கனம் கோர்ட்டார் அவர்களே! (9)
இன்னம்பூரான்
ஆந்திரப் பிரதேசத்தின் உயர் நீதி மன்றம் மே 28, 2012 அன்று ஒரு தீர்ப்பு வழங்கியது. முதன்மை நீதிபதி மதன்.பி.லோகூர் அவர்களும், நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அவர்களும், மத்திய அரசின் டிஸம்பர் 22, 2011 தேதியிட்ட இரு ஆணைகளை அரசியல் சாஸனத்துக்கு முரணானவை என்று சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டனர். அந்த ஆணைகள் கல்வி அளிப்பதிலும், வேலை வாய்ப்பு அளிப்பதிலும் ‘பின் தங்கிய வகுப்பு’ என்ற பிரிவில் உள்பிரிவுகள் செய்து, இஸ்லாமியர்களுக்கு, மேலும் முன்னுரிமை அளிக்க விழைந்தன. மதம் பொருட்டு முன்னுரிமை தருவது, மத சார்பற்ற அரசு என்று பீற்றிக்கொள்ளும் மத்திய அரசின் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியல் சாஸனத்துக்கும் உகந்தது அன்று என்றும், அரசு சிந்திக்காமல் இயற்றிய ஆணைகள் இவை என்று தீர்ப்பு. பின் தங்கிய வகுப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட 27 விழுக்காடு இடங்களுக்குள், 4.5 விழுக்காடு, சமய அடிப்படையில் ஒதுக்கினால், மற்ற பின்தங்கிய வகுப்பினர் இன்னலுக்குள்ளாவார்கள் என்பது வெளிப்படை; அவர்களின் எதிர்ப்பும். கோர்ட்டுக்குப் போனதும் இயல்பானதே.
முழுத்தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கவில்லையெனினும், 25 பக்க தீர்ப்பில் முதன்மை நீதிபதி கூறியதின் சாராம்சம்: இந்த ஆணைகள் சமயத்தின் அடிப்படையில் உள்ளுறையும் முன்னுரிமை கொடுத்தது அரசியல் சாஸனத்தின் 15 (1) & 16 (2) ஷரத்துக்களை மீறுகின்றன. அரசியல் சாஸனம் சமயம் சார்ந்த முன்/பின் உரிமையை முரண் என்பதால், இந்த ஆணைகள் செல்லுபடி ஆகாதவை.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக, மத்திய அரசின் சட்டாம்பிள்ளை சால்மன் குர்ஷீத் அறிவித்து உள்ளார், ஒரு குழப்ப அறிவிப்புடன்! அரசின் நிலையை தெளிவுற கூறாமல், தனி மனிதர்கள் வழக்குத்தொடரலாம் என்று சிபாரிசு செய்யும் அவர் சொல்லும் விவரணைகள் ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்’ வகையைச் சார்ந்தவை. மனு தாக்கல் கால தாமதம் ஆகும் என்கிறார். கோர்ட்டுக்கு விடுமுறை ஆச்சுதே என்று அங்கலாய்க்கிறார். இந்த அனாவசிய செய்திகளுக்கு நடுவில். உச்ச நீதி மன்றம் ஏற்கனவே, ஆந்திர மாநில அரசின் ஆணைகளை எதிர்த்து வந்த வழக்குகளை அனுமதித்ததால்,, பிரச்சனை என்கிறார். அதைக் கூறாமல், மழுப்புகிறார். சிக்கலான நேரம். அதி சிக்கலான பிரச்சனை. என்ன செய்வார்களோ?
என் செய்வது?தன் வினை தன்னை சுடும்.
படத்திற்கு நன்றி:
No comments:
Post a Comment