் என்றுமே பளிங்கு நீர் போல தெளிவாக இருந்தது; அவருடன் அளவளாவுவது ஒரு புத்துணர்ச்சியை தூண்டியிருக்கும்; அவருடைய திறந்த மனம் சிந்தனையின் ஊற்று என்று சொல்வது மிகையாகாது. ப்ரையன் மாகி என்ற தத்துவ வரலாற்றாசிரியர் கூறுவது போல, ‘அன்றாட அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட மேதை’ என்ற வருணனைக்கு சாக்கிரட்டீஸீன் முத்திரை இலங்குகிறது. வேறு எந்த தத்துவபோதகருக்கும் இந்த உன்னதம் கிடைக்கவில்லை.
தொன்மையும், மரபும், அவை சார்ந்த சம்பிரதாயங்களும் ஆளுமை வகித்த கிரேக்க சமுதாயத்தில். சாக்கிரட்டீஸின் மேலாண்மை வெள்ளிடைமலையாகத் திகழ்ந்தது. தனிமனிதனின் யோக்கியதையை முன் நிறுத்தி, அவனுடைய மனம், உடல், சமுதாயம் சார்ந்த நடவடிக்கைகளை, அவன் தனக்கு தானே அளித்திடும் அறநெறிக்கு உட்படுத்தவேண்டும் என போதித்தவர், அவர் மட்டும் தான். அதற்கு பிறகு தான் மற்ற அதிகார மையங்களுக்கும், கடவளுக்கும் முக்கியத்துவம் என்று துணிவுடன் முன் வைத்தவர். அவர் தான். நம்முடைய நினைவில் உலவி வரும் மஹாகவி பாரதியின் புரட்சிகரமான கருத்துக்களும், அண்ணல் காந்தியின் தீண்டாமை விலக்கிய சனாதன ஹிந்து தர்மமும், சாக்கிரட்டீஸின் போதனையை தழுவியதே என்று எழுத விழைந்த போது, கண்ணில் பட்ட வாக்கியம், “…தன்னை இழந்த பின் உலகை வென்று சாதிப்பது யாதும் இல்லை என்றார், ஏசு பிரான்; ‘யாதாயினும் தனக்குள்ளுறையும் வாய்மையை போற்றவும்’ என்றார் ஷேக்ஸ்பியர்.” (Magee,Bryan (1998): பக்கம்:23)
அடுத்தப்படியாக அவர் முன் வைத்தக் கருத்து: ‘எதையும் தீர விசாரியாமல் ஏற்றுக்கொள்ளாதே. தெளிவான விளக்கங்கள் எளிதில் கிடைக்கமாட்டா. ஒவ்வொரு விடைக்கும் பின் ஒரு வினா தொக்கி நிற்கும் என்பதை மறக்காதே.’ சொல்லப்போனால், அவருடைய இந்த ‘dialectics’ எனப்படும் வினா-விடை-வினா விசாரணை பாதை இன்றளவும் உபயோகத்தில் இருக்கிறது. சில பள்ளிப்பாடங்களுக்கு உகந்த பாதை, இது தான். சகட்டுமேனிக்கு உருப்போட தகவல்களின் தொகுப்பு அளிக்க, இது பயன்படாது என்பதும் உண்மை.
தத்துவ போதனைகளில் உன்னதமான ராஜபாட்டையாக போற்றப்படும் சாக்கிரட்டீஸின் அணுகுமுறை மென்மையானது. மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் ஒரு அத்யந்த உறவு வேண்டும். ஆசிரியன் மாணவனை சிக்கல்களை அவிழ்க்கும் போது, அவனிடம் கருணை காட்டவேண்டும். அவனுடைய ஐயங்களை போக்கும்போது, அவனுடைய சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும். கையை பிடித்தல்லவோ அழைத்து செல்லவேண்டும் என்கிறார், சாக்கிரட்டீஸ். இது எனக்கு நினைவு படுத்துவது:
~ ஆங்கில பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு மாணவனுக்கும் ட்யூட்டர் ஒருவர் உண்டு என்பதும்;
~ ‘மெண்டாரிங்’ என்ற ஆசிரிய மரபின் அதீத பயனும்;
~ தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களுக்கு மஹாவித்துவான். மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை போன்றோர் கல்வி அளித்த பண்பும்.
(தொடரும்)
Published:http://www.atheetham.com/?p=5002







Pandiyaraja Tue, Jun 4, 2013 at 11:03 AM

மிக மிக அருமை ஐயா! ரசித்துப் படித்தேன்.
>> மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் ஒரு அத்யந்த உறவு வேண்டும். ஆசிரியன் மாணவனை சிக்கல்களை அவிழ்க்கும் போது, அவனிடம் கருணை காட்டவேண்டும். அவனுடைய ஐயங்களை போக்கும்போது, அவனுடைய சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும். கையை பிடித்தல்லவோ அழைத்து செல்லவேண்டும் என்கிறார், சாக்கிரட்டீஸ்.
 
என்ன அருமையான கருத்து! நான் அமெரிக்கன் கல்லூரியில் பணியில் சேர்ந்தபோது எனக்குக் கொடுக்கப்பட்ட பதவி - Tutor in Mathematics. PUC மாணவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுக்கணக்குகளை - திங்கள் காலை சமர்ப்பிப்பார்கள். அவற்றைச் சரிபார்த்துத் திருத்தித் தரவேண்டும். அவ்வப்போது மாணவர்கள் (PUC முதல் III B.Sc வரை) கேட்கும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கவேண்டும். என் ஆரம்பகால ஆசிரியர் வாழ்வை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Innamburan S.Soundararajan Tue, Jun 4, 2013 at 11:14 AM

மிக்க நன்றி, முனைவர் பாண்டியராஜா. எனக்கு உமக்கு எதிர்மறையான Tutor in Mathematics. வாய்த்ததால், நான் கணக்கு அறிவிலி ஆகிவிட்டேன். அதை பற்றி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை ராமானுஜம் கணக்கு சாத்திர மையம் பிரசுரம் செய்துள்ளது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அனுப்புகிறேன். உங்கள் 'அகம்' கட்டுரை களை வாசித்து மகிழ்கிறேன்.
வாழ்த்துக்கள்

இன்னம்பூரான்

Rathinam Chandramohan 
arumai



shylaja Tue, Jun 4, 2013 at 11:40 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil
ஆசிரிய மாணவ்  உறவு பற்றின  அருமையான  இடுகை.  வார்த்தை  வரிசைகள்  உங்கள் இடுகைக்கு சிறப்பு சேர்க்கிறது
[Quoted text hidden]
--
ஷைலஜா
 
//
நலமே மலரே நற்றமிழே!
நனவும் கனவும் நாயகனே
மலரின் நுனியில் பனிபோலே
மனதைச் செய்தவன் அருளாலே!
புலரும் பொழுதெனப் பலயுகமாய்ப்
புரிதற் கொன்று மில்லாமல்
இலையாய்க் காற்றில் நகர்கின்றேன்
எல்லாம் திருவடி என்றபடி!
 
திருவரங்கப்ரியா!
 ///
[Quoted text hidden]

Subashini Tremmel Tue, Jun 4, 2013 at 4:13 PM


தத்துவ போதனைகளில் உன்னதமான ராஜபாட்டையாக போற்றப்படும் சாக்கிரட்டீஸின் அணுகுமுறை மென்மையானது. மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் ஒரு அத்யந்த உறவு வேண்டும். ஆசிரியன் மாணவனை சிக்கல்களை அவிழ்க்கும் போது, அவனிடம் கருணை காட்டவேண்டும். அவனுடைய ஐயங்களை போக்கும்போது, அவனுடைய சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும். கையை பிடித்தல்லவோ அழைத்து செல்லவேண்டும் என்கிறார், சாக்கிரட்டீஸ். இது எனக்கு நினைவு படுத்துவது:
~ ஆங்கில பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு மாணவனுக்கும் ட்யூட்டர் ஒருவர் உண்டு என்பதும்;
~ ‘மெண்டாரிங்’ என்ற ஆசிரிய மரபின் அதீத பயனும்;
~ தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களுக்கு மஹாவித்துவான். மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை போன்றோர் கல்வி அளித்த பண்பும்.
ஒரு மெண்டராக பேசிலிடேட்டராக ஆசிரியர்கள் அமைய வேண்டும் என்பதைத் தற்கால கல்வி போதனாமுறையும் வலியுறுத்துகின்றது. எனக்குத் தெரிந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் கல்வி போதனா முறையில் இந்த அணுகு முறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் கேள்வி எத்தனை ஆசிரியர்கள் தங்கள் ஈகோவை விட்டு விட்டு மாணவரை அரவணைத்துச் செல்ல தங்களைத் தயார்படுத்துக் கொண்டுள்ளார்கள் என்பதில் தான்.  மாணவரின் வளர்ச்சி மட்டுமே ஆசிரியர் மனதில் இருந்தால் தன்னைப் பின்னிலைப் படுத்தி மாணவர்  நலனை முன்னிலைப் படுத்தி செயல்படும் ஆசிரியர்கள் கிடைப்பார்கள். ஆனால் இது தற்காலத்தில் மிக மிக மிகக் குறைவாகவே உள்ளது. தான் சொல்வதை ஆமோதிக்கும், அப்படியே திரும்பிச் சொல்லும் மாணவரை விரும்பும் ஆசிரியர்கள் மாணவரின் சுய சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவ முடியாது. மாறாக சிந்தனை அடிமையை உருவாக்கும் முயற்சியில் மட்டுமே வெற்றி பெறலாம்.

நல்ல தொடர்.. இப்பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. 

சுபா



தேமொழி 
///நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை ராமானுஜம் கணக்கு சாத்திர மையம் பிரசுரம் செய்துள்ளது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அனுப்புகிறேன்.///

கட்டுரையைப் படிக்க எனக்கு ஆர்வமுள்ளது அனுப்ப இயலுமா ஐயா?

அன்புடன் 
..... தேமொழி 



Pandiyaraja Tue, Jun 4, 2013 at 4:51 PM

மிக்க நன்றி 'இ' ஐயா!
>>
 நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை ராமானுஜம் கணக்கு சாத்திர மையம் பிரசுரம் செய்துள்ளது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அனுப்புகிறேன்
தவறாமல் உடனே அனுப்புங்கள். முதலில் அது உங்களைப் பற்றியது. அடுத்து கணக்கைப் பற்றியது.எனவே ஆர்வம் இருமடங்கு.
நன்றி,
ப.பாண்டியராஜா