தெருக்கூத்து -5
‘நவீன சகுனி’
இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் எக்கச்சக்ககூட்டம். தொலைவிலிருந்து -கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்தும், கொலைகாரன் பேட்டையிலிருந்தும், அம்பட்டன் வாராவதியிலிருந்தும், யானைகவுனியிலிருந்தும் - தரை மஹாஜனங்கள், விஜில் சகிதமாக வந்த வண்ணம். அதில் சிலர் பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தனர். இதெல்லாம் சகஜம் என்றாலும், மனோன்மணி அம்மாளுக்கு எல்லாம் அத்துபடி. அவளும் நெட்டை தாமு, சொட்டை சுப்ரமணியன், மோட்டுவளை முதலி போன்ற தடியன்களை முஸ்தீப்பாக வைத்திருந்தாள். அவளுக்கு வலது கையான இன்ஸ்பெக்டர் கதிர் கிட்ட ஒரு வார்த்தை போட்டு வைத்தாள். அஞ்சா நெஞ்சியாளாகிய அவள் தெனாவெட்டுடன், ‘இன்று ‘மனம் கவர்’ கச்ச தேவயானி’ என்று தண்டோரா போட்டு விட்டதால், விடலைகள் கூட்டம் அபரிமிதம். அவங்களையும் ஜாடையாக உஷார் படுத்தினாள்.
நடு ஜாமம். மணி அடிச்சது. ஜல் ஜல் என்று சலங்கைகள் ஒலிக்க, கைவளை குலுங்க, ஒய்யாரமாக மேடை ஏறினாளே,ஸ்த்ரீப்பார்ட் சக்ரபாணி. குரல் என்னமோ ‘கர, கர’ தான். ஹூ கேர்ஸ்? பலத்த கர கோஷம். இந்தக்காலத்து பசங்களுக்கு சொல்லிப்போடுவோம் என்று ‘விவரமான’ மனோன்மணியம்மாள் வினியோகித்த பிட் நோட்டீஸு உசாத்துணையில். கிளிக்கவும்; கிளுகிளுக்கவும். இத்தனை ஜபர்தஸ்தாகவே, கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ் டிராமா கம்பெனியின் தெருக்கூத்துக் களை கட்டவே, பிச்சு ஐயர் பெடல் போட்டு ஆர்மோனியம் ஒலிக்கவே, நம்ம சக்ரபாணி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ!’ என்று நீட்டி முழக்கி பாட்றான்.
பூஜை வேளையில் புகுந்த கரடி மாதிரி, நம் கண்ணாயிரமும் ( அதான் கோமாளி) தடாலடியாக மேடை ஏறி,
‘ நிறுத்து! நிறுத்து! சுக்ரபுத்திரி பெண்ணே!
மறுத்துப் பேசாதே, கசன் வந்ததறிவேன் யான்.’
என்று கூவிக்கொண்டே, சக்ரபாணியை அவன் புறம் தள்ளினாலும், ஒத்திகையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற,’
அம்பயரெல்லாம் என் பாக்கெட்க்குள்ளே.
ஜம்பமெல்லாம் என் கிட்ட சாயாது.
பிம்பமெல்லாம் பாரு! என் கைக்குள்ளே.
கொம்பனாருக்கெல்லாம் கொம்பே! நரிக்கொம்பே!”
என்று தேவயானி அடி எடுத்துக்கொடுக்க, கோமாளி பாடிய அந்தாதியை கேளீர்?
‘நரிக்கொம்பு வாங்கலையோ, அண்ணாச்சி?
மருக்கொழுந்து வாசம் அடிக்குதப்பா!
கிரிக்கெட்டு உனக்கு ஒரு கேடா?
சரிக்கட்ட தோது நானே...’
கரகோஷம் வானை பிளந்தது. கொலைகாரன் பேட்டை பிஸ்தாவும் முறைத்தான். நெட்டை தாமுவும் கட்டை உருட்டினான். கதிர் ஐயா கனைத்தாரு. விட்டுக்கொடுக்காத விடலைகள் அக்கம்பக்கம் கவனித்துக்கொண்டனர்.
இனி கோமாளியின் சொல்மாரி:
“சாமியோவ்! அம்மாமார்களே! ஐயாமார்களே! சின்னப்பசங்களே! கிழங்கட்டைகளே!,கொடியேறியவுடனே யான் உரைத்தது யாதெனில்... (சைலண்ட். மறந்து போச்சு. கீச்சுக்குரலில் சக்ரபாணி அடி எடுத்துக்கொடுக்க),
‘சத்சங்கம் ரகசியமாகக்கூடுதுங்க. இப்பெல்லாம், சண்டை, சச்சரவுக்குனு ஆட்கள் காத்திருக்காங்க இல்லெ. அதான். சத்லீக் ஆனா சொல்றேங்க. என்று அன்றே சொன்னேன்.கொல்கத்தா, மும்பை சென்னை எல்லாவிடத்திலும் மீட்டிங்க் போட்டாங்க. நம்ம சத்சங்கம் சாமான்யம் இல்லைங்க. ஐ.பி.எல் மாதிரி சொத்துக்காரங்க. எல்லாமே பெரிய பண்ணை. மாங்குடி மைனர் ராமுடு ஐயர், ஹிட்லர் மீசை நாச்சியப்பன், கட்டாரி கனகவேல், ஆஸ்தான நர்த்தகி ஜம்புகேஸ்வரி, தளிகை நச்சு அல்லாரும் வந்தாச்சு. மீட்டிங்கும், டின்னரும் நம்ம பேட்டையில் தான். வைட்டர் தம்பு நமக்கு உள்கைங்க. ஆனால், லீக் ஆனதிலே பேப்பர்காரன் போட்டதத்தான் சொல்லிப்போடுவேங்க. நாளைக்குக் கேஸு கீசு போட்டான்னா, மனோன்மணியம்மா என் தலையை சீவிடுவாங்க. கீசுடுவாங்க, கீசி. என்றான். சிரிப்பு தாளாமல், அவளுக்கு புரைக்கேறியது. பின்னெ. ஒரு பிடி புகையிலையை முளுங்க முடியுமா சாமி?
‘மண் ஒட்டா மீசைக்காரன் நானு.
கண் போடாதே, தேவ யானி.
மன் மதலீ லை கண்டார் யாரு?
தன் நிலை மறந்தேன் நானே!
என்று பாடி விட்டு சொன்ன கதை:
தலைமை தர்மகர்த்தா வேணுகோபால் நாயுடுகாரு ராஜிநாமா செய்யலையாம். ஆனா எல்லாரும் ராஜியாய்ட்டங்களாம். ராஜிநாமா செய்யாட்டாலும், ட்யூட்டியை விடமாட்டேன் னு கறாரா சொல்லிட்டாராம். அதாவது, விட்டுப்பிடிப்பேன் என்று இறைச்சி. சாவியை சரண்டர் பண்ணிட்டாராம். ‘மறு சாவி?’ என்று கேட்ட நச்சுவை நசுக்கிப்பிட்டார், நசுக்கி. மாங்குடி மைனர் ராமுடு ஐயர் தான் மேஜர் சமாச்சாரம் எல்லாம் பாத்துப்பாருன்னு நாயுடுகாரு சொல்லிட்டாராம். கொஞ்சம் குரலை உயர்த்தி அவரு சொன்னாராம், ‘என்னை யாரும் போகச்சொல்லலை. நான் தள்ளி நிக்கறேண்டா, மாபாவி. ஓடிப்போன ஆஸ்தான நர்த்தகி ஜம்புகேஸ்வரி, தளிகை நச்சு இரண்டு பேரும் என்னுடைய அருமை நண்பர்கள் ( தனி மொழி: கழிச்சாடை). நாளைக்கு வந்துடுவாய்ங்க. சண்டை சச்சரவு ஒன்றுமில்லை. எல்லாம் ஸ்மூத் ( சிங்கிள் மால்ட் விஸ்கி மாதிரி! ஹி! ஹி!)’
சூரியன் வந்துட்டான். காலை மணி ஐந்து. நாளைக்கு ஆஃபீஸ் போகணுமில்லையா. எல்லாரும் வீட்டுக்குப் போங்க’.
தன்னிலை விளக்கம்: இது மன்னார் கோயில் சமாச்சாரங்க. சென்னையில் ஆனா, ஆவான்ன, ஐயன்னா எந்த பி.எல்.லுக்கும் நம் புனித தலவரலாற்றுக்கும் சம்பந்தமில்லை என்பது வெள்ளிடை மலை. உசாத்துணை கண்டு தெளிவடைக.
வார்ரேன்...
இன்னம்பூரான்
02 06 2013
உசாத்துணை: சித்திரம்: 2: காப்புரிமை ஹிந்து. க்ளிக்கிப்பார்த்துக்கொள்ளலாம், ஆர்வமிருந்தால்.
உசாத்துணை:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment