அம்மா சொல்படி ராஜூ: (ஆனா பின்ன இருக்காதா... ?) பகுதி
(ருக்மிணி கல்யாணம் வைபோகமே!)
... எனக்கு மூன்று நாத்தனார். பெரிய நாத்தனாருக்கு37 ஒரு பெண்38 அது என் கல்யாணத்தின் போது வயது 3. என் கல்யாண சமயத்தில் அந்த நாத்தனார் இரண்டாவது உண்டாயிருந்து பிறகு பிள்ளை39 பிறந்தது. மற்ற இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகவில்லை. என் வயதுக்கு ஒரு வயது பெ(ரி)யவர் ஒருவர்40. மற்றவருக்கு41 என் வயதை விட ஒரு வயது சின்னவர். நான் கல்யாணம் ஆகிப் போனபோது அவர்களுடன் ஏதாவது வேலை செய்வேன். என்னை மாமியார் ரொம்ப அழகாய் இருப்பார். குணமும் அப்படி. என்னை
ஒரு இடத்திற்கும் என் நாத்தனாரோடு (?)42 போகவிடமாட்டர். அது மாதுரி என்னை 16 வயது வரையில் நாள்கிழமைகளில் என்னை கொண்டுவந்து விடும்படி மாமனார் லட்டர் போடுவார், என்ன செய்வது என்று என் அப்பாவே கொண்டு விட்டுட்டு வருவார். ஆனால், என் புருஷனை சாத்தூரிலிருந்து, திருமங்கலம் என்கிற ஊர். மதுரைக்கு பக்கத்திலிருக்கிறது. அங்கு மாத்தல் ஆகி வந்து விட்டார். அங்கும் என்னை வரும்படி லட்டர் வரும். அப்போது என் அப்பா தான் கொண்டு விடுவார். எனக்கு ஒரு தம்பி இருந்தும், அவன் செய்யமாட்டான். அதனால் தான் என் அப்பா தான் கொண்டு விடுவார். கொஞ்ச நாள் ஆனதும், என் மாமியார் பிள்ளை சாப்பட்டுக்குக் கஷ்டப்படவேண்டாம் என்று தானும் மற்ற இரண்டு பெண்களும், மச்சினர் உள்பட எல்லாரும் திருமங்கலம் வந்து குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும்போது, நானும் அவர்களோடு இருக்கவேண்டும் என்று வரும்படி லட்டர் (வரும்). என்னையும் அங்கு கொண்டு விடுவார்கள். அப்படி அங்கு இருக்கும்போது, மாமியார் நாமு என்ற பெண்ணுக்குக்கு ஜாதகம் வந்திருப்பதாகவும், அவளுக்குக் கல்யாணம் செய்யலாம் என்று இன்னம்பூருக்குப் போய்விட்டார். கடைசிப்பெண்னை பிள்ளைக்கு சமையல் செய்து போகும்படி வைத்துவிட்டுப்போனார். ஆனால், திருமங்கலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டில் எல்லாரும் தெலுங்கர்கள். ரொம்ப நல்லவர்கள். அவர்களிடம் பெண்ணைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப்போனார். அந்த சமயம் நான் அப்பாவாத்தில் இருந்தேன். இப்படியிருக்கும்போது, எனக்கு கல்யாணம் ஆகி முதல் வருஷம் பொங்கலுக்கு வரும்படி லட்டர் வந்த்தது. என்ன செய்வது. சீர் செய்து கொண்டு விடவேண்டுமே என்று(ம்), யார் போய் கொண்டு விடுவது என்று யோஜனையாக இருந்ததது. என் பெரியம்மாவிற்கு லட்டர் போட்டு வரும்படி எழுதி, அவள் வந்தாள். அவளிடம் என் அப்பா சீர்வரிசையுடன் ருக்மிணியை கொண்டு விடவேண்டும். உன் யோஜனை என்ன என்று கேட்டார். ஆனால், என் அப்பா சொன்னார்; அவளுக்கு வைரத்தோடு போடலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய். அதற்கு அவள் சொன்னாள். அவளைக் கொடுத்த இடம் சாதாரண இடமமாக இருப்பதால், தோடு இப்போது வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. அதற்கு அவளுக்குப் பாத்திரமாக வாங்கிக் கொடுப்பது தான் நல்லது என்று சொன்னாள். அவள் சொன்னபடி பொங்கல் சீர் என்று 5 பவுனுக்கு கழுத்துக்கு அட்டிகை பதக்கம் உள்பட செய்து, ஏதோ பித்தளைபாத்திரம், பொங்கலுக்கு வெண்கலப்பானை எல்லாம் கும்பகோணத்தில் வாங்கி என் பெரியம்மா தான் கொண்டு விட்டாள். நான் அங்கு ஒரு மாஸம் இருந்தேன், அப்போது தான் என் நாத்தனார் நாமுவிற்குக் கல்யாணம் நடந்ததது. அந்த மாப்பிள்ளையும்43 கும்பகோணம் தான். நான் கல்யாணத்திற்கு இருந்தேன். அதே சமயத்தில் என் தம்பிக்கும் கல்யாணம் என்றும், என்னை வரும்படி என் அப்பா எழுதியிருந்தார்.
அதனால், நாத்தனார் கல்யாணத்திற்கு என் புருஷன் வந்திருந்தார். கல்யாணம் குடவாசலில் நடந்ததது. நான் என் அப்பா அவர்களுடன் காரைக்குடி போய்விட்டேன். கல்யாணம் முடிந்ததும் நான், என் கடைசி நாத்தனார், என் புருஷன் எல்லாரும் (அடித்தல், திருத்தல்) போனோம். நாத்தனர், என் புருஷன் இருவரும் இன்னம்பூருக்கு போய்விட்டார்கள். என் புருஷன் திருமங்கலம் போய்விட்டார். இப்படி நாளாக எனக்கு வயது 15 தாண்டிவிட்டது. பெரிய ஆளாகவில்லை. இதனால், என் அப்பா, அம்மா கவலையாக இருந்தார்கள். அதே சமயத்தில் ஒரு லட்டர் வந்தது. என்னவென்றால், திருமங்கலத்தில் என் பெண்ணைத் தனியாக பிள்ளைக்கு சமையல் செய்வதற்கும், பிள்ளை ஓட்டலில் சாப்பிடவேண்டாம் என்று பெண்ணை அனுப்பியிருக்கிறேன். பெண் தனியாக இருப்பதால், உங்கள் பெண்ணையும் அங்கு அனுப்பி வையுங்கள் என்று லட்டர் என் அப்பாவிற்கு வந்தது. அப்பா லட்டரைப் பார்த்துவிட்டு என்ன செய்வது என்று என் அம்மாவிடம் சொன்னார். அதற்கு, அம்மா பெண் பெரிய ஆளாகிற சமயம் என்ன செய்வது என்று சொல்லிக்கொண்டிருந்தார்...
37. சிரித்தே இன்னல்களை சமாளிப்பாள், பெரிய அத்தை . புகுந்த இடம் ரொம்ப ஆச்சாரம்.
38. இவளைப் போன்ற அழகியை நான் கண்டதில்லை. அறியாப்பருவத்திலே, அவள் மேல் எனக்கு கைக்கிளை. நான் அவளை துரத்துவேன்; அவள் என்னை விரட்டுவாள். கல்யாணம் வேறு ஆயிடுத்து.. சமீபத்தில் இது பற்றி சிரித்து பேசிக்கொண்டிருந்தோம்’
39. எதிர்நீச்சல் மன்னன். நான் அவனை ‘ஜகதலப்பிரதாபன்’ என்று கூப்பிடுவேன்.
40. இவர் பெயர் நாமு. சிறந்த பரோபகாரி.. அதர்மம் பொறுக்கமாட்டார். என் மனைவி இவரை மிகவும் மதித்தாள்.
41. இளம் விதவை. மற்றவர்களுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எனது தாய், தந்தை, ஆசான் எல்லாம் இந்த அத்தை தான். அவரை பற்றிய சிறு கட்டுரை, ஒரு அனுபந்தத்தில்.
42. நாத்தனார் துணையில்லாமல் எங்கும் செல்லக்கூடாது என்று கூறுகிறார், என நினைக்கிறேன். பாட்டி கண்ஜாடையிலேயே பேசுவாளாம். பலவிதங்களில் அம்மாவுக்கு பாதுகாப்பாக இருந்தாளாம்.
43. அவர் ஒரு புதிர்.
(ஆனா பின்ன இருக்காதா...? )
No comments:
Post a Comment