அம்மா சொல்படி ராஜூ: (‘எழுத முடியல்லையே ...’) பகுதி 17: 2 11 2009
(‘படிப்பு தான் முக்யம்’)
(முதலில் குழந்தைகள் படிப்பு தான் முக்கியம்...) ... உன் (புருஷன்) எப்போதாவது வந்து பார்த்துவிட்டு போகட்டும் என்று லட்டர் போட்டார். உடனே என் புருஷன் நான் சாப்பிட்டிற்குக் கஷ்டப்படமுடியாது. நான் போய் ஊர் எப்படி இருக்கிறது என்று லட்டர் போடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். நானும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டையும் காலி செய்து விட்டு சாமான்களை டீ.வி.எஸ்ஸில்79 ஏத்தி காரைக்குடி வரும்படி செய்துவிட்டோம். நானும் காரைக்குடி வந்து விட்டேன். அப்போது எல்லாம் சாப்பாடு கஷ்டம். உடனே என் அப்பா புதுக்கோட்டை போய் பெரிய வீட்டைக் காலி செய்யச்சொன்னார். அவர்கள் வாடகையும் கொடுக்காமல் காலியும் செய்ய மறுத்தார்கள்? ஆனால் வீட்டில் அத்தையுடைய தம்பி இருந்து கொண்டு காலி பண்ண மாட்டேன் என்று சொன்னான். என் பெரிய வீட்டில் இருக்கும் குடியிருப்பவர்கள் பேரில் கேஸ் போட்டுவிட்டார். கேஸ் போட்டதினால் உடனே கோர்ட் மூலம் வீட்டை காலி செய்ய ஏற்பாடு ஆகிற்று. அதன் படி காலி செய்து விட்டார்கள். பிறகு என் அப்பா எங்களை புதுக்கோட்டைக்கு அழைத்து அந்த வீட்டில் நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி சாப்பிட்டோம். அப்புறம் நான் புதுக்கோட்டையில் வந்து ராஜா காலேஜ்80 என்று ஒன்று இருந்ததது. அதில் பெரியவனை சேர்த்தேன். ராணி ஸ்கூலில் பெண்களைச் சேர்த்தேன். அப்போது எனக்கு மூன்று பெண்கள் பிள்ளை மூன்று. எல்லாரையும் படிக்கவைத்துக்கொண்டு 14 வருஷம் இருந்தேன்81 (?) ஆனால் பெரிய வீடு ரொம்ப மோசமாக இருந்தது. அதனால் (ஆனால்?) என் அப்பாவுக்கு அப்போது பணவசதி உண்டு. அவர் வந்து நன்றாக வீடுகளை கட்டிக்கொடுத்து, நிலத்தையும் நன்றாக கவனித்தார். நிலம் இருப்பது கீர்நூர் (கீரனூர்) என்ற ஊருக்கு பக்கத்தில் நாஞ்சூர் என்று இருந்தது, அதற்கு நானும் போய் நெல்லுகள் வீட்டிற்கு வரும்படி குடியானவனிடம்82 சொல்வேன் அவன் கொண்டு வந்து போடுவான். இப்படியாக 14 வருஷம் பெண்கள் குடுத்தனமாக இருந்தேன். ஆனால் இப்படி இருக்கும்போது என் புருஷன் ஊர் நன்றாக இருக்கிறது. நல்ல காலேஜ் ஸ்கூல் எல்லா (ம்) இருக்கிறது. அதனால் இங்கேயே எல்லாரையும் ஸ்கூலில் சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். நானும் சாப்பாட்டுக்கு கஷ்டபடவேண்டாம் நீங்கள் பெரிய லீவுக்கு ஒரு தரம் வந்து விட்டுப் போங்கள் என்று என் புருஷன் லெட்டர் போட்டார். என்ன செய்வது. அவருக்குக் கோபம் வந்து விடுமே என்று என் அப்பாவிடம் சொல்லிவிட்டு கையில் ஏதோ சில பாத்திரங்களை83 எடுத்துபோய் ஒரு மாஸம் லீவுக்கு போய்விட்டு வந்தேன். அப்போது ஆத்தில் குடி வைத்து விட்டுத்தான் போனேன்? அடுத்த வருஷமும் அதே போல் என் புருஷன் லட்டர் நாமெல்லாரும் திருநெல்வேலியில் இருப்போம். அதனால் நீங்கள் வீட்டை வாடகைக்கு வைத்து விட்டு வாங்கள் என்று லட்டர் போட்டு விட்டார். என்ன செய்வது என்று பெரியவன் மற்ற எல்லாரும் திருநெல்வேலி போனோம். உடனே வீடு கிடைக்காமல் ஒரு முதலியார் வீடு வண்ணாத்தங்கரை என்ற இடத்தில் இருந்தது.
வீடு சின்னது தான். கிணறு கிடையாது. குழாய் கிடையாது. தாம்பரவர்ணிக்குப் போய் குழந்தைகள் குளித்துவிட்டு வருவார்கள். நானும் அங்கு போய் குளித்துக் குடத்தில் ஜலம் எடுத்து வந்து தான் சமையல் செய்யவேண்டும், ரொம்பவும் கஷ்டப்பட்டேன். என் புருஷனிடம் சொன்னேன். வேறு வீடு பாருங்கள். அப்படி கிடைக்காவிட்டால் புதுக்கோட்டை போகிறோம் என்று சொன்னேன். அது கூட அவருக்கு கோபம் தான். அவர் புதுப்பேட்டை தெரிவில் ஒரு வீடு பார்த்து அங்கு போனோம். போய் ஸ்கூல் திறந்தவுடன் பெரியவனிலிருந்து ரகு, பார்த்தசாரதி பெண்கள் எல்லாரையும் ரொம்ப சந்தோஷமாக ஸ்கூலில் சேர்த்து விட்டு வந்தார், என் புருஷன். ஆனால் வீடு எப்படி என்றால், கீழே சமையல் மாடியில் படுக்கை, இப்படியே குழந்தைகளும் ஸ்கூல் போய் வருவார்கள். ஆனால் அங்கும் தண்ணீர் கஷ்டம் தான். வாய்க்கால் ஒன்று போகும். அதில் போய் குழந்தைகள் எல்லாம் குளிக்கவேண்டும். என்ன செய்வது. குடிப்பதற்கு ஐகரெவுண்ட் என்ற பார்க். அதில் போய்த்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும். அப்படியும் கஷ்டம் தான். கிணறு இருக்கும் இடத்திற்குக் கயறு வாங்கி எடுத்துப்போய்த்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும். என்னோடு லீவு நாளில் சின்னப்பெண் பெரிய பெண் ஆத்தைப் பார்த்துக் கொள்வாள். இப்படியாக இருக்கும்போது ஜூன் ஜூலைகளில் குழந்தைகள் ஸ்கூலுக்குப் போய் கொண்டிருந்தார்கள். (ஒரு) பெரிய பையன் தலைவலி சாப்பாடு வேண்டாம் என்று காலேஜ்ஜிலிருந்து சாப்பாடை எடுத்து வந்து விட்டான். ராத்திரி லேசாக ஜுரமாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்தோம். அவர் ஏதோ மருந்து கொடுத்தார். மறு நாள் மற்றவர்கள் மற்றவர்கள் ஸ்கூல் போனார்கள். ஆனால் சாயங்காலம் திரும்பி சாப்பிடாமல் தலை வலி என்று வந்து விட்டார்கள். டாக்டரிடம் அவனையும் காண்பித்து ஏதோ மருந்து கொடுத்தார். மூன்றாவது பையன் ஸ்கூலிலிருந்து வந்துவிட்டான். அவனூக்கும் தலைவலி ஜுரம் வந்து வீட்டில் மூன்று பிள்ளைகளும் ஜுரமாக படுத்து விட்டார்கள். அப்போது என் புருஷன் க்யாம்பு போயிருந்தார் ...
79. பெரிய அய்யங்கார் போக்குவரத்து நிறுவனம். இன்று அதன் விழுதுகள் பல.
80. குறுநில மன்னர்கள் செய்த நற்காரியங்களில் ஒன்று.
81. அதில் 4-5 வருடங்கள் நானும் அங்கு இருந்தேன், சிறகு முளைக்கும் வரை.
82. அவர் பெயர் ஸ்டனிஸ்லாஸ். கிருத்துவ ஆதிக்கம். ஒரு நாள் அங்கு இருந்த பங்கு தந்தையிடமிருந்து (கிருத்துவ போதகர்) அராபியன் நைட்ஸ் என்ற நூலை இரவல் வாங்கி படித்து விட்டு, ஒரு கத்தோலிக்க மாதாகோயில் நூலகத்தில் இத்தகைய நூல்கள் இருக்கலாகாது என்று அறிவுரை வழங்கி, அவரிடம் செம்மையாக வாங்கி கட்டிகொண்டேன்.
83. அம்மாவிடம் ஒரு ரயிலடுக்கு என்ற பாத்திர ஸெட் இருந்தது. எல்லாமிருக்கும், சிறிய அளவில்.
(‘எழுத முடியல்லையே ...’)
No comments:
Post a Comment