Showing posts with label சிரிச்சு மாளலெ. Show all posts
Showing posts with label சிரிச்சு மாளலெ. Show all posts

Saturday, March 21, 2015

சிரிச்சு மாளலெ ~ 15: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (10)

சிரிச்சு மாளலெ ~ 15: 
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (10)

இன்னம்பூரான்
21 03 2015

பல்லாண்டுகளுக்கு முன்பு டில்லி வாழ் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.500/- கூடாரம் வைத்துக்கொள்ள என்றோ அருளப்பட்ட ஆணை, கூடாரமில்லாத காலகட்டத்திலும் தொடர்ந்தது. அந்த ஆணையை அரசு ரத்து செய்ய விரும்பவில்லை. அதே மாதிரி இரண்டாவது உலகப்போர் பொருட்டு பின்னி நெசவாலையில், அதற்கென்ன தனியாக கொடுக்கப்பட்ட பஞ்சப்படியை நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் ரத்து செய்யக்கூடாது தொழிற்சங்கங்கள் போரிட்டன. விளைவு: மூடு விழா. பேட்டரி போட்ட பச்சை/சிவப்பு விளக்குக் கொடுக்கப்பட்ட பின்னரும் ரயில்வே கார்டுகள் விளக்குக்கு எண்ணெய் கேட்டார்கள். இப்படியாக இந்தியா பீடுநடை போட்டு வரும் போது கிடைத்த இந்த செய்தி என்னை உலுக்கி விட்டது. ஏனெனில், காசு போச்சு, மானம் போச்சு, காலம் போச்சு. எல்லாம் போச்சு!

தஞ்சை, கும்பகோணம், மதுரை செளராஷ்டிர சமுதாயம் நெசவுக்கு பேர்போனவர்கள்.அப்போது அவர்களுக்கு சிட்டம் நூல் வேண்டும். அதற்கு ஆங்கிலத்தில் ஹான்க் யார்ன் என்று பெயர். அதை தயாரிக்க வேலை மெனெக்கெடவேண்டும் செலவு ஜாஸ்தி. நன்றாக பேக் செய்யவேண்டும். கருணை கொண்ட கலோனிய அரசு அக்காலத்தில் மில்களை இவற்றை கணிசமாக தயாரிக்கவேண்டும், நஷ்டப்பட்டாலும் என்று கோட்டா போட்டு ஆணையிட்டது. இப்போது நெசவாளிகள் ஆட்டோமெட்டிக் பவர் லூம் நாடுகிறார்கள், பல்லாண்டுகளாக ஹான்க் யார்னை ஒதுக்கிவிட்டு. ஆனால் நஷ்டத்தில் அவை உற்பத்தி செய்ய்ப்படுகின்றன. கேட்பார் இல்லை. நஷ்டம் கண்டு வருந்துகிறேன். ஆனால், மூளையை இயக்காமல் பத்தாம்பசலி செலவு செய்வதை கண்டால், சிரிப்பு வருது! சிரிப்பு வருது! சந்திரபாபு பாடினால் போல்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://d2q9kw5vp0we94.cloudfront.net/regular/5420193.jpg



Saturday, March 14, 2015

சிரிச்சு மாளலெ ~ 14: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (9)

சிரிச்சு மாளலெ ~ 14: 
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (9)




இன்னம்பூரான்
14 03 2015

மாட்டிக்கிட்டார் தும்மட்டிக்காய் பட்டர் என்றதொரு சொலவடை உண்டு. நமது தமிழ்நாட்டின் தும்மட்டிக்காய் பட்டர்கள் இருவர் உலகசாதனை படைத்து அழியாபுகழ்
பெற்ற கதை இது.
முதலாழ்வார்கள் மூவரும் திருமால் புகழ்பாடும் கட்டத்தில் அவனே வந்து நெருக்குவதை புரிந்துகொள்ளாமல் தவித்த பின், ‘திருக்கண்டேன்! பொன்மேனிக்கண்டேன்...’ என்று ஆசுவாசப்படித்துக்கொண்ட திருக்கோவிலூரில் போன வியாழனன்று (12 03 2015) ஒரு அதிசயம் நடந்தது. கலிகாலத்தில் கூட ‘தெய்வம் மனுஷரூபேண’ என்றபடி ஒரு சத்திய பிரமாணம் நடந்தேறியது.
கதை கேளு: 
திருக்கோவிலூர் தெருக்களிலே மக்கள் நடமாடமுடியாதபடி லஞ்சநடமாட்டம் பீடு நடை போட்டு வந்தது. பக்கத்து செட்டித்தங்கல் கிராமத்து பெட்ரோல் கடையில் ஊத்திக்கொண்டு, காசு கொடுக்க மறுத்தார்கள். திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று மார் தட்டிக்கொண்டு, பொய்கேஸ் போடுவேன் என்று பயமுறுத்தி 150 ரூபாய் வேறு பிடுங்கிக்கொண்டார்கள். ( போலீஸ் கியாதி அப்படி. கொடுத்தாங்களே மாமூல். அது வேறு கதை.) 
ஒரு அளவாளாவுதல்: 
எபெனெசர் & மணிகண்டன்: ‘டேய்! காரை நிறுத்துடா. ஆர்.சி. எடு. சட்னு எடுறா பேமானி! போலீசுக்கு வேறு வேலை இல்லை!
வண்டியோட்டி: அய்யாமார் ஆருன்னு தெரிலெங்களே. 
எபெனெசர் & மணிகண்டன்: இன்னா தகரியம் இருந்தா இப்டி கேட்பே, கேப்மாரி. எடுடா.
பயணி மோகன்: நீங்க ஆரு? ஐடி காட்டுங்க.
எபெனெசர் : டேய். நான் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர். இந்த அய்யா ஆஃபீஸரு. எங்க கிட்ட வாலா ஆட்றே. ஒட்ட நறுக்கிடுவேன், மவனே. ஆமாம். சொல்லிப்போட்டேன்.
மோகன்: நான் தான் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர். உங்களை கைது செய்கிறேன். கைபேசி அலறியது. களவாளிகள் ஜெயிலில். 
எதுக்கு சொல்ல வரேன்ன்னா! எதுக்குங்க. வேணாமுங்க.
மயக்கநிலையில் டிராஃப்பிக் ராமசாமியை கைது செய்துட்டாங்க. அவர் பிழைப்பதே துர்லபமாச்சு. கோர்ட்லே கீச்சு கீச்சுன்னு கத்தினாலும், படுபாவி 
தண்டல்காரன் தன் டகமையை செய்வான்லெ.திருக்கோவிலூர்லெ மட்டும் அல்ல. திருவண்ணாமலையிலும் நகைக்கடையில் கலாட்டா செய்தவர் போலீஸுஷ்! ஆஃபீசர்! நம்ம மதுரை சயராசூ பங்களுர்லெ நடுத்தெருவிலெ பொம்பளைப்பிள்ளையை அடிச்சு உதைச்சான் இல்லை. பங்களுர் போலீசுக்கு நல்ல மனசு. இது சின்ன குடும்ப பிரச்னை அப்டின்னு சயராசுக்கு வக்காலத்து வாங்கிக்கிணு... ஆண்டவா!
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://origin1.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/kaithi-2802.jpg

Thursday, February 12, 2015

சிரிச்சு மாளலெ ~ 13: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)

சிரிச்சு மாளலெ ~ 13:
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)
இன்னம்பூரான்
12 02 2015

உஷ்! உஷ்! யஷ் பற்றிய கொஷ்யன்ஸும் வழவழா கொழகொழா ஆன்ஷர்ஷும்! ஒரு கோர்ட் சாட்சியமும், அதை சார்ந்த உரையாடல் பற்றி எழுத நினைத்தால், இன்று ஒரு புத்தகம் வந்து எம்மை அலக்கழிக்கிறது. பிரபல பென்குவின் பிரசுராலயம். ஷோபா டே என்ற பிரபல மாமியின் பிரிவு. தலைமாந்தர் யஷ் பிர்லா என்ற செல்வந்தர். சின்ன வயது; பெரிய வம்சாவளி; அண்ணல் காந்திக்கு போஜனம் அளித்த கஜானன் பிர்லா தான் மூதாதையர். புத்தகத்தில் அவருடைய திவாலாகும் நிலையில் உள்ள வணிகங்களை பற்றி அதிகம் சொல்லாமல், யஷ்ஷின் சார்லஸ் அட்லாஸ் தேகவாகு (நம்ம ராபர்ட் வடேரா மாதிரி!), கலையார்வமான பச்சைக்குத்தல், ஃபேஷன் மேலும் மேற்குடி வாழ்க்கை தான் எடுபடுகிறது என்கிறார், புத்தக விமர்சகர். இது நிற்க. கனம் கோர்ட்டார் கூப்பிடுகிறார்.

ஒரே ஒரு கிராமம். அங்கு ஒரு யஷ் பிர்லா கம்பெனி. சாட்சி & சாட்சி என்ற விளம்பரகம்பெனி தங்களுக்கு வரவேண்டிய தொகை வரவில்லை என்று சாட்சியத்துடன் ஆகஸ்ட் 2014ல் வழக்குத் தொடர, கோர்ட்டாரும் கதவை இழுத்து மூட ஆணையிட்டனர்.
போதாக்குறையாக, கம்பெனி கிட்டங்கியிலிருந்து துர்நாற்றம் என்று கிராம பஞ்சாயத்து புகார் கொடுத்தும், கேட்பாரில்லை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோயில் ஆண்டி இல்லையா? யஷ் பிர்லா அவர்களே கோர்ட்டில் வந்து சாட்சியம் சொல்ல வேண்டும் என்று ஃபெப்ரவரி 5 அன்று ஆணை. இது சம்பந்தமான இரண்டு நாட்கள் முன்னால் நடந்த கோர்ட் உரையாடல்:

நீதியரசர் கதாவாலா: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் அமர்த்தியது யார்?

யஷ் பிர்லா: நான் இல்லை.

நீதி: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் இருப்பது, உமக்கு தெரியுமா?

ய: தெரியும்,இப்போது தான்.

நீ: அவர்களை அமர்த்தியது யார்?
ய: என்னுடைய ஊழியர்கள்.
(ஃபெப்ரவரி 5 அன்று இந்த சமையற்காரனும், எடுபிடியும் கிஞ்சித்துக்கூட ஆங்கிலம் தெரியாதவர்கள், ஐந்தாம் வகுப்பும் ஆறாம் வகுப்பும் வரை படித்த அவர்களுக்கு ஹிந்தி கூட தொந்தரவு தான் என்றும், அவர்கள் இருவரும் மூன்றாம் நபரும் ஒரு போர்ட் மீட்டிங்க் கூட வராதவர்கள் என்று அறிந்த நீதிபதி திடுக்கிட்டுப்போய் தான் முதலாளியை வரச்சொன்னார்.)
நீ: இந்த மாதிரியான கடை நிலை வேலைக்காரர்களை டைரக்டர்களாக யார் நியமித்து இருப்பார்கள்?
ய: என் ஊழியர்களுக்கும் இந்த கடை நிலை வேலைக்காரர்களுக்கும் பரிச்சயம் உண்டு. அவர்கள் இவர்களை நியமித்திருக்கலாம்.
நீ: உண்மை பேச கற்றுக்கொள். கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது. உன்னுடைய வக்கீலே உன்னை நம்பியிருக்கமாட்டார். உங்கள் ஆட்கள் உண்மையை கக்கிவிட்டனர்.

நவ்ரோஜ் சீர்வை (யஷ்ஷின் வக்கீல்) உங்கள் 5ம்தேதி ஆணையை எதிர்த்து விண்ணப்பிப்பதாக இருந்தோம்.
நீ: (குழப்பத்துடன்) என்னது இது? கோர்ட்டுக்கு வா என்றால் அப்பீலா!!!???
ஆமாம். கம்பெனியில் உங்கள் முதலீடு எத்தனை?
ய: 0.01%, தொடக்கத்திலிருந்து அதே.
நீ: ஓ! கம்பெனியை ஆரம்பிச்சு அடியாட்களை டைரக்டர்களாக்கி, நீ கழண்டு விட்டு..
என்ன சொல்ல விரும்புகிறாய்?
ய: கோர்ட்டார் சொன்னபடி செய்யறேன்.
நீ: நான்கு வாரங்களுக்குள் உண்மை விவரங்கள் கூறி, துர்நாற்றத்தை ஒழி.



pastedGraphic.pdf 

உசாத்துணை

பின்குறிப்பு: எனக்கு இவர் யார் என்று லவலேசமும் தெரியாது. யாதொரு விதமான காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கோர்ட்டில் நடந்ததை உள்ளது உள்ளபடி சொன்னேன். கொஞ்சம் தேடிப்பார்த்தாலே தலை சுற்றுகிறது. அத்தனை குற்றச்சாட்டுக்கள். ஆக மொத்தம் மக்கள் ஏமாற்றப்படுவது தெரிகிறது. சம்பந்தம் இல்லாத இரு விஷயங்கள்.
நான் ஒரு கம்பெனியில் டைரக்டராக அரசு நியமனம். முதலாளி தபால் தலை சேகரிப்பவர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு, கம்பெனி அஞ்சல் செலவில் கலவி செய்து விடுவார்கள். நான் ராஜிநாமா செய்தேன். ஒரு ஜோக் சொல்வார்கள். கம்பெனி ஆடிட்டர்கள் ‘என்ன சாமான்களை பேக் செய்யாமலே பேக்கிங்க் செலவு எக்கச்சக்கம் ஆனது?’. கம்பெனி காரியதரிசி ரகசியமாக வந்து சொன்னாராம், ‘அப்பன் செத்துட்டான். சவ அடக்க செலவை கம்பெனி மேல் போட்டுட்டான்’ எப்படி?.

-#-
Those who cannot read Tamil can read the news item, by clicking on the reference.

Saturday, October 4, 2014

சிரிச்சு மாளலெ ~ 12

சிரிச்சு மாளலெ ~ 12

இன்னம்பூரான்
05 10 2014
ஆனை தாண்டாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அதை பூனை தாண்டிடுத்து, ஒரே தாவலில்! பரைய்லி நேரு குடும்பசம்பந்தத்தினால் பிரபலமான ஊர். தச்சு வேலை நன்றாக செய்வார்கள். அங்கு ஒரு விந்தை நடந்தது. அகாடா எனப்படும் குஸ்தி மையத்தில் குஸ்தி, மல்லுக்கட்டு (wrestling) பயிற்சி எல்லாம் கனஜோரா நடக்கும். பஹல்வான் என்ற தூய ஹிந்தி பெயர் பயில்வான் என்ற தொன்மை தமிழ் பெயரிலிருந்து தான் வந்தது என்று நீங்கள் மல்லுக்கு நின்றால், நான் தள்ளி நிற்பேன். அத்தனை தகரியம், ஆம்பளையோல்லியோ ! ஸோனு பஹல்வான், ஸோனு பஹல்வான் அப்டின்னு ஒரு தடியாம்பளை. அனுபவம் ஜாஸ்தி, சீனியர் வேறே. அந்த குட்டியை விட 16 கேஜி வைட் அதிகம். அவங்கிட்ட போய் இவ மோதறா. ஹரியானா, ராஜஸ்தான், உத்தராக்காண்ட், மற்ற பல மாநிலங்களிலிருந்து ஜோகி நவாடா கோதாவிலே பல பயில்வான்கள் இறங்கறா. கும் கும்மாங்குத்து ! மக்களாரவாரம் விண்ணை எட்டியது என்று நினைத்தார்கள், அறியா பசங்க. 17 வயதான ருத்ராப்பூரிணி நேஹா தோமார் என்ற பெண் தடியாம்பளைங்களை கூவி அழைக்கிறாள், மல்லுக்கட்டுப் போட்டிக்கு. ஆம்பளைங்களாச்சே. பெண்புத்தி பின்புத்தி என்று அவளை இக்னோர் பண்றாங்க. தொல்லை தாங்காமல், அசட்டு சோனு பஹல்வான் ஒத்துக்கிறாரு. பத்து நிமிடங்களுக்குள், அந்த சாகசக்காரி, சோனு பஹல்வானை மண்ணை கவ்வ வைக்கிறாள். ‘ஆணுக்குப் பெண் சோடையில்லை’ என்பதை நிரூபிக்க வந்தேன் என்றாள் அந்த யெளவன மாது. மேலும் படிக்க:http://timesofindia.indiatimes.com/india/17-yr-old-girl-beats-male-wrestler-wins-hearts/articleshow/44370382.cms
-#-

Tuesday, September 16, 2014

சிரிச்சு மாளலெ ~ 11

சிரிச்சு மாளலெ ~ 11

இன்னம்பூரான்
16 09 2014
கொத்தமங்கலம் சுப்பு காந்தி மகான் கதையை எழுதி வில்லுப்பாட்டு பாடியதால், அண்ணல் காந்தியின் ‘சத்தியசோதனையுடன்’கூட்டணி வைத்தது சுப்பு என்பது தப்பு இல்லையோ? அல்லது தியாகபிரம்மத்தின் கீர்த்தனையை பாடியதால், அதை இயற்றயதில் நித்யஶ்ரீக்கு பங்கு உண்டு என்பது என்ன நியாயம்? பிளேட்டோவின் தத்துவங்களை தெளிய தமிழில் அளித்த திரு.வெ.சாமிநாதசர்மாவின் பணி மகத்தானது. அதற்காக, அவரை பிளேட்டோவின் பத்து நாள் தாயாதியாக்கலாமோ?
இது மாதிரியான பயித்தராத்தனம் ஒன்று அண்மையில் நடந்ததாக நேற்றைய செய்தி. சிரிச்சு மாளலெ என்றாலும் அழுகையும் வரது! பின்னெ என்ன? பல வருஷங்களுக்கு முன்னால் பாபாசாஹேப் அம்பேத்கார் அவர்கள் சாதி ஒழிப்புப் பற்றி ஆய்வுகள் பல செய்த பின், விவரமான, ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய நூல் ஒன்று எழுதினார். தலித் சமூகம் அதை வேதபாடமாக கருதுகிறது. தற்காலம் அதை மையத்தில் பொருத்தி, உரையும் கறையுமாக (annotated Critical edition) அருந்ததி ராய் கொணர, அதை பதிப்பித்த VersoBooks.com என்ற ஆங்கில பிரசுரகர்த்தா, இந்த மாமியும் சேர்ந்து அம்பேத்காரும் எழுதிய நூல் என்று விளம்பரப்படுத்தியது. அம்பேத்கார் பெளத்தமதத்தில் தன்னை இணைத்துக்கொண்டதால், மறு பிறவி எடுத்து, அருந்ததி ராய் அம்மையாரை நாடி வந்து தன்னை புதுப்பித்துக்கொண்டார் என்று கணக்குப்போடுதோ அந்த நிறுவனம் என்று தோன்றினாலும், Home Shop 18 என்ற இணையதள விற்பனையாளரும், ஆனானப்பட்ட அமேஜான் நிறுவனமும், இதே பயித்தராத்தனத்தை மட்டும் செய்யவில்லை. தலையில் சகதியை வாரி இறைத்துக்கொண்டன. Home Shop 18 அருந்தியார் மட்டுமே எழுதினமாதிரி, அவருடைய மற்றொரு நூலை முன் வைத்து, சங்கூதுகிறது. அகமதாபாத் நிறுவனமான Infibeam அம்பேத்காரின் பெயரை, கோழிக்குஞ்சை அமுக்றமாதிரி, அமுக்கி தள்ளி விட்டு, இது விளக்க உரை என்பதையும் சொல்லாமல், மாமியே புத்தகாசிரியர் மாதிரி விளம்பரம் செய்துள்ளது. அமேஜான் தலையில் கை வைத்தது: ‘The Annihilation of Caste (Hardcover – October 7, 2014) by Arundhati Roy (author), B.R. Ambedkar (author).’ ரிஷிமூலம், நதி மூலம் பார்க்கப்போனால், ஒரிஜினல் பிரசுரகர்த்தாவின் பெயர் நவாயனா. அவர்கள் தான் VersoBooks.comக்கு ‘இல்லாத’ காப்புரிமையை விற்று விட்டார்கள். இணையதள பெருமக்கள், ‘ஐயகோ! காப்புரிமை மீது வன்முறை; திருட்டுச்சொத்து’ என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள். கழுதை கெட்டா குட்டிச்சுவர். வெர்ஸோ தப்புத்தான், கணினி குழப்பம்  என்கிறது. டெக்னிகல் எர்ரராம், இந்த டெர்ரர்! வெர்ஸோ, அமேஜான், இன்ஃபிபீம் தவறை நிவர்த்தி செய்தாலும், செய்த தவறின் தழும்பை அழிக்க முடியவில்லையே. அது விளம்பர உத்தி என்கிறார், ஒரு தலித் பிரமுகர். யார் கண்டா? நாளைக்கு 
தடித்தாண்டவராயன், கம்பன் (2014) ‘இராமகாதை’ ‘annotated Critical edition’: சென்னை: தடாலடி பதிப்பகம்.
என்ற நூல் வெளிவரலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.combinedbook.com/blog/wp-content/uploads/2014/02/selfpubbed6.png

Friday, August 1, 2014

சிரிச்சு மாளலெ! ~10

சிரிச்சு மாளலெ! ~10


இன்னம்பூரான்
01  08 2014

சமீபத்தில் அழகர் கோயில் போயிருந்த போது அங்கு வானர மேலாண்மையை கண்டு மகிழ்ந்தோம். ஓடோட, என் புத்திரி அவற்றை படம் பிடித்துக்கொண்டாள். அனுப்பவதில் தான் தொய்வு. அமெரிக்கா போன பிஸி தான். இன்றைய செய்தி ஒன்றை பார்த்து விட்டு என் கவலைகள் பறந்தோடின. தனியாக இருக்கும்போதே சிரித்துக்கொண்டிருக்கிறேன்! கொஞம் லூசு தான். என்ன பண்றது?

மஹா கனங்கள் - ராஹுலிலிருந்து மோடி வரை - வாழும் டில்லியில் ஸ்க்ரீச் என்று வானர இசை கேட்டால் அது மந்தியில்லை. கூலிக்கு  ‘ஸ்க்ரீச்சும்’ நரோத்தமர்கள் (சொல்லிப்பிட்டேன்; நான் யாரையும் குறிப்பிடவில்லை.) குரங்குகளை விரட்டுகிறார்களாம்! ஆனானப்பட்ட வெங்கையா நாயுடு அவர்கள் நேற்று ராஜ்ய சபையில் தாக்கல் செய்த அறிக்கை படி மனித வானரங்கள் வானர வானரங்களை அச்சுறுத்தி விரட்டுகிறார்களாம். நம்ம பனையூர் பேட்டைக்கு அருகில் வேங்கை புலி தரிசனம் கொடுத்ததால், பெருங்களத்தூருக்கு  பறந்தோடி வந்தேன். இங்கும் ஒன்று சுத்துகிறதாம். இனி, காலை 4.00 மணிக்கு உலாவ செல்லாமல் 4.01க்கு போகவேண்டும். கையில் ஒரு தடி வேறே. இதை விடுங்கள். யானை கூட்டங்கள் வந்து கந்து வட்டி வாங்கி நட்ட கரும்பு தண்டுகளை அபேஸ் செய்து விடுகிறதுகளாம். அவங்க பேட்டையில் அனாயசமாக, தரகர்களுக்கு அழுது விட்டு, குடித்தனம் போன விபசாயிகள் பட்டாஸ் வெடித்து அவற்றை துரத்த முனைகிறார்களாம். சாமி! டில்லிக்கு போங்க. நம்ம பெரிசுகள் அங்கே வானர விரட்டல் மன்னர்கள். சிலரை புலி வேஷம் போட்டுக்கொண்டு இங்கே வரச்சொல்லுங்கள். நான் காலாகாலத்தில் வாக் போக செளர்யமாக இருக்கும். ஆனை வேஷம் எப்டிப் போட்றது? நம்ம க்ரூப்லெ குண்ட்ன்ஸ் இல்லையே. எதற்கும் பிள்ளையாரப்பனை துணைக்குக் கூப்பிடவேண்டாம். அவர் அந்தப்பக்கம். உங்க கற்பனை யானையை தட்டி எழுப்புங்கள். பல தீர்வுகள் கிடைக்கும். சில பைத்தியக்கார பரிந்துரைகள்:
  1. ஆனைக்குட்டியை அபேஸ் பண்ணி கொண்டுவந்து விட்டு ப்ளேக்மைல் செய்யலாம்; அதற்குள் ஆனைக்குட்டி உம்மை மோதி மிதித்து விடும்.
  2. பட்டாஸ் வெடித்து விரட்டலாம். நம்ம இந்திய பட்ஜெட் மாதிரி புஸ்வாணமாக அது போய்விட்டால், கரும்பும் போச்சு, வீட்டுக்கூரையும் போச்சு.
  3. ‘கும்கி’ வைத்து விபீஷண சரணாகதி அடையச்சொல்லலாம். அந்த யானைக்கும் உருண்டை சாதம் கொடுக்க ஐவேஜி இருக்கா?
  4. நடக்ககூடிய ஒரு வழி: ஒரு எலிக்கு பயிற்சி கொடுத்து யானையின் காதில் புகுத சொல்லலாம். ஆனால் ஆனையுடன் எலியும் போய்விடும்! ஒரு எலிப்பட்டாளம் வளர்த்துக் கொள்க.
  5. கரடி வந்தா என்ன செய்வது? யான் அறியேன். மதஎசுஇந்திரனை கேட்டால், தீர்வு கிடைக்கலாம்.
-#-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, July 16, 2014

சிரிச்சு மாளலெ! ~9

சிரிச்சு மாளலெ! ~9

இன்னம்பூரான்
16 07 2014

மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் விறுவிறுப்பான பட்டிமன்றங்கள் நடக்கும்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி விமரிசிப்பார்கள். பத்து நாள் தாயாதி பகையை விட அதிகமாக விரோத ஃபில்ம் காட்டுவார்கள். காட்சி முடிந்த பின், தோள் மேல் தோள் போட்டுக்கொண்டு காண்டீனில் ஆட்டுசூப்பு பருக போய்விடுவார்கள். அம்மா உணவகத்தை விட அந்த பாக்கியசாலிகளுக்கு சோத்துக்கடை ரொம்ப மலிவு. இது அன்றாட காட்சி, அந்த காலத்தில். அதற்கும் முன்னாலே, சர் ஜெரெமி ரைஸ்மென்னும் சத்தியமூர்த்தியும் சொற்போர் நடத்திவிட்டு தேநீர் பருக ஜோடியாக. தற்காலம் மோடி ராகுலுக்குக் கைலாகு கொடுத்தாலும், மாநில சட்டசபையில் முகாலோபனம் கிடையாதாமே!

நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இத்தனைக்கும் நடுவில் அங்கே நகைச்சுவை மிளிரும். கட்சி பேதமில்லாமல் எல்லாரும் மகிழ்வார்கள். பிரச்னையை மறந்து திசை மாறி போய்விடுவார்கள். அந்த காலத்தில் பிலு மோடி என்றொரு எம்.பி. ஸ்வதந்திரா கட்சி.  கட்டிட கவின் கலை வல்லுனர். கொழுத்த செல்வந்தர். உடல்வாகும் அப்படியே. அவர் எழுந்து நின்றாலே, சபையில் களை கட்டும். ஒரு சமயம் பக்கத்து ஆசாமியுடன் நின்றுகொண்டு வம்பளந்து கொண்டிருந்தார்; முதுகு அக்ராசனரை நோக்கி. திரு.சீதாராம் கேசரி, அக்ராசனரிடம் இது தப்பு என்று புகார் கூறினார். அக்ராசனர் மோடிக்கு முன்னும் பின்னும் கிடையாது; அவர் உருண்டையான மனிதர் என்று கேலி செய்தார். அவர் அடிக்கிற ஜோக் அதற்கும் மேலாக, அதிரடியாக சிரிக்க வைக்கும். தன் படத்துக்கு கீழே; ‘நான் ஒரு அமெரிக்க உளவாளி கையாள்!’ என்று எழுதி வைத்திருந்தார். இந்திரா காந்திக்கு எதிராளியை கண்டால் ஆகாது. அதனால் இவரை அமெரிக்க உளவாளி என்றார். அந்த அபவாதத்தை இவர் இப்படி கேலி செய்தார். இந்திரா காந்தியும் இவரை மிஸாவில் கைது செய்தார்.

இதை எதுக்கு சொல்ல வரேன் என்றால், லோக்சபாவின் அதிகாரபூர்வமான இணையதளமும் ஜோக் அடிக்க ஆரம்பித்து விட்டது. கனம் பொருந்திய திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு ‘யுத்த யுக்தி வாகை சூடு சூழ்ச்சி மன்னன்’ என்று  (Strategy consultant!!!!) என்று விருது அளித்திருக்கிறது. அப்பாவி பையன், அவரு. தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று தான் அவர் எழுதிக்கொடுத்திருக்கிறார்.
படு தோல்வி குற்றத்துக்காக, இப்டியா எள்ளல் செய்வது!
-#-
பி.கு: கலைஞர் அடித்த ஜோக்! வேணுமா?

சித்திரத்துக்கு நன்றி:http://humour.amulyam.com/images/humour/large/1308/312861.jpg

Friday, June 13, 2014

சிரிச்சு மாளலெ 8

*
சிரிச்சு மாளலெ 8



இன்னம்பூரான்
ஜூன் 13, 2014

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலெ, ஹிந்தி மொழியை அரசு அலுவலகங்கள் ஜோரா பயன்படுத்துகின்றனவா? என்று பீராந்து ஆராய பார்லிமெண்டரி கமிட்டிகள் வந்து உயிரை வாங்குவாங்க. நான் அவர்களிடம் இரு முறை சிக்கிக்கொண்டேன். அவர்களுக்கு எக்கசக்கமாக பரிசுகள் வாங்கவேண்டும். திண்டியா சோறு போடவேண்டும். நாங்களோ ஆடிட் பசங்க: அதுவும் குஜராத்தில்! சுஷ்கம் (கருமி). அதனாலெ, அவுங்களுக்குக் கடுப்பு. அலஹாபாத்துக்கு மேலெ ஹிந்தியில் பேசினாலும், கன்னா பின்னா வசவு கியாரண்டி. ஹைதராபாத்தில், ஸாலார் ஜங் ம்யூசியம் காட்றேன் பேர்வழி என்று காலம் கடத்தித் தப்பித்தேன். அஹமதாபாத்தில் வசமாக மாட்டிக்கொண்டேன். அங்கு குஜராத்தி தான் செல்லுபடி; ஹிந்தி அடுத்தபடி தான். ஃபார்முலா படி ஹிந்தி தட்டச்சு இயந்திரங்கள் ஏன் வாங்கவில்லை என்று வசை பாட ஆரம்பித்தவுடன், குஜராத்தி மிஷன்கள் தான் தேவை; ஹிந்தி மிஷின் வேஸ்ட் என்றேன், வாய் தவறி. தொலைந்தது! வசை மழை பொழிய தொடங்கியது. தாங்கமுடியாமல், ‘உரிய பதில் என்னிடம் இல்லை’ என்ற சால்ஜாப்பு பொருளில்,’மைம் தோ லாஜவாப் ஹூம்.’என்றேன். வழக்கு மொழியில், ‘எனக்கு நிகர் யாருமேயில்லை’ என்று அதற்கு பொருளாம். என் ‘அசட்டு தைரியத்தை’ கண்டு விக்கித்து போன கமிட்டியார் எனக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து, மீட்டிங்கை முடித்தார்கள். அதை கொண்டு வந்து கொடுத்தவர் ஒரு அ.தி.மு.க. எம்.பி. ‘நீங்க என்ன சொன்னீங்க? அந்த பிசாசுகள் நமட்டுச்சிரிப்பு சிரிக்கிறாங்க.’ என்றார், அவர். எனக்கும் மூச்சு வந்தது. எதற்கு இதை சொல்றேன். ஆமாம். இந்த மாதிரி கமிட்டிகளால், செலவு ஜாஸ்தி. பாருங்களேன். ரூபாய் 89 லக்ஷம் செலவில் ஆறு கோவா எம்.எல்.ஏ.க்கள் பிரேசீலுக்கு போய் கால்பந்து விளையாட்டுப்பார்க்கப் போறாங்களாம். முதல்லெ ‘அப்படித்தான் செய்வோம். இந்த பிரிதிநிதிகள் அங்கு போய் பார்த்து வந்து, கோவாவில் கால்பந்தாட்டம் பரவ, அதற்கு வேண்டியதை பரிந்துரைக்க, கூட்டத்தை மேய்க்க இத்யாதி கற்றுக்கொள்ள இந்த ‘ஜாலி’ பயணம் இன்றியமையாதது. ஆஹா ஊஹூ’ என்றார், முதல்வர். ஆனால், எதிர்ப்பு வளர்வதை கண்டு, அந்த பிரிதிநிதிகளே தங்கள் செலவை பார்த்துக்கொள்வார்கள் என்று முடிவாச்சாம். இல்லை. இல்லை. யாரோ இரு செல்வமிக்க கம்பெனிகள் தான் உபயம் செய்கிறார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஒரு சர்ச்சில் ஜோக் ஞாபகத்தில் வருது. இங்கிலாந்து எம்.பி.க்கள் பலர் ஒரு யாத்திரை போகோணும். இரண்டு விமானம் புக்ட். சர்ச்சில் இந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார், கிளம்பறசமயத்தில். எல்லாரும் போய் அவர்கிட்ட ரத்து செய்தததை ரத்து செய்ய சொல்லி கேட்டபோது, அய்யா சொன்னாராம், ‘ரோசனை பண்ணிப்பாரு. ஒரு விமானம் விழுந்தாக்கூட, எத்தனை பை-எலெக்ஷன் செய்யணும் என்ன செலவு ஆகும். அதை பாரு’ என்றாராம்!
ஒரே சமாச்சாரம். எத்தனை கோணங்களடா!
-#-\
சித்திரத்துக்கு நன்றி:

Tuesday, June 10, 2014

சிரிச்சு மாளலெ 7

***
சிரிச்சு மாளலெ 7


இன்னம்பூரான்
ஜூன் 11, 2014

‘அப்பாணை’ என்று தலையில் அடித்து சத்தியம் பண்ண பிறகு தான் ‘நான் மாங்காய் அடிக்கல்லை; களாக்காய் தான் அடித்தேன்’ என்று பொய் சொல்லுவோம், பால பருவத்தில். நம்பறாங்களா? இல்லையா? என்று பாயிண்ட் இல்லை. ஒன்று கிடக்க, ஒன்று சொல்வது தான் பொய்யை மெய்யாக்குவதில் முதல் பாடம். மெய்யை பொய்யாக்குவதும் உண்டு, ஆதாயம் கிடைத்தால், அரசியல் தளத்தில். கனம் கோர்ட்டார் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலங்கள் ‘அப்பாணை’ (I, Dumeel, son of Mr.Damaal, லொட, லொடா...) என்று தான் தொடங்கும். இத்தனைக்கும் ஒரு ஆங்கிலேய சட்டத்துறை வல்லுனர் பகர்ந்த நிதர்சனம்:
‘அம்மை அறிவோம்; அப்பன் அறியோம்! ‘. அப்படிப்பார்க்கப்போனா, ‘அப்பாணை’ என்பதே சத்தியம் என்று சொல்ல இயலாது. இனி, ‘அம்மானை’ (மெல்லினம் மென்மையாக இருக்கிறது!) என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணனும்னு சட்டம் வரலாமாக்கும். இது நிற்க.

கவர்னமெண்ட் தரப்பில் கனம் கோர்ட்டார் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலங்கள், அநேகமாக, சுப்பன் எழுதி, குப்பன் கையொப்பமிட்டு, ஆஜராகி பதிவு செய்வதாக அமையலாம்.
மேலா எழுதி, அடிமட்டம் தாக்கல் செய்யும். ஒரு சமயம், சட்டசிக்கல்களுக்கு பயந்து, நான் எழுதியதை மேலா தாக்கல் செய்ய, மேலா எழுதியதை நான் தாக்கல் செய்ய, கனம் கோர்ட்டார் ஓடாத குறை! இதுவும் நிற்க.

நமது மாஜி ராணுவ தளபதி ஜெனெரல் வீ.கே. சிங் அவர்களுக்கும், பிந்தைய அரசுக்கும் ஓயாத  சச்சரவு. முழுக்கதை சுவாரஸ்யம். அதை விடுவோம். எல்லாரும் உயிருடன் இருக்கிறார்கள். ஜெனெரல் வீ.கே. சிங் மற்றொரு ஜெனெரல் மீது எடுத்த நடவடிக்கை முறைகேடானது என்று ஜூன் 4, 2014 அன்று நமது ராணுவ அமைச்சரகம் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. அது பிந்திய அரசின் நிலைப்பாடு. ஜெனெரல் வீ.கே. சிங் அவர்களை அமைச்சரவையில் அமர்த்தியிருக்கும் மோடி தர்பாரின் நிலைப்பாட்டுக்கு முரண். ‘அப்பாணை’ என்று தலையில் அடித்தி சத்தியம் பண்ண பிறகு தானே அந்த ‘வாக்குமூலத்தை’ தாக்கல் செய்தியிருக்கிறார்கள். நமது ராணுவ அமைச்சர் திரு. அருண் ஜெட்லி இது பற்றி ராணுவ அமைச்சரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்குள், காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சங்கவி, அமைச்சர் வீ.கே.சிங் ராஜிநாமா செய்யவேண்டும் என்று முழங்கியிருக்கிறார்!

எல்லாமே சுவாரஸ்யம் தான்! என்ன சொல்றேள்?
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


Sunday, June 8, 2014

சிரிச்சு மாளலெ 6

******
சிரிச்சு மாளலெ 6


இன்னம்பூரான்
ஜூன் 9, 2014

பால பருவத்தில் நம்பர் குறைச்சல் என்பதால், எல்லாருமே கூட்டமைத்த ஒரே கட்சி. நம்ம பசங்க விக்கெட்டை நாங்களே வீழ்த்திடுவோம்! பொவ்லர், பேட்ஸ்மேன், விக்கெட் காப்பாளான், சைக்கிள் ட்யூப் ஆல் சுற்றப்பட்ட கற்பந்தை தடுத்தாட்கொள்வது எல்லாம் உள்ளமைப்பு தான். கால்பந்து விளையாடும்போது, கேப்டனார் ஸெண்டர்-ஃபார்வெட் பொசிஷன் தராவிட்டால், சேம்சைட் கோல் போடுவதுமுண்டு. காங்கிரஸ் கட்சிக்கு இதெல்லாம் தொட்டில் பழக்கம். சூரத் காங்கிரஸிலேயே செருப்பை வீசியவர்கள் தானே!

அதை ஸ்டைலில், சஞ்சய் நிருபம் என்ற கட்சி காரியதரிசியனார், “...நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி சார்பில் நின்றால் தோத்துப் போயிருப்பார்’ என்று திருவாக்கு அருளினார். ஏன்னா, காங்கிரஸ் மீது மக்கள் சினம் பொங்கி வழிந்தது என்றும், ‘காரணங்கள் பல’ என்ற ஆர்டிஐ பதில் போன்ற சால்ஜாப்பும் கூறினார்.

யாரோ ஒத்தர்/இரண்டு பேர் இதை பார்த்தாலும், ஒரு வேண்டுகோள்.

‘பிஜேபி தரப்பில் மனேகாவுக்கு பதிலாக சோனியா காந்தியும்/ வருணுக்கு பதிலாக ராகுலும் நின்றிருந்தால், என்ன ஆயிருக்கும் என்று போஸ்ட்-ஆரூடம் பகருங்களேன்!
தந்தி போல் பாவித்து பதிலவும்.

-#-

சித்திரத்துக்கு நன்றி: http://www.fifa.com/mm//Photo/WorldFootball/ClubFootball/goal_20420_FULL-LND.jpg

சிரிச்சு மாளலெ 5


சிரிச்சு மாளலெ 5


இன்னம்பூரான்
ஜூன் 8, 2014

‘காதல் இளைஞர்கள் கருத்தழிதல் காணாயோ...’ என்று பாடினார், மஹாகவி பாரதியார்.
‘கருத்தழிந்த இளைஞர்கள் கற்பழிப்பதை காணாயோ? நிர்பயா நிர்தூளி ஆவதை காணாயோ?’ என்பதுடன் கூட ‘கருத்தழிந்த முரடர்கள் கற்பழிப்பதை’ நியாயப்படுத்தும் அரசியல் வாதிகளை கண்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

இரண்டு காரீய கொழுப்புக்கள்:

‘கோயீ ஜான் பூஜ்கர் நஹீம் கர்தா ஹை (கற்பழிப்பதை), தோக்கே ஜோ ஹோ ஜாதா ஹை துஷ்கர்ம்.’ [யாரும் வேணும்னு கற்பழிப்பதில்லை. அது தானாகவே நிறைவேறிவிடுகிறது.] சொன்னவர் ராம்சேவக் பைக்ரா, உள்நாட்டு அமைச்சர் -சட்டீஸ்கர் மாநிலம்.

‘லட்கோம் ஸே கல்தி ஹோ ஜாத்தீ ஹை.’ [பசங்க னா அப்டித்தான். தப்பு நடந்துடும்.] சொன்னவர் முலாயம் சிங் யாதவ். ஹிந்தியில் முலாயம் னா மென்மை!!!!!!]

பேஷ்!

இந்த லோகமாகப்பட்டது பாவத்திலே பிறந்ததுங்காணும். கலி வேறே முத்திடுத்து. 

சித்திரத்துக்கு நன்றி: http://tvrecappersanonymous.files.wordpress.com/2010/06/bad_boys_sm.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, June 7, 2014

சிரிச்சு மாளலெ 4

சிரிச்சு மாளலெ 4

இன்னம்பூரான்
ஜூன் 8, 2014

பெரியவங்க சொன்னா பலிக்கும்ணு சொல்வாங்க. அது நிஜம் தாங்க. புருஷன் பொண்சாதியும் எதிரும் புதிருமாக அரசியலில். மாமி காங்கிரஸ் கட்சி. மாமா அந்த கட்சியை வாருவார். ஒரு நாள் அவர் தீவிரமாகவே காங்கிரஸ் கட்சி மேலெ குற்றப்பத்திரிகை வாசிச்சப்போ, ஒத்தர் எளுந்து கேட்டாரு, ‘அய்யா! நீங்களெல்லாம் பெரிய மனுஷா! அப்டி இருக்கச்சே, பொண்சாதி கட்சி மேலெ இப்டி தூத்தலாமா?’. அவர் சொன்ன பதிலை கேட்டு எல்லாரும் விளுந்து விளுந்து சிரிச்சாங்க. அவர் சொன்னது, ‘ இத்தனை வருஷங்களாக, நான் இந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க முட்டாள்கள் என்று சொல்லி வந்தேன். அது ‘தப்பு’ந்னு கன்னத்திலெ போட்டுக்கிறேன். இந்த காங்கிரஸ்காரங்க மத்தவன் பொண்டாட்டியையே அடிச்சுக்குணுப்போற குண்டர்கள் என்று’ இப்போ தான் எனக்கு தெரியும்.!’ ‘பொண்டாட்டி’ என்ற சொல் ஒரு உருவகம். பொருள்: ‘அகப்பட்டதை சுருட்றது’ என்று ஒரு பாடம்; ‘அகப்படாததைக்கூட அமுக்கிறது’ என்று பாடபேதம். ‘என்னே தீர்க்க தரிசனம் !’ னு பேசிக்க்றாக.

யாரு இந்த திவ்யதம்பதிகள் என்று சொல்லுங்கள். பாப்பம்.

சித்திரத்துக்கு நன்றி: http://www.reallygoodmarquees.co.uk/wp-content/uploads/2011/10/Man-question-mark.jpg


Friday, June 6, 2014

சிரிச்சு மாளலெ 3

சிரிச்சு மாளலெ 3
இது பெட்டரு!
இன்னம்பூரான்
ஜூன் 7, 2014

மோடி தள்ளாடினா கோடி புண்யம்னு சொன்னராம், பொன்னம்மா! இது வதந்தி. மோடி 3.0 யின் அவதாரம் நேற்று. குஜராத்லெ டாஸ்மெக் இல்லைனா கூட , அய்யாவுக்கு கொஞ்சம் தடுமாற்றம்! பின்னெ, அவருக்கு அச்சம் ஏற்படாதா? எங்க அப்பா சொல்வார். இன்னிக்கு காலை பிடிக்கிறவன் நாளைக்குக் கழுத்தைப் பிடிப்பான் அப்டினு. நேத்தைக்கு இந்த புதிசு எம்.பி. களிடம் தரகர்கள் கரகாட்டம் ஆடுவாங்க; உன் தலையை கொய்துடுவாங்கன்னு; அண்ட் விடாதே அப்டினு சொல்லிக்கிட்டே இருக்காஹ. அப்பப்போய் ஒத்தன் அய்யாவின் காலை பிடிக்கப்போய், அவரு அவன் கையை முறுக்கிக்கிட்டே சொன்னாராம்: ‘அப்பனே! இந்த தொழுகை வைத்தியம் எல்லாம் எனக்கு வேண்டாம்டா. ஆளை விடு. தள்ளாட்றேன், பாருடா! என்றாராம். அவரு சுதாரிச்சுப்பாருன்னு தான் தோணுது. ஆனா, அந்த ஆல் இன் ஆல் புதிசு எம்.பி. களிடம் தரகர்களிடமிருந்து களுத்தைக் காப்பித்துக்கணும். இல்லேனா, மானமும் போய்டும்; வேலையும் போய்டும்; கிம்பளமும் அவுட்டு.
வட இந்தியாவில் காலை தொட்டு வணங்கும் வளக்கம் குறையுது. தெற்கே வளருது.

வர்ரேன்...

சித்திரத்துக்கு
நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-6cIXs_5C2aoMzK8odC0-MPe29M14oIDXYzIrf7btg4z3UtKCTWeSEt8HTfdITPkm0tSXPoD1Tn_PYnQY3XzefZEg00onDsMGtk18fgG9iwt9Y5Ro2yVoX_NQPYwlKe1sKQ8jZL34eUrO/s320/download.jpg

சிரிச்சு மாளலெ 2

சிரிச்சு மாளலெ 2



இன்னம்பூரான்
ஜூன் 6, 2014

‘குப்புற விழுந்தாலும் மீசையிலெ மண் ஒட்லை’ங்கிறதெல்லாம் பத்தாம் பசலி. அதான் சாமி கரடி வித்தைங்கிறது கூட அலுத்துப்போச்சு. ‘கண்டேனே! கண்டேனே!ஒண்ணுக்கும் இரண்டுக்கும் நுட்பமான வித்தியாசம் கண்டேனே!’ என்பது தான் தற்கால காங்கிரஸ் வித்தை.
மோடி 1.0. & மோடி 2.0. என்று தரம் பிரித்து, ‘மோடி 2.0.‘க்கு ஏறுமுகம் என்று யான் உரைத்தது, மோடி 1.0. ஐ இறக்கியது அல்லவோ! என்று ஶ்ரீமான் சசி தரூர் கட்சி தலைமையின் அறிவிப்புத்துறையிடம் சால்ஜாப்பு சமர்ப்பிவித்திருக்கிறார். இதற்கு முன்னரே, மணி சங்கர அய்யர் என்ற ராஜீவ் காந்தி காலத்து காங்கிரஸ்காரர், சசிக்கு இருந்த மூளை எங்கே போச்சு? என்று கேட்டு சசிக்கு உபத்ரவம் கொடுத்தார். குலை நடுங்கிப்போன சசியின் விவரமான விளக்கம்: ‘நான் காங்கிரஸ் கட்சியின் உபாசகர்; அதனுடைய சமய சார்பின்மையின் பக்தன். நான் கொஞ்சம் மோடியை ஆட்டிப்படைக்க வழி செய்தேன்; அவ்ளவு தான். மோடி 2.0. க்கு புகழ்மாலை சூடினால், மோடி 1.0. மாட்டிக்கிடுவார். அவருக்கு இடுக்கு பிடி போட வழி செய்தேன் என்றார். 

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? உஷ்! காந்தி மஹான் இருந்த கட்சி. இப்டியெல்லாம் எள்ளலாமோ?!


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com