அம்மா சொல்படி ராஜூ: (புதுக்கோட்டை அழைக்க. ...)
பகுதி 21: 5 11 2009
(‘டோனாவூர்’)
(அன்று ராத்திரி நல்லபோது ஆகப்போச்சு...) ... தெய்வநாயகம் பிள்ளை ஊருக்குப் போய்விட்டார். வீட்டிற்குப் போய் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னோம். ஆஸ்பத்திரியில் நானும், என் புருஷனும் இருந்தோம். டாக்டர் வந்து டீஸ்மெண்ட் நடந்தது. ஆனால், என் புருஷனுக்கு லீவு போடமுடியவில்லை. அதனால் பெரியபையனை எனக்குத் துணைக்கு அனுப்பிவிட்டு, தான் வேலைக்குப் போய்க்கொண்டும், ஆத்தில் இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொண்டும், அதோடு வந்து எங்களையும் வந்து பார்த்துவிட்டு சிலவுக்குப் பணம் கொடுத்து விட்டுப் போவார். ஆனால் அப்போது பணம் உதவி யாரும் செய்வார் இல்லை. ஊர் புதிசு. அதனால் என் வளையல் ஒரு ஜோடியை வித்துத் தான் செலவு செய்தோம். 83 தவிர என் அட்டிகையை தெரிந்த ஒரு வக்கீல் அவரிடம் கொடுத்து அதற்கு மேல் பணம் வாங்கி வைத்துக்கொண்டு டாக்டர் செலவு செய்தோம். என் அப்பாவும் கொடுத்தார். அது குழந்தைகள் டைஃபாயட் போது செலவாகி விட்டது. இப்படியே ஒரு நாலு மாஸம் ஆயிற்று. இதிலும் எனக்கு சோதனை கொடுத்தார் பகவான். ஒரு பிள்ளை இறந்த பிறகு கொஞ்ச நாள் ஆனதும் ஏழாவது உண்டாயிருந்தேன். அதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. பிறகு கடவுள் விட்டபடி என்று இருந்து விட்டேன். பிறகு என் பெரிய பெண்ணுக்குத் தொண்டையில் டான்ஸல் இருந்தது. அதை ஆபரேஷன் செய்யவேண்டும் என்று அவளையும் கொஞ்ச நாள் டோனாவூரில் கொண்டு வந்து விட்டார். நல்லபடியாக ஆபரேஷன் நடந்தது. எல்லாம் பகவான் அருளால் இரண்டு பெண்களுக்கும் நன்றாக செளக்யமாகி விட்டது. கமலா என்கிற பென்ணுக்குத் தான் ஜுரம் வந்து நினைவு இல்லாமல் இருந்து டோனாவூர் போய் நன்றாக ஆகிவிட்டது. ஆனால், அவளுக்கு ஆகாரம், மருந்து எல்லாமே மூக்கு வழியாகத் தான் டாக்டர் கொடுத்தார். டோனாவூரிலும் குறைந்த பக்ஷம் மூன்று மாஸம் ஆகிவிட்டது. ஆனால் நான் குழந்தைகளை எல்லாரையும் வக்கீல் மாமா வீட்டிற்குக் கொண்டு விட்டோம். அங்கு நாங்கள் இருக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் அம்மன் கோவில் ஒன்று இருந்தது. எனக்கு ராத்திரி சொப்பனத்தில் அம்மன் ஒரு பெண் மாதுரி (மாதிரி) வந்து பாவாடை வேணும் என்று கேட்ட மாதுரி இருந்தது. அப்போது என் பெண் ஜுரமாக இருந்தாள். நான் அம்மனிடம் என் குழந்தை நல்லபடியாகக் காப்பாத்து என்று வேண்டிக்கொண்டேன். அதனால் உடனே கடைக்குப் போய் பாவாடைத்துணி வாங்கி பாவாடை தைத்து அம்மனுக்கு சாத்திவிட்டு கஞ்சி காய்ச்சி கொடுக்கச் சொல்லி விட்டு வீட்டைக் காலி செய்து விட்டு நேராக புதுக்கோட்டை வந்து விட்டோம்.
83. அம்மாவுக்கு நகைகள் ஜாஸ்தி. அவற்றில் பல, ஒன்றன்றாக 1948ல் கரைந்தன. இந்த நிகழ்வு என் கண் முன் நிற்கிறது. பேச்சு இல்லாமல் நடந்தது. நகைகள் வைக்க, அம்மாவிடம் ஒரு பழுக்கா மரவை (அரக்கினால், சிங்கப்பூரில் செய்தது; ஸிலிண்டர்) இருந்தது. அம்மா அதை எனக்கு கொடுத்தாள், 1985ல். நான் அதை என் மருமகளுக்குக் கொடுத்தேன், 2000த்தில். மிச்சமிருந்த நகைகள் எங்கு போயினவோ!
(புதுக்கோட்டை அழைக்க. ...)
No comments:
Post a Comment