அப்டேட்: 09 06 2013
இன்னம்பூரான் பக்கம் ~ 18
“…தன்னை இழந்த பின் உலகை வென்று சாதிப்பது யாதும் இல்லை என்றார், ஏசு பிரான்; ‘யாதாயினும் தனக்குள்ளுறையும் வாய்மையை போற்றவும்’ என்றார் ஷேக்ஸ்பியர்.”
-Magee,Bryan (1998) The Story of Philosophy
சாக்ரட்டீஸின் மனம் என்றுமே பளிங்கு நீர் போல தெளிவாக இருந்தது; அவருடன் அளவளாவுவது ஒரு புத்துணர்ச்சியை தூண்டியிருக்கும்; அவருடைய திறந்த மனம் சிந்தனையின் ஊற்று என்று சொல்வது மிகையாகாது. ப்ரையன் மாகி என்ற தத்துவ வரலாற்றாசிரியர் கூறுவது போல, ‘அன்றாட அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட மேதை’ என்ற வருணனைக்கு சாக்கிரட்டீஸீன் முத்திரை இலங்குகிறது. வேறு எந்த தத்துவபோதகருக்கும் இந்த உன்னதம் கிடைக்கவில்லை.
தொன்மையும், மரபும், அவை சார்ந்த சம்பிரதாயங்களும் ஆளுமை வகித்த கிரேக்க சமுதாயத்தில். சாக்கிரட்டீஸின் மேலாண்மை வெள்ளிடைமலையாகத் திகழ்ந்தது. தனிமனிதனின் யோக்கியதையை முன் நிறுத்தி, அவனுடைய மனம், உடல், சமுதாயம் சார்ந்த நடவடிக்கைகளை, அவன் தனக்கு தானே அளித்திடும் அறநெறிக்கு உட்படுத்தவேண்டும் என போதித்தவர், அவர் மட்டும் தான். அதற்கு பிறகு தான் மற்ற அதிகார மையங்களுக்கும், கடவளுக்கும் முக்கியத்துவம் என்று துணிவுடன் முன் வைத்தவர். அவர் தான். நம்முடைய நினைவில் உலவி வரும் மஹாகவி பாரதியின் புரட்சிகரமான கருத்துக்களும், அண்ணல் காந்தியின் தீண்டாமை விலக்கிய சனாதன ஹிந்து தர்மமும், சாக்கிரட்டீஸின் போதனையை தழுவியதே என்று எழுத விழைந்த போது, கண்ணில் பட்ட வாக்கியம், “…தன்னை இழந்த பின் உலகை வென்று சாதிப்பது யாதும் இல்லை என்றார், ஏசு பிரான்; ‘யாதாயினும் தனக்குள்ளுறையும் வாய்மையை போற்றவும்’ என்றார் ஷேக்ஸ்பியர்.” (Magee,Bryan (1998): பக்கம்:23)
அடுத்தப்படியாக அவர் முன் வைத்தக் கருத்து: ‘எதையும் தீர விசாரியாமல் ஏற்றுக்கொள்ளாதே. தெளிவான விளக்கங்கள் எளிதில் கிடைக்கமாட்டா. ஒவ்வொரு விடைக்கும் பின் ஒரு வினா தொக்கி நிற்கும் என்பதை மறக்காதே.’ சொல்லப்போனால், அவருடைய இந்த ‘dialectics’ எனப்படும் வினா-விடை-வினா விசாரணை பாதை இன்றளவும் உபயோகத்தில் இருக்கிறது. சில பள்ளிப்பாடங்களுக்கு உகந்த பாதை, இது தான். சகட்டுமேனிக்கு உருப்போட தகவல்களின் தொகுப்பு அளிக்க, இது பயன்படாது என்பதும் உண்மை.
தத்துவ போதனைகளில் உன்னதமான ராஜபாட்டையாக போற்றப்படும் சாக்கிரட்டீஸின் அணுகுமுறை மென்மையானது. மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் ஒரு அத்யந்த உறவு வேண்டும். ஆசிரியன் மாணவனை சிக்கல்களை அவிழ்க்கும் போது, அவனிடம் கருணை காட்டவேண்டும். அவனுடைய ஐயங்களை போக்கும்போது, அவனுடைய சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும். கையை பிடித்தல்லவோ அழைத்து செல்லவேண்டும் என்கிறார், சாக்கிரட்டீஸ். இது எனக்கு நினைவு படுத்துவது:
~ ஆங்கில பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு மாணவனுக்கும் ட்யூட்டர் ஒருவர் உண்டு என்பதும்;
~ ‘மெண்டாரிங்’ என்ற ஆசிரிய மரபின் அதீத பயனும்;
~ தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களுக்கு மஹாவித்துவான். மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை போன்றோர் கல்வி அளித்த பண்பும்.
(தொடரும்)
Published:http://www.atheetham.com/?p=5002
No comments:
Post a Comment