Thursday, June 6, 2013

17. இது நிசமா? ஒழுங்கா?: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை


தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை



Innamburan
இது நிசமா? ஒழுங்கா?
Innamburan Innamburan <innamburan@gmail.com>
7/22/11
 

இது நிசமா? ஒழுங்கா?

     தற்காலம் இந்தியாவின் தனியார் துறை வலிமை மிகுந்தது. லக்ஷக்கணக்கான கோடிகள் ரூபாய் புழக்கத்தில். மெகா திட்டங்களில் தனியார் துறை - அரசு கூட்டமைப்புகள். இவற்றை தணிக்கை செய்வது யார்? அவர்களின் வழிமுறைகள் யாவை? முறைகேடுகள் உண்டா? இந்த விஷயங்களை ஓரளவு புரிந்து கொள்வது நலம். அதுவும், பங்குச்சந்தையில் நடுத்தர மக்கள் வாங்கி, விற்பது அதிகரிக்கும் சூழ்நிலையில். ஒரு சிறிய அறிமுகம்.
     ‘ஆடிட்டர்’ என்ற காரணப்பெயர் தனியார்-துறை தணிக்கை செய்வோருக்கு இருப்பதை பலர் அறிவர். அவர்கள் இதற்கு என்ற சார்ட்டட் அக்கெளண்டண்ட் அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். பரிக்ஷைகள் பலவற்றில் தேர்வு பெற்று அமைப்பின் சன்னது பெறவேண்டும். இத்தொழிலுக்கு ஒளி மயமான வருங்காலம் இருக்கிறது. பள்ளிப்படிப்புடன், இதையும் தொடங்கலாம். இது ஒரு புறமிருக்க...
     கம்பெனி ஆடிட் வழிமுறைகளின் தாரக மந்திரம் ஒரு வினா, ‘இது நிசமா? இது ஒழுங்கா?’ கம்பெனிகள் தங்கள் வரவு செலவுகளை பதிப்பது போதாது. தமது தலையீடு இல்லாதவகையில் ஒரு சார்ட்டட் அக்கெளண்டண்ட் மூலம் தணிக்கை செய்யவைத்து, அவர்களின் அறிவிக்கையையும் இணைக்க வேண்டும். இது சட்டம்.
பெரும்பாலும், அத்தகைய அறிவிக்கை, ‘இந்த கம்பெனியின் உள்கட்டுப்பாடு திருப்திகரம். எங்கள் வினாக்களுக்கு விடை கிடைத்தது. மேலும் சொல்வதற்கில்லை.’ என்று ரத்னசுருக்கமாக இருக்கும்.  ஏதாவது சின்ன ஆடிட் கம்மெண்ட் இருந்தால் கூட சிக்கல். கேள்விப்பட்டிருப்பீர்கள், ‘ இந்த கம்பெனி கணக்கு வழக்கு (பாலென்ஸ் ஷீட்) காண்பிப்பதை விட மறைக்கும் விஷயங்கள் தான் சுவாரஸ்யம்.’ என்று. இத்தருணத்தில் கேட்கவேண்டிய கேள்வி, ‘இது நிசமா? ஒழுங்கா?’. 
     ஒரு ஐஸ்க்க்ரீம் கம்பெனி ப்ளாட்டிங்க் பேப்பர் எக்கச்சக்கமாக வாங்கிய வண்ணம்! யாராவது இது எதுக்கு என்று கேட்கப்போகிறார்களே, என்று ‘ஆஃபீஸ் ஸ்டேஷனரியில்' சேர்த்து விட்டார்கள்: நிஜமும் சொல்லவில்லை. ஒழுங்கும் இல்லை. ஏனென்றால், அதை வாங்கியது, கலப்படத்திற்கு!
     ஒரு மேனேஜிங் டேரக்டர் தபால்தலை சேகரம் செய்பவர். கணிசமான செலவு. கம்பெனி தபால் போக்குவரத்து செலவில், வருடக்கணக்கில் போட்டு வருகிறார்கள். சொன்னது நிஜம். செய்தது ஒழுங்கீனம்.
     இந்த கம்பெனி சேர்மன் பலே கில்லாடி. அப்பன் செத்துட்டான். சவ அடக்கப்பெட்டியை ‘பாக்கிங்க் கேஸ்’ என்று கம்பெனி கணக்கிலே சேத்துட்டான்!
நிஜமும் சொல்லவில்லை. ஒழுங்கும் இல்லை. சொல்லப்போனால், முழுப்பொய். மட்டமான அட்டூழியம், அசிங்கம்.
     இந்த மூன்று ஒழுங்கீனங்களையும், பாலென்ஸ் ஷீட்டில் மறைப்பது எளிது. கம்பெனி ஆடிட்டர் என்ன செய்ய இயலும்? தொழிற்புரட்சி வந்த பின் தான் முதன்முதலாக, இங்கிலாந்திலேயே தனியார் துறை வலுத்தது. கவனமாக, ஆடிட் செய்ய ‘நிஜமா? ஒழுங்கா?’ விதிமுறை வகுக்கப்ட்டது. துல்லியமாக வரவு செலவை பரிசீலனை செய்வதை விட ஆதாரமுள்ள ஆடிட் அபிப்ராயம் முக்கியம் என்ற கருத்து. அமெரிக்காவில், எடுத்த எடுப்பில் கோர்ட்டுக்கு போகிறார்கள் என்பதால், கறாராக தணிக்கை செய்யவேண்டியிருந்தது. இந்தியாவில் கலப்படம்; தவிர ஆவணங்களுக்கும், முரண் தவிர்த்தலுக்கும் (avoiding conflict of interest) முக்கியத்வம் குறைவு என்ற தோற்றம்.
சில நிகழ்வுகளை காண்போம்.
  1. இந்தியாவில் சத்யம் அமைப்பும், ஆடிட்டர்களின் அசிரத்தையும், கூடாநட்பும், வெளிச்சத்தில் வந்தன;
  2. என்ரான், வோர்ல்ட்.காம் என்ற மாபெரும் நிறுவனங்கள் வீழ்ந்தபின் தான், பொய்க்கணக்கும், அதற்கு ஆடிட்டர்கள் துணை போனதும் வெளிச்சத்தக்கு வந்தன, அமெரிக்காவில்.
  3. இங்கிலாந்தில் ஒரு பழங்கதை. ராணுவத்திற்கு தளவாடங்கள் உற்பத்தி செய்த ஒரு குடும்ப நிறுவனம் ஒப்பந்தத்திற்கு மேல் ஆதாயம் பார்த்ததாக, ஆடிட்டர் ஜெனெரல் கூற, அந்த குடும்ப நிறுவனத்தின் பேச்சு எடுபடவில்லை. மிகுந்த பிரயாசையுடன், அவர்கள் கோர்ட்டில் நிரூபித்தது: ஒப்பந்தத்திற்கு மேல் ஆதாயம் பார்த்தது உண்மை. ஆனால், குடும்பம் காலணா எடுத்துக்கொள்ளவில்லை. ஆதாயத்திற்கு மேல் தளவாட ஆய்வுக்கு செலவு செய்ததால், கம்பெனிக்கும், குடும்பத்திற்கும் பெரு நஷ்டம். அந்த அளவுக்கு ராணுவத்திற்க்கு ஆதாயம். அதாவது கணக்கு வழக்கு துல்லியமாக உண்மை கூறாவிடினும், நடத்தை ஒழுங்கு.
      சிக்கலான சான்றுகள் அளிக்கக் காரணம், பின்னணியையும், பிரச்னையையும் குறிப்பால் உணர்த்தவே. இந்தியாவில் இப்போது பெரிய பிரச்னை யாதெனில், தனியார் துறையிடம், உண்மையான, ஒழுங்கு சம்பந்தமான தகவல்களையும், கணக்கு வழக்குகளையும் பெறுவது. அரசை கேட்பது போல், செலவினங்களின் நியாயத்தைக் கேட்பது. இக்காலம், பங்குச்சந்தையில் உலா வரும் கம்பெனிகளில் பெரும்பாலானவையின் உண்மை முதலாளிகள், பரவலான முதலீட்டார்களே. அவர்களின் காவலன் யார்?
     இந்த பத்தியில் தணிக்கை, தணிக்கை என்று படித்து, படித்து, வாசகர்கள் சலித்துப்போய் விட்டதாகத் தோற்றம். இனி, தொல்லை தருவதாக இல்லை. ஒரு ஆடிட் ரிப்போர்ட் வரும் தருணம். அதை படிக்க பலர் விரும்பலாம். உரிய வேலையில், அதை பற்றி ஒரு இடுகை. அநேகமாக, அது தான் இறுதி பத்தி. இனி, யாராவது வினா எழுப்பினால் விடை.
இன்னம்பூரான்
22 07 2011

Image Credit:http://us.123rf.com/400wm/400/400/raywoo/raywoo1202/raywoo120200019/12392089-chalk-drawing--concept-of-right-or-wrong.jpg



இன்னம்பூரான்

No comments:

Post a Comment