Showing posts with label காமராசர். Show all posts
Showing posts with label காமராசர். Show all posts

Friday, September 2, 2016

சிவகாமியின் செல்வன் 7

சிவகாமியின் செல்வன் 7
இன்னம்பூரான்
செப்டம்பர் 2. 2016

“ஜீவாவை அனைவரும் போற்றினார்கள். காமராஜர் போற்றினார் - அவர் எப்படிப் போற்றினார் என்பதை நான் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கிறேன். ஒருகட்டத்தில், சென்னையில் தாம்பரம் பகுதியில் குடிசை வீட்டில்தான் வசித்தார். அந்த வீட்டில் மழை பெய்தால் குடிசை ஒழுகும். உள்ளே சேறும் சகதியுமாக இருக்கும். அப்படிப்பட்ட குடிசையில் தான் அவர் வாழ்ந்தார்.
அப்படி ஒருகட்டத்தில், அவர் கடுமையாகக் காங்கிரசை விமர்சித்துக் கொண்டு இருந்தார். 

காமராசர் முதலமைச்சர். அங்கே இருக்கின்ற ஒளவை ஆரம்பப் பாடசாலை ஆண்டு விழாவுக்கு வருகிறார். ஜீவா வசித்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில் தான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியே ஜீவா தொடங்கிய பள்ளிக் கூடம்தான். ஆனால், ஆண்டு விழாவுக்கு ஜீவாவுக்கு அழைப்பு இல்லை. வருடம் 1961. காமராசர் விழாவுக்கு வருகிறார். அப்பொழுது சென்னை கலெக்டராக இருந்த திரவியமும் அங்கே வருகிறார். அவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான்.
விழாவுக்கு வந்தவுடன் காமராசர் திடீரென்று ஓரிடத்தில் இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்தவர் ஓரிடத்தில் நின்று, இங்கே ஜீவானந்தம் வீடு எங்கே இருக்கிறது? என்கிறார். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், அவர் நின்று கேட்கின்ற இடம் ஜீவாவின் குடிசை வீட்டு வாசல்தான். இங்கேதான் ஜீவானந்தம் இருக்கிறார் என்கிறார்கள். உள்ளே நுழைகிறார்.

வெளியூர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து, எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும் என்று இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. அரவம் கேட்டு, யாரது? என்கிறார். காமராசரை பார்க்கிறார். என்ன விஷயமாக நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள்? என்கிறார். என்ன ஜீவா, ஒளவை பள்ளிக்கூடம் ஆண்டு விழா. நீங்கள் வரவில்லையா? என்கிறார் காமராசர்.
‘எனக்குத் தெரியாதே’ என்கிறார் ஜீவா. காமராசர் ஒரு பார்வை பார்க்கிறார். சட்டையைப் போட்டுவிட்டு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுசெல்ல, காமராசருக்குப் போடப்பட்ட நாற்காலியில் ஜீவாவை அமர வைத்தார் காமராசர். (நான் வேறு இடத்தில் அறிந்து கொண்ட தகவல். தனக்கு இருந்த ஒரே உடுப்பை நனைத்து காயவைக்கிறார், ஜீவா. அதனால் பெரியவர் வைட்டிங்!}

அதை விட வேதனை என்ன தெரியுமா? மீண்டும் இன்னொருமுறை வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வருகிறார். அந்தக் குடிசையின் நிலைமையைப் பார்க்கிறார். மழை கொட்டினால் உள்ளே தண்ணீர் பெருகிவிடும். அண்ணாந்து பார்த்தால் அந்த ஓட்டைக்குடிசை வழியாக வானத்தைப் பார்க்கலாம். என்ன ஜீவா நீங்கள் இந்தக் குடிசையில் இருக்கிறீர்கள். நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன். வருகிறீர்களா? என்கிறார் காமராசர்.

அதற்கு ஜீவாவோ, ‘இல்லை. இந்த நாட்டிலே வசிக்கின்ற எல்லா மக்களும் மாடி வீடு கட்டி வாழும்போது அடியேனும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருவேன்.’ என்றாராம்.

‘தூக்குமேடைச் சிங்கம்’ என்று கவிதையில் ஜீவா எழுதுவார். காமராசர் சொல்கிறார், சிங்கமடா, அவர் பேச்சைக் கேட்க வேண்டுமே, எரிமலை வெடிப்பதைப்போல இருக்கும். அதுவும் கம்ப இராமாயணத்தை அவர் பேசக் கேட்க வேண்டுமே, எப்பேர்ப்பட்ட தலைவர்! தொழிலாளிகளுக்காகவே போராடி வாழ்ந்து, குடிசை வாழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்ற அந்த மனுஷன், இப்படி வந்து குடிசையில் கிடக்கிறாரே என்று காரில் திரும்பிச் செல்லும்போது காமராசர் தமது உள் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே போனாராம்.


~ வைகோ

பின்குறிப்பு
தொடர் தொடர்ந்து வரவில்லை. பிறகு சரி செய்கிறேன். எனக்கு ஜீவாவை தெரியும். அந்த ஆதங்கம். மன்னிக்கவும்.

Thursday, September 1, 2016

சிவகாமியின் செல்வன் 1

I

சிவகாமியின் செல்வன் 1


Thu, Sep 1, 2016 at 6:53 PM

சிவகாமியின் செல்வன் 1

காமராசரின் மதம் பற்றிய பார்வையை பற்றிய தொகுப்பு பலருடன் அளவளாவியதை திரு. வீரபாண்டியன் என்ற சன் டி.வி தொகுப்பாளர் வழங்கியது. எனது அறியாமையினாலும், இயலாமையினாலும், அந்த இழையை என்னால் மீட்க முடியவில்லை. அதன் தொடர்பு இங்கே:

“வானவில்” 
பார்க்க:  ஆடி 2016 இதழ், பக்கம் 12-13    

*
அதன் கோணம் ஒரு புறம் இருக்க, 'பெரியவர்' என்று நெருங்கியவர்களால் அறியப்பட்ட 'சிவகாமியின் செல்வன்'  காமராஜர் என்ற பன்முகம் தாங்கிய மாமனிதரை பற்றி தற்கால தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால், இந்த தொடரை துவக்கத் துணிந்தேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் -திருவாளர்கள் டி.பிரகாசம், ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, பக்தவத்ஸலம், கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ராஜ்ய பரிபாலனத்தை, பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த நான் கூற விரும்புவது: 

அந்த பட்டியலில், பெரியவர் காமராஜர் ஒருவர் தான் மக்கள் நலம் மட்டுமே நாடி, பாமரனுடன் ஒன்றி, அதற்காக இடை விடாமல், பதவியை பொருட்படுத்தாமல், உழைத்தவர். ஐய்க்கண் அவர்களில் மேன்மக்களில் ஒருவர், அவர். மற்ற முதல்வர்களை பற்றி இங்கு கருத்து கூறப்போவதில்லை, திசை மாற்றத்தைத் தவிர்க்கவேண்டி.

அவரை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது: விடுதலை போராட்டத்தில், அடிபட்டு இரு இளைஞர்கள் மூர்ச்சையில் தெருவில் கிடக்கிறார்கள். ஒருவர் நமது பெரியவர். அடுத்து கிடந்தது, டி. பிரகாசம். பிற்கால அரசியலில் அவர்கள் இருவரும் எதிர் துருவங்கள்!

கீழ்க்கண்டது மீள்பதிவு:

"அண்டை வீட்டுக்காரன் என்ற வகையில் பெருந்தகை காமராஜர் அவர்களை நான் நன்றாக அறிவேன். நான் ஜூனியர் உத்யோகஸ்தன். அவர் முதல்வர். அடிக்கடி அவர் வீட்டு வாசற்படி அளவுளாவுதல் சில நிமிடங்கள் நடக்கும். ஏனென்றால், என் மூன்று வயது மைந்தனை அவருக்கு பிடிக்கும். நன்முத்துக்கள் உதிரும். நான் புரிந்து கொண்டது:

அவர் அரசியலர். மதம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. அது தான் விதுர நீதி எனலாம். ஆனால், அவர் மத நம்பிக்கையை தகர்க்கவில்லை. இழிச்சொல் பேசவில்லை. அத்தகைய இழிச்சொல்லை கல்வெட்டில் பதிக்கவில்லை. திரு. உத்தாண்டராமபிள்ளை என்ற உயர் அதிகாரி ஒரு மாமனிதர். இந்து மத கோயில்களின் நிர்வாகம் செய்து வந்தார். மரபுகளையும். நாணயத்தையும் மீறும் கோயில் ஊழியர்களை அவர் தண்டித்தார். காமராஜர் அமைச்சைரவையில் இருந்த திரு பக்தவத்சலம் கோயில் செல்லுமம் பக்திமான். அவருடைய தெய்வநம்பிக்கையை காமராஜர் மதித்து நடந்தார். ஒரு மத்திய அரசு அமைச்சர் திரு ராமசாமி ஒரு கோயிலில் ஆத்திரம் மிகுந்து நடந்து கொண்டார். மரபுகளை நிந்தித்தார். திரு.பக்தவத்சலம் அவர்கள் திரு. ராமசாமிக்கு இனி கோயில்களில் வரவேற்பு இருக்காது என்று ஆணை பிறப்பித்தார்.


அன்புடன்,
இன்னம்பூரான்
*
பெரியவர் சுதந்திர இந்தியாவின் மைல்கல்கள் ஆன நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களிலும், அவற்றின் பின்னணியிலும் முத்திரை பதித்தவர். இன்று கண்ணதாசன் அவரை பற்றி பாடிய கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.

சொத்துசுகம்
நாடார்,
சொந்தந்தனை
நாடார்
பொன்னென்றும்
நாடார்,
பொருள் நாடார்,
தான்பிறந்த
அன்னையையும்
நாடார்,
ஆசைதனை
நாடார்,
நாடொன்றே
நாடித்தன்
நலமொன்றும்
நாடாத
நாடாரை
நாடென்றார்.

பிற பின்னர்.
[தொடரும்]

இன்னம்பூரான்


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
தன் சுக துக்கங்களை நாடாத, தன் நாட்டு மக்களின் நலன் மட்டும் நாடிய தமிழ்நாடன் பற்றிய தங்களது பதிவு அருமை.
பெரியவரின் வாழ்க்கை நேரில் அறிந்தவர் என்ற வகையில் தங்களது பதிவுகள் சிறப்புப் பெருகின்றன ஐயா.
தொடர்ந்து பெரியவரின் சிறப்புக்களைப்
 பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த தங்களது பதிவுகளைப் படிக்க  ஆவலாய் உள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்