Saturday, January 11, 2014

கஷ்டோபனிஷத்: 1-7: முழக்கம்



கஷ்டோபனிஷத்: 1-7: முழக்கம்

Innamburan S.Soundararajan Sat, Jan 11, 2014 at 7:01 PM



கஷ்டோபனிஷத்: 1-7: முழக்கம்
Inline image 1

இது பின்னோக்கி பயணிக்கும் தொடர். ஆகவே அப்டேட் தலைகீழ் தான். 1967 லிருந்து 2014 வரை (கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள்) ‘நிறைவேற்றப்பட்ட’ சாதனைகளையும், நூற்றாண்டு விழாவாக 2053 நடக்கப்போவதின் கற்பனையையும் கண்டோம்.
இங்கே 1966 விழாவும், பத்து வருடம் முந்தைய முழக்கமும்.' ஒரு காலத்திலே ஆட்சிமொழியாக இருந்திருந்தாலும்கூட..' (எப்போது?)
இன்னம்பூரான்
11 01 2014

௵1966: முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா!

௵1956: டிசம்பர் 27: சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் ‘ஏகமனதாக’ (!) நிறைவேறிய ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம்‍ 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம் இந்நன்னாளைத் தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார். உணர்ச்சிவசப்பட்டு அவர் கூறியது:

‘... “இந்த மசோதாவை இந்தச் சபைமுன் வெகு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். இந்த மசோதாவை, இந்தச் சபைமுன் கொண்டுவரக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியே நாம் எல்லாரும் மகிழ்ச்சியடைய வேண்டும். தமிழ்மொழி நம்முடைய தாய்மொழியாகவும், நாட்டு மொழியாகவும் இருந்தாலும்கூட, ஒரு காலத்திலே ஆட்சிமொழியாக இருந்திருந்தாலும்கூட, மத்திய காலத்திலே ஏற்பட்ட அடிமை வாழ்வின் காரணமாக அந்த மொழிக்கும் ஓர் அடிமை வாழ்வு ஏற்பட்டுவிட்டது. அரசியாக வீற்றிருப்பதற்குப் பதிலாகப் பணிப்பெண்ணாக இருந்து பணியாற்றி வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மறுபடியும் அந்த அரசுரிமையைத் தமிழன்னைக்கு நாம் அளிக்கிறோம் என்றால், நாம் மற்றத் துறைகளில் பெற்றிருக்கக் கூடிய சுதந்திரத்திற்கு இதுவும் ஒரு சின்னமாகவே அமைந்திருக்கிறது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்”

பின்னர், ப.ஜீவானந்தம், முத்துராமலிங்கத் தேவர், பி.ராமமூர்த்தி, கே.விநாயகம், பி.ஜி.கருத்திருமன் முதலானோர் பேசி, மசோதாவிற்கு ஒருமித்த ஆதரவு கொடுத்தனர். மேலவையில், “இப்போது தமிழை நன்றாக வளர்ப்பதற்காக நாம் ஒரு சிறு விதையைப் போடுகிறோம். ஒரு‘மாஸ்டர்ட் ஸீட்’டைப் போடுகிறோம். இந்தச் சிறு விதை, பறவைகள் தங்கும் பெரிய ஆலமரமாகி, அதன்கீழ் தமிழ் மக்கள் தங்கிச் சுகமாக இருக்கவேண்டும்...” என்று முதன்முறையாக தமிழில் நீண்ட உரையாற்றித் தம் ஆதரவை வெளிப்படுத்தினார், வி.சக்கரை செட்டியார்.

தொடர்ந்து, டி.எம்.நாராயணசுவாமி பிள்ளை, “குறைகளை எல்லாம் நீக்கி, மறுபடியும் தமிழ் அன்னை அரசு புரியும்படியாகச் செய்வதற்கு இந்த மசோதா ஒரு நல்ல துணையாகவும் தூண்டுதலாகவும் உயிர் கொடுப்பதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! நமதுசர்க்கார் கொண்டுவந்திருக்கும் திட்டங்களின் மூலம், விவசாயத்தையும் தொழில்களையும் அபிவிருத்தி செய்கிறார்கள். அபிவிருத்தி மட்டும் போதாது! அந்த அபிவிருத்திக்கு அடிப்படையாகவும் ஆதரவாகவும் தமிழ்மொழி நன்றாக வளரவேண்டும். தமிழ் – சபைகளில் எழுந்து முழங்கவேண்டும். இந்தச் சபை, ‘காபினெட்’, ‘செக்ரடேரியட்’ முதலிய இடங்களில் எல்லாம் தமிழ் முழங்கவேண்டும். இதைச் செய்தால், ஜனநாயகத்தில் மக்களுக்கு நல்ல பங்கு கிடைக்கும். மக்களுக்கு அரசாங்கத்துடன் நல்ல தொடர்பு ஏற்படும். அப்படிப்பட்ட தொடர்பு ஏற்படுவதால், அவர்களுக்கு உள்ளம் எழுச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக அரசாங்கத்தில் நல்ல பங்கெடுத்துக் கொள்வார்கள்; தங்கள் உரிமைகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்; கலையும் உயரும். தமிழ்மொழி வளர்ச்சியுறுவது மிகவும் முக்கியமானது. மொழி வளர்ந்தால்தான் மக்களுடைய திறமை நன்றாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. மக்களுடைய திறனை ஒருவிதத்திலே நோக்கிப் பார்த்தால், இது முக்கியமாக இருக்கிறது. நாம் அடிமைகள் அல்ல! விடுதலைபெற்ற மக்கள்! வீரம் உள்ள மக்கள் என்ற முறையில் தாராளமாக நாம் முன்னோக்கிப் போகவேண்டும். நாம் வெகு வேகமாகப் பல மொழிகளில் உள்ள நல்லவைகளை எல்லாம் நம்முடையதாக்கிக் கொண்டு முன்னேறினால், வேற்றுமைகள் எல்லாம் மறைந்து ஒழிந்துவிடும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு, தமிழனுக்கு இருக்கக்கூடிய பண்புகளெல்லாம் மேலும் வளர்ந்து, உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைக் கொண்டுவந்ததற்காகச் சர்க்காருக்கும், கனம் மந்திரி ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கும் மக்கள் சார்பாக வாழ்த்து கூறிப் பாராட்டுகிறேன்” என்று கூறினார். வி.வி.ராமசாமி பேசும்போது, “இனி இந்த ராஜ்ஜியம், தமிழ்நாடாக மலரவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.. இந்த ராஜ்ஜியம் ஓராண்டுக்குள் ‘தமிழ்நாடு’ என்ற பெயருடன் மலர்ந்துவிடும் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது” எனப் பேசி, அலுவலகங்களில் தமிழைக் கையாளச் சில வழிமுறைகளையும் கூறினார். என்.அண்ணாமலை பிள்ளை பாராட்டிப் பேசும்போது, “இங்குப் பல வருஷங்களுக்குமுன் ஆங்கிலேயர் சட்டசபை நடத்திய காலத்தில் ஸ்ரீ பி.வி.நரசிம்ம ஐயர் அவர்கள் சட்டசபையில் முதன்முதலாகத் தமிழிலேயே பேசுவதற்கு ஆரம்பித்த காலத்தில், சபையில் உள்ளவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்... தமிழை ஆட்சிமொழியாக அரியாசனத்தில் அமர்த்தும்போது, மற்ற மொழிகளைப் புறக்கணிக்காமல், தமிழுக்கு உதவக் கூடிய எல்லா மொழிகளுக்கும் பூரண ஆதரவு கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழ் ஆட்சிமொழியாகும்போது, மற்ற பரிவாரங்களும் சூழ நாம் ஆட்சி நடத்தவேண்டுமே தவிர, மற்றெல்லாவற்றையும் ஒதுக்கிவிட வேண்டுமென்று விரும்புவது தவறு. இந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றுவதற்காக என்னுடைய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் என் நன்றியையும் எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி விவாதத்தை நிறைவுசெய்து வைத்தார்.
சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்து ‘தினமணி’ (29.12.1956) நாளேடு:“சி.சுப்ரமணியம் தமது உரையை முடிக்கும்போது, ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!’ என்ற பாரதியாரின் பாடலைச் சொல்லி, ‘வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!’ என்று மும்முறை முழங்கியபோது, சபை முழுவதும் அவருடன் உற்சாகத்துடன் இணைந்து முழக்கமிட்டு ஆரவாரம் செய்து களிப்புற்றது!”

இன்னம்பூரான்
11 01 2014

***
கஷ்டோபனிஷத்: 1 ~6




சமீபத்தில் தமிழனின் ‘தமிழார்வத்தை’ பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. என் கஷ்டம் மீட்டர் வட்டியை போல் ஏறியது. ஏனெனில்:
௵1967ல் கூட அரிதாரம் தான் பூசப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை வெட்டிப்பேச்சுத்தான்.
அது போகட்டும். ௵1969ம் வருட ஆணைகளை கூட குப்பையில் கடாசி விட்டார்களே, தமிழார்வம் கொண்ட ஆட்சி அன்றிலிருந்து இன்று வரை நடந்து வந்த போதிலும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னது போல: 
“பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லே பஜனையிலே”

௵1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் ் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
௵1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
௵1967: தி.முக. பதவியேற்பு.‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார். ‘பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழ் ஆட்சி மொழிப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டன.’ என்று முனைவர்.மு.வளர்மதி சொல்கிறார். ஆதாரம், தகவல்கள் ஒன்றும் அவர் அளிக்கவில்லை. பல நற்செய்திகள் கூறியிருக்கிறார். நன்றி. ஆனால்,எனக்கு தெரிந்தவரை,பேச்சுடன் சரி. வாய்ச்சொல்லில் வீரரடி.
அப்டேட்.
இன்னம்பூரான்
ஜனவரி 7, 2014

*****************

கஷ்டோபனிஷத் 1 -5
☟அப்டேட் 5: 1971 லிருந்து 1996 வரை இருண்ட காலம், மருண்ட காலம் என உருண்டோடி விட்டது, தமிழன்னையின்
உருப்படாத உருப்படிகளுக்கு.
1971ல் ஒரு அலுவலகம். ஒரு ஆணை. பின்னர் மண்ணை கவ்வுதல். விவரம் இணைத்துள்ளேன்,ஈற்றடியில்
இன்னம்பூரான்
04 01 2014




அப்டேட்: 22 12 2014

1996லிருந்து 2010 வரை தமிழ்த்தாய்க்கு என்ன என்ன புகழாரம் சூட்டினார்கள், அவளுடைய பக்த சிகாமணிகள் என்பதை நிரக்ஷரக்குக்ஷியான யான் அறியேன். ஆனால், சங்கக்காலத்திலிருந்து வரலாறு காணாத கின்னஸ் ரிக்கார்ட் டான்சு ஒன்று ராஜபேரிகைக்கொட்டி ஆராவாரித்தது.

௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.



ஒரு பேக்டேட் & ஒரு அப்டேட்:
பேக்டேட்: கிஞ்சித்து இப்போது. மிஞ்சியது பிறகு.
அப்டேட்:
நண்பர் டோக்ராஜி ஐ.பி.எஸ் என்னமா தமிழ் எழுதுறார்!
இன்னம்பூரான்
14 12 2013




அன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056

அன்றொரு நாள்: டிசம்பர் 27:
ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056
தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் இங்கு வந்திருக்கப்போவதில்லை. எனவே, அறிஞர் அண்ணாவை போல் நான் கடுஞ்சொற்கள் வீசாவிடினும், என்னுடைய கருத்துக்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம், ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், ஆதாரத்துடன் என் கருத்துக்களுக்கு விமர்சனமும்:கண்டனமும் நல்வரவு, ஆதரவும் நல்வரவு. தாய்மொழியின் ஆளுமை நமது உயிர்நாடி. தயை செய்து, இந்த நீண்ட இழையை கவனமாக படியுங்கள். ஒரு விஷயம். ஆட்சிமொழியை வழி நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு; நற்பெயரும் கிட்டியது. மேலும், 1966ல் நான் குஜராத்தில் பணி செய்ய சென்றபோது, அங்கு இயல்பாகவே குஜராத்தி ஆட்சிமொழியாக பீடுநடை போட்டது. உயர் அதிகாரிகளில் பலர், தமிழர். சரளமாக, குஜராத்தி பேசினர்,எழுதினர். முதலில் தவித்தேன். ஆனால், பொது மக்கள் என்னை விட முக்கியம் என்பதும்,  தாய்மொழி ஆட்சி புரிவது முக்கியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. காந்திஜி முதலில் குஜராத்தியில் தான் எழுதினார். ஓரளவுக்கு, அம்மொழியை கற்று மறந்தேன். இனி கஷ்டோபனிஷத்.
தமிழன் வரலாற்றுப்பிரியன். செவி வாய் வரலாறு என்றால் கரும்புச்சாறு. சுவை மிகுந்தால், அது வெல்லப்பாகு. ஆதாரஸ்ருதியில்லை இல்லாதது ஒரு பொருட்டு அல்ல. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ மரபு. ஆகவே, பயபக்தியுடன்,சொரணைமிக, நூற்றாண்டு விழாக்கள் எடுத்து,விறலியோரும்,பாணர்களும் மெய்கீர்த்தி பாடும்போது, திண்டுகளில் சாய்ந்து, அதை கேட்டு, களிப்புத்தேறலில் மயங்கி துயில் கொள்வோரின் தயவில், ‘தமிழன்னை அரியாசனம் அமர்ந்த திருவிழா’வின் நூற்றாண்டுவிழா தினத்தை 27 12 2056 அன்று கொண்டாடுவோமாக! Do you understand, Mr.Tamil Evangelist? பாதிக்கிணறுக்கு மேல் தாண்டிவிட்டோம். வடமொழியில் ‘திரிசங்கு சுவர்க்கம்’ என்பார்கள். ஒரு கால அட்டவணையிட்டு, அதை புகழ்வோம், கண்டு  மகிழ்வோம், இகழ்வோம், தலை குனிவோம்.
காலத்தின் கோலமடா, தம்பி!
௵2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956) சென்னை மாநில சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா. 
கற்பனை 1: விழா மொழி தனித்தமிழ்: 
கற்பனை 2: விழா மொழி செந்தமிழ்: 
கற்பனை 3: விழா மொழி இயல்பாக வடமொழி/ஆங்கிலம்/ ஹிந்தி கொஞ்சமாகக் கலந்த எளிய தமிழ்: 
கற்பனை 4: விழா மொழி தங்க்லீஷ்:
கற்பனை 5: விழா மொழி: ஹிந்தி:
கற்பனை 7: விழா மொழி ஆங்கிலம்.

பொது கற்பனை: தாரை/கொம்பு/பறை காணாமல் போனதால் கேரள செண்டு மேளம் + நாதமுனி பேண்டு வாத்தியம் + ஷெனாய். விழா நடனம்: டப்பாங்குத்து; விழா இசை: லதா மங்கேஷ்கரின் வாரிசு: விழா வீரவிளையாட்டு: இழுபறியாட்டம்: விழா பந்தல் காண்ட்றாக்ட்: முதல்வரின் மாப்பிள்ளையின் சகலையின் வளர்ப்பு மகள். விழா நிதி: ஆட்சி மொழி அமைச்சரின் மெய்க்காப்பாளரின் ஆசைநாயகியின் கையில் ஆடிய வரிப்பணம்.

ஏகோபித்தத் தீர்மானங்கள்: ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி; அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்; தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை; ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.

௵2011: "ஆட்சி மொழி" என்றால் அரசாணைகள் மொழி...1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில்தான் ஆட்சி புரிந்தனர். அதன் பின் கூட பல வருடம் ஆங்கிலம் தான் ஆட்சி மொழி, இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு சைட்டுக்கு சென்று பாருங்கள் தெரியும்...” (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 09 08 2011)

௵2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது...சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். அதன் பிறகு தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும். என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். (உசாத்துணை: மின்தமிழர் தாரகை: 31 05 2010: தினமணியிலிருந்து)
௵2010: மே 8: தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்!..இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு...தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்! (உசாத்துணை: நக்கீரன் இதழ்)
௵2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும். வாங்கும் ஊதியத்திற்கு உழைக்காமல், மற்றவர்கள் மீது தெளிவற்ற உரிமைவேட்டல் தேவையா? இதெல்லாம் ஒரு பலிகடா பாவ்லா! (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 31 03 2010)

௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.
௵1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
௵1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.

இன்னம்பூரான்





No comments:

Post a Comment