Wednesday, June 5, 2013

2011/2013 ல் ராஜாஜி -2 :பொருளியல்


2011/2013 ல் ராஜாஜி -2


Innamburan Innamburan Sun, Apr 17, 2011 at 6:13 AM



 ராஜாஜி ஒரு அற்புதமான மனிதர். அறிவு, ஆற்றல், இனிமை, உவகை, ஊக்கம், எளிமை, ஏற்றம், ஒட்டணி ஆகிய அணிகளுடன், ஓஹோ என்பதையெல்லாம் தவிர்த்தத தீர்க்கதரிசியும் அடுத்தாத்து மாமாவும் அவரே. சில சமயம் அவர் இன்று 2013ல் எழுதிய மாதிரி தோற்றம். சரியான பெரிஸ்கோப் அவர்.
எனவே, கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து, அவரது கட்டுரைகளை தவணை முறையில் வெளியிடுகிறேன். . முதல் கட்டுரையை பதித்து பல நாட்கள் ஆயின. இன்று, நமது பொருளியல் நிலைமை அடி மட்டத்தில்வந்த கருத்துக்களை அடுத்த கட்டுரையில் தொகுத்து அளிக்கிறேன்
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVuOXVt3ThngxmVp_jeJQZJJCBKGsejwFWpkUuNmAczz0RuPj8Rtu1Vpr5JojKoTTBgpvHyy1t2LnEGlNai9tlVupEPF8D3en9mZ-nAxQXkAcmkmPeuB3BoFs17sfh0at3ntxRc5UMWnQ/s640/achchaariyar.jpg
இன்னம்பூரான்
05 06 2013

முன்குறிப்பு:
நண்பர்களே,

நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். இது இரண்டாவது கட்டுரை.
நமது பொருளியல் நிலைமை

‘அரசியலின் உள்ளுறைவது, தேர்தலில் எப்படியாவது வெற்றியடைவது என்று தான் அவர்கள் நம்பினார்கள். வரலாற்றில் மறைபொருள் உண்டு. அவர்கள் தேர்தலில் தோற்றல்லவோ போனார்கள்.’

இந்த மேற்கோள் யாரோ வேறு ஒரு நாட்டை/மக்களைப்பற்றி கூறியது. ஆனால் இது நமது அறிவுஜீவிகளுக்கு பொருத்தமான எச்சரிக்கை. காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பொருந்தும். நமது அரசியல்/சமூக வாழ்வியலில் தார்மீகத்துக்கு (எதிக்ஸ்) நாம் இடம் கொடுக்காவிடின், மக்கள் நம்மை விரும்பமாட்டார்கள். அவர்கள் பாமர மக்கள் தாம்; ஆனால், நன்மக்களின் ஆழ்ந்த கவனம், அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் தரம் பார்க்க உதவுகிறது. ஜோடித்ததெல்லாம் அவர்கள் நம்பமாட்டார்கள். அமைச்சர்களின் ஊதியத்தையும், படி வரும்படிகளையும் 5/10/15 விழுக்காடு குறைத்தால் கூட, அவர்களை வசப்படுத்த முடியாது. அந்த வித்தையெல்லாம் வரிப்பளுவை குறைக்கப்போவதில்லை; விலைவாசி ஏற்றத்தைத் தடுக்கப்போவதில்லை. அதன் தாக்கத்தை குறைக்கப்போவதில்லை.  சுமப்பவர்க்கு உரிய சுமைக்கூலியை குறைப்பதில் பயன் என்ன? ஆளுமையில் இருப்பவர்களின் சம்பளத்தை அதிரடியாக குறைப்பது மதியீனம். அப்படி செய்தால், ஒரு ராபெர்ட் க்ளைவ் வந்து லஞ்சத்தையும், அடக்குமுறையும் விலக்கவேண்டி வரும். ஆளுமை அருளும் வேட்கைகளை தவிர்க்குமளவுக்கு சம்பளங்கள் இருக்கவேண்டும். இந்த இடத்தில் சிக்கனம், நம் பொருளுக்கு ஆதாரமும் இல்லை; யாரையும் ஏமாற்றமுடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களை முரட்டுத்தனமாக ஏழ்மைப்படுத்துவதில் மக்களுக்கு ஈடுபாடு கிடையாது. அது எல்லாம் அந்த அந்த வகையினர்களில், அடிபட்டவர்களின் ஆசையாக இருக்கலாம்.  அரசியல் எதிரிகளுக்கு இது எல்லாம் ஆயுதமாக இருக்கலாம். ஆனால், அது மக்கள் விழைவு அன்று. மக்கள் கேட்பதெல்லாம், சுளுவான வரியும், சுமையாக இல்லாத விலைவாசியும்.

உலகெங்கும் பணவீக்கம் இருக்கிறது; ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவிலோ, ஏழைகளுக்கு கூட சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய நிலைமை. விலைவாசி ஏற்றம் தாங்கவே முடியவில்லை. (அவர் சொன்னது 1956/57ல்) பணவீக்கத்தினால், அத்யாவசிய பொருள்களின் விலை அதிகப்படி; எல்லா தரத்திலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; மத்திய வகுப்பு மக்கள் மூப்புகாலத்துக்கு சேமித்த பணத்தின் மதிப்புக்குறைவு. இது கொள்ளையில்லாமல், வேறு என்ன? முதலுக்கே மோசம். கொடுத்த கடன்/ டிபாசிட்/ சேமிப்பு/ காப்பீடு, எதுவானாலும், முதலும், வட்டியும் சேர்ந்து , அசலில் பாதி கூட தேறாது என்ற நிலை, இப்போது. மக்கள் நலம் எதில் இருக்கிறது? பொதுஜனத்தின் அன்றாட வாழ்க்கை செவ்வனே அமைவதில் தான் இருக்கிறது. இந்த முன்னேற்றம் ஏற்படும் வரை, நாட்டில் சமாதானமும், மகிழ்வும் நிகழாது. ஐயா! அது இரண்டும் தானே, மக்கள் நலத்தின் சின்னங்கள்.

வரி உயர, உயர, நாம் ஒடுக்கப்படுகிறோம். இருக்கிற துணியை வைத்து அல்லவோ சொக்காய் தைக்கவேண்டியிருக்கிறது. நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியது என்னவெனில், இந்த துணி ஜடம் இல்லை; மயங்கியது இல்லை; அதற்கு ஆத்மா உண்டு. இத்தருணம், இத்துடன் தொடர்புடைய ஒரு கருத்து: ஓஹோ என்று செலவழித்து, போர்க்களம் செல்லும் ஆயத்தங்களால், ஆவது ஒன்றுமில்லை. ஒன்று: நமது செல்வமும், உற்பத்தித்திறனும் அழியும். இரண்டு: எதிர்காலத்தை வல்லரசுகளுக்கு அடகு வைத்து விடுகிறோம். ராணுவத்துறையின் கிடு கிடு முன்னேற்றம், இந்த வருட உழைப்பை, அடுத்த வருடம் உருப்படியில்லாமல் செய்து விடுகிறது. நமக்கு, சாந்தியின்/தார்மீகத்தின் துணிவால், ராணுவச்செலவை குறைத்து, அன்றாட வாழ்க்கைக்கு மக்களுக்கு  நலன் செய்வதால் கிடைக்கும் பாதுகாப்பின் நலன் அண்டட்டும். நான் சொல்வது இவ்வளவு தான். ஒரு பத்து/பன்னிரெண்டு வருடங்கள் இப்படி ஆட்சி செய்து, அப்போது இருக்கும் நிலையை ஆராய்ந்து, தக்கதொரு கோட்பாட்டை அமைத்துக் கொள்ளலாமே.

பொதுமக்களின் பணத்தை செலவு செய்பவர்கள், எல்லா படிநிலைகளிலும், யோக்கியர்களாக இருக்கவேண்டும். தற்காலமோ, அந்த கண்ணியம் லவலேசம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க நிலைமை. கிட்டத்தட்ட, அட்டூழியங்கள் நடக்கும் அளவுக்கு கெட்டுவிட்டது, அந்த இழிநிலை. தேசாபிமானத்திற்கு, அது சாவுமணி என்க. அரசு பணி புரிவோர்க்கு போதுமான அளவு சம்பளம் கொடுக்கவேண்டும். அவர்களும் பொறுப்பில்லாமல் இருப்பதையும், அயோக்கியர்களாக இருப்பதையும், வெட்கம் கொண்டு தவிர்க்கவேண்டும். அயோக்கியன் என்ற க்யாதி வெட்கம் அளிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். 

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, நிஜமான பணிகள் தொடங்கவேண்டுமே தவிர, வீண்செயலாக, பணியாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவது கூடாது. இப்போது சோம்பல், நிர்வாஹத்துறைகளில் ஒண்டுகுடித்தனம் செய்கிறது. ஒருவர் வேலை செய்தால், இருவர் ஓய்வில்! இது வேலையில்லா திண்டாட்டத்தை விட மோசம். சுவர்கடியாரத்தை பார்த்துக்கொண்டு சோம்பல் முறிக்கும் நபர்களுக்கு செலவு செய்வதை விட, சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட ஊதியம் வழங்குவது சாலத்தகும். 

பெரிய திட்டங்கள்/ பொதுப்பணி போன்றவையை செயல் படுத்துவதில் வீண்செலவை கண்கூடாகப் பார்க்கிறோம். இந்திய ஊழியர்களின் சிக்கனமும், கவனமும் இன்று திமிர் பிடித்த வீண்செலவினமாகவும், குற்றம் காணும் அளவுக்கு பொறுப்பின்மையாகவும் மாறி விட்டது மட்டுமல்ல; அது வாடிக்கையாகப் போய்விட்டது. நாம் கேட்பதெல்லாம், சிக்கனம், நாணயம், மனசாட்சிக்குகந்த பணி. அவ்வளவு தான். மத்திய அரசு நிர்வாஹம், மாநில அரசு நிர்வாஹத்திற்கு முன்னோடி. அரசின் இலாக்காக்கள், தனியார் தொழில் நிர்வாஹத்திற்கு முன்னோடி. வருங்காலத்தில், நாட்டின் செல்வபெருக்கு, அதற்கான திட்டங்கள் எல்லாவற்றிற்கும் மூலதனம், சிக்கனத்திலும், நிர்வாகத்திறனை கூட்டுவதிலும் இருக்கிறது. இல்லையெனில், நமது சாதனைகளின் விலை, சாதனைகளை விட அதிகமாகி விடும். அதன் விளைவு: வரிப்பளுவும், பணவீக்கமும்.

முக்யமான வழிமுறைகளை சொல்லிவிட்டேன். அமெரிக்காவின் உதவியுடன் ராணுவ தளவாடங்கள் வாங்கும் பாகிஸ்தானோடு போட்டாப்போட்டி போடும் கொள்கையை புறக்கணித்து, துணிவுடன் மக்கள் சக்தியை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவ செலவுகள் அளிக்கும் பாதுகாப்பை விட, மக்கள் தொண்டு, அவர்களின் நல்வாழ்வு, நிறைவுடன் வாழும் மக்கள் சக்தி ஆகியவை வலிமை வாய்ந்தது.
-X-
பி.கு: 
அடுத்த கட்டுரை: ‘நல்லாட்சிக்கு ஒரு பக்குவம்’. ராஜாஜி அவர்கள் வீணடிப்பதை கண்டித்திருக்கிறார், இந்த கட்டுரையில். வீணடிப்பது ஒரு ஊழல். அரசு சொத்துக்களை விரயம் செய்வதில், முறைகேடான ஆதாயம் தேட முடியும். அது பற்றி அறிய ஆர்வமுடையவர்கள், இத்துடன் இணைத்திருக்கும், ‘வீணடிப்பதை கட்டுப்படுத்துவது’ என்ற ஆங்கில கட்டுரையை (ஹிந்து இதழில் 2004ல் வெளி வந்தது.) காணலாம்.
இன்னம்பூரான்
17 04 2011



Containing Waste.rtf
8K

Geetha Sambasivam Sun, Apr 17, 2011 at 11:05 AM

மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். //

இந்த நிலையை இன்று காண்பதே அரிதாக உள்ளதே ஐயா,  ஊழல் செய்துவிட்டுச் சிறைக்குச் செல்கிறவர்களும், கொலை செய்துவிட்டுச் சிறை செல்கிறவர்களும், ஏதோ பெரிய தியாகங்கள் புரிந்துவிட்டுச் செல்வதைப் போல் அல்லவா மக்கள் முன்னால் கைகாட்டி அமைதிப் படுத்திவிட்டுச் செல்கின்றனர்!  வெட்கமா?? அப்படின்னா என்ன???? இதுஅவர்கள் கேட்கும் கேள்வி.


No comments:

Post a Comment