Showing posts with label காமராஜ். Show all posts
Showing posts with label காமராஜ். Show all posts

Tuesday, September 20, 2016

சிவகாமியின் செல்வன் 16




சிவகாமியின் செல்வன் 17

இன்னம்பூரான்

20 09 2016

"நான் பழனியிலிருந்து திரும்பி வரும்போது, ஶ்ரீ ராஜாஜியையும், ஶ்ரீ என்.கோபாலசாமி ஐயங்காரையும் இழிவு படுத்தும் கடிதம் ஒன்றை யாரோ ஒருவர், வண்டி நின்ற ஒரு இடத்தில், என்னிடம் கொடுத்து, தமக்கு எதிராக இயங்குபவர்களை என்னை அணுகவிடப்போவதில்லை என்று சொன்னார்கள். நடந்தது என்னமோ நேர் மாறாக என்று நான் அறிவேன். சொல்லத்தகுந்தது எதையும் சொல்ல விரும்புபவர்களை என்னை அணுகவிடாமல்/என்னுடன் பேச விடாமல்/ எனக்கு எழுத முடியாமல் தடுப்பது இயலாத காரியம். அந்த கடிதத்தை என்னிடம் கொடுக்கமுடிந்ததே, அவர்களின் குற்றச்சாட்டை முறியடிக்கிறது. இந்த ஸ்பெஷல் ரயிலில் ஶ்ரீ காமராஜ நாடாரும் என் கூட இருந்தார். பழனி கோயிலிலும் அவர் என் கூட இருந்தார்.எனினும் இந்த பயணத்தில் ராஜாஜியும் கோபால்சாமியும் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதில் ஐயம் ஒன்றும் கிடையாது.இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள் தான்.ராஜாஜி என்னுடைய நெருக்கமான நண்பர் மட்டுமல்ல;அவர் தான் என்னுடைய நிலைப்பாடுகளுக்கு உகந்தவாறு சொல்லிலும்,செயலிலும் அழுத்தந்திருத்தமாக இயங்குபவர்.பாகிஸ்தான் விஷயத்தில் என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டு, ஜூலை 15, 1942 அன்று காங்கிரசை விட்டு விலகியவர், அவர் என்பது எனக்கு தெரியும் . சற்றும் தயக்கமின்றி என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டதை பொதுமன்றத்தில் அவர் வைத்தததை, அவரை பாராட்டுகிறேன். அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி. தன் மனசாக்ஷிக்கு உகந்த படி துணிவுடன் நடப்பவர்.அவருடைய அரசியல் ஞானமும், நாணயமும் கேள்விக்கு உட்படுத்த முடியாதவை.எனவே அவருக்கு எதிராக ஒரு கும்பல் (clique)இயங்குவது எனக்கு வேதனை அளிக்கிறது.மதராஸ் காங்கிரஸில் இந்த கும்பலின் ஆதிக்கம் தான் செல்லுபடி ஆகிறது. மக்கள் என்னமோ ராஜாஜி பக்கம். என்னால் தான் இத்தனை பெரிய கூட்டங்கள், வரவேற்புக்கள் என்று நினைக்கும் அளவுக்கு நான் அகந்தை கொண்டவனோ, முட்டாளோ அல்ல. அவருக்குத்தான் (ராஜாஜி)அந்த ஈர்ப்பு. தென்னிந்திய காங்கிரஸ்காரர்கள் அவரவர் கருத்துக்கிணஙக் செயல் படுவார்கள். ஆனாலும் மற்றவர்கள் யாவராலும் தாங்கமுடியாத பொறுப்பை ஏற்கக்கூடிய சக்தியுடைய ராஜாஜியின் பணியை தவறவிட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பது என் கடமை.

மோ.க. காந்தி
ஃபெப்ரவரி 5, 1942
ஹரிஜன்: 10.2.1932


“Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi)

CURIOUS
On my return journey from Palani, someone gave me at one of the halts a letter reviling Shri Rajaji and Shri Gopalaswami (N. Gopalaswami Iyengar, Chairman, Jubilee Celebration Committee of the Dakshina Bharat Hindi Prachar Sabha, Madras) , and informing me that they would not allow anyone against them to come near me. Now I know to the contrary. No one who wanted to say anything worth-while could be prevented from seeing me or writing to me. The delivery of the very letter disproves the allegation. Shri Kamaraja Nadar was with me on the same special. He was with me in the Temple on the Palani Hill. But there is no doubt that both Rajaji and Gopalaswami were closest to me during the journey. They had arranged it. Rajaji is one of my oldest friends and was known to be the best exponent in word and deed of all I stand for. That, in 1942, he differed (On the issue of demand for Pakistan, Rajagopalachari, resigned from the Congress Party on July 15, 1942) from me, I know. All honour for the boldness with which he publicly avowed the difference. He is a great social reformer, never afraid to act according to his belief. His political wisdom and integrity are beyond question. I was, therefore, pained to find a clique against him. It is a clique that evidently counts in the official Congress in Madras. But the masses are devoted to Rajaji. I am neither vain nor foolish enough to feel that I could have had the huge public demonstratations all along the route of the pilgrimage, if he had no influence with the masses in Tamil Nadu. Congressmen in the South will act as they think best. But I would be less than loyal to the organization, if I did not warn them against losing the valuable services which no one can shoulder as Rajaji can at the present moment.
En route TO WARDHA, February 5, 1946
Harijan, 10-2-1946
பின் குறிப்பு: 1942ல் நான் பத்தாம் வகுப்பில். வீட்டில் அரசியல் அலசல்கள் எனக்கும் என் தந்தைக்கும் நடக்கும் என்பதால், இது நினைவில் இருக்கிறது. மேலும், அவர் அடிக்கடி புது சொற்களை சொல்லிக்கொடுப்பார். 'clique' என்ற சொல்லுக்கு அகராதியை பார்க்க வைத்தார்.
சித்திரத்துக்கு நன்றி:
http://www.searchforgandhi.com/img/writer/Harijan_img_heading.jpg

Saturday, September 10, 2016

சிவகாமியின் செல்வன் 8

சிவகாமியின் செல்வன் 8

 " தோழர்கேளஎனக்கோ  வயது  82 ஆகிறது ... இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம்   இரண்டாயிரம்மூவாயிரம் ஆண்டுகளில்  என்றுமே  நடந்தது  இல்லை. .நனது  மூவேந்தர்கள் அடுத்து  நாயக்க மன்னர்கள்மராட்டிய மன்னர்கள் முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை  செய்யப்படவில்லை. .தோழர்களே என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால்  இன்னும் பத்து ஆண்டுகளாவது. காமராசைர விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.. அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் காமராசைர  பயன் படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க  வேறு ஆளே சிக்காது.
 (இராமநாதபுர  மாவட்ட திராவிடக்  கழக நான்காவது மாநாடு. 9.7.1961-ல் தேவக்கொட்டையில் நடந்த பொது  தந்தை பெரியாரின் உரையின் ஒரு  பகுதி -17.7.1961 விடுதலை.
~ இது ஒரு நண்பர் அனுப்பியது. கீழே எனது பதிவு.

~  பெரியார் பெரியவர் காமராஜரை போற்றியது மட்டுமல்லாமல், அவருடைய வெற்றிக்கு அடி கோலியது: 1954லியே, அந்த 'ஏழு வருடங்களுக்கு' முன்பே. முதலமைச்சராக பதவியேற்ற பெரியவர் குடியாத்தம் தொகுதியில் இடைத் தேர்தலில் நிற்க விரும்பினார். யாவரும் அவருடைய வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் நிற்காமல், அவரின் சாதனை: அந்த இடை தேர்தலில் அவரை தோற்கடிக்க நினைத்த தி.மு.க., பெரியாரின் விருப்பப்படி, போட்டியிடவில்லை. பெரியவர்  கிட்டத்தட்ட நாற்பது ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்வு எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. 
இதற்கு பின்னர், பெரியாரின் சீடர்கள் அவருடைய பேச்சை கேட்டதாக வரலாறு இல்லை. காமராஜரை பற்றி அவர்கள் அவதூறுகள் பரப்பியதும் வரலாறு.

இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016


Saturday, September 3, 2016

சிவகாமியின் செல்வன் 2

சிவகாமியின் செல்வன் 2

பெரியவர் தஞ்சை ஜில்லாவில் இருந்த பழைய கோயிலொன்றுக்கு சென்றார், அந்த ஊர் மக்களும் ,அதிகாரிகளும் அழைத்து செல்ல. ஆர்வத்துடனும், வியப்புடனும் அந்த கோயிலைச் சுற்றிப் பார்த்து விட்டு, 'இது யாரு கட்டினதுங்கிறே?' என்றார். எல்லாரும் வாயடைத்து நிற்க, ஒரு அதிகாரி மட்டும் இது பற்றி தெளிவான வரலாறு ஒன்றும் இல்லீங்கய்யா.' என்றார். சிர்த்துக்கொண்டே, மேலே இருந்த ட்யூப் லைட்டைபார்த்தவாறு, 'இத்தனை காலமா நிலைத்து நிக்கிற கோயிலைக் கட்டினவன் யாருன்னு தெரியல்லே; ஒரு மாசம் கூட ஒழுங்கா எரியாத இந்த லைட்டிலே... உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்கான் பாருன்னேன்!" என்றாரும். 

அவருக்கு சட்னு கோபம் வந்துரும்...
பிற பின்னர்.
[தொடரும்]

ஆதாரங்கள், மூலம் எல்லாம் இறுதியில் தரப்படும்.

Thursday, September 1, 2016

சிவகாமியின் செல்வன் 1

I

சிவகாமியின் செல்வன் 1


Thu, Sep 1, 2016 at 6:53 PM

சிவகாமியின் செல்வன் 1

காமராசரின் மதம் பற்றிய பார்வையை பற்றிய தொகுப்பு பலருடன் அளவளாவியதை திரு. வீரபாண்டியன் என்ற சன் டி.வி தொகுப்பாளர் வழங்கியது. எனது அறியாமையினாலும், இயலாமையினாலும், அந்த இழையை என்னால் மீட்க முடியவில்லை. அதன் தொடர்பு இங்கே:

“வானவில்” 
பார்க்க:  ஆடி 2016 இதழ், பக்கம் 12-13    

*
அதன் கோணம் ஒரு புறம் இருக்க, 'பெரியவர்' என்று நெருங்கியவர்களால் அறியப்பட்ட 'சிவகாமியின் செல்வன்'  காமராஜர் என்ற பன்முகம் தாங்கிய மாமனிதரை பற்றி தற்கால தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால், இந்த தொடரை துவக்கத் துணிந்தேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் -திருவாளர்கள் டி.பிரகாசம், ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, பக்தவத்ஸலம், கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ராஜ்ய பரிபாலனத்தை, பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த நான் கூற விரும்புவது: 

அந்த பட்டியலில், பெரியவர் காமராஜர் ஒருவர் தான் மக்கள் நலம் மட்டுமே நாடி, பாமரனுடன் ஒன்றி, அதற்காக இடை விடாமல், பதவியை பொருட்படுத்தாமல், உழைத்தவர். ஐய்க்கண் அவர்களில் மேன்மக்களில் ஒருவர், அவர். மற்ற முதல்வர்களை பற்றி இங்கு கருத்து கூறப்போவதில்லை, திசை மாற்றத்தைத் தவிர்க்கவேண்டி.

அவரை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது: விடுதலை போராட்டத்தில், அடிபட்டு இரு இளைஞர்கள் மூர்ச்சையில் தெருவில் கிடக்கிறார்கள். ஒருவர் நமது பெரியவர். அடுத்து கிடந்தது, டி. பிரகாசம். பிற்கால அரசியலில் அவர்கள் இருவரும் எதிர் துருவங்கள்!

கீழ்க்கண்டது மீள்பதிவு:

"அண்டை வீட்டுக்காரன் என்ற வகையில் பெருந்தகை காமராஜர் அவர்களை நான் நன்றாக அறிவேன். நான் ஜூனியர் உத்யோகஸ்தன். அவர் முதல்வர். அடிக்கடி அவர் வீட்டு வாசற்படி அளவுளாவுதல் சில நிமிடங்கள் நடக்கும். ஏனென்றால், என் மூன்று வயது மைந்தனை அவருக்கு பிடிக்கும். நன்முத்துக்கள் உதிரும். நான் புரிந்து கொண்டது:

அவர் அரசியலர். மதம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. அது தான் விதுர நீதி எனலாம். ஆனால், அவர் மத நம்பிக்கையை தகர்க்கவில்லை. இழிச்சொல் பேசவில்லை. அத்தகைய இழிச்சொல்லை கல்வெட்டில் பதிக்கவில்லை. திரு. உத்தாண்டராமபிள்ளை என்ற உயர் அதிகாரி ஒரு மாமனிதர். இந்து மத கோயில்களின் நிர்வாகம் செய்து வந்தார். மரபுகளையும். நாணயத்தையும் மீறும் கோயில் ஊழியர்களை அவர் தண்டித்தார். காமராஜர் அமைச்சைரவையில் இருந்த திரு பக்தவத்சலம் கோயில் செல்லுமம் பக்திமான். அவருடைய தெய்வநம்பிக்கையை காமராஜர் மதித்து நடந்தார். ஒரு மத்திய அரசு அமைச்சர் திரு ராமசாமி ஒரு கோயிலில் ஆத்திரம் மிகுந்து நடந்து கொண்டார். மரபுகளை நிந்தித்தார். திரு.பக்தவத்சலம் அவர்கள் திரு. ராமசாமிக்கு இனி கோயில்களில் வரவேற்பு இருக்காது என்று ஆணை பிறப்பித்தார்.


அன்புடன்,
இன்னம்பூரான்
*
பெரியவர் சுதந்திர இந்தியாவின் மைல்கல்கள் ஆன நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களிலும், அவற்றின் பின்னணியிலும் முத்திரை பதித்தவர். இன்று கண்ணதாசன் அவரை பற்றி பாடிய கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.

சொத்துசுகம்
நாடார்,
சொந்தந்தனை
நாடார்
பொன்னென்றும்
நாடார்,
பொருள் நாடார்,
தான்பிறந்த
அன்னையையும்
நாடார்,
ஆசைதனை
நாடார்,
நாடொன்றே
நாடித்தன்
நலமொன்றும்
நாடாத
நாடாரை
நாடென்றார்.

பிற பின்னர்.
[தொடரும்]

இன்னம்பூரான்


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
தன் சுக துக்கங்களை நாடாத, தன் நாட்டு மக்களின் நலன் மட்டும் நாடிய தமிழ்நாடன் பற்றிய தங்களது பதிவு அருமை.
பெரியவரின் வாழ்க்கை நேரில் அறிந்தவர் என்ற வகையில் தங்களது பதிவுகள் சிறப்புப் பெருகின்றன ஐயா.
தொடர்ந்து பெரியவரின் சிறப்புக்களைப்
 பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த தங்களது பதிவுகளைப் படிக்க  ஆவலாய் உள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்




Saturday, January 11, 2014

கஷ்டோபனிஷத்: 1-7: முழக்கம்



கஷ்டோபனிஷத்: 1-7: முழக்கம்

Innamburan S.Soundararajan Sat, Jan 11, 2014 at 7:01 PM



கஷ்டோபனிஷத்: 1-7: முழக்கம்
Inline image 1

இது பின்னோக்கி பயணிக்கும் தொடர். ஆகவே அப்டேட் தலைகீழ் தான். 1967 லிருந்து 2014 வரை (கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள்) ‘நிறைவேற்றப்பட்ட’ சாதனைகளையும், நூற்றாண்டு விழாவாக 2053 நடக்கப்போவதின் கற்பனையையும் கண்டோம்.
இங்கே 1966 விழாவும், பத்து வருடம் முந்தைய முழக்கமும்.' ஒரு காலத்திலே ஆட்சிமொழியாக இருந்திருந்தாலும்கூட..' (எப்போது?)
இன்னம்பூரான்
11 01 2014

௵1966: முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா!

௵1956: டிசம்பர் 27: சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் ‘ஏகமனதாக’ (!) நிறைவேறிய ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம்‍ 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம் இந்நன்னாளைத் தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார். உணர்ச்சிவசப்பட்டு அவர் கூறியது:

‘... “இந்த மசோதாவை இந்தச் சபைமுன் வெகு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். இந்த மசோதாவை, இந்தச் சபைமுன் கொண்டுவரக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியே நாம் எல்லாரும் மகிழ்ச்சியடைய வேண்டும். தமிழ்மொழி நம்முடைய தாய்மொழியாகவும், நாட்டு மொழியாகவும் இருந்தாலும்கூட, ஒரு காலத்திலே ஆட்சிமொழியாக இருந்திருந்தாலும்கூட, மத்திய காலத்திலே ஏற்பட்ட அடிமை வாழ்வின் காரணமாக அந்த மொழிக்கும் ஓர் அடிமை வாழ்வு ஏற்பட்டுவிட்டது. அரசியாக வீற்றிருப்பதற்குப் பதிலாகப் பணிப்பெண்ணாக இருந்து பணியாற்றி வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மறுபடியும் அந்த அரசுரிமையைத் தமிழன்னைக்கு நாம் அளிக்கிறோம் என்றால், நாம் மற்றத் துறைகளில் பெற்றிருக்கக் கூடிய சுதந்திரத்திற்கு இதுவும் ஒரு சின்னமாகவே அமைந்திருக்கிறது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்”

பின்னர், ப.ஜீவானந்தம், முத்துராமலிங்கத் தேவர், பி.ராமமூர்த்தி, கே.விநாயகம், பி.ஜி.கருத்திருமன் முதலானோர் பேசி, மசோதாவிற்கு ஒருமித்த ஆதரவு கொடுத்தனர். மேலவையில், “இப்போது தமிழை நன்றாக வளர்ப்பதற்காக நாம் ஒரு சிறு விதையைப் போடுகிறோம். ஒரு‘மாஸ்டர்ட் ஸீட்’டைப் போடுகிறோம். இந்தச் சிறு விதை, பறவைகள் தங்கும் பெரிய ஆலமரமாகி, அதன்கீழ் தமிழ் மக்கள் தங்கிச் சுகமாக இருக்கவேண்டும்...” என்று முதன்முறையாக தமிழில் நீண்ட உரையாற்றித் தம் ஆதரவை வெளிப்படுத்தினார், வி.சக்கரை செட்டியார்.

தொடர்ந்து, டி.எம்.நாராயணசுவாமி பிள்ளை, “குறைகளை எல்லாம் நீக்கி, மறுபடியும் தமிழ் அன்னை அரசு புரியும்படியாகச் செய்வதற்கு இந்த மசோதா ஒரு நல்ல துணையாகவும் தூண்டுதலாகவும் உயிர் கொடுப்பதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! நமதுசர்க்கார் கொண்டுவந்திருக்கும் திட்டங்களின் மூலம், விவசாயத்தையும் தொழில்களையும் அபிவிருத்தி செய்கிறார்கள். அபிவிருத்தி மட்டும் போதாது! அந்த அபிவிருத்திக்கு அடிப்படையாகவும் ஆதரவாகவும் தமிழ்மொழி நன்றாக வளரவேண்டும். தமிழ் – சபைகளில் எழுந்து முழங்கவேண்டும். இந்தச் சபை, ‘காபினெட்’, ‘செக்ரடேரியட்’ முதலிய இடங்களில் எல்லாம் தமிழ் முழங்கவேண்டும். இதைச் செய்தால், ஜனநாயகத்தில் மக்களுக்கு நல்ல பங்கு கிடைக்கும். மக்களுக்கு அரசாங்கத்துடன் நல்ல தொடர்பு ஏற்படும். அப்படிப்பட்ட தொடர்பு ஏற்படுவதால், அவர்களுக்கு உள்ளம் எழுச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக அரசாங்கத்தில் நல்ல பங்கெடுத்துக் கொள்வார்கள்; தங்கள் உரிமைகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்; கலையும் உயரும். தமிழ்மொழி வளர்ச்சியுறுவது மிகவும் முக்கியமானது. மொழி வளர்ந்தால்தான் மக்களுடைய திறமை நன்றாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. மக்களுடைய திறனை ஒருவிதத்திலே நோக்கிப் பார்த்தால், இது முக்கியமாக இருக்கிறது. நாம் அடிமைகள் அல்ல! விடுதலைபெற்ற மக்கள்! வீரம் உள்ள மக்கள் என்ற முறையில் தாராளமாக நாம் முன்னோக்கிப் போகவேண்டும். நாம் வெகு வேகமாகப் பல மொழிகளில் உள்ள நல்லவைகளை எல்லாம் நம்முடையதாக்கிக் கொண்டு முன்னேறினால், வேற்றுமைகள் எல்லாம் மறைந்து ஒழிந்துவிடும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு, தமிழனுக்கு இருக்கக்கூடிய பண்புகளெல்லாம் மேலும் வளர்ந்து, உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைக் கொண்டுவந்ததற்காகச் சர்க்காருக்கும், கனம் மந்திரி ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கும் மக்கள் சார்பாக வாழ்த்து கூறிப் பாராட்டுகிறேன்” என்று கூறினார். வி.வி.ராமசாமி பேசும்போது, “இனி இந்த ராஜ்ஜியம், தமிழ்நாடாக மலரவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.. இந்த ராஜ்ஜியம் ஓராண்டுக்குள் ‘தமிழ்நாடு’ என்ற பெயருடன் மலர்ந்துவிடும் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது” எனப் பேசி, அலுவலகங்களில் தமிழைக் கையாளச் சில வழிமுறைகளையும் கூறினார். என்.அண்ணாமலை பிள்ளை பாராட்டிப் பேசும்போது, “இங்குப் பல வருஷங்களுக்குமுன் ஆங்கிலேயர் சட்டசபை நடத்திய காலத்தில் ஸ்ரீ பி.வி.நரசிம்ம ஐயர் அவர்கள் சட்டசபையில் முதன்முதலாகத் தமிழிலேயே பேசுவதற்கு ஆரம்பித்த காலத்தில், சபையில் உள்ளவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்... தமிழை ஆட்சிமொழியாக அரியாசனத்தில் அமர்த்தும்போது, மற்ற மொழிகளைப் புறக்கணிக்காமல், தமிழுக்கு உதவக் கூடிய எல்லா மொழிகளுக்கும் பூரண ஆதரவு கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழ் ஆட்சிமொழியாகும்போது, மற்ற பரிவாரங்களும் சூழ நாம் ஆட்சி நடத்தவேண்டுமே தவிர, மற்றெல்லாவற்றையும் ஒதுக்கிவிட வேண்டுமென்று விரும்புவது தவறு. இந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றுவதற்காக என்னுடைய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் என் நன்றியையும் எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி விவாதத்தை நிறைவுசெய்து வைத்தார்.
சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்து ‘தினமணி’ (29.12.1956) நாளேடு:“சி.சுப்ரமணியம் தமது உரையை முடிக்கும்போது, ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!’ என்ற பாரதியாரின் பாடலைச் சொல்லி, ‘வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!’ என்று மும்முறை முழங்கியபோது, சபை முழுவதும் அவருடன் உற்சாகத்துடன் இணைந்து முழக்கமிட்டு ஆரவாரம் செய்து களிப்புற்றது!”

இன்னம்பூரான்
11 01 2014

***
கஷ்டோபனிஷத்: 1 ~6




சமீபத்தில் தமிழனின் ‘தமிழார்வத்தை’ பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. என் கஷ்டம் மீட்டர் வட்டியை போல் ஏறியது. ஏனெனில்:
௵1967ல் கூட அரிதாரம் தான் பூசப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை வெட்டிப்பேச்சுத்தான்.
அது போகட்டும். ௵1969ம் வருட ஆணைகளை கூட குப்பையில் கடாசி விட்டார்களே, தமிழார்வம் கொண்ட ஆட்சி அன்றிலிருந்து இன்று வரை நடந்து வந்த போதிலும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னது போல: 
“பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லே பஜனையிலே”

௵1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் ் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
௵1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
௵1967: தி.முக. பதவியேற்பு.‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார். ‘பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழ் ஆட்சி மொழிப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டன.’ என்று முனைவர்.மு.வளர்மதி சொல்கிறார். ஆதாரம், தகவல்கள் ஒன்றும் அவர் அளிக்கவில்லை. பல நற்செய்திகள் கூறியிருக்கிறார். நன்றி. ஆனால்,எனக்கு தெரிந்தவரை,பேச்சுடன் சரி. வாய்ச்சொல்லில் வீரரடி.
அப்டேட்.
இன்னம்பூரான்
ஜனவரி 7, 2014

*****************

கஷ்டோபனிஷத் 1 -5
☟அப்டேட் 5: 1971 லிருந்து 1996 வரை இருண்ட காலம், மருண்ட காலம் என உருண்டோடி விட்டது, தமிழன்னையின்
உருப்படாத உருப்படிகளுக்கு.
1971ல் ஒரு அலுவலகம். ஒரு ஆணை. பின்னர் மண்ணை கவ்வுதல். விவரம் இணைத்துள்ளேன்,ஈற்றடியில்
இன்னம்பூரான்
04 01 2014




அப்டேட்: 22 12 2014

1996லிருந்து 2010 வரை தமிழ்த்தாய்க்கு என்ன என்ன புகழாரம் சூட்டினார்கள், அவளுடைய பக்த சிகாமணிகள் என்பதை நிரக்ஷரக்குக்ஷியான யான் அறியேன். ஆனால், சங்கக்காலத்திலிருந்து வரலாறு காணாத கின்னஸ் ரிக்கார்ட் டான்சு ஒன்று ராஜபேரிகைக்கொட்டி ஆராவாரித்தது.

௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.



ஒரு பேக்டேட் & ஒரு அப்டேட்:
பேக்டேட்: கிஞ்சித்து இப்போது. மிஞ்சியது பிறகு.
அப்டேட்:
நண்பர் டோக்ராஜி ஐ.பி.எஸ் என்னமா தமிழ் எழுதுறார்!
இன்னம்பூரான்
14 12 2013




அன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056

அன்றொரு நாள்: டிசம்பர் 27:
ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056
தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் இங்கு வந்திருக்கப்போவதில்லை. எனவே, அறிஞர் அண்ணாவை போல் நான் கடுஞ்சொற்கள் வீசாவிடினும், என்னுடைய கருத்துக்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம், ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், ஆதாரத்துடன் என் கருத்துக்களுக்கு விமர்சனமும்:கண்டனமும் நல்வரவு, ஆதரவும் நல்வரவு. தாய்மொழியின் ஆளுமை நமது உயிர்நாடி. தயை செய்து, இந்த நீண்ட இழையை கவனமாக படியுங்கள். ஒரு விஷயம். ஆட்சிமொழியை வழி நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு; நற்பெயரும் கிட்டியது. மேலும், 1966ல் நான் குஜராத்தில் பணி செய்ய சென்றபோது, அங்கு இயல்பாகவே குஜராத்தி ஆட்சிமொழியாக பீடுநடை போட்டது. உயர் அதிகாரிகளில் பலர், தமிழர். சரளமாக, குஜராத்தி பேசினர்,எழுதினர். முதலில் தவித்தேன். ஆனால், பொது மக்கள் என்னை விட முக்கியம் என்பதும்,  தாய்மொழி ஆட்சி புரிவது முக்கியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. காந்திஜி முதலில் குஜராத்தியில் தான் எழுதினார். ஓரளவுக்கு, அம்மொழியை கற்று மறந்தேன். இனி கஷ்டோபனிஷத்.
தமிழன் வரலாற்றுப்பிரியன். செவி வாய் வரலாறு என்றால் கரும்புச்சாறு. சுவை மிகுந்தால், அது வெல்லப்பாகு. ஆதாரஸ்ருதியில்லை இல்லாதது ஒரு பொருட்டு அல்ல. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ மரபு. ஆகவே, பயபக்தியுடன்,சொரணைமிக, நூற்றாண்டு விழாக்கள் எடுத்து,விறலியோரும்,பாணர்களும் மெய்கீர்த்தி பாடும்போது, திண்டுகளில் சாய்ந்து, அதை கேட்டு, களிப்புத்தேறலில் மயங்கி துயில் கொள்வோரின் தயவில், ‘தமிழன்னை அரியாசனம் அமர்ந்த திருவிழா’வின் நூற்றாண்டுவிழா தினத்தை 27 12 2056 அன்று கொண்டாடுவோமாக! Do you understand, Mr.Tamil Evangelist? பாதிக்கிணறுக்கு மேல் தாண்டிவிட்டோம். வடமொழியில் ‘திரிசங்கு சுவர்க்கம்’ என்பார்கள். ஒரு கால அட்டவணையிட்டு, அதை புகழ்வோம், கண்டு  மகிழ்வோம், இகழ்வோம், தலை குனிவோம்.
காலத்தின் கோலமடா, தம்பி!
௵2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956) சென்னை மாநில சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா. 
கற்பனை 1: விழா மொழி தனித்தமிழ்: 
கற்பனை 2: விழா மொழி செந்தமிழ்: 
கற்பனை 3: விழா மொழி இயல்பாக வடமொழி/ஆங்கிலம்/ ஹிந்தி கொஞ்சமாகக் கலந்த எளிய தமிழ்: 
கற்பனை 4: விழா மொழி தங்க்லீஷ்:
கற்பனை 5: விழா மொழி: ஹிந்தி:
கற்பனை 7: விழா மொழி ஆங்கிலம்.

பொது கற்பனை: தாரை/கொம்பு/பறை காணாமல் போனதால் கேரள செண்டு மேளம் + நாதமுனி பேண்டு வாத்தியம் + ஷெனாய். விழா நடனம்: டப்பாங்குத்து; விழா இசை: லதா மங்கேஷ்கரின் வாரிசு: விழா வீரவிளையாட்டு: இழுபறியாட்டம்: விழா பந்தல் காண்ட்றாக்ட்: முதல்வரின் மாப்பிள்ளையின் சகலையின் வளர்ப்பு மகள். விழா நிதி: ஆட்சி மொழி அமைச்சரின் மெய்க்காப்பாளரின் ஆசைநாயகியின் கையில் ஆடிய வரிப்பணம்.

ஏகோபித்தத் தீர்மானங்கள்: ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி; அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்; தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை; ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.

௵2011: "ஆட்சி மொழி" என்றால் அரசாணைகள் மொழி...1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில்தான் ஆட்சி புரிந்தனர். அதன் பின் கூட பல வருடம் ஆங்கிலம் தான் ஆட்சி மொழி, இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு சைட்டுக்கு சென்று பாருங்கள் தெரியும்...” (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 09 08 2011)

௵2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது...சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். அதன் பிறகு தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும். என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். (உசாத்துணை: மின்தமிழர் தாரகை: 31 05 2010: தினமணியிலிருந்து)
௵2010: மே 8: தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்!..இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு...தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்! (உசாத்துணை: நக்கீரன் இதழ்)
௵2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும். வாங்கும் ஊதியத்திற்கு உழைக்காமல், மற்றவர்கள் மீது தெளிவற்ற உரிமைவேட்டல் தேவையா? இதெல்லாம் ஒரு பலிகடா பாவ்லா! (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 31 03 2010)

௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.
௵1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
௵1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.

இன்னம்பூரான்





Friday, March 22, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 2




அன்றொரு நாள்: அக்டோபர் 2
3 messages

Innamburan Innamburan Sun, Oct 2, 2011 at 1:01 PM
To: thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: Muruga poopathi
அன்றொரு நாள்: அக்டோபர் 2
‘இத்தகைய அருந்தகை இப்புவியின்கண் நடமாடினரோ என்று வருங்கால தலைமுறைகள் வியந்து வரும்’ என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் புகழ்ந்த மஹாத்மா காந்தியின் அவதார தினம், அக்டோபர் 2, 1869 என்பது யாவரும் அறிந்ததே. இந்திய விடுதலைக்கு வித்திட்டவர் என்று அவரை உதட்டளவில் புகழும் நாம், அவர் இகலோகத்தை பரலோகமாக பாவித்து, இயங்கிய அரும்பெரும் தவத்தை புரிந்துகொள்ள வில்லை என்று தான் தோன்றுகிறது. சற்றே வித்தியாசமாக, அந்த அதிசய புருஷோத்தமனின் விந்தையான சில செயல்பாடுகளை, என் சொந்த அபிப்ராயங்களில் தோய்த்தெடுக்காமல், முன் வைக்க அனுமதித்ததிற்கு நன்றி.

ஆம். இந்தியனுக்கு சுதந்திரவேட்கையை மூட்டியதில் காந்தி மஹானுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், அவர் தம் வாழ்க்கையின் பல வருடங்களுக்கு பிரிட்டீஷ் விசுவாசியாக இருந்தார். இந்திய சுதந்திரத்தை விழா எடுத்து அவர் கொண்டாடவில்லை. அவருடைய பேச்சும் மூச்சும் இந்தியாவின், ஏன் இவ்வுலகின், மக்களின் மனோதைர்யத்தையும், ‘இது போதும்’ என்ற பொருளியல் சிறப்பையும், அரசியல் கண்ணியத்தையும், ஆன்மிக உன்னதத்தையும், ஆணும், பெண்ணும் சரி சமானமாக, அடையவேண்டுமென, விழைந்தது. சைமன் பொலிவார், கரிபால்டி ஆகியோர் போல, அவர் ஒரு தேசாபிமானி மட்டும் அல்ல. அன்றொரு நாள், ‘நாமே நமது தேவதையாக மலர்வது’ பற்றி அப்ரஹாம் லிங்கன் கூறினார். (அவரை பற்றி ஒரு நாள் எழுதியே ஆகவேண்டும்.) ஒரு பாமர மனிதனாக ஜனித்த மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி, புழுவாய் பிறந்தது வண்ணத்துப்பூச்சியாக உருவெடுத்தது போல, காந்தி மஹானாக மாறிய கதை, காதை, காப்பியம் எல்லாம் ஒரு ‘பெரிய புராணம்’. ஹோவர்ட் கார்டனர் அலசியது போல, ஒரு அருமைந்தன் தன்னை புடம் போட்டு அண்ணலாக எழுந்த வரலாறு, நம் யாவருக்கும் வாழ்வியல் பாடபுத்தகம் என்க. அதன் மூலாதாரம், அவரவர் மனம். அது பற்றியும் ஒரு நாள் விரிவாக எழுத வேண்டும். காந்திஜியை பற்றிய செய்திகள்,அவருடைய எண்ண ஓட்டங்கள் எல்லாம் முழு அளவில் இணைய தளத்தில் உள்ளது.  வருடம் ஒரு நாள் அவர் ஜென்மம் எடுத்ததை கொண்டாடுவதற்கு பதிலாக, நாள் தோறும், நாம் யாவரும், ஒரு சில மணித்துளிகளை‘காந்திக் கணக்கில்’ வரவு வைத்துக்கொண்டால், நாடு கடைத்தேறும், ஐயா. உசாத்துணை பட்டியலை நோக்குக. 

இனி காந்திஜி ஹிட்லருக்கு எழுதிய கடிதங்களை பற்றி:
அஹிம்சாமூர்த்தி காந்திஜி ஹிம்ஸாரணியன் ஹிட்லருக்கு கடிதம் எழுதினார் என்பதே வியப்பளிக்கிறது. பின்னணியையும் பாருங்கள். 1938ல் ஹாலிஃபாக்ஸ் பிரபு ஹிட்லருடன் அளவளாவியபோது, ஹிட்லர் இங்கிலாந்துக்கு அளித்த ஆலோசனை: ‘காந்தியை கொன்று விடவும்; அது போதாது எனில் எல்லா தலைவர்களையும் கொன்று விடவும்; அது போதாது எனில் 200 விடுதலை வீரர்களையும் கொன்று விடவும். அந்த ஹிட்லரை ‘என் நண்பரே!’ என்று கனிவுடன் விளித்து, ஜூலை 23,1939 அன்று (Complete Works, vol.70, p.20-21) எழுதுகிறார்:
‘ மனிதாபிமான அடிப்படையில் என்னை உமக்கு எழுத வேண்டுகிறார்கள், நண்பர்கள். அதை அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைத்து, நான் செய்யவில்லை. என் உள்மனது நான் அந்த மாதிரி கணிக்காமல், எந்த அளவுக்கு அது மதிக்கப்படுகிறதோ இல்லையோ என்றெல்லாம் யோசிக்காமல், உம்மிடம் விண்ணப்பிக்க ஆணையிடுகிறது. இன்றைய காலகட்டத்தில் போர் நிகழ்வதை தடுக்க, உங்கள் ஒருவரால் தான் முடியும். மனித குலம் அழிந்து விடுமையா? உங்களுக்கு இந்த குறிக்கோள் (நாடு பிடித்தல்) முக்யமாக இருந்தாலும், அதற்கு இந்த விலையா? இது வரை,போரிடுவதை, ஓரளவு வெற்றியுடன் எதிர்த்த என் பேச்சை கேட்ப்பீர்களா? எதற்கும், நான் எழுதுவது தவறு என்றால், முன்கூட்டியே மன்னிப்பு கோருகிறேன். தங்கள் உண்மையான ~மோ.க. காந்தி.
(ஜெர்மனி 1938 ம்யூனிச் ஒப்பந்தத்தை மீறி பொஹீமியா-மொரேவியாவை முழுங்கிய கால கட்டமிது.) 

1940 வருட கிருஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் அடுத்த கடிதம். அத்தருணம் ஐரோப்பா முழுதும் ஹிட்லர், முஸோலினி மடியில். சர்ச்சில் விடாப்பிடியாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார். கடிதம்:
‘...நான் உம்மை நண்பரே என்று விளிப்பதின் காரணம், எனக்கு எதிரிகள் இல்லை என்பதே. கடந்த 33 வருடங்களாக, மனித குலத்தை, இனம், நிறம், மதம் போன்ற வித்தியாசங்களை புறக்கணித்து, பேணுவதிலும், மனித நேயம் நாடுவதிலும் கழித்து வந்திருக்கிறேன்... உமது தைரியத்தைப் பற்றியும், நாட்டுப்பற்றை பற்றியும் எமக்கு ஐயமொன்றுமில்லை...ஆனால்,நீங்களும், உமது ஆதரவாளர்களும் எழுதுவதும், பேசுவதும், உங்களின் பயங்கர செயல்களை பற்றியும், மனிதாபிமானத்தை குலைப்பதை பற்றியும் இம்மியளவு கூட சந்தேகம் வைக்கவில்லை. அதுவும் என் போன்ற மனித நேயம் நாடுவோர்க்க்கு, இது சரியாகவே படவில்லை. செக்கோஸ்லாவக்கியாவை தாழ்த்தினீர்கள். போலந்தை வன்புணர்ச்சி செய்தீர்கள். டென்மார்க்கை முழுங்கினீர்கள்.  உமக்கு இந்த கொள்ளையெல்லாம், நற்செயலாக தோன்றலாம். இதெல்லாம் இழிசெயல்கள் என்பது எங்கள் பாலபாடம்... எங்கள் நிலை தனித்தன்மை வாய்த்தது. நாங்கள் பிரிட்டீஷ் சாம்ராஜ்யபோக்கையும் எதிர்ப்பவர்கள்...’.
இந்த ரீதியில் போகிறது, கடிதம். முதல் கடிதம், துரைத்தனத்தாரால், தடுத்தாட்கொள்ளப்பட்டது. ஹிட்லருக்கு போய் சேரவில்லை. இரண்டாவதின் விதி அறியோம். 
என்ன நினைக்கிறீர்கள், அஹிம்சாமூர்த்தி ஹிம்ஸாரணியனுக்கு மடல் விடுத்ததை பற்றி?
இன்னம்பூரான்
02 10 2011
16b0pi9.jpgpastedGraphic.pdf

உசாத்துணை:
Key Websites on Gandhi
1. Time Magazine
Texts on Gandhi, chosen as one of the three top leaders of the 20th century by Time Magazine, including a tribute by Nelson Mandela

2. Gandhi Foundation
The most comprehensive web site on Gandhi, including 1400 photographs, several hours of audio and video, 1,500 web links and references to 8,800 books.


Tthamizth Tthenee Sun, Oct 2, 2011 at 1:20 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
" நாம் யாவரும், ஒரு சில மணித்துளிகளை                     ‘காந்திக் கணக்கில்’
 வரவு வைத்துக்கொண்டால், நாடு கடைத்தேறும், ஐயா. உசாத்துணை பட்டியலை நோக்குக. "
 
 
இப்படியெல்லாம்  இடித்துரைக்க  உம்மால் மட்டுமே  முடியும்
 
 
என்னதான்  கடிதம் எழுதினாலும்  , தூது அனுப்பினாலும்  பல இரணியர்கள்  காதிலே வாங்க மாட்டார்கள்  என்றுதானே  இதிஹாச புராணங்களும்  சரித்திரங்களும்  நமக்கு பாடம் புகட்டினாலும்  அவற்றையும் தாண்டி   சாம,தான ,பேத தண்டம் என்று  ஒரு வழி முறை வைத்துக்கொண்டு  தடுமாறிக் கொண்டிருக்கிறோம் இன்றளவிலும்.
 
ஹிம்ஸாரணியன் ஹிட்லர் மட்டும்  மிதித்துவிடுவாரா?
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 
[Quoted text hidden]
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam Sun, Oct 2, 2011 at 5:10 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அருமையான நினைவுகள்.  இன்று லால்பஹாதூர் சாஸ்திரிக்கும் பிறந்த நாள்.  காமராஜர் மறைந்த நாள். மூன்று தேசியத் தலைவர்களின் நினைவு நாள்.

2011/10/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>

இன்னம்பூரான்
02 10 2011
16b0pi9.jpgpastedGraphic.pdf

உசாத்துணை:
Key Websites on Gandhi
1. Time Magazine
Texts on Gandhi, chosen as one of the three top leaders of the 20th century by Time Magazine, including a tribute by Nelson Mandela

2. Gandhi Foundation
The most comprehensive web site on Gandhi, including 1400 photographs, several hours of audio and video, 1,500 web links and references to 8,800 books.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
[Quoted text hidden]