Tuesday, June 4, 2013

16 அ: லட்டு,வடை, அப்பளம்: தணிக்கை


16 அ: லட்டு,வடை, அப்பளம்: தணிக்கை

தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை:
இன்னம்பூரான்
04 06 2013

அரியக்குடியில் பிரமாதமான விருந்தோம்பல்/சமாராதனை/ ததியோராதனை நடக்கும். தாத்தாவின் உபயம் என்றாலும், உக்ராண அறையிலும், சமையல் கட்டிலும்,ஃபுல் லைசன்ஸுடன் வளையவரும் எனக்கு, இலையில் போடப்படும் லட்டையும், வடையையும் அப்பளத்தையும் கையில் வாங்கிக்கொண்டு, பின்னர் சுவைப்பதில் தனி ருசி. அத்தான் அப்பாத்துரை இலையிலும் போட்டு, கையிலும் கொடுக்கமாட்டார்.  திருமதி கீதாவின் வினா, 
ஐயா, இது போன்ற தகவல்களின் மூலம் மீடியாவை நொந்து கொள்வதா அல்லது அதிகாரிகளா?  அல்லது அரசா என்பதே !  எல்லாம் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஒட்டு மொத்தமாய் மக்களை ஏமாற்றுகின்றனர். ! இதை எல்லாம் படிக்கையில் மனம் கொதிக்கிறது. :((( ‘ 

இந்த வினா லட்டு,வடை, அப்பளம்’ ஆகியவையை உவமையாக முன்வைக்க கோருகிறது. என்னை பார்க்க வந்த தூதர் தனது நாட்டில் தணிக்கை கசிவுகள் அதிகம்; அவற்றை காசு,பணமாக மாற்றி விடுபவர்களால் பிரச்னை. உங்கள் நடைமுறை என்ன என்று கேட்டு வந்த போது இந்த உவமானம் தெளிவு அளித்தது.

தணிக்கைத்துறை விளம்பரம் நாடாதது மட்டுமல்ல. அமுக்காரக்கிழங்கு. சாமான்யமாக ஊடகங்களுடன் ஈஷிக்கொள்ளாது. (தற்காலம்: விட்ட குறை, தொட்ட குறை.) பொதுமக்களுக்குப் புரியும் வகையில் தணிக்கை ரிப்போர்ட் எழுதுவது கடினம். ஆதியோடந்தமாக எல்லாம் சொல்ல வேண்டும்; அதை ரத்னசுருக்கமாக அளிக்கவேண்டும். வந்த பதில்களை அலசி, உண்மையை உரைக்கவேண்டும், நடுவு நிலையில் அமர்ந்து. ஆதாரங்களை சுட்டவேண்டும். அதற்கான ஆவணங்களை பத்திரப்படுத்தி, பொது தணிக்கை மன்றத்தில், கேட்டவுடன் காட்ட வேண்டும். இதற்கு சான்றாக இந்த் 2ஜி ஆடிட் ரிப்போர்ட் போதும். அதை படித்தாலே 2ஜியின் வரலாறு, விஞ்ஞானம், பொருளியல், மேலாண்மை, துஷ்பிரயோகம் எல்லாம் அத்துப்படி. முக்கியமாக சொல்ல வேண்டியது, அதை எல்லாரும் புரிந்து கொள்கிறமாதிரி எழுதியிருக்கிறார்கள். அது முன்னேற்றம்.

ஆடிட் கடிதப்போக்குவரத்து கசிந்தததால் யாருக்கு ஆதாயம்? ஆடிட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு: அமைச்சரகம், ஆட்சி பீடம், அரசு கம்பெனி, ஒப்பந்தக்காரர் ஆகியோருக்கு. இன்றைய (04 06 2013) நிலைமை படி, ஆடிட் செய்யவிடாமல், சாக்கு போக்கு, சால்ஜாப்பு, அது, இது என்று காலம் கடத்த வசதியாக இருந்திருக்கிறது, இந்த எண்ணெய் விவகாரத்திலேயே. ஆடிட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டால், அதில் வியப்பு ஒன்றுமில்லை. 
~அப்பளம் நொறுக்கியாச்சு.  

இந்த ஆடிட் மடலாடல் கசிந்தததால் யாருக்கு நஷ்டம்? தணிக்கைத்துறைக்குத்தான். ஆடிட் தடைபெற்று போகிறது. காலதாமதம் ஆகிறது. ஆவண வீரியம் நீர்த்துப்போகிறது. வசை கூடுகிறது.  ஆதலால், தணிக்கைத்துறையில் உள்குத்து வேலைகள் நடந்ததாக தோன்றவில்லை. நடந்திருக்கலாம் என்ற ஹேஷ்யத்தையும் விலக்க முடிவதில்லை. எங்கும் மனிதர்கள் தானே. இந்த ஊடகங்கள் சாம, தான,பேத, தண்ட உபாயங்களின் உறைவிடம்.
~வடையை காக்காய் தூக்கிக்கொண்டு போயிடுத்து.

‘கோபால்! இந்தா இன்று பிரசுரமான ஆடிட் ரிப்போர்ட். முதல் எடிஷன் அச்சில் இருக்கு. நாலு பாயிண்டு நாம் எழுதாவிட்டால், போட்டியில் இருக்கும் ‘அன்றாட சொட்டு மருந்து’ இதழில் போட்டு விடுவான். உனக்கு இருபது நிமிட கெடு. ஒரு பத்தி எழுதிக்கொடு. இல்லாட்டா, நமக்குத் தலை குனிவு.’ என்று எடிட்டர் சொல்லிவிட்டால், கோபால் கண்ணை மூடிக்கொண்டு திறப்பான். கண்ணில் பட்ட மின்சாரக்களவை பற்றி நாலு வரி எழுதிவிட்டு, கண்ணை மூடிக்கொள்வான், கோழித்தூக்கத்தில். அதை விட சுவையான சமாச்சாரம்: கட்சிக்காரனுக்கு விதி மீறி கொடுத்த ஒப்பந்தம்: அதிகப்படி செலவு: ரூ.11, 23, 476.74/-. இதை இரண்டு இதழும் கோட்டை விட்டிருப்பார்கள்.

லட்டும் மறந்தேனே, நானே!
சேட்டு அர்ஜெண்ட் னு சொன்னாரே.
சொட்டு மருந்து போட்டி என்றாரே.
சட்டுப்பிட்டுனு எளுதிப்பிட்டேனே!
Image Credit;http://lh6.ggpht.com/_UIidE7NI4j0/TMvLadvBsAI/AAAAAAAAANc/kCRPSLf5cwM/s400/Boondhi%20laddu%20(kunjaalaadu).JPG


No comments:

Post a Comment