`அம்மா சொல்படி ராஜூ: (வந்தனன்! வந்தனன்!) பகுதி
(சுழன்ற காலச்சக்கரம்... )
... உடனே என் அப்பா என்ன செய்வார். உள்ளூரில் என் சின்ன அத்தை இருந்தாள். அவள் புருஷனைக் கூப்பிட்டு என்னை மெட்றாஸ் கொண்டுவிடும்படி சொன்னார். அதன்படி அவர் மெட்றாஸ் என்னை கொண்டு விட்டுட்டு அவர் ஊருக்குப் போய்விட்டார். ஆனால் என் புருஷன் முன்னாடியே போய் காரியங்கள் நடந்ததது. கல்கத்தாவிலிருந்து நாமு வரவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ரூமில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். 3 நாள் கழித்து கல்கத்தா நாத்தனார் வந்து விட்டாள். தஞ்சாவூரிலிருந்து கடைசி நாத்தனார் பத்து நாள் முன்னாடியே வந்திருக்கிறாள். நான் தான் மாமியாரை பார்க்கமுடியவில்லை. அதுவும் மெட்றாஸ்ஸில் பெரம்பூரில் என் மாமியாருடைய தங்கை இருந்தாள். அவள் வீட்டில் தான் என் மாமியார் இறந்ததது. மற்ற காரியங்கள் நடந்ததது.. அதற்கு எனக்குச் சீர் செய்யவேண்டுமாம். அதற்கு என் மாமியாருடைய அம்மா எனக்கும் பாட்டி. அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால் உனக்கு சீர் செய்யவேண்டும். அதற்குப் பதிலாக பணமாக அனுப்பும்படி உன் அப்பாவிற்கு எழுது என்று சொன்னார். ஆனால் எனக்கு நடக்கிறெதெல்லாம் தெரியும். 51 அதனால் நான் என் அப்பாவிற்கு லட்டரில் சீர் செய்வதற்குப் பதிலாகப் பணமாக அனுப்பினால் செளகரியமாக இருக்கும் என்று லட்டர் போட்டேன். அதற்குப் பதில் நான் நேரில் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று என் புருஷனுக்கு லட்டர் போட்டு விட்டார். அடுத்த வாரம் என் அப்பா வந்து எல்லா செலவுகள் எல்லாம் தானே பார்த்துவிட்டு சீர் வரிசையும் செய்து விட்டு காரியங்களை முடித்து விட்டு என்னையும் என் புருஷனையும் திருமங்கலம் கொண்டு போய் விட்டுட்டு அவர் காரைக்குடி போய்விட்டார். 52 பிறகு மாமனாரும் கல்கத்தா நாத்தனார் மைத்துனர் எல்லாரும் திருமங்கலம் வந்தார். மாமியார் இறந்த சமயம் நான் தீர்த்தாமாடாமல் இருந்தேன். அது புரட்டாசி மாஸம்.
இப்படியிருக்கும்போது மாமனார் நான் ஊருக்குப் போகிறேன் என்ரு போய்விட்டார். நாங்கள் சின்னவர்களாக இருக்கும்போதே என் மாமியார் இறந்து விட்டார். அவருக்கு வயது ரொம்ப ஆகவில்லை. 43 வயது தான். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அதற்கு பிறகு என் புருஷன் வீட்டில் யாரும் இல்லை. நாத்தனர்கள் அவர் புருஷனோடு இருந்து விட்டார்கள். ஆனால் கடைசி நாத்தனாருடைய புருஷன் யார் என்றால் மெட்றாஸ்ஸில் ஹைக்கோர்ட் வரதாச்சாரியாரின் தம்பி. தஞ்சாவூரில் பெரிய வக்கீல். அவர் என் மாமியார் வைத்தியச்செலவு செய்திருக்கிறார். இப்படியிருக்கும் போது எனக்கு மாஸம் ஆகி, என்னை பிரஸவத்திற்கு என்னை என் அப்பா அழைத்துப் போய்விட்டார். ஆனால், என் மாமியாருக்கு மாசியம், ஜோதகும்பம், எல்லாவற்றிக்கும் சமையல் செய்ய என் அப்பா தளிகை செய்கிறவரை போட்டார். நான் பிரஸவத்திற்குப் போனபிறகு நம்ப ஜாதி மாமி செய்து போட்டாள். என் மாமியார் இறந்து (அடித்தல், திருத்தல்) பத்து மாஸம் ஆவதற்குள் எனக்குப் பிள்ளைக்குழந்தை பிறந்ததது. குழந்தை ரொம்பவும் சின்னக்குழந்தையாக இருந்ததது. மூன்று மாஸம் ஆனபிறகு தான் குழந்தை தெளிந்து விளையாடிற்று. 53
51. எல்லாம் பாத்துண்டு இருக்காளோல்லியோ!
52. அதான் தாத்தா!
53.. கொஞ்சம் ட்யூப் லைட்டோல்லியோ!
(வந்தனன்! வந்தனன்!)
No comments:
Post a Comment